சங்கி
தமிழ் சிவபெருமானால் உருவாக்கபட்டு அகத்தியராலும் முருகபெருமானாலும் வளர்க்கபட்ட பக்திமொழி, அந்த மொழியில் தன்னைபாட அவ்வப்போது அந்த பிரபஞ்ச சக்தி ஒருவனை காலம் தோறும் அனுப்பி கொண்டே இருக்கும்
அது கபிலர், கம்பன், ஆழ்வார்கள், அடியார்கள், ஒளவை என பழங்காலத்தில் அனுப்பிற்று, குமரகுருபரர் போன்றோரை அடுத்தடுத்து அனுப்பிற்று
அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நம் தலைமுறைக்காக அனுப்பிற்று, அப்படி வந்த கவிகொடைதான் செட்டிநாட்டு முத்தையாவாக பிறந்து கண்ணதாசனாக மாறிய அந்த அற்புத கவிஞன்
பழைய சித்தர்களின் தொடர்ச்சி அவன், காளிதாசன் விட்டு சென்ற குறைகளை தீர்க்க கண்ணன் அனுப்பிய கவிஞன் அவன்
அந்த கவிஞனின் பாடல்கள் அவ்வளவு சுகமானவை, குளிந்த சாரலடிக்க பருகும் தேநீர் போல, கடும் வெயில் முடியும் நேரம் மாலைநேர பதனீர் அருந்துவது போல அவ்வளவு சுகமானது
அவனால் மானிடரின் எல்லா உணர்ச்சிக்கும் பாடல் எழுதமுடியும், லவுகீக வாழ்வின் எல்லா பக்கங்களுக்கும் மிக பொருத்தமான பாடல்களை சரியான உவமையுடன் அழகாக வரிகளாக தீட்டமுடியும்
காதல், அன்பு, தாய்மை, நட்பு, குழந்தை, தாலாட்டு, சோகம், வலி, அவமானம், புறக்கணிப்பு, சந்தோஷம் என எல்லா உணர்வுக்கு அவ்வளவு அழகாக எழுதமுடியும்
அழகான ஓவியம் போன்ற சொற்கள், கங்கை பிரவாகம் போல வரும் வார்த்தைகள், குற்றால அருவிகள் போல அழகான உவமைகள், தாவிவரும் ஓடை போல அழகான நடை என்பதெல்லாம் அவன் வாங்கி வந்த வரம்
வர்ணனைக்கு கம்பன், உவமைக்கு காளிதாசன், உருக்கத்துக்கு மாணிக்கவாசகர் என்ற வரிசையில் மூன்றும் கலந்து வந்த முத்தமிழ் கவிஞன் அவன்
நிச்சயம் முத்தமிழ் அறிஞர் எனும் பட்டம் அவனுக்கே பொருந்தும், அவனின் நாடக தமிழ் அவன் எழுதிய நாடகங்களில் வந்தது
இயல் தமிழ் அவன் எழுதிய “சேர்மான் காதலி” போன்ற நாவல்களில் வந்தது, பாடல்கள் எல்லோரும் அறிந்தது, அந்த பட்டம் அவன் ஒருவனுக்கே சாரும்
தெய்வம் தான் தேர்ந்துகொண்டவர்கள் சிலரை சரியான காலம் வரும்வரை பொல்லார் கூட்டத்தை கவனிக்க வைக்கும், நடப்பதை அறியவைக்கும், உரிய காலம் வரும்பொழுது சரியான குரு மூலம் அவனின் பிறப்பின் நோக்கத்தை அறியவைக்கும்
அவனையும் அப்படித்தான் அவன் கர்மா நடத்திற்று
செட்டிநாட்டில் பிறந்த அவன் பெரும் வியாபார சக்கரவர்த்தியாக வேண்டிய காலம் இருந்தும் பட்டினத்தார் போல் சித்தனாக மரித்ததெல்லாம் கர்மவினை, அந்த வினை அவனை அவன் தமிழ்மூலம் நடத்திற்று
அந்த தமிழும் அதன்மேல் அவன் கொண்ட தீராகாதலும் அவனை திராவிட கூட்டம்பால் தள்ளிற்று, எழுத்தும் வாசிப்பும் தமிழும் சுவாசமாகவும் உணவாகவும் கனவாகம் கொண்ட அவன் அந்த கூட்டத்தில் இணைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை
அந்த ஞானகுயில் நாத்திக காகங்களோடுத்தான் வளர்ந்தது, அப்பொழுதும் அதன் இனிமையான பாடலும் தமிழும் கொஞ்சமும் குறையவில்லை
“முத்தான முத்தல்லவோ” என குழந்தையினை கொஞ்சம் பாடல், “மலந்தும் மலராத” என தாலாட்டும் பாடல் , “பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்” எனும் காதல் பாடல்,”பொன்னை விரும்பும் பூமியிலே” என ஆறுதல் தேடும் பாடல் , “போனால் போகட்டும் போடா” எனும் தத்துவபாடல் என அழியா பாடல்களை அப்பொழுதும் அந்த குயில் கொடுத்தது
