கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்!
ஆட ஒரு காலம் உண்டு என்றால் அடங்கவும் ஒரு காலம் உண்டு , சிரிக்க ஒரு காலம் உண்டென்றால் அழவும் ஒரு காலம் உண்டு,
அழ ஒரு காலம் உண்டென்றால் சிரிக்க ஒரு காலம் உண்டு
ஆம் ஆடிய நாடுககளெல்லாம் அடங்கி கிடக்கின்றது, சகல நாடுகளின் நிம்மதியினை கெடுத்த பூமிகள் நிம்மதியின்றி தவிக்கின்றன, இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலையிலும் ரத்தம் சிந்த வைத்த , அழிவுகளை கொடுத்த மண், காரணம் தெரியா சிக்கலில் கலங்கி நிற்கின்றது
அமெரிக்க செவ்விந்தியரில் தொடங்கி..சிலுவைபபோர்… நம்ம ஊர் கட்டபொம்மன், அரேபிய சதாம், கடாபி வரை, ஆப்கன் சிரியா வரை.. வேண்டாம் சில விஷயங்களை சொல்ல இது நேரமில்லை
இது அரணைத்து நாமும் அழுது ஆறுதல் சொல்ல வேண்டிய காலம்
காலதேவன் மெல்ல நகைத்துவிட்டு கடக்கின்றான், தர்மதேவதை கண்ணீர் விட்டபடியே கடக்கின்றாள், அவற்றின் காரணத்தின் ஒரு பகுதி அவளுக்கு புரிகின்றது, பரம்பொருளின் ஆலயங்களும் பூமியில் அடைத்து கிடக்கின்றது, எல்லா மதத்து தர்மசாலைகளும் மூடிகிடக்கின்றன
பூமிக்கு இது புதிது, அதன் 4 யுகங்களிலும் இது புதிது. எவ்வளவோ அழிவுகளிலும் நெருக்கடிகளிலும் ஏதாவது ஒரு மத ஆலயம் திறந்தே இருக்கும், எல்லா ஆலயங்களும் பூட்டபட்டு செயலற்று கிடந்தது ஊழிகாலத்தில் மட்டுமே.
ஏன் மானிட குலத்தின் முதன்முறையாக பூமியின் எல்லா ஆலயங்களும் பூட்டி கிடக்கின்றன, பரம்பொருள் சொல்லவரும் எச்சரிக்கை என்ன? செய்தி என்ன?
காரியமின்றி காரணங்கள் வாரா, அவன் அனுமதியின்றி இவை எல்லாம் நடக்காது
ஆம், பரம்பொருள் தொலைந்துபோன எதையோ இங்கு தேட சொல்கின்றான், அது தொலைந்து கிடப்பது மானிட மனதின் அடியாளத்தில் என்பதால் தனித்திருந்து சிந்திக்க சொல்கின்றான்
மானிடன் எப்பொழுது தனித்து அடங்குவான்? மிகபெரும் சீற்றங்கள் நடக்கும் பொழுது அஞ்சி ஒடுங்கி வளையில் எலிபோல் பதைத்து தனித்திருப்பான்
அப்படி இப்பொழுது அவன் தனித்திருக்கின்றான், அடக்கி ஒடுக்கி காலதேவன் அவனை அமரவைத்திருகின்றான்
இவ்வளவு விஞ்ஞான வசதிகளையும் டிவி இணையம் மீடியா என வளரவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏன் ஒவ்வொரு கையிலும் புகுத்தியிருக்கின்றானே காலதேவன் எதற்காக?
ஆம் தனித்த நிலையிலும் அவன் சிந்திக்க வேண்டும், தொலைந்து போனதை தேடவேண்டும் என்பதற்காக
தொலைந்துவிட்ட விஷயம் எது தெரியுமா? சக மனிதனுக்கான கண்ணீர், சக மனிதன் சாகும் பொழுது அவனுக்கான துக்கத்துக்கும் அவனின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திப்பது.
