பகவத் கீதை 16
கீதையின் 16ம் அத்தியாயம் “தெய்வாசுர சம்பத் விபாக யோகம்” , இது தெய்வ குணம் அசுர குணத்த்தின் தொடர்புகளை விளக்கி கூறும் அத்தியாயம்
தெய்வகுணம் எனும் சாத்வீக கொண்டவன் எப்படி இருப்பான், அசுர குணம் எனும் பேராசை தீ கொண்டவன் எப்படி இருப்பான் என்பதை விளக்கும் அத்தியாயம் இது
கண்ணன் சொல்கின்றான் ” அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்,தானம், சாஸ்திரங்களை படிப்பது,தவம்,நேர்மை
கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை
ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, அர்ஜூனா.
தம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன பார்த்தா
தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம். அசுர சம்பத்தால் சிக்கல்கள் வரும். அர்ஜூனா நீ தேவ சம்பத்தை எய்திவிட்டாய், துயரப்படாதே.
இவ்வுலகத்தில் உயிர்ப் படைப்பு இரண்டு வகைப்படும்; தேவ சாயல்பு கொண்டது, அசுர இயல்பு கொண்டது. தேவ இயல்பு கொண்டதை விரித்துச் சொன்னேன். அர்ஜூனா அசுர இயல்பு கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.
அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும், நிலையற்றதென்றும், கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும், வெறுமே காமத்தை (ஆசையினை) ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.
இந்தக் காட்சியில் நிலைபெற்று, அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய், அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.
தீரவே தீரா ஆசையினை காமத்தைச் சார்ந்து, தம்பமும், கர்வமும், மதமும் பொருந்தியவராய், மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
பிரளயமட்டும் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ‘உண்மையே இவ்வளவுதான்’ எற நிச்சயமுடையோராய்,
நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு, காமத்துக்கும், சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ் செய்து பொருட் குவியல் சேர்க்க விரும்புகிறார்கள்.
“இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மாபெரும் அதிகார இனி எய்துவேன், இனி பெரும் பொருள் குவிப்பேன் சர்வமும் என்னிடம் குவியும்
இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன், நான் ஆள்வோன், நான் போகி, நான் பலவான், நான் சுக புருஷன்
நான் செல்வன், இனப்பெருக்க முடையான், எனக்கு நிகர் யாருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்று அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
பல நினைவுகளால் மயங்கியோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுடையோர், தம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.
அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், இனத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.
இங்ஙனம் பகைக்கும் கொடியோரை உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன்.
பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை யெய்தாமலே மிகவும் கீழான வாழ்வினை சேர்கிறார்கள்
ஆத்ம நாசத்துக்கிடமான இம்மூன்று வாயில்களுடையது நரகம்; (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால் இம்மூன்றையும் விடுக.
இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந் தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.
சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதை யறிந்து சாஸ்திர் விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்”
இந்த அத்தியாயத்தில் எதெல்லாம் தெய்வ இயல்பு என்பதையும் எதெல்லாம் அசுர இயல்பு என்பதையும் தெளிவாக சொல்கின்றார் பகவான்.
சுருக்கமாக கவனித்தால் எல்லா உயிரையும் தன் உயிராக கருதி தன்னலம் துறப்பதும் சக உயிரை காப்பதும் தெய்வத்தின் சுடரில் எரிந்து கொண்டே இருப்பது தெய்வ குணம்.
தான் வாழ பலரை அழிப்பதும், தன்னலம் மட்டும் மிகுந்து பாவங்கள் செய்து பொருளை குவித்து இன்னும் பலவற்றை குவித்து பேராசை தீயில் எரிந்து கொண்டே இருப்பதும் அசுர குணம்
நல்லோரின் இயல்பு எனவும், ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும் என சொல்லும் அந்த தெய்வ குணமுமே திருகுறளில் வரும் சில அதிகாரங்கள்
நாலடியார், திரிகடுகம், ஏலாதி என சமண நூல்களில் வரும் கருத்துக்களும் இதுவே
பைபிளில் இயேசு சொல்லும் புகழ்பெற்ற மலைபொழிவும் இதுவே, இம்மக்கள் சொக்கம் பெறுவர் என இயேசு உறுதியாய் சொல்கின்றார்
ஆம் நல்லோர் இயல்பு, தெய்வசாயல் கொண்டோரின் இயல்பு எப்படி இருக்கும் என்பதை முதலில் சொன்ன நூல் கீதையே
இங்கு சமணம், பவுத்தம், கிறிஸ்தவம் என பல கொள்கைகளை கொண்டதால் திருகுறள் இந்துநூல் அல்ல என்பது சுத்த மடத்தனம்
ஒரே காவிரி கல்லணை தாண்டி வெண்ணாறு, குடமுருட்டி , கல்லணை கால்வாய் என பிரிவது போல கீதையின் “தெய்வாசுர சம்பத் விபாக யோகம்” அத்தியாயமே திருகுறள், சமண இலக்கியம், கிறிஸ்துவின் போதனை என பிரிந்தது
இன்னும் அசுரரின் இயல்பை சொல்லி அது எப்படி வரும், வந்தோர் எப்படி இருப்பர் அவர்கள் முடிவென்ன என்பதையும் தெளிவாக சொல்கின்றார் பகவான்
“அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும், நிலையற்றதென்றும், கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும், வெறுமே காமத்தை (ஆசையினை) ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.
இந்தக் காட்சியில் நிலைபெற்று, அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய், அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.”
