சார்லஸ் சாப்ளின்.
ஆயிரம் புத்தகங்களை எழுதுவதை விட பல்லாயிரம் வார்த்தைளைவிட வலிமையானதும் நிலைத்து நிற்பதும் காட்சி படுத்துதல் எனும் அழுத்தம்.
அது கொடுக்கும் அழுத்தத்தை வேறு எதுவாலும் கொடுக்க முடியாது
அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள்
ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி வலியினை , ஏழையின் கதறலை தன் ஒற்றை காட்சியில் நடித்தவன்
சார்லஸ் சாப்ளின், கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்
அவன் பிறக்கும்பொழுது அக்குடும்பம் நன்றாக இருந்திருக்கின்றது, அவனுக்கு 4 வயது ஆனபொழுது தடுமாறிற்று
அவனுக்கு விவரம் தெரிந்தபொழுது அவன் கண்டது மனநோயாளி தாய், குடிகார தந்தை, அவர்களிடையே தவித்த சகோதரி
ஒரு சிறுவனாய் அவன் என்னபாடு பட்டிருப்பான்? அவனுக்கு வீடுமில்லை, அரவணைப்புமில்லை. குடிகார தந்தையின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் பல வீடுகள் மாற அவனோ தெருக்களிலும் பூங்காக்களில் உறங்கினான்
அவன் வறுமை தவிர ஏழ்மை தவிர ஏதும் படிக்கவில்லை. அவனின் மனம் உண்மையில் சந்தோஷத்திற்கு ஏங்கியது, தன் வீட்டில் கிடைக்காத மகிழ்ச்சியினை அவன் தெருக்களில் தேடினான், அவனின் கோணங்கி நடனத்திற்கு காசு கிடைத்தது
தெருவில்தான் ஆடினான், இடையில் கவனமாக விழும் காசுகளை பொறுக்கிவிட்டு மறுபடியும் ஆடினான்
அதில்தான் மனநோயாளியான தாய்க்கு சோறு ஊட்டினான், அவனின் பரிதாபம் கண்ட சிலர் அன்னையினை மனநோய் சிகிச்சை மையத்திற்கும் அவனை அனாதை இல்லத்திற்கும் அனுப்பினர்
அங்கிருந்து அடிக்கடி காணாமல் போன அவன் நாடக கொட்டைகளில் ஆடினான், ஏழைகளோடு தெருவில் உறங்கினான், அடித்தள மக்களின் வலி அவனுக்கு அங்குதான் புரிந்தது
ஓரளவு காமெடி நடிகன் என அறியபட்ட காலத்தில் அமெரிக்கா சென்றான், அமெரிக்கா அவனை மிகபெரும் நடிகனாக்கியது, அவனின் படங்கள் ஓட தொடங்கின சொந்தமாக ஸ்டூடியோ கட்டுமளவு வளர்ந்தார்
அது என்னமோ தெரியவில்லை தாயின் பாசம் கிடைக்காமல் போனது போலவே மனைவியின் பாசமும் அவனுக்கு கிடைக்கவில்லை, அவள் பிரிந்து சென்றாள்
பொதுவாக பெரும் அறிவாளிகளும் சராசரி பெண்களும் சேர்ந்து வாழமுடியாது என்பது விஞ்ஞானிகள், மேதைகள் வாழ்வில் நடந்த உண்மைகள்
மிகசிறிய வயதிலே சோகத்தை தூக்கிபோட்டு வளர்ந்த சாப்பிளினுக்கு அந்த சோகமும் பெரிதாக தெரியவில்லை தாங்கினார்
எந்த லண்டனின் பிச்சைகாரனாக அலைந்தாரோ அதே லண்டனில் மிகபிரபல நடிகராக வந்து இறங்கினார், உலகம் கொண்டாடியது
ஆனால் அவரின் அன்னைக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை, அம்மா நான் மிகபெரும் நடிகனாகிவிட்டேன் என அவர் சொல்லும்பொழுது அந்த தாயால் புரிந்துகொள்ளமுடியவில்லை
கண்ணீர் விட்டு அழுதார் சாப்ளின், அவரின் விதி அப்படி இருந்திருக்கின்றது
