சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியா வளைக்க முடியுமா?

சீனாவில் இருந்து பல கம்பெனிகள் வெளியேறுகின்றது, அவற்றை இந்தியா வளைத்து பிடித்து இங்கு இழுத்து போட வேண்டும் என்ற கூக்குரல்கள் அதிகம் கேட்கின்றன‌

நல்லது, ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள். சீனாவின் பெரும் பலம் நிலையான அரசாங்கம், அதுவும் சக்தி மிக்க அரசாங்கம்

மாறாத சட்டங்கள், நிலையான அரசு, நினைத்த மாத்திரத்தில் நினைத்த வசதிகளை செய்துதரும் அரசு, சீனாவில் பெரும் முதலீடு செய்தால் ஆபத்தில்லை , எத்தனையாயிரம் கோடி முதலீடு என்றாலும் தொழில் நடக்க அரசு உறுதி, வீண் போராட்டமில்லை, தொழிற்சாலை இல்லை

மகா முக்கியமாக மாநிலத்துக்கு 10 கட்சி இல்லை, சாதி சங்கம் இல்லை, இன்னும் எந்த தொந்தரவுமில்லை. தொழில் அதன் போக்கில் நடக்கும் எல்லாவற்றுக்கும் உத்திரவாதம்

இதுதான், அந்த அரசு கொடுக்கும் நிலைத்த நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் காரணம், அங்கு அரசு மாறாது சட்டம் மாறாது, இதர இம்சைகள் இல்லை

இந்தியா அப்படி அல்ல ஏதோ இப்பொழுதுதான் 6ம் ஆண்டாக நிலைத்த அரசு இருக்கின்றது, அதுவாலும் மாநிலங்களுக்குள் பெரும் அதிகாரம் செலுத்த முடியாது

இங்கு எதுவும் நிலையல்ல, ஆட்சி நிலையல்ல, மாநிலம் நிலையல்ல, மீறி நுழைந்தாலும் கமிஷன் கேட்கும் அமைச்சர்கள் கட்சிகள், இது போக ஏரியா தாதாக்கள் அவர்களை சமாளிக்காவிட்டால் வரும் தொழிலாளர் சிக்கல் என ஏக ஏக சிக்கல்கள்

இதுதான் ஒரு கட்டத்துகு மேல் அந்நிய முதலீடு குவியவில்லை

பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில்தொடங்க வருபவன் இதையெல்லாம் யோசிக்காமலா வருவான்?

மகராஷ்ட்ராவில் எண்ணெய் நிலையம் என அறிவித்துவிட்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையில் கால்பந்தாய் மிதிபட்டது சமீபத்திய சவுதி கம்பெனி வரலாறு

உடன்குடி அணல்மின் நிலையம் அமைக்க வந்து மாநில அரசு அமைச்சர்கள் கேட்ட தொகையில் கடலில் நீந்தியே சீன கம்பெனி அலறி அடித்து ஓடிய கதை எல்லாம் இங்கு உண்டு

இதனால் இங்கு முதலில் பல திருத்தங்கள் அவசியம், மீறி வம்பு செய்யும் “போராளிகள்” “மனித உரிமை” என ஒளிந்து கொள்ளும் இம்சைகள், “மாநில உரிமை” என கிளம்பும் கோஷ்டிகள் என எல்லாவற்றையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் வழிகள் வேண்டும்

அதை செய்துவிட்டுத்தான் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை அழைக்க வேண்டும், மாறாக அய்யயோ பறவை பறக்கின்றது இங்கே வலையிட்டு பிடியுங்கள் என்றால் அது அர்த்தமுமில்லை பலனுமில்லை

இங்கே பறவை வந்து தங்கவும் பலுகி பெருகவும் மிக பொருத்தமான சூழலை அமைத்தால், தனக்கு ஆபத்தில்லை என பறவையினை உணரவைத்தால் அது தானாகவே இங்கு வரபோகின்றது.