சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!
கொரோனா காட்சிகளையும் அதற்கு மருந்து தனித்து தவமிருந்தல் யாதொரு பொருளையும் தொடாமலிருந்தல் எனும் தீர்வினை காணும்பொழுது மகாபாரத யுத்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகின்றது
மகாபாரதத்தில் கவுரவர் பக்கம் இருந்த மிகபெரும் பலம் அசுவத்தாமன், ஆம் அவனின் பலமும் வரமும் இன்னும் சில விஷேஷித்த வரங்களும் எவனுக்குமில்லை, மிக மிக அபூர்வ பிறப்பு அவன், அவன் சாகும் காலம் மானிட குலமே அழியும் காலம் எனும் வரம் அவனுக்கு வழங்கபட்டிருந்தது
அதாவது அவன் செத்தால் மானுட குலமே அழியும்
இதுபோக பிரமாஸ்திரம், பாசுபத கனை ,நாராயண அஸ்திரம் என முமூர்த்திகள் வழங்கிய மிகபெரும் அழிவு ஆயுதம் அவனிடம் இருந்தது
ஆனால் அவனின் பலம் அறிந்தோர் இருவரே ஒருவர் துரோணர் இன்னொருவர் கண்ணன். இதனாலே அஸ்வத்தாமனோடு உறவாடி துரியனுக்கு சந்தேகம் ஏற்படுத்தி அவன் படைதளபதி ஆகாதாவறு தடுத்தான் கண்ணன், தேர்ந்த ராஜதந்திரம் அது
துரோணர் துரியோதனின் கொடுமதி அறிந்து அதை வெளிசொல்லவில்லை ஆம் அவர் நல்லவர், அஸ்வத்தாமனின் மிக பெரும் பலம் பற்றி அவர் அஸ்தாமனுக்கோ துரியனுக்கோ சொல்லவே இல்லை , விளைவுகளை அறிந்த ஞானி அவர்
இதனால்தான் போரில் பீமன் சிங்கநிகர் அஸ்த்தாமன் யானையினை கொன்றான் எனும் செய்தியினை யானையினை டம்மியாக்கி, பீமன் அஸ்வத்தாமனை கொன்றான் என துரோணர் காதில் ஒலிக்க செய்தான் கண்ணன், கடவுளர் சொன்னதும் பொய்யோ , வேதம் சொன்னதும் பொய்யோ என அதிர்ச்சியில் ஆயுதத்தை தவறவிட்ட துரோணரை அழித்தான் துருபதன்
உண்மையில் பாரதபோரின் மிக முக்கிய கட்டமே அஸ்வத்தாமன் வரவில்தான் உண்டு, பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜெயத்ரதன் என எல்லோரும் மடிந்துவிட்ட நிலையில் உண்மையான சண்டையினை தொடக்கினான் அஸ்வத்தாமன்
அந்த கட்டமே மிக பிரளயமான கட்டம், வெறிகொண்ட சிம்மமாக அவன் ஆடிய ஆட்டத்தில் பாண்டவ சேனை கலங்கி நின்றது
அவன் துருபதன், சிகண்டி, இளம் பஞ்சபாண்டவரையெல்லாம் கொன்று துரியனிடம் தெரிவித்து அவனை நிம்மதியாக கண்மூட செய்தது, பாண்டவரின் வாரிசே இருக்க கூடாதென அர்ஜூனன் கருவை நோக்கி பிரமாஸ்திரத்தை வீசிய கதை எல்லாம் உண்டு
ஆம் பாண்டவர் மட்டுமல்ல அவர் சேனைகளின் வாரிசே இருக்க கூடாது என்ற வெறியின் உச்சத்தில் இருந்தான்
ஆம் துரோணரின் சாவு அவனை அப்படி ஆக்கியது, வெறியோடு பாசுபத கனையினை எடுத்து மொத்த பாண்டவ சேனையினை அழிக்க துடித்த அவனை , அக்கனையினை தடுத்து சிவன் வேண்டினார், ஆனால் தன்னை மாய்த்துகொள்ள தயாரானான் அஸ்வத்தாமன்
ஆம் அவன் செத்தால் மானிட குலமே அழியும் என்பதால் தான் கொடுத்த பாசுபத கனையினை மட்டும் தடுத்து அவனை கண்ணணிடம் அனுப்பினார் சிவன்
(அஸ்வத்தாமன் சஞ்சீவி அவனுக்கு சாவே இல்லை, கல்கி அவதாரத்தில் பகவான் வரும்பொழுது அவரை அவன் சந்திப்பான், அப்பொழுது பூலோகம் நீங்குவான் அத்தோடு மனுகுலம் அழியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை, இதிகாசம் சொல்லும் உண்மையும் கூட)
