Pa Raghavan அவர்கள் இறவான் என்றொரு புத்தகம் எழுதியிருக்கின்றார்

இசை என்பது ஆண்டவனின் வடிவம், இசையால் வசமாக இதயமெது என்பது சத்தியமான வார்த்தைகள்

இசை ஆண்டவனையே உருகவைக்கும், இயற்கையே நல்ல இசைக்கு கட்டுபடும். தான்சேன், குன்னகுடி வைத்தியநாதன் இன்னும் பல இசைமேதைகளின் வாழ்வில் ஆச்சரிய சம்பவங்கள் உண்டு

இசையில்லா மதம் என எதுவுமில்லை, ஆத்மா எங்கெல்லாம் வெளிபடவேண்டுமோ அங்கெல்லாம் இசையன்றி எதுவும் சாத்தியமில்லை என்பதால் இசை எல்லா மதங்களிலும் உண்டு

பைபிளில் தாவீது அரசனின் பாடலும் சங்கீதமும் மகா பிரசித்தியானவை

இயற்கையோடு ஒன்றிய பண்டை மதமான இந்துமதம் தெய்வங்களை இசை மேதையாகவே பார்த்தது

சரஸ்வதி கையில் வீணை, நாரதர் கையில் வீணை, நந்தி கையில் மத்தளம், கண்ணன் கையில் புல்லாங்குழல் என கொடுத்து இசை கடவுளின் அங்கம் என சொல்லிற்று

ஆம் இசை கடவுளாய் இருந்தது, கடவுளின் சக்தியாய் இருந்தது என்பது இந்துமதம் ஒப்புகொள்ளும் விஷயம்

இதெல்லாம் ஏன் சொல்கின்றோம் என்றால் பேராசான் Pa Raghavan அவர்கள் இறவான் என்றொரு புத்தகம் எழுதியிருக்கின்றார், இந்த புத்தக கண்காட்சிக்கு வருமாம்

பேராசான் தமிழ் எழுத்துலகின் தனி சொத்து, டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம் என உலகையே தமிழ்நாட்டுக்கு தன் எழுத்து ஜன்னல் மூலம் திறந்து காட்டியவர் இப்பொழுதெல்லாம் அதை விடுத்து நாவல்களில் இறங்கிவிட்டார்

நல்ல கலைஞனின் மனம் எவ்வழி செல்லுமோ அப்படித்தான் அவன் செல்லமுடியும் அதுதான் அவனுக்கும் அவன் படைப்புக்கும் சரி

ஆசான் Pa Raghavan இப்பொழுதெல்லாம் நாவலில் இறங்கி நிம்மதி தேடுகின்றார், அப்படி வந்திருப்பதுதான் இந்த நாவல்

ஆசானின் பெரும் பலம் அவரின் மொழி ஆளுமையும், அதற்கு ஏற்ப வரும் உவமைகளும்

நல்ல நீர், மிக அழகான ஓடை வழியாக செல்வது போன்ற அழகு அது

அந்த சுகந்தத்தோடு இறவான் எனும் காவியத்தை படைத்திருக்கின்றார், அவர் போடும் பீடிகையினை கண்டால் அது அவரின் பழைய இசைமேதை கதையான யானி என்பவரின் கதை அல்ல, இது முழுக்க வேறு

விஷயம் இப்படி இருக்கலாம்

இசை கடவுளோடு இருந்தது என்பதற்கு கிறிஸ்தவம் சொல்லும் லூசிபர் கதையே சாட்சி, அந்த லூசிபர் இசையின் தலமையாக இருந்தான், அவரின் சிறகுகள் கூட இசைக்குமாம்

இசையில் மகோன்னதம் அடைந்த அவனுக்கும் கடவுளுக்கும் முட்டிகொண்டு கடவுளுக்கும் அவனுக்கும் முட்டிகொண்டு, கடவுள் மைக்கேல் என்பவரை அழைத்து “மைக்கேல், கெட் அவுட் திஸ் ஏஞ்சல் ப்ரம் அவர் பிளேஸ்” என சொல்லிவிட்டாராம்