ஆம் தமிழக புரட்சியாளர்களை அப்படியே படம் பிடித்து காட்டும் வரிகள், அசுர கூட்டத்தின் இயல்பு அது
இன்னும் பழிபாவத்துக்கு அஞ்சாமல், இரக்கமில்லமால் மகா கொடுமையான மனதை கொண்டு வஞ்சக திட்டங்களுடன் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்கும் அசுர இயல்பையும் சொல்கின்றார்
கவனியுங்கள் “இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மாபெரும் அதிகார இனி எய்துவேன், இனி பெரும் பொருள் குவிப்பேன் சர்வமும் என்னிடம் குவியும்
இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன், நான் ஆள்வோன், நான் போகி, நான் பலவான், நான் சுக புருஷன்
நான் செல்வன், இனப்பெருக்க முடையான், எனக்கு நிகர் யாருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்று அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
பல நினைவுகளால் மயங்கியோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
இந்த வரிகள் என்ன தெரியுமா? “மூடனே இன்றிரவு உன் உயிர் எடுக்கபட இருக்க நீயோ களஞ்சியத்தை நிரப்புவேன், உண்டு களிப்பேன் என கனவு கண்டு கொண்டிருக்கின்றாயே?” என இயேசு தன் போதனையில் சொன்ன அந்த கதையின் சுருக்கம்
தெய்வ இயல்பு மனதை அடக்கி ஒவ்வொரு பொருளிலும் கடவுளை தேடும் அது கடவுளை அடையும், ஆனால் அசுர குணம் 3 குணங்களில் ஒன்றில் சிக்கி பேராசை பட்டு அழியும்
காமம், கோபம், பேராசை எனும் மூவகை அடிப்படை குணத்தில் சிக்கியே அசுரகுணம் வளர்ந்து எல்லோரும் அழிவினை தேடுகின்றார்கள்
ஆம் புராணம் இதை தெளிவாக சொல்கின்றது, புராணங்கள் நடந்த காரணமே இந்த ஆசைகளின் விளைவினை சொல்வதே
காமத்தால் அழிந்தான் ராவணன்,பெண்ணை கண்டதும் மயங்கி அழிந்தான் பத்மாசுரன், கோபத்தால் அழிந்தான் இரணியன், மண்ணாசை எனும் பேராசையால் அழிந்தான் துரியோதனன், மூவுலகமும் காணாது எனும் பெரும் ஆசையால் அழிந்தான் மகாபலி
ஆம் ஒருவன் எவ்வளவுதான் பெரும் பலசாலி,பாராக்கிரமசாலி ஏன் கடவுளையே உருக வைத்த பக்திமான் எனினும் ஆசைகளில் ஒன்று கூடினாலும் அவன் நிலைக்க முடியாது
யானை முதலையிடம் சிக்கியது போல, செந்நாய் கூட்டத்திடம் பிடிகொடுத்த சிம்மம் போல அவன் வீழ்வான்
நெருப்புக்கு எவ்வளவு போட்டாலும் போதாது, கழுகுக்கு எவ்வளவு உயரம் பறந்தாலும் போதாது , பேராசையும் பெரும் காமமும் அப்படியே, ஒருவன் எவ்வளவு பலமானாயினும் வீழ்த்திவிடும்
புராணங்களை கவனியுங்கள் ராமனும் கண்ணனும் எதிலும் சிக்காமல் வந்தார்களே எப்படி?
பற்றற்றதும், ஆசையில்லாததும், தன் கடமையினை மட்டும் செய்யும் பண்பும், எல்லா நிலைகளையும் பக்குவமாக கடந்து செல்லும் அந்த தன்மையுமே அவர்களை தெய்வம் என காட்டிற்று
பேராசையும், பெரும் காமமும் , அடங்கா கோபமும் சாபங்கள், அவைகளை கொண்டவனை அவை எரித்துவிடும், அவன் பேயாகிவிடுவான், ஆடி அட்டகாசம் செய்து தானாக அழிந்து விடுவான்
அன்பும், அகிம்சையும், நல்லொழுக்கமும், தானமும், தவமும், பொறுமையும் இன்னும் பல நல்ல குணங்களும் ஒருவனை தெய்வமாக்கிவிடும்.
கீதையின் இந்த வரிகளே திருகுறளாயின, பவுத்தமாயின, சமணமாயின, கிறிஸ்துவிடமும் வந்தன
16ம் அத்தியாயத்தின் சுருக்கம் இதுதான்..
நல்லவனாக இரு, நல்ல குணங்களோடு இரு, மூவகை ஆசைகளையும் ஒழித்து கடமையினை செய், அதை தெய்வத்தினை முன்னிறுத்தி செய். நீ வாழ்வாய்
அப்படி நல்லனாய் இருந்தும் அசுரன் மூலம் சோதனை வந்தால் கலங்காதே, பொல்லாத அசுரனை எதிர்க்கும் நிலை வந்தால் அஞ்சாதே, தெய்வத்தை துணைக்கு அழைத்து கொள், தர்மத்தின் வழி நிற்பவனுக்கு அத்தெய்வம் தானாய் வந்து துணை நிற்கும்
அர்ஜூனனுக்கு கண்ணன் வந்து நின்றது போல, விசுவாமித்திரருக்கு ராமன் வந்தது போல, பிரகலாதனுக்கு நரசிம்மன் வந்தது போல ஏதோ ஒரு உருவில் தர்மத்தை காக்க பரம்பொருள் நல்லோரிடம் வந்தே தீருவான்..