மானிட குலத்தை நெல் வயலில் கொத்தாக அறுப்பது போல் ஐரோப்பாவில் அறுத்தெடுக்கின்றான் எமன், துள்ள துடிக்க பிடிபடும் மீன் கூட்டம் போல வலை வீசி அள்ளுகின்றான் அவன்
அவர்கள் யாராகவும் இருக்கட்டும் எத்தேசம் எந்த இனம் மதம் மொழியாகவும் இருக்கட்டும், ஆனால் மனிதர்கள் கடவுளிடம் செல்ல வேண்டிய ஆன்மாவினை சுமக்கும் மானிடர்கள்
வாழைதோப்பில் கூட ஒருவாழை சரியும்பொழுது இன்னொரு வாழை தாங்கும், பறவைகளில் கூட ஒரு பறவை இறந்தால் கூட்டமே கத்தும்
ஒரு ஆடு செத்துகிடந்தால் மொத்த மந்தையுமே அலறும்
நாமோ மானிடர்கள், ஆனால் மனிதத்தை தொலைத்துவிட்ட மானிடர்கள். தொழில் பணம் அந்தஸ்து கவுரவம் என போலி முகமூடிகள் ஏராளம் போட்டு பணத்தை தேடி மனிதம் தொலைத்த மானிடர்கள்
இயேசுவின் உடலில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கின்றதா என சோதித்த அந்த காவலனை போல மனிதனின் உள்ளத்தில் கடைசி சொட்டு தர்மம் இருக்கின்றதா என சோதிக்கின்றது காலம்
எல்லா நாட்டு மக்களின் நிலையினையும் ஒரு கண்ணாடியில் காட்டும் விஞ்ஞான வித்தையினை அது கொடுத்த காரணமும் இதுதான்
எக்காலமும் எல்லா நாட்டிலும் நோய்களும் சாவும் இருப்பதுதான், ஆனால் அறிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ வாய்பில்லா காலம் அவை
காரணம் ஒவ்வொரு மனிதனிடமும் அவன் ஆத்மாவில் தெய்வம் வாழ்ந்தது, அவன் உணரவோ அழவோ அவசியமில்லை. மனிதம் வாழ்ந்தது
ஆனால் இன்று சகமனிதனை கூட ஏன் பெற்றோர் உற்றாரை கூட மிதித்துதள்ளும் அளவு நோயுற்று போன மானிட மனத்தை சோதிக்க உலகின் மொத்த சோகத்தையும் காட்டுகின்றான் கடவுள்
கொரோனா செய்தியும் அதன் கொடுமையினையும் ஒவ்வொரு மனிதன் பார்க்கும் பொழுதும் ராமாயணத்து கடைசி காட்சி நினைவுக்கு வரவேண்டும்
அக்காட்சியில் “இன்று போய் நாளைவா” என ராவணனுக்கு சொன்னான் ராமன், ஏன்?
இந்த இரவுக்குள்ளாவது அவன் திருந்திவிடமாட்டானா? தர்மத்தை உணரமாட்டானா என கடைசி வாய்ப்பை கொடுத்தான் ராமன்
களத்தில் வீழ்ந்து கிடந்தான் துரியன் ஆனால் சாகவில்லை, கண்ணா 14 ஆண்டுகள் கொடுத்தாய் இன்னும் ஏன் அவனை கொல்லாமல் விட்டாய் என கேட்கின்றான் அர்ஜூனன்
“அர்ஜூனா, கடைசி நொடியிலாவது அவன் திருந்தி தர்மத்தை உணரமாட்டானா என ஏங்குகின்றேன்” என்றான் கண்ணன்
ஆம், கொரோனா இன்று நமக்க்கு இல்லாவிட்டாலும் நாளை வரலாம், இன்று விழாவிட்டாலும் இன்னொரு நாள் விழலாம்
விழவே மாட்டேன் என மார்தட்டுபவன் எவன்?