அதன்பின் சாப்ளின் விஸ்வரூபமெடுத்தார், தொழிலாளரின் வலிகளை அவர் அளவு சொன்னது யாருமில்லை,ஹாலிவுட் சினிமாக்கள் மிட்ட மிராசுகள் கதைகளை காட்டிகொண்டிருந்த நேரத்தில் தெருவில் அலையும் தொழிலாளி கதையினை சொன்னது சாப்ளின்
எதற்கும் அவர் அஞ்சவில்லை, அவருக்கு பொதுவுடமை மீது ஒரு அபிமானம் இருந்தது
ஹிட்லரை அன்றைய தேதியில் மிக தைரியமாக விமர்சித்து நடித்தவர் சாப்ளின். அவர் போலவே வேடமிட்டு அவர் நடித்த தி டிக்டேட்டர் படம் ஹிட்லரை படு மட்டமாக கலாய்த்திருந்தது
அன்றைய நாளில் அந்த தைரியம் எவனுக்குமில்லை. உலகமெல்லாம் போர் சூழல் என்றாலும் சாப்ளினின் படங்கள் வந்துகொண்டே இருந்தன
ஹிட்லருக்கு பின் முதலாளித்துவத்தை சாடி படமெடுத்தார், பேசும் படங்கள் வந்தாலும் பேசா வேடங்களில் பின்னி எடுத்தார்
அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான படங்கள் என்பதால் அவர் அமெரிக்கா வர தடை விதித்தது அமெரிக்கா, மனிதர் அஞ்சவில்லை அவர் போக்கில் தன் படங்களை எடுத்தார்
சாப்ளினின் பெருந்தன்மையும், இம்மானிடத்தையும் ஏழை தொழிலாரை அவர் நேசித்த விதமும் . மக்களை சிரிக்க வைத்தே சிந்தனையில் அழவைத்த விதமும் உலகெல்லாம் அவருக்கு பெருமதிப்பு ஈட்டிகொடுத்தன
அமெரிக்கா அவருக்கு சிறப்பு ஆஸ்கர் கொடுத்து அழைத்தது
நான் புரட்சியாளன் இல்லை, வெறும் கலைஞன். கலையில் கருத்து சொன்னேன். இனி ஏசுவே அழைத்தாலும் அமெரிக்கா போகமாட்டேன் என சொல்லிவிட்டு சுவிட்சர்லாந்திலே தங்கிவிட்டார்
சாப்ளினின் பாதிப்பு உலகெல்லாம் எல்லா திரையுலகிலும் இருந்தது
இங்கும் நாகேஷின் எதிர்நீச்சல் முதல் சர்வர் சுந்தரம் வரை சாப்ளினின் பாதிப்பில் படங்கள் வந்தன. சந்திரபாபு முதல் கமலஹாசன் வரை அவரைபோல் முயற்சித்தனர்.
ஆனால் ஒரு நடிகனும் சாப்ளினுக்கு பின் ஏன் அந்த இடத்தை எட்டமுடியவில்லை என்றால் சிறுவயதில் இருந்தே சாப்ளின் பெற்ற வலியும், உருண்ட புழுதியும் அப்படி.
எத்தனையோ சோகங்களை தன்னுள் கொண்ட அந்த சாப்ளின் எல்லோரையும் சிரிக்க வைத்து கண்ணீரை தன்னோடு வைத்துகொண்டவர்.
“நான் அழுவதாக இருந்தால் மழையில்தான் அழுவேன், என் கண்ணீர் யாருக்கும் தெரிய கூடாது” என சொன்னவர் சாப்ளின், அவர் வாழ்வில் அப்படித்தான் அழுதார்.
அவர் மட்டும் சினிமாவில் அனுசரித்து போயிருந்தால் அவருக்கு இருந்த வரவேற்புக்கு பெரும் ஹாலிவுட் நிறுவணங்களை உருவாக்கி இருக்கலாம், சினிமா உலகை ஆட்டியிருக்கலாம்
ஆனால் கலைஞனுக்கு மக்கள் நலனும், சமூக பொறுப்பும் மகா முக்கியம் என நின்றிருந்தவர் அவர்
“கலைஞன் என்பவன் மக்களின் பணத்தில் நடிப்பவன், மக்களின் மனவோட்டத்தையும் அவர்களின் துயரத்தையும் தன் கலையில் எடுத்து சொல்லா எந்த கலைஞனும் பெரும் பாவம் செய்கின்றான்..” என்ற அந்த பெரும் கலைஞனின் வார்த்தைகள் சாகா வரம் பெற்றவை.