உடனே மைக்கேல் அவனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டானாம் அவனே சாத்தானாகி உலகை கெடுக்கின்றானாம்

இன்றும் இசைமேதைகள் சிலரிடம் கர்வம் வந்தால், ஆஹா நீங்கள் லூசிபரின் அருள் பெற்றவர் அல்லவா? அந்த கர்வம் இருக்கும் என்பது மேல்நாட்டு வரி

ஆம் இசைமேதைகள் லூசிபர் எனும் தேவதையின் சாயல் என்பதும், தன் திறமையினை கடவுள் அங்கீகரிக்காமல் விரட்டிய அந்த வலியும் வேதனையும் அவர்களுக்குள் இருக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை

லூசிபரின் வாழ்வினை மகாகவி மில்டன் மட்டும் ஓரளவு சொன்னான், பின் போப்பாண்டவர் காலத்தில் லூசிபரின் கதைகள் எல்லாம் மறைக்கபட்டன, அவன் சாத்தான் ஆக்கபட்டு வெறுக்கபட்டான்

ஆனால் அவன் கதை சொல்வது இதுதான்

அவன் ஒப்பற்ற இசைமேதையாய் இருந்தான், அவனின் இசைக்கு வானகமே அடிமையாய் இருந்தது

ஆனால் கடவுளுக்கு அது ஏனோ பொறுக்கவில்லை, அவனை வெறுத்தார், ஆம் அவனை சுற்றியும் தேவதைகள் இருந்து கடவுளை விட்டு அவனை சுற்றிகொண்டிருந்தனவாம்

இதுதான் மோதலின் புள்ளி , என்னால் படைக்கபட்ட நீ எனக்கு நிகரா என அவனிடம் சீறினாராம் கடவுள்

“இசை நிரம்பிய மனம் ஒன்றுக்காக, மயக்கும் இசையினை மனமார இசைக்கும் என்னை அங்கீகரிக்காமல் விரட்டுவது ஏன்?

இசை என் தவறா? இசையில் நான் வாழ்வது என் தவறா? ஏன் என்னை அங்கீகரிக்க மறுக்கின்றாய் கடவுளே?” என அவன் கலங்கி விரக்தியில் இருந்தே வீழ்ந்தானாம்

ஒரு மாபெரும் இசை தேவதையின் வலி மகா பெரிது, அங்கீகாரத்துக்கு அது ஏங்கி அழுதது மாபெரும் வலி

லூசிபரின் மனதை லூசிபர் ஒன்றே அறிந்திருக்கும்

அந்த வலிதான் பேராசான் வரிகளில் ஆங்காங்கே தெரிகின்றது, இசைக்கு அழிவில்லை எனும் கதை அதைத்தான் சொல்லலாம்

நிச்சயம் பேராசான் Pa Raghavan எழுத்திலும் வாசிப்பதிலும் பீமன்,

வகை வகையாக ருசித்து சாப்பிடுவதில் மட்டுமல்ல வகை வகையாய் சமைப்பதிலும் பீமன் கெட்டிக்காரன்

அப்படி ஆசானும் வகை வகையாக வாசிக்கின்றார், வாசித்து நிரம்பியவுடன் வகை வகையாக எழுதியும் தள்ளுகின்றார்

அந்த பீமனின் கையில் இருந்து விழும் பருக்கைகள்தான் இந்த நாவல்கள்

அப்படி ஒரு நாவல் லூசிபரின் வலிதாங்கி வருகின்றது, இது தமிழில் மாபெரும் வரவேற்பினை பெறும், வாசிக்க விரும்புவோர் இனி முந்தி கொள்க‌

உங்களுக்கு லூசிபர் கதை தெரிந்திருந்தால் கிறிஸ்தவத்தால் சபிக்கபட்டதாக சொல்லபடும் அந்த இசை தேவதையின் வலி ஆசானின் மொழியில் அற்புதமாக புரியும்