டிரம்பும் போரிஸ் ஜாண்சணுமே சிக்கும் பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம்? சீனாவில் இருந்து நம் வீட்டு முனை வரை வந்துவிட்ட கொரோனாவுக்கு நம்மேல் பாய எவ்வளவு நாழிகையாகும்?
பலத்த சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் ஏறவேண்டிய நேரமிது, ஆலயங்கள் பூட்டபட்டது ஊழிகாலத்தின் எச்சரிக்கை, அதை தவிர்ப்பது எப்படி?
ஒரு நிமிடம் சிந்தியுங்கள், பஞ்ச பூதங்களின் ஒத்துழைப்பில் நாமெல்லாம் இன்னும் பிழைக்கின்றோம்
ஆம் காற்றிலும், நீரிலும் , நிலத்திலும் கொரோனா பரவும் என நிலைவந்தால் தாங்குமா? இல்லை அப்படி ஒரு நோய்வராது என சொல்லமுடியுமா?
அப்படி ஒரு நிலைவந்தால் ஒரு நொடி மானிட இனம் வாழுமா? வாழா
தர்மத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது, ஊழியினை வெல்வதும் விரட்டுவதும் நம் கையிலே இருக்கின்றது
தர்மம் இவ்வீட்டில் வாழ்கின்றதா? என ஒவ்வொரு வீடாக தர்ம தேவதை தேடி அலையும் நேரமிது, காலதேவன் அடக்கி வைத்தும் தர்மமில்லை எனில் அது வாழவில்லையெனில் அவள் மனமுடைவாள்
தர்மம் அழுதால் தாரணி அழியும்
அதை மீட்டெடுக்க நம்மால் முடிந்ததை எல்லாம் செய்வோம்
எது தர்மம்? சக மனிதனுக்கு உதவுவதும் அவனை காப்பதும் தர்மம், விதி முடிந்தவனுக்கு அழுது அவன் ஆன்ம இழைப்பாற்றிக்கு அழுவது மாபெரும் தர்மம்
ஆம் கொத்து கொத்தாக, பாளம் பாளமாக மானிடர் சாகும் நேரமிது, அவர்கள் நமக்கு உறவா பகையா இனமா அந்நியமா என்பது விஷயமல்ல, அவர்கள் மானிடர்கள், ஆத்மா வாழ்ந்த மானிட கூடுகள்
கடலில் பேதமில்லை ஆன்மாக்களில் வேறுபாடு இல்லை
வாழும் மானிடருக்கு முழு உதவி செய்வோம், முடிந்த உதவியினை எல்லோரும் செய்வோம், இப்போது அரசு எடுக்கும் முயற்சிக்கு சிரமம் பாராது ஒத்துழைப்பதே பெரும் தர்மம்
அதைபோலவே இருந்த இடத்தில் இருந்து ஒரு தர்மம் செய்யலாம், அது ஆத்ம தர்மம். இறந்தவர்களுக்காக பிரார்த்திப்பது, அவர்களின் ஆன்மாவின் இளைப்பாற்றிக்கு மன்றாடுவது
ஆம் , மானிடன் எனும் ஒரே இணைப்பில் கொரோனாவால் இறந்த அந்த மானிடர்களும் நம்மவர்களே, அவர்களுக்காக விளக்கேற்றி அழுது புலம்பி பிரார்த்திப்போம்
நம் வீட்டு துக்கம் போல் அதை அனுசரிப்போம்
வீடு தோறும் விளக்குகள் ஏறட்டும், நம் பிரார்த்தனைகளில் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தனைகள் சேரட்டும்