இன்று அந்த மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள், அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி
உலகம் அவனை காமெடியனாக பார்க்கலாம், சிலர் சிந்தனையாளனாக பார்க்கலாம், நாம் அவனை தீர்க்கதரியாகவும், மாபெரும் மகானாகவும், காலம் காலத்துக்கான மானிட சிந்தனையினை சொன்ன சித்தனாகவும் பார்க்கின்றோம்
ஆம் ஹிட்லர் போர்வெறியுடன் அலைந்த காலத்தில் அவன் வேடமிட்டு சாப்ளின் பேசிய வார்த்தைகள் அப்படி
“நாம் போரிடுவோம், ஆனால் நாம் நடத்துவது வறுமைக்கு எதிரான போர், நாம் நடத்துவது நோய்களுக்கு எதிரான போர், நாம் நடத்துவது மானிடம் வாழ்வதற்கான போர்
நமக்கு தேவை துப்பாக்கி அல்ல, பறக்கும் குண்டுகள் அல்ல, போர்விமானமும் பீரங்கியும், பெரும் வெடிமருந்தும் அல்ல
நமக்கு தேவை மானிட கண்ணீரை துடைக்கும் கரங்கள், நமக்கு தேவை மக்களுக்கு தேவையான மருந்துகள், நமக்கு தேவை மானிடருக்கான உடையும் உணவும்
நமக்கு தேவையானது மானிடம் வாழ உழைக்கும் படை, உலகில் எந்த மூலையில் எந்த மனிதன் நோயில் தவித்தாலும் நாம் மருந்து அனுப்ப வேண்டும் , எந்த மானிடன் அழுதாலும் நாம் துடைத்து ஆறுதல் சொல்ல வேண்டும்
பசியென உலகில் எந்த மனிதன் அழுதாலும் ஓடி சென்று ஊட்ட வேண்டும். நம் படைகளும் எந்திரங்களும் அதற்குத்தான் பயன்பட வேண்டும், நம் முழு நோக்கமும் அதற்காகத்தான் உழைப்பதில் இருக்க வேண்டும்
எமக்கு யாரையும் ஆளும் எண்ணமில்லை, யாரையும் அடிமைபடுத்தும் எண்ணமுமில்லை மதம் பரப்பும் நோக்கமுமில்லை. யாரும் ஆளவேண்டாம் மானிடம் வாழட்டும், யாரும் அடிமையாக வேண்டாம் எல்லோரும் வாழட்டும்
மதங்கள் வேண்டாம் மானிடம் வாழட்டும், குழந்தைகள் சிரிக்கட்டும் அது ஆயிரம் மதங்களுக்கு சமம். அச்சமினிறி வலியின்றி காயமின்றி பசியின்றி நோயின்றி மானிடம் வாழட்டும்
அணுகுண்டுகளை கடலில் எறிவோம், பீரங்கி முனையில் குழந்தைக்கு ஊஞ்சல் கட்டுவோம், விமானங்கள் உணவுகளையும் அன்பையும் சுமக்கட்டும், கப்பல்கள் என்பது பசியாற்றும் வாகனமாகட்டும், துப்பாக்கி என்பதை உருக்கி விவசாய கருவி செய்வோம்
நோயினை ஒழிக்கும் மருத்துவர் நமக்கு தேவையே தவிர, போர் வெறி விஞ்ஞானிகள் அல்ல. அந்த ஆய்வுகளும் அல்ல
பணம் மக்களின் பசியும் நோயும் போக்கும் ஆயுதமாக வேண்டும் தவிர, ஆசைகாட்டி பயமுறுத்தும் எஜமானின் வாள் போல ஆகிவிட கூடாது
சிரிப்போம் சிரிக்க வைப்போம், உழைப்போம் உழைக்க வைப்போம் , வாழ்வோம் வாழவைப்போம்”
ஆம் அவன் மகான், மாபெரும் மகான்
அமெரிக்கா தன் ஏதேச்சதிர்காரத்தால் உலகை ஆயுதங்களால் முற்றுகையிட்ட பொழுது, ஹிட்லர் தன் பாசிச நாஜி சிந்தனையால் உலகை ஆயுத முனையில் ஆட்டியபொழுது அவன் சொன்ன வார்த்தைகள் இவை
கவனியுங்கள், இன்று அதே ஜெர்மனுக்கும் அமெரிக்காவுக்கும் அவன் சொன்ன வார்த்தைகள் அப்படியே பொருந்துகின்றன, 75 ஆண்டுகளுக்கு முன் அவன் சொன்ன வார்த்தைகளின் அழுத்தமான உண்மையினை அத்தேசங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றன
நிச்சயம் அவன் ஞானி, அவன் சித்தன். தன் கோமாளிதனத்தால் மக்களை கவர்ந்து அவர்களின் பார்வையினை பெற்று பெரும் சிந்தனைகளை அவர்களுக்குள் விதைத்து சென்ற பெரும் மானிட நேய மகான் அவன்
தன் கோணங்கி சேட்டை ஒன்றுதான் தன் பலம் என அறிந்து அந்த பலத்தால் உச்சம் பெற்று, உச்ச நிலையில் இருந்து பெரும் மானிடநேயம் பேசிய அவன் தன் கர்மத்தை மிக நன்றாக உறுதியாக செய்த கர்மயோகி..
அவன் வாழும்பொழுது அவனை கோமாளி என விரட்டிய அமெரிக்காவும் ஜெர்மனியும் இன்று அவன் வார்த்தைகளின் வீரியத்தையும் தீர்க்கதரிசனத்தையும் உணர்ந்து மனதுக்குள் அழுகின்றன, கொரொனா காலத்தில் அவன் வார்த்தைகள் மறுபடியும் விஸ்வரூபமெடுகின்றன, அதில் அந்த சித்தன் சிரிக்கின்றான்
ரூஸ்வெல்ட் பூமியும், ஹிட்லரின் பூமியும், ராணி விக்டோரியாவின் அரண்மனையும் அவனை குனிந்து வணங்கிகொண்டிருக்கின்றன..
ஆம் பணமும் ஆயுதமும் அவர்களை காக்கவில்லை காக்க முடியவில்லை, சக மனிதர்களின் அன்பும் உதவியும் அக்கறையுமே அமெரிக்காவுக்கும் ஜெர்மனுக்கும் பிரிட்டனுக்கும் இன்று ஆறுதலாய் இருக்கின்றன..
சிரிக்க வைப்பது என்பது ஓரு கலை. மாற்றவர்களை சிரிக்க வைப்பவர்கள் தனக்குள் பல வலிகளை சுமப்பர்