அந்த கொடும் ஆத்திரத்தில் அஸ்வத்தாமன் நாராயண அஸ்திரம் எனும் அந்த கொடும் ஆயுதத்தை வீசினான்
அது மகா ஆபத்தானது, அந்த அஸ்திர சாசனபடி முப்பது முக்கோடி தேவர்களும் அந்த ஆயுதம் யாரை நோக்கி வீசபடுமோ அவர்களை அழிக்க வருவார்கள், அப்படி மிக சக்திவாய்ந்த கனை அது
பாண்டவ சேனை அஞ்சி ஒடுங்கி கண்ணணிடம் சரணடைந்தது, தேவர் கூட்டமே வந்தபின் என்ன செய்யமுடியும்? அவர்களின் கடைசி புகலிடமும் எப்பொழுதும் காப்பவருமான கண்ணனை நோக்கி கதறினர்
கண்ணன் சிரித்து கொண்டே சொன்னான் “பாண்டவ சேனையே, எல்லா பலத்திலும் ஒரு பலவீனம் உண்டு இந்த நாராயண அஸ்திரம் எவன் போர் புரிவானோ, எவன் போர் ஆயுதம் கையில் வைத்திருப்பானோ அவனையே அழிக்கும், இதனால் இந்த அஸ்திரத்தின் காலம் நீடிக்கும் நாழிகை வரை ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அமைதியாக அமர்வீராக..”
பாண்டவ சேனை அதனையே செய்ய குறிப்பிட்ட காலம் ஆடிபார்த்த நாராயண அஸ்திரம் தன் காலம் முடிந்ததும் பலமிழந்தது அதன் பின் யுத்தம் தொடங்கியது
இதே நாராயண அஸ்திரம் முருகபெருமானின் திருச்செந்தூர் போரிலும் வரும், முருகனின் படையில் உக்கிரன் என்றொரு பூதம் உண்டு இது சிங்கமுகனின் மகனான அதிசூரன் என்றொருவனுடன் சண்டையிடும்
அதிசூரன் ஆத்திரத்தில் இதே நாராயண அஸ்திரத்தை உக்கிரன் மேல் வீசி எறிந்தது, சாவு உறுதி என்ற நிலையில் முருகனை நோக்கி அழைத்தான் உக்கிரன்
“உக்கிரா முருகனை நினைத்து கொண்டு அமர்ந்துவிடு, உனக்கு ஆபத்து நேராது” என்ற அசரீரி ஒலிக்க அப்படியே அமர்ந்தான் உக்கிரன், அஸ்திரம் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் ஆபத்தின்றி கடவுளிடமே சென்றது
ஆக நாராயண அஸ்திரம் என்பது என்ன சொல்கின்றது என்றால் சில வகை ஆபத்துக்கள் வரும் காலத்தில் கையில் இருக்கும் ஆயுதத்தை விட்டுவிட்டு அமைதியாக தனித்திரு என்கின்றது
இதுவே பாசுபத கனை தத்துவம், ஆம் பாசுபத கனையும் கையில் ஆயுதமில்லாதவனை கொல்லாது
இது கொரோனா காலம், ஒவ்வொருவனுக்கும் அவன் தொழில்தான் இன்று ஆயுதம், உலகம் போர்களம் இந்த களத்தில் அவன் தன் தொழிலால் போராட வேண்டியிருக்கின்றது
ஆனால் காலதேவன் அந்த நாராயணா அஸ்திரத்தை கொரோனா என வீசிவிட்டான், இனி பகவான் காட்டியது தவிர வேறு வழி இல்லை
“அர்ஜூனா ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு எல்லோரையும் அமரசொல்” என அன்று கண்ணன் சொன்னதை இன்று மோடி சொல்கின்றார்
தொழில் ஆயுதங்களை போட்டுவிட்டு அமர்ந்துவிட வேண்டியதுதான், அப்பொழுதுதான் தப்பமுடியும்
உக்கிரன் எனும் பூதம் சொன்ன தத்துவமும் கவனிக்கதக்கது, முருகனை நம்பியவருக்கு அவனை அழைத்தவருக்கு எந்த அஸ்திரமும் தாக்காது, கொரோனாவும் அண்டாது
ஆனால் தொழில் ஆயுதம் இன்றி, தனித்திருந்து தவருப்பது போல் பகவானை நினைத்து அமர்ந்துவிடல் வேண்டும்
கண்ணனும், முருகனும் சொன்னதையே இன்று நம்மை வழிநடத்தும் மோடியும் சொல்கின்றார்.