அந்த பிரார்த்தனையில் நித்திய ஒளியுடன் அந்த ஆத்மங்கள் கலக்கட்டும், அவர்கள் இந்த பூமிக்கு காவலாக நிற்கட்டும்
அதில் நோயுற்றோர் பிழைக்கட்டும், அந்த காவலில் கொரோனாவுக்கு மருந்தும் வரட்டும், மானிடம் செழிக்கட்டும்
இது தனித்திருக்கும் நேரம், அதில் கொஞ்சநேரம் அந்த ஆத்துமாக்களுக்காக ஒதுக்குவோம், காற்றுக்கு தலையாட்டும் மரம் போல கொஞ்ச நேரமாவது அவர்களுக்காக தலைகுனிந்து அழுவோம்
வீடு தோறும் அவர்களுக்காக ஒரு விளக்கு வைப்போம், இறந்த ஒவ்வொரு மக்களையும் ஒவ்வொருவர் தத்தெடுப்போம்
நோயுற்று போராடும் ஒவ்வொரு மானிடனுக்காகவும் பிரார்த்திப்போம்
இந்த காட்சிக்காகத்தான் தர்ம மகள் கண்ணீரோடு காத்திருக்கின்றாள், காலதேவன் இந்த காட்சியினை காணத்தான் தவமிருக்கின்றான்
சக மனிதனுக்காக அழும் மானிட சமூகத்தை, சக மனிதனையும் தன் பித்ருக்கள் வரிசையில் சேர்க்கும் மனிதனை கண்டபின்னும் தர்ம தேவதை பொறுப்ப்பாளா?
ஏ பகவானே தர்மம் இன்னும் சாகவில்லை, மானிட இனம் இன்னும் மனிதத்தை இழக்கவில்லை என மகிழ்ச்சி
கண்ணீரோடு ஓடுவாள் , அந்நொடியில் கொரோனா சட்டென காணாமலே போகும்
நெருப்பு நெருப்பை வாழவைக்கும், நீர் நீரை வாழவைக்கும்
மனிதன் மனிதனை வாழவைக்க வேண்டும், மனித ஆன்மா இன்னொரு ஆத்மாவுக்கு ஒளியேற்ற வேண்டும்
உங்கள் வீட்டின் கொண்டாட்டத்தை குறையுங்கள், டிவியினை அணைத்துவிடுங்கள், உணவினை குறையுங்கள், நம்மில் ஒருவர் இறந்தது போன்றே நாம் துக்கம் அனுசரிப்போம்
அந்த கண்தெரியா சகோதர சகோதரிகளுக்காக விளக்கேற்றுவோம் மெயின் ஹாலில் அது நிரந்தரமாகா எரியட்டும்
மாலை 7 மணிக்கு எல்லோர் வீட்டு வாசலிலும் அந்த விளக்கு எரியட்டும்
அதை காணும் தர்ம தேவதை மகிழட்டும், கண்ணுக்கு தெரியா சகோதர்களுக்காக நாம் மானுட நேயத்துடன் துக்கம் அனுசரிக்கும் பொழுது கண்ணுக்கு தெரியா அவர்கள் ஆன்மா நமக்கு வழிகாட்டும்
மருத்துவர்களுக்கும் நோயுடன் போராடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும், கொரோனா நம் வீட்டு பக்கம் வராது உலகை விட்டே ஓடிவிடும்
அந்த ஆத்மபலத்தில் நிலமை சரியாகும், மானிடம் பூத்துவிட்ட மகிழ்வில் ஊழிகாலம் தள்ளிபோடபட்டு கோவில்களின் கதவுகள் தானே திறக்கும்
கடவுள் சக்தி ஒரு அசையா சக்தி, அதாவது அணுகுண்டு அல்லது பெட்ரோல் போன்ற பெரும் சக்தி, ஆனால் அது இயங்க தொடங்க ஒரு தூண்டுதல் அவசியம்
