பகவத் கீதை 12
கீதையின் 12ம் அத்தியாயம் பக்தி யோகம், பகவானின் விஸ்வரூபம் கண்ட கண்ணன் அதன் பின் கண்ணனை முழு மனதோடு பக்தி செய்ய நினைந்து சில கேள்விகளை கேட்கின்றான். அவனுக்கு ஞான யோகம் எனும் சந்நியாச வழி சிறந்ததா? இல்லை பக்தி வழி எனும் சாமன்ய நிலை சிறந்ததா? எனும் சந்தேகம் ஏற்படுகின்றது
அதை அர்ஜூனன் கேட்பதும், பகவான் அதை அவனுக்கே உரித்தான ஞானத்தில் விளக்குவதுமே கர்ம யோகம்
அர்ஜூனன் கேட்கின்றான் “கண்ணா, இப்படி ஞான துறவியாகி உன்னை வழிபடும் தொண்டர்களா, அல்லது மானிட சாமான்ய வழியில் வழிபடுவோரா, இருவரின் உனக்கு உகந்தவர் யார்?
கண்ணன் சொல்கின்றான் “என்னிடத்தே மனத்தைச் செலுத்தி எல்லா காலமும் காலமும் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவரோ, அவர்களே யோகத்தில் சிறந்தாரென நான் கருதுகிறேன்.
அழிவற்றதும், குறிப்பற்றதும், எங்கும் நிறைந்ததும், அழியாததும் நிலையற்றதும், அசைவற்றதும், உறுதி கொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ ,புலன்களை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சம்நோக்கு உடையவராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
ஆனால் உலக வாழ்வில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லை அதிகம். உடல் எடுத்தோர் யோக நெறியெய்துதல் மிகவும் கஷ்டம். எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத வழியில் என்னை நினைத்து வழிபடுவோர் யாவரோ என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.
மனதை என்பால் நிறுத்தி, அறிவினை என்னுள் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.
என்னிடம் நிலையாக உன் சித்தத்தைச் செலுத்த உன்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு, பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின், என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
இதுவும் உன்னால் செய்யக்கூடவில்லை என்றால் என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி, எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
பயிற்சியினை காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தைக் காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்து விடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.
எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்.
எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கு உகந்தவன்.
எவனை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியானாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ, அவனே எனக்கு இனியவன்.
எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரத்தையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக்கு இனியவன்.
களித்தலும், பகைத்தலும், துயர்ப்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையுந் தீமையுந் துறந்த தொண்டனே எனக்கு இனியவன்.
பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் சமப்பட்டவன் பற்றுவிட்டவன்.
புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மெளனி, எது வரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், எதிர்பார்ப்பு இல்லாதோன், ஸ்திர புத்தியுடையான் இத்தகைய பக்தன் எனக்கு உகந்தவன்.
இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவும் இனியர்”
இதுதான் பக்தி யோகம் எனும் 12ம் அத்தியாயம்
இதில் ஞான மார்க்கம் கடவுளுக்கு உகந்ததா? இல்லை பக்தி மார்க்கம் உகந்ததா என கேட்கின்றான் அர்ஜூனன்
ஞான மார்க்கம் என்பது ஒருவன் கடவுளில் கலந்துவிடுவது, அதாவது உப்பு கடலில் கரைவது போல கரைந்துவிடுவது , பக்தி மார்க்கம் என்பது தள்ளி இருந்து கடவுளை வணங்குவது..
இதில் கண்ணன் தெளிவாக சொல்கின்றான், எந்த வழி என்பது முக்கியமில்லை அர்ஜூனா, மனம் உவந்து என் மேல் முழு பக்தி செலுத்துபவன் எவனோ அவனே எனக்கு உகந்தவன்
இதில் இன்னும் அழுத்தமாக சொல்கின்றான், மானிட இயல்புக்கு முழு மனதோடு கடவுளை தேடுதல் கடினம், உண்மையில் சந்நியாசியாகி சகல பந்தங்களில் இருந்து விடுதலை பெற்றவன் அவன் கடவுளை நினைத்திருத்தல் எளிது
ஆனால் உலக பந்தங்களில் சிக்கி, உலக இயக்கத்துகாய் உழைக்கும் சாமான்யன் கடவுளை தேடுதல் சிரமம். எல்லோரும் சந்நியாசியானால் உலகத்தில் எது நடைபெறும்? எது நடக்கும்?