காலமும் நேரமும் நமக்கு எதிராய் இருக்கையில் அப்படியே அமரவேண்டும், கொந்தளிக்கும் கடலில் நங்கூரம் இடவேண்டுமே தவிர மேற்கொண்டு சென்றால் ஆபத்து
பாரதபோர் இன்னும் சொல்லும் “கண்ணா நாராயண அஸ்திரம் எவ்வளவு நேரம் நீடிக்கும், மேற்கொண்டு போர் எப்பொழுது தொடங்கும்” என கதறுகின்றான அர்ஜூனன்
“அர்ஜூனா இது அமைதியாய் அமரும் நேரம், சேனைகள் அமரட்டும். இந்த ஓய்விலும் புத்துணர்ச்சியிலும் எழும் சேனை இருமடங்கு வெற்றி குவிக்கும், காரணங்கள் இன்றி காரியமில்லை, அமைதியாய் அவர்வாயாக..”
ஆம் அப்படியே அமர்வோம், எல்லா சூழலுக்கும் ஆபத்துக்கும் ஒரு காலமுண்டு. அதில் அடங்கியிருந்தால் எதிர்காலம் உண்டு
சூழல் விரைவில் நீங்கும் பொழுது காலம் மாறும், அப்பொழுது இந்த அமைதிக்கும் சேர்த்து வெற்றிகளை புத்துணர்ச்சியுடன் குவிக்கலாம்
கம்பன் இதையே ராமாயணத்தில் ராமனின் வார்த்தையாக சொல்வான், “நதியின் பிழையன்று நறுபுணல் இன்மை, விதியின் பிழையன்றி வேறென்ன”
ஆம் நதி காய்ந்துவிட்டால் நதியின் தவறா?
காலமே நடத்தும் காலமே காக்கும், இன்று அடங்கி அமர காலம் உண்டென்றால் எழவும் காலம் வரும்
மகாபாரத, செந்தூர் போரின் காட்சிகளை கண்களுக்குள் கொண்டுவாருங்கள், நாராயண அஸ்திர காட்சிகளை சிந்தியுங்கள், மனம் அமைதியுறும், தெளிவுறும், வரும் சூழலை மகிழ்ச்சியாய் எதிர்கொள்வீர்கள்
உண்மையில் நாராயண அஸ்திர தத்துவம் என்ன தெரியுமா?
எவன் தன் தொழிலாலோ அறிவாலோ ஆயுதத்தாலோ தன்னை காக்கமுடியும் என அகந்தை கொண்டு அழியாமல் பகவானை நினைத்து எல்லாவற்றையும் எறிந்து சரண்டைந்து தவமிருக்கின்றானோ அவனை ஒரு ஆபத்தும் அண்டாது என்பதாகும்
ஆம் இக்காலத்திலும் அப்படி நம் தொழில் பணம் செல்வாக்கு ஆயுதம் என நம்பி அகந்தையில் திரியாமல் எல்லாவற்றையும் துறந்து தனியே அமர்ந்து பகவானை சிந்தியுங்கள், ஒரு ஆபத்தும் வராது
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
(அஸ்வத்தாமன் பெரு வீரன், அவனின் கதையும் வீரமும் உருக்கமும், கிருஷ்ணனுக்கும் அவனுக்குமான உரையாடலும் அவனின் தந்தை பாசமும், அவனின் வரமே சாபமானதும் இன்னும் ஏகபட்ட பக்கங்கள் உண்டு, கர்ணன் போல் அவனின் கதை சுவாரஸ்யமானது இன்னொரு நாள் எழுதலாம்..)