அணுகுண்டு நியூட்ரான் கோலால் தூண்டபடும், வெடிபொருள் தீகுச்சியால் தூண்டபடும்
கடவுள் எனும் அந்த பெரும் சக்தி மானிட நேயம் சக மனிதன் மேலான அன்பு, அவன் ஆத்மாவின் மகிழ்ச்சி எனும் தூண்டலில்தான் விஸ்வரூபமெடுக்கும் இல்லாவிட்டால் அதுபோக்கில் இருக்கும்
உலகை மாற்றியது வெறுப்பும் போரும் சுயநலமும் அல்ல மாறாக சக மனிதர்கள் மேலான அன்பு. அந்த அன்புதான் அவதாரங்களை கொண்டு வந்தது, அந்த அன்புதான் சக மனிதனுக்காக விஞ்ஞான கருவிகளை கொண்டுவந்தது, சக மனிதன் படும்பாடு பொறுக்காலமே அன்பின் உச்சியில் மருத்துவம் வளர்ந்தது
அன்புதான் இந்த உலகத்தையே மாற்றியது, அந்த அன்பினாலே இந்த உலகம் சுழன்றது, இன்னும் சுழல வைப்போம்
வாருங்கள், தனித்திருக்கும் நாம் அந்த ஆத்மாக்களுக்காய் துக்கம் ஏந்தி வழிபாடுகளை அனுசரிப்போம், அவரவர் மதம் எதுவோ அதன் வழி பிரார்த்தியுங்கள்
கிறிஸ்தவர்கள் தனித்து பிரார்த்திகட்டும், மெழுகு ஏந்தி ஜெபமாலை சொல்லி பிரார்த்திகட்டும்
இஸ்லாமிய மக்கள் ஐந்து நேர தொழுகையிலும் அம்மக்களை நினைத்து கொள்ளட்டும்
இந்துக்கள் வீடுகளில் அவர்களுக்கொரு இடம் ஒதுக்கி விளக்கு ஏந்தி அவர்களை பிரார்த்திப்போம், உண்ணும் உணவில் ஒருபிடி ஒதுக்கி வைத்து பிரார்த்திப்போம்
இவை முன்பெல்லாம் வழக்கில் இருந்த விஷயங்களே புதியவை அல்லவே அல்ல, மறக்கடிபட்ட விஷயம் அவ்வளவுதான்
கொள்ளை நோய்முதல் போர்வரை இறந்தவர்களின் ஆன்மாவினை சாந்தபடுத்தி கடவுளின் அருளை தேடுவது எக்காலமும் இந்த மண்ணின் தர்மமே
ஆதரவற்ற ஆத்மாக்களுக்காக வேண்டிகொள்வது பெரும் யாகங்களை நடத்துவதற்கு சமம் என்கின்றது இங்குள்ள் தாத்பரிய நம்பிக்கை
அதில் அந்த ஆன்மாக்கள் மகிழும், சாந்தி அடையும், பஞ்ச பூதங்களோடு அவை கலந்து நிம்மதிபெறும்
தெய்வம் தானாய் அந்த ஆத்மாக்களோடு வரும் அதன் பின் நடப்பவை எல்லாம் நல்லவையாய் அமையும், புது மானிட குலமாய் மீண்டெழுவோம்..
மாலை 7 மணிக்கு உங்கள் வீட்டு வாசலில் ஒரு விளக்கு அந்த ஆத்மாக்களுக்ககாக எரியட்டும் , அதில் நிச்சயம் பலன் இருக்கும், முடிந்தால் முயற்சியுங்கள்.
நாம் சொல்வதை சொல்லிவிட்டோம், நாம் எளியவன், நம்மை கவனிப்பார் மிக குறைவு
யார் சொல்லுக்கு பெரும் செல்வாக்கு உண்டோ , யார் சொன்னால் எல்லோரையும் எட்டுமோ அவர்கள் இதை சொன்னால் தெய்வமும் தர்ம தேவதையும் அவர்களை வாழ்த்தி அவர்கள் வம்சத்துக்கே காவல் இருக்கும்..