அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர், தமிழ் திரையுலகம் கண்டெடுத்த ரத்தினம், தமிழ் சினிமாவுக்கே திருப்புமுனை கொடுத்தவர் பாக்யராஜ்

சினிமாவில் தன் அறிவாலும் திறமையாலும் ஜெயித்து வந்தவர் அவர், அவர் கொடுத்த முத்திரையும் அற்புதமான படங்களும் தமிழ் சினிமாவின் வரங்கள்

காலத்தால் மிஞ்சி நிற்கும் ரசனையான காட்சி முதல் சிரிக்க வைக்கும் காமெடி, உருகவைக்கும் சென்டிமென்ட் வரை அவர்படங்களின் முத்திரையே தனி

சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக வந்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்து எல்லோர் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்த அவரின் இடம் என்றுமே தனியானது உயரமானது

சராசரி முகமும் நடிகராகலாம் என சொன்னது அவரே, இயக்குநர் நடிகராகும் வித்தையினை அவர்தான் தொடக்கி வைத்தார்

கதை சொல்வது என்பது ஒரு திறமை, அதுவும் சினிமாவில் கதை என்பது ஒருவரியில்தான் இருக்கும், அதை 2.5 மணிநேரம் கொஞ்சமும் போரடிக்காமல் சுவாரஸ்யமாக சொல்வதுதான் கலை

அந்த கலையில் உச்சத்தில் இருந்தார் அவர், உதாரணம் நாயகனும் நாயகியும் சேருவார்களா மாட்டார்களா? என்பதுதான் கதை, அதை பல்வேறு சம்பவங்களை புகுத்தி காட்சிகளை புகுத்தி சுவாரஸ்யமாக நகர்த்த தனி திறமை வேண்டும்

அது பாக்யராஜிடம் கொட்டி கிடந்தது

பாக்யராஜின் முதல் பலம் அவரின் வாசிப்பு, சும்மா சொல்லகூடாது உலகின் எல்லா விஷயங்களையும் அவர் வாசிப்பார்

அது அவரின் பாக்யா பத்திரிகையில் அவ்வளவு அழகாக தெரியும், தமிழின் மிக சிறந்த பத்திரிகை பக்கம் பாக்யா இதழின் சில பகுதிகள்

இன்றிருக்கும் எந்த பத்திரிகையும், ஒளி ஊடகமும் அதன் தகவலுக்கும் ஆழத்துக்கும் நுட்பத்துக்கும் ஈடாகா

ஆனால் அது இங்கு கொண்டாடபடவில்லை என்பதுதான் சோகம், தமிழனின் வாசிப்பும் அவன் தேடலும் அதிலிருந்தே தெரிந்தது

நிச்சயம் பாக்யராஜின் லெவல் வேறு, அவரின் அறிவும் உயரமும் அந்த சுவாரஸ்யான கதை சொல்லும் அழகும் அதில் ஆங்காங்கே தூவும் அறிவார்ந்த தத்துவமும் காமெடியும் தனிரகம்

ஆனால் தமிழக ரசனைக்கேற்ப தன்னை சுருக்கிகொண்டார், என்ன செய்வது அவரின் தொழில் அப்படி

மனிதர் மகா சுவாரஸ்யமானவர், சுவாரஸ்யமாக கதைகளை சொல்வது எப்படி என்பதன் பெயரே பாக்யராஜ்தான்

அதனால்தான் தென்னிந்தியாவின் மிக சிறந்த கதாசிரியர் என போற்றபட்டார்

பாரதிராஜாவிடன் துணை இயக்குநராக பணியாற்றி, தொழில் கற்று அப்படியே கேமராவில் முகம் காட்டி, இயக்குநராகி நடிகராகி இசை அமைப்பாளராகி பாட்லாசிரியராகி திரைதுறையின் எல்லா பக்கங்களையும் படித்தவர் அவர்

மிக யதார்தாமான படங்களை, தமிழக வாழ்வியல் சூழலில் ஆற்றங்கரையில் வீசும் மெல்லிய காற்றுபோல் ரசனையாக கொடுத்தவர் அவர்

இன்றல்ல என்றும் தரமான காமெடிகளை அவர் படத்தில் மட்டுமே காணமுடியும், தேர்ந்த உருவாக்கம் அது

எல்லா திறமைசாலிக்கும் வரும் சோதனைகாலம் அவருக்கு முதல் மனைவியின் இறப்பில் வந்தது, ஆனால் அதை தாண்டினார்

பின்னாளில் மாறிவிட்ட தலைமுறையில் அவர் கலந்துகொள்ள விரும்பவில்லை நடிகனாய் ஓரமாய் நின்றுகொண்டார்

அவர் உடல்நலத்தில் குறிப்பாக குரலில் ஏற்பட்ட சில சிக்கல்களும் அதற்கு காரணம்

சின்னதிரையில் அவர் மின்னியிருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட விஷயங்களோடு நிறுத்தி கொண்டார்

பாலசந்தரும் பாரதிரஜாவும் வைரங்கள் ஆம் அது ஒரு பக்கம் மட்டும் மின்னும்

பாக்யராஜ் ஒரு வைடூரியம் அது நடிகன், கதாசிரியன், இயக்குநர், பாடலாசிரியர், இசை என எல்லா பக்கமும் மின்னும்

அவரிடம் சிலாகிக்க கூடிய விஷயம் அவரின் வாசிப்பு, அந்த நகைச்சுவை உணர்வு அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையாக நடித்து அவர் நடிகனாக ஜெயித்தது

