ஓமான் மன்னர் சயீத் அல் சயீத் காலமாகிவிட்டார்
ஓமான் மன்னர் சயீத் அல் சயீத் காலமாகிவிட்டார் அவருக்கு 79 வயதாயிற்று.
ஓமான் நாடு அது மஸ்கட் ஓமான் என அழைக்கபட்ட காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தியாவுடன் தொடர்புடையது
மஸ்கட் அல்வா என்பது அங்குள்ள பலகாரம் அது கொழும்புக்கு சென்று தமிழ்நாட்டு வந்து முதலூர் மஸ்கட் அல்வா என்று இங்கு இனிப்பு பண்டமாயிற்று
ஆம் ஓமானுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் எக்காலமும் நலமாய் உண்டு
ஓமானின் மன்னராக இந்த சயீத் 1970ம் ஆண்டு மன்னராக முடிசூடினார், சும்மா சொல்ல கூடாது உண்மையான இஸ்லாமிய மாண்பு அந்த மாமன்னன் சலாவுதீன் போல அவருக்கு இருந்தது
அக்கால கலீபாக்கள் போல நல்லாட்சி நடத்தினார், எண்ணெய் வளம் மிக அதிகம் என சொல்லமுடியா ஓமனில் இருக்கும் வளத்தை கொண்டு நாட்டை வளமாக்கினார்
கல்வி வளர்த்தார், மக்கள் எண்ணெய் பணத்தில் மட்டும் சுகமாக வாழ கூடாது. எண்ணெய் வளம் இல்லை என்றாலும் உழைப்பில் வாழவேண்டும் என பல விஷயங்களை செய்தார்
ஓமானியரை படிக்க வைத்து பல பணிகளில் கொண்டுவந்தார்
இந்த சுல்தானின் மாபெரும் நல்ல குணம், சமய பண்பாளர். ஓமனில் இந்துக்கள் கிறிஸ்தவர் என யாரும் கோவில் கட்ட அனுமதித்தார், இந்துக்களுக்கு மயானம் கூட ஒதுக்கினார்

இந்தியாவுடன் எக்காலமும் நல்ல மதிப்பு வைத்திருந்தார், அவரின் படிப்பு இந்தியாவில் நடந்தது முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா அவரின் பேராசிரியர்
இதனால் அவர் ஓமான் சென்றபொழுது அவருக்கு கார் ஓட்டி தன் நன்றிகடனை காட்டியவர் இம்மன்னர்
மன்னரின் குணம் சாந்தமானது, அரேபியாவில் யுத்த மேகம் சூழும் பொழுதெல்லாம் சமாதானம் பேச முயல்வார். இஸ்ரேல் அரபு நாடுகள், சவுதி கத்தார், கத்தார் ஈரான் என எங்கெல்லாம் மோதல் வந்ததோ அங்கெல்லாம் ஓமான் மன்னரின் அமைதிபணி இருக்கும்
ஓமான் மகா அமைதியாய் இருக்க அவரின் அணுகுமுறை காரணம்
இந்தியா தன் துறைமுகத்தை அமைக்க கடற்கரையில் பெரும் நிலப்பரப்பினை தயக்கமின்றி கொடுத்தவர் மன்னர் சயீத்
தயக்கமின்றி சொல்லலாம், நவீன காலத்தில் ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் எப்படி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்கு உதாரணம் சயீத்
வாழு வாழவிடு, முடிந்தால் உதவு இல்லாவிட்டால் அமைதியாய் இரு என்பதுதான் அவரின் கொள்கையாய் இருந்தது
பன்னெடுங்காலமாக பாலைவன தேசம் என அறியபட்ட ஓமானும் , பின் தங்கியவர்கள் என கருதபட்ட ஓமானியரும் அவரால் பெரும் அனுகூலத்தை பெற்றனர்
யுத்தம் இல்லாமல், வீண் பகை இல்லாமல், எல்லோருடனும் இணக்கமாய் இருந்து தானும் வாழ்ந்து தன் மக்களையும் வாழ்வாங்கு வாழவைத்த மாமன்னர் சயீத் அரபு வரலாற்றில் நிலைத்துவிட்டார்
தூய்மையான கலீபாக்கள், மாமன்னன் சலாவுதீன் போன்றோரின் வரலாற்றை நாம் படித்திருப்போம், ஆனால் அவர்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்பதை இந்த மன்னரில்தான் கண்டோம்
தன் நாடு என்றபொழுது செல்வம் குவிக்காமல், வீண் மத துவேஷம் கொண்டு திரியாமல், மதத்துக்காக யுத்தம் நடத்தாமல் தன் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த அந்த மன்னன் வரலாற்றில் நின்றுவிட்டார்
தன் நாட்டு வளத்தை கொண்டு தானும் வாழ்ந்து தன்னை நம்பி ஆசியாவில் இருந்து வந்த எல்லா தொழிலாளர்களையும் வாழவைத்தார்
நல்ல இஸ்லாமியனுக்கு இருக்க வேண்டிய எல்லா குணமும் அவருக்கு மிகுந்திருந்தது நன்றி உட்பட
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்தியாவின் நலனுக்காக அவர் கொடுத்ததை எக்காலமும் இத்தேசம் நன்றியோடு நினைத்தல் வேண்டும், இந்து சமயம் மேல் அவருக்கு நல்ல அபிமானம் எக்காலமும் இருந்தது
அவரின் சாதனை மிக பெரிது, எழுதினால் புத்தகமே எழுதலாம்
கல்வி, சாலை, தொழில் , மக்கள் வாழ்க்கை தரம் இன்னபிற விஷயங்களை ஜீபூம்பா என 40 வருடத்தில் மாற்றிகாட்டிய அவரின் சாதனை வரலாற்றில் லீ குவான் யூ, காஸ்ட்ரோ, டென் ஜியோ பிங் போன்றோரின் சாதனைக்கு ஈடானது
இதனால்தான் அரபு புரட்சி ஓமானை தொட்டு பார்க்கவில்லை, மன்னரை பற்றி மக்களுக்கு தெரிந்திருந்தது, நன்றி புன்னகையுடன் நோக்கினார்கள், மன்னரும் பொறுப்பாய் கவனித்தார்
நல்லாட்சிக்கு உலகில் பெரும் எடுத்துகாட்டாய் இருந்தவர் மன்னர், அமைதி அவருக்கு அவ்வளவு பிடித்திருந்தது, அமைதியில்தானே தெய்வமே வாழும்.
அந்த பெருமகனுக்கு உலகம் அஞ்சலி செலுத்துகின்றது, நாமும் அஞ்சலி செலுத்துவோம்
அவர் வணங்கிய இறைவன், கண்ணியமிக்க மன்னரின் ஆன்மாவுக்கு நிச்சயம் சொர்க்கம் அருளியிருப்பான், அந்த நல்ல ஆத்மா அதில் நித்தியமாய் இளைப்பாறட்டும்