இதனால் சில மகான்கள் உதிக்க வேண்டும் என்பதும், அதே நேரம் லவுகீக வாழ்கையில் இருக்கும் மானிடனும் கடவுளை தேடவேண்டும் என்பதும் கடவுள் விருப்பம்
ஆம், கண்ணகி கற்போடு இருந்தது விஷயமல்ல சந்நியாசி வகை அப்படியே, ஆனால் மாதவி கற்போடு இருந்தாள் அல்லவா? அதுதான் விஷயம், சராசரி மானிட பக்தி அப்படியே
இதனால் கண்ணன் சொல்கின்றான் சந்நியாஸி , பக்தன் என்ற வேறுபாடு எனக்கில்லை யார் மனம் என்னை முழுவதும் நினைக்கின்றதோ அவனே எனக்கு உகந்தவன்
இந்த வரிகளை கவனியுங்கள்
“மனதை என்பால் நிறுத்தி, அறிவினை என்னுள் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.
என்னிடம் நிலையாக உன் சித்தத்தைச் செலுத்த உன்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு, பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின், என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
இதுவும் உன்னால் செய்யக்கூடவில்லை என்றால் என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி, எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
பயிற்சியினை காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தைக் காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்து விடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது”
ஆம், உன்னால் முடிந்தவரை முயற்சி செய், கொஞ்சம் கொஞ்சமாக பழகு
உன்னால் முடியாவிட்டால் என் நினைவுடனே உன் கடமையினை செய்ய கற்றுகொள், என் பெயரை சொல்லிகொண்டாவது இரு , விளைவுகளை எண்ணாமல் எதிர்பார்ப்பில்லாமல் என்னில் கலந்து கடமைகளை செய்”
இதற்கு மிக சிறந்த உதாரணம் நாரத முனி
சதா சர்வ காலம் அவர் பகவானின் நாமத்தை சுமந்து கொண்டே இருந்தார்
அன்றைய இந்து கலாச்சாரம் இந்த பக்தி யோகத்தை முறையாக பயிற்றுவித்தது, நல்ல இந்து காலையில் கடவுளை தேடுவான், உண்ணும் உணவினை கடவுளுக்கு படைத்துவிட்டே உண்பான்
செயலை செய்யுமுன் கடவுளை தேடுவான், செயலில் கடவுள்தன்மை இருக்குமாறு பார்த்துகொள்வான், செய்து முடித்ததும் நன்றி சொல்வான், இரவில் தெய்வ நாமம் ஜெபித்துவிட்டே தூங்க சொல்வான்
இதனால்தான் இந்துக்கள் வாயில் அன்றும் இன்றும் “ராமா”, “முருகா” “தாயே” “நாராயணா” போன்ற வார்த்தைகள் அடிக்கடி வருவதை காணலாம்
எந்நிலையிலும் கடவுளை விட்டுவிடாத நிலை அது. ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளை தேடும் தன்மை அது, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவனை அழைக்கும் நிலை அது
இதனால்தான் இந்துக்களின் காலை பூஜையோடு தொடங்கியது, உணவு சாமிக்கு படைக்கபட்ட படையலோடு தொடங்கியது, சரஸ்வதியோ பிள்ளையாரையோ வழிபட்டு தொடங்கினார்கள், தங்கள் வேலை சிற்பமோ, கலையோ, போரோ, காவலோ, நீதியோ எதுவோ தெய்வ சாயல் இருக்குமாறு பார்த்து கொண்டார்கள், விவசாயிகள் கூட பூமியினையும் நீரையும் மாடுகளையும் கடவுளின் சாயலாக கருதினார்கள்
இந்துக்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்த பக்தி தெரியும்
இதைத்தான் இந்த அத்தியாயத்தில் விளக்குகின்றான் கண்ணன், நீ எதையும் செய் ஆனால் ஒவ்வொன்றிலும் என் நினைவோடு செய், அது பக்தி, அந்த மனம் எனக்கு போதும்
பலன் கருதா அந்த பக்திமான்களை கடவுள் எப்படி எல்லாம் சோதிப்பான் என்பதையும் பின் எப்படி அள்ளி கொடுப்பான் என்பதையும் நாயன்மார்கள் அடியார்கள் கதை எங்கும் காணலாம்
ஆம் அங்கெல்லாம் அடிநாதம் பக்தி என்ற ஒன்றாக இருக்கும், கடவுளுக்காக எதையும் இழக்கும் பக்தி
இந்துமதத்தை தவிர பிரதான மதங்களான கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய மதங்களின் மூலம் எது?
ஆப்ரஹாம் அல்லது இப்ராஹீம் எனும் பக்தன் காட்டிய பக்தி, தன் மகனையே பலியிட துணிந்த பக்தி , விளைவுகளை எதிர்பாரா பக்தி
பைபிளின் யோபு கதையிலும் காணலாம்
இந்த துருவ மகாராஜா கதைக்கும் சாலமோன் அரசன் கதைக்கும் தொடர்பு உண்டு, இருவருமே பக்திமான்கள், கடவுள் வந்தபொழுது தனக்காக கேட்காமல் மக்களுக்காக கேட்டவர்கள்
அந்த எதிர்பார்ப்பில்லா பக்தி கடவுளுக்கு பிடித்தது, இருவரும் அப்படி ஆசீர்வதிக்கபட்டார்கள். தனக்காக அல்லாமல் மக்களுக்காக சிந்தித்த அந்த பக்தியின் பலன் அது
ஆம், எதிர்பார்ப்பிலா பக்தி, பரமனே எல்லாம் என சரணடையும் பக்தி , எல்லாமே அவன் செயல் என ஒருவன் சரணடையும் பொழுது எழும் பக்தி, அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக உணர்ந்து ஏங்கும் பொழுது வரும் பக்தி, இதுதான் கடவுளுக்கு உகந்தது
வழிபாடு என்பதும், சாஸ்திரமும் சடங்கும் இன்னும் பலவும் எனக்கு அபிமானம் அல்ல, உண்மையான பக்தி எந்நேரமும் என் நினைவில் ஒருவன் கடமையினை செய்வது, என்னில் லயித்திருந்து உலக காரியங்களை செய்வது , பலன் எதிர்பாராமல் என் நினைவாகவே கடமையினை இன்முகத்துடன் எப்பொழுதும் ஆற்றுவது, அப்படி ஒருவன் இருந்தால் அவனே என் மனதுக்கு உகந்தவன் என அறுதியிட்டு சொல்கின்றான் கண்ணன்
அதனால்தான் அன்று இந்திய சமூகம் நாள் முழுக்க ஒவ்வொரு நொடியும் கடவுளை தேடும் சமூகமாக இருந்தது “நாராயணா” “ராமா” “அடியே தேவி” என அது தன் அருகிருக்கும் ஒருவராகவே தெய்வத்தை கண்டு அவருக்கு துயில் எழுப்பி அமுது படைத்து நகைபூட்டி தாலாட்டி அந்த தெய்வ நினைப்பினை மனதார கொண்டிருந்தது
அது கோவில் கட்டியது, திருவிழா கொண்டாடியது , தேர் இழுத்தது, அரசன் போல் கொடி கொடுத்து கோட்டையும் கொடுத்தது
மானிட இயல்புக்கு உலகம் இயங்க என்ன தொழில் செய்யவேண்டுமோ அதனை ஒழுங்கே செய்து கடவுளின் நினைப்போடு செய்து எந்த நொடியும் கடவுளோடு கலந்திருந்தது
வானம் முதல் மண் வரை அது கடவுளாக பார்த்தது, தனக்கு உதவும் விலங்குகளை கூட தெய்வமே என அதிலும் கடவுளை கண்டது, ஒரு நொடியிலும் கடவுள் நினைப்பில் இருந்து விலகா தன்மையினை அது உருவாக்கி வைத்திருந்தது..
அக்கால கல்விகளும் அப்படி இருந்தன, வாழ்வியலும் அப்படி இருந்தது
இன்றைய கல்வியும் வாழ்வியலும் அதிலிருந்து மிக மிக விலகி போய் பணம் ஒன்றே பிரதானம் என்றாகி ஒரு மாதிரி சமூகமாக மாறிவிட்டது
அப்படி மாறிய சமூகத்துக்கு இந்த பக்தி மார்க்கம் புரியாமல் இருக்கலாம், நல்ல இந்துவின் வாழ்வினை ஒருமுறை பார்த்த்து, ஒரு நாள் நல்ல இந்துவாக வாழ்ந்து பாருங்கள்
இந்த பக்தி மார்க்கம் எனும் 12ம் அத்தியாயம் நொடியில் புரியும், அது முன்னோரின் வாழ்வன்றி வேறல்ல