எக்காலமும் நிற்கும் அழகான தமிழ்பாடல்களை அப்பொழுதும் அது கொடுத்துகொண்டேதான் இருந்தது
குழந்தைக்கு தாலாட்டு, வாலிபருக்கு காதல்பாட்டு, அழுபவருக்கு ஆறுதல் பாட்டு, ஆறுதல் தேடுவோருக்கு தத்துவபாட்டு, நாட்டுக்கு தேசபாட்டு என அவன் பாடியதெல்லாம் அப்பொழுதுதான்
உண்மையில் அப்பொழுது அந்த ஞானகுயில் தான் யாரென தெரியாமல் ஆசைக்கும் பக்திக்கும் இடையே போராடியது தனக்கொரு அங்கீராத்துக்காய் அலைந்தது
தமிழில் 4 வார்த்தை பேசதெரியாதவனெல்லாம் தமிழின தளகர்த்தனாக அலைந்து அரசியலில் தமிழை காப்பதாக முத்திரையிட்டபொழுது அந்த முத்தமிழ் வித்தகனும் அதற்கு ஆசைபட்டான்
ஆனால் தெய்வத்தின் விருப்பம் அது அல்ல, அது அவனை வெளி இழுத்து வந்தது
திராவிடம் எவ்வளவு பெரிய பொய் என்பதையும், நாத்திகம் இட்டு கட்டபட்ட கதை என்பதையும் அவன் உணர்ந்தபொழுதுதான் அவனை யார் என புரியவைக்க ஒரு அவதாரம் வந்தது
காஞ்சி பெரியவர் அந்த கவிஞனை இந்துமதம்பால் திருப்பினார், அவர் கொடுத்த துளி விபூதி அந்த அதிசயத்தை செய்தது
தான் யாரென உணர்ந்தான், தான் இதுவரை பெற்றதெல்லாம் அனுபவம் என கண்டான், அந்த அனுபவங்களை கொண்டு இந்துமத தெய்வங்களுக்கு அழகான பாடல்களை செதுக்கினான்
ஒருவகையில் ஒளவையார், கம்பன், ஒட்டகூத்தர், ஆண்டாள், அருணகிரியார் போன்றவருக்கு பின் அழகான பக்தி பாடல்கள் அவனிடம் இருந்தே வந்தன
அந்த “கிருஷ்ண கானம்” ஒன்றே போதும் , அவன் புகழை காலத்துக்கும் அது காத்து நிற்கும்
அந்த நாத்திக கொடுங்காலத்தில் இரண்யனை அவன் மகனை கொண்டே கிழித்த நரசிம்மர் போல, இந்துமதம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் கொண்டே வதைதது
பெரும் இருளில் இருந்த இந்துக்களுக்கு “அர்த்தமுள்ள இந்துமதம்” பெரும் வெளிச்சத்தை காட்டிற்று என்றால் அது மிகையல்ல
இன்றும் என்றும் ஒவ்வொரு இந்துவும் படிக்கவேண்டிய நூல் அது, ஒவ்வொரு இந்துவும் தான் ஒரு இந்து என கவுரபடவைக்கும் நூல் அது
ஆழ்ந்த அனுபவமும், பக்தியும், ஆழ்வாரும், அடியாரும், நாயன்மாரும், வேதங்களும், விவேகாந்தரும் கலந்த களஞ்சியம் அது, அப்படி ஒரு நூல் இனி வராது
கண்ணன், முருகன், சிவன், அம்பாள், விநாயகர் என எல்லா தெய்வங்களுக்கும் அவர் பாடிவைத்ததை போல் இந்த நூற்றாண்டில் இன்னொரு கவிஞன் பாடியிருக்க முடியாது
செட்டிநாட்டு கணவான்களெல்லாம் இந்துக்களுக்காக கோவில் எழுப்பினார்கள், தர்மசாலை, வேத சாலை எழுப்பினார்கள், அந்த கொடைக்கு சற்றும் குறையாதது கண்ணதாசனின் எழுத்தும் பாட்டும்
தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் ராகங்கள் அவை
குழந்தை கண்ணனை நோக்கினால் “ஆயர்பாடி மாளிகையில்” எனும் பாடல் காதோரம் கொஞ்சும், கோவிலில் அவனை கண்டால் “கேட்டதும் கொடுப்பவனே” என அடுத்தபாடல் முட்டும்
கண்ணனை காணும்பொழுதெல்லாம் கண்ணதாசன் வரியின்றி வணங்கமுடியாது
திருச்செந்தூருக்கு சென்றால் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” என்ற பாