அந்த கிராமத்தில் அந்த கதை பிரசித்தி

அந்த கிராமத்தில் அந்த கதை பிரசித்தி

ஒரு தென்னதோப்புக்கு குரங்கு ஒன்று வந்தது, பசியாலும் இன்னும் பல காயங்களாலும் வந்த அந்த குரங்கை அந்த தோட்டத்துக்காரன் பராமரிக்க தொடங்கினான்

அனுதினமும் அதற்கு பழம் வைத்தான், உணவு வைத்தான். குரங்கும் மெல்ல தயக்கம் மறைந்து அவனோடு பழகியது

ஒரு கட்டத்தில் அவனுக்கு உதவ ஆரம்பித்தது

ஆம் தென்னை மரத்தில் ஏறி அவனுக்கு தேங்காய் பறித்து போட தொடங்கியது, முதலில் சமத்தாக விளைந்த காய்களை மட்டும் பறித்தது, தோப்புகாரனுக்கு ஏக மகிழ்ச்சி

மரமேறுபவனுக்கு வேலை போனது, குரங்கு சம்பளமில்லா வேலைகாரனானது.

எங்காவது புளியமரத்தில் தொங்கி கொண்டிருக்கும் அவன் அழைத்ததும் வரும், அவன் சொன்ன மரத்தில் ஏறி அவன் சொன்ன தேங்காயினை பறிக்கும், சமத்தாக கீழே இறங்கி ஒரு வாழைபழம் வாங்கிகொள்ளும்

தோப்புகாரனுக்கோ இருக்கும் வேலையாட்களை எல்லாம்விரட்டிவிட்டு பூராவும் குரங்காக வைத்தால் என்ன என்ற அளவு சிந்தனை வந்தது..

நல்ல உணவும் பயமும் மறைய குரங்கு அதன் சேட்டையினை ஆரம்பித்தது, அதன் இயல்பான குணம் தலையெடுத்தது

தான் செய்வதெல்லாம் சரி என அதற்கு தோன்றிற்று

தேங்காய் பறித்துவிட்டு அப்படியே இளநீர் குரும்பல் என எல்லாவற்றையும் பிய்த்து எறிய ஆரம்பித்தது, தோப்புகாரனுக்கு வயிறு கலங்கியது

ஒவ்வொரு மரமாக ஏறுவதும் சகலத்தையும் உதிர்த்து போடுவதுமாய் ஒரே ஆட்டம், தோட்டகாரனுக்கு அதை என்ன செய்வதென்றே தெரியவில்லை

திடீரென காணாமல் போனது குரங்கு அவன் நிம்மதி அடைந்தான், ஆனால் அது அடுத்த தோப்பில் இதையே செய்ததென புகாருடன் ஓடிவந்தான் அதன் சொந்தக்காரன்

பாவபட்டு குரங்கை பராமரித்த பாவத்துக்கு விழிபிதுங்கி நின்றான் தோட்டக்காரன்

அத்தோடு விட்டதா குரங்கு, தன்னோடு இன்னும் பல குரங்குகளை சேர்த்து கொண்டு தோப்பையே நாசம் செய்துவிட்டது

ஊரே திரண்டு கம்பு கல்லோடு நின்றாலும் தன் சேட்டையினை ஊர் ரசிப்பதாக நினைத்து தென்னை மரங்கெளுங்கும் தாவி எல்லாவற்றையும் நாசபடுத்தி அது மகிழ்ந்துகொண்டது

தன்னாலே மக்கள் ஒன்றாய் வந்திருப்பதாகவும் தான் பெரும் புரட்சி ஏற்படுத்தியதாகவும் நினைத்தது, தன்னை தொலைக்க வந்திருக்கின்றார்கள் என அது நினைக்கவில்லை

கூட்டம் எச்சரிக்க எச்சரிக்க குரங்கு கூட்டமோ சந்தோஷத்தின் உச்சியில் தாவி தாவி எல்லாவற்றையும் நாசமாக்கி கொண்டிருந்தது

பின் மொத்தமாக தோப்பின் சொந்தகாரர்கள் கூடி வெடிபோட்டு படாத பாடுபட்டு விரட்டி அடித்தார்கள், ஊரே திரண்டு வந்து பட்டாசு போட்டு விரட்டி அடித்தது

இந்த கதைக்கும் திரையுலகின் சில படங்களுக்கும் இயக்குநர்களுகும் சம்பந்தம் இருப்பதாக நீங்களாக நினைத்தால் சங்கம் பொறுப்பல்ல..