ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 03
“உள்ளமே பீடமுணர்வே சிவ லிங்கத்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு”
இக்குறள் “உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கம் தெள்ளியரர் அர்ச்சிக்குமாறு”
உள்ளத்தை ஆலய பீடமாக கொண்டு, உணர்வில் சிவலிங்கத்தை நிறுத்தி தெளிந்த சிந்தையுடையோர் அர்ச்சிப்பார்கள் என்பது குறளின் பொருள்
வழிபாடு என்பது மனமார இருத்தல் வேண்டும் என்பது மறைபொருள்
இறைவனை மனதில் நிறுத்தி தியானிக்க வேண்டும், இறைவன் கோவிலில் இருப்பதாகவோ சொர்க்கத்தில் இருப்பதாகவோ இல்லை எங்கோ இருப்பதாகவோ தியானித்து வழிபடுவதை விட மனதில் இறைவன் இருப்பதை உணர்வால் நினைந்து இருத்தி வழிபட வேண்டும் என்கின்றார் ஒளவையார்
அப்படியானால் கோவிலுக்கு செல்வதும் வழிபடுவதும் ஆலய சிலைக்கு அபிஷேகங்கள் செய்வதும் சரியானது இல்லையா என்றால் அதுவும் சரியானது ஆனால் அது பக்தியின் முதல் படி
அதனால்தான் “தெளிந்தோர்க்கு” எனும் சொல்லைபயன்படுத்துகின்றார் ஒளவையார்
இந்த வார்த்தைக்கு பக்தியின் உணர்வில் அடுத்தகட்டத்துக்கு தெளிந்த பெரும் நிலைக்கு சென்ற யோகிகள் என பொருள்
அவ்வையின் குறள் ஞானமார்க்கம் எனும் வகை பக்தியினை வலியுறுத்துவது என்பது குறிப்பிடதக்கது
கர்மமார்க்கம் என்பதுதான் லவுகீக வாழ்வின் கர்மங்களை சுமந்துகொண்டு ஆலய வழிபாட்டுடன் இயங்குவது
இந்த “தெள்ளியர்” எனும் வரி ஞானமார்க்கம் சென்றோருக்கானது
இதைத்தான் திருமூலரும் தன் பாடலில் சொல்கின்றார்
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”
திருமூலர் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என சொல்வதைத்தான், அந்த ஞானமார்க்கத்தில் சிவனை மனதால் வழிபடுவதைத்தான் இங்கு தன் குறளில் அழுத்தி சொல்கின்றார் ஒளவையார்
அருமை… அற்புதம்… ஞான மார்க்கம் பற்றி எளிமையான விளக்கம்… இதை அடைவது மிக, மிக கடினம்…ஒவ்வொரு மனிதனும் “தான் யார் ” என்பதை உணர வேண்டும் ! எல்லாம் வல்ல இறைவனின் ஒரு துளி ஒளி தான் “தான்” என்பதை உணர வேண்டும்! இது தான் ஞான மார்க்கம்! ஞான சற்குருவை பணிந்து தான் ஞானோபதேசம் ஞானதீட்சை பெற்று தவம் செய்தாலே முக்தி! ஞானம்!…
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