அந்த முகமும் அந்த பாந்தமான குரலும் வென்றது அவரின் தன்னபிக்கையாலே

1980 முதல் 1995 வரையான காலம் அவருக்கானது, நிச்சயம் அப்பொழுது வந்த படங்கள் அவரின் படங்கள் எல்லாம் தமிழ்சினிமவின் எளிய யதார்த்த கோலங்கள்

முந்தானை முடிச்சு முதல் ஆரிரோ ஆராரிரோ வரை அவரின் படங்கள் எக்காலமும் நல்ல கதை அமைப்புக்கும் சுவாரஸ்யாமான கதைபோக்குக்கும் என்றும் எடுத்துகாட்டானவை

ஒரு காலம் வரும், அப்பொழுது பாக்யராஜ் எவ்வளவு மகத்தான கதை சொல்லி என்பதை உலகம் அறியும்

அவருக்கான பெரும் அங்கீகாரம் இங்கு கிடைத்ததா என்றால் எம்ஜி ராமசந்திரன் இருக்கும் வரை கிடைத்தது

குடும்ப கதைகளை வெகு இயல்பாக ரசிக்க ரசிக்க சொல்லியிருப்பார் பாக்யராஜ், அவர் படங்களில் பெரும்பாலும் பெண்களை மோசமாக சித்தரித்தில்லை, எது யதார்த்தமோ அதை அப்படியே சினிமாவில் செதுக்கியிருப்பார்

எளிய கிராமத்து குடும்பங்களையும் சராசரி குடும்பங்களையும் திரையில் அப்படியே காட்டியது பெண்கள் மத்தியில் தனிபெயரை அவருக்கு கொடுத்தது, ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தார்கள்

பூர்னிமா அதில் ஒருவராக அவரிடம் விழுந்திருக்கலாம்

1980 கால திரைபட உலகம் பாக்யராஜ் சொன்ன திசையில் சுழன்றது

எம்ஜி ராமசந்திரனிடம் ஒரு நல்ல விஷயம் உண்டு, நல்ல படங்களை ரசிப்பார் அப்படி எடுக்க சொல்லி ஊக்குவிப்பார்

அந்த ராமசந்திரன் பாக்யராஜினை கொண்டாடினார், பாக்யராஜ் என் கலையுலக வாரிசு என அவர் சொன்னது அன்று மாபெரும் அங்கீகாரம்

அதுதான் என்னவோ அவருக்கு கட்சி அடையாளம் கொடுத்து பின்னாளில் சில சிக்கல்களை கொடுத்தது

இன்று கொண்டாடபடவேண்டிய ஒரு சினிமாக்க்காரன் உண்டென்றால், பெரும் விழா நடத்தி ஒருவனை கவுரவிக்க வேண்டுமென்றால் பாக்யராஜ் ஒருவரே

அந்த பாக்யா மிக சிறந்த பத்திரிகை, தமிழின் அறிவார்ந்த பத்திரிகை. தமிழகம் அறிவினை தேடும் மாநிலம் என்றால் அது ஒன்றே பாக்யராஜுக்கு சொத்தாகவும் அடையாளமாகவும் மாறி இருக்கும்

ஆனால் வாசிப்பு அதிகமில்லா தமிழகம் அவரை சினிமாக்காரன் என்றே அறிந்து கொண்டது

நாம் மிகவும் ரசித்த அந்த கலைஞனை, மிக மிக சுவாரஸ்யமான இயக்குநரை கோலாலம்பூரில் சந்திக்க முடிந்தது

அவரிடம் பேசவும் கேட்கவும் எவ்வளவோ இருந்தாலும் நலம் மட்டும் விசாரித்து படமெடுக்க முடிந்தது, சில நிமிடம் மட்டுமே

அந்த ஹோட்டலில் நம்மிடம் விடைபெற்றதும், தன் பிரத்யோக நடையில் மாடியில் ஏறிகொண்டிருந்தார்

அவரின் அழிக்கமுடியா முத்திரை காட்சிகள் கண்ணுக்குள் அன்று சுழன்றன, அது இன்றும் சுழல்கின்றது

அந்த மாபெரும் கலைஞனுக்கு பன்முக வித்தகனுக்கு கலைதுறையின் வைடூரியத்துக்கு ஆக சிறந்த எழுத்தாளனுக்கு மிக சிறந்த வாசிப்பாளனுக்கு, அற்புதமான கற்பனையாளனுக்கு இன்று பிறந்த நாள்

ஜனரஞ்சகமான அந்த சுவாரஸ்ய கலைஞன் நூறாண்டுகள் வாழட்டும், எல்லா வளங்களையும் நிரம்ப பெற்று இன்னும் கலைதுறைக்கு பெரும் சேவையாற்றட்டும்.

அவரை சந்தித்த அன்று மகள் கேட்டாள் இது யாருப்பா?

“நம்ம டிவில காமெடியெல்லாம் பார்ப்போமே, தேவனே தேவனேன்னு ஒரு ஆன்டி பாடும்போது ஒரு அங்கிள் காதை மூடுவாரே

ஆமாமா..

டிங் டாங் டிங்ன்னு ஒரு அங்கிள் பியாணோ வாசிக்க தெரியாம வாசிப்பாரே

ஆமா.. அந்த அங்கிளா.. அவரோட எப்பவுமே காமெடிதாம்ப்பா…”

ஒன்றா இரண்டா பாக்யாராஜின் நினைவுகள், ஒரு கலைஞனின் மாபெரும் வெற்றி அதுதான். எக்காலமும் தன் பெயரை சொன்னால் தன் படைப்பின் நினைவுகளில் மூழ்க வைப்பது

அவ்வகையில் பாக்யராஜ் மாபெரும் வெற்றிபெற்ற கலைஞன்..