நாம் அழுதோம், மனம் விட்டு அழுதோம்.

கொரோனா வந்ததில் உலகின் பல இடங்களில் அமைதி நிலவுவது போல பாலஸ்தீனத்திலும் நிலவுகின்றது

உலகில் பெரும் கொடுமை இழைக்கபட்ட இடம் பாலஸ்தீனம், அந்த மக்கள் செய்த பெரும் பாவம் பாலஸ்தீனத்தில் பிறந்தது அதுவும் இஸ்லாமியராக பிறந்தது

ஒரு வாதத்துக்கு வைப்போம், திடீரென மதுரையில் 4 குண்டர்கள் புகுந்து இது ஹேமநாதபாகவதருக்கு பாண்டிய மன்னன் கொடுத்த பூமி , எங்கள் பூமி எல்லோரும் கிளம்புங்கள் என்றால் என்னாகும்?

அந்த பைத்தியகாரதனமான 4 குண்டர்களுக்கு ஆதரவாக மேற்குலகில் இருந்து சிலர் வந்து நியாயம் பேசி கோடுபோட்டு ஊரை பிரித்து கொடுத்தால் என்னாகும்?

அந்த வலிதான் பாலஸ்தீனியரின் வலி

அவர்கள் வலிக்கு பெரும் காயங்களும் தோன்றி கொண்டே இருக்கின்றன, பாலஸ்தீனில் எண்ணெய் இல்லை, எண்ணெய் இருக்கும் அரபு தேசங்கள் அவர்களுக்கு பெரும் ஆதரவாய் இல்லை என ஏகபட்ட இல்லை

அந்த மக்கள் அனுதினமும் வெடிகுண்டு வெடிப்பாலும் துப்பாக்கி சத்ததாலும் பாதிக்கபட்டு வாழ்பவர்கள், ஒரு கட்டத்தில் அதுவே இயல்பு வாழ்வுமாயிற்று

கொரோனா காலம் என்பதால் கொஞ்சம் அமைதி நிலவுகின்றது, குண்டு வீச்சு இல்லாத, அழுகுரலை கேட்காத பாலஸ்தீன குழந்தைகள் வீட்டுக்குள் சிரிக்கின்றன‌

ஆம், கொஞ்சம் நிம்மதியாக சிரிக்கின்றன, அது தற்காலிகம் என்றாலும் அந்த பிஞ்சுகள் சிரிப்பது என்பது தெய்வம் மகிழும் தருணம்

கொரோனா எனும் கொடும் வியாதியின் இன்னொரு பக்கம் இப்படியும் இருக்கின்றது. அறிவு, ராணுவம், பணம் எனும் இறுமாப்பின் உச்சியில் விஞ்ஞானத்தி உச்சியில் ஆடிய இஸ்ரேலை கொரோனாதான் கொஞ்சம் அடக்கியிருகின்றது

மேற்குலகம் அஞ்சி ஒடுங்கி கதறி சாகும் நேரம் என்றாலும் அதற்கு கண்ணீர்விட்டு அழுது மேற்காசியா பக்கம் வந்தால் அங்கு வீட்டுக்குள் பாதுகாப்பாக சிரிக்கும் அரபு குழந்தைகளை காணும் பொழுது கண்ணீரை மீறிய மகிழ்ச்சி வருகின்றது

வாழ்வின் முதன் முதலாக அவை சிரிக்கின்றன, அக்கம்பக்கம் மக்கள் அழாமல் சாகாமல் இருப்பதை பார்த்து சிரிக்கின்றன‌

நமக்கும் மெல்ல புன்னகை வருகின்றது..

ஆனால் மேற்குலகம் சாகும்பொழுது இந்த குழந்தைகள் சிரிப்பதில் மகிழ்கின்றாயா என்றால், அக்குழந்தைகள் அழும் பொழுது ரத்தத்தை பார்த்து அழும்பொழுது யார் அழுதார்கள்?

நாம் அழுதோம், மனம் விட்டு அழுதோம்

அர்ஜூனா உலகில் நன்மையும் நான் தீமையும் நான் , எல்லாம் என்னாலே உண்டாவது மானிடனுக்கு அது புரியாது என கீதையில் கண்ணன் சொன்ன வாக்குகளை நோக்க வேண்டிய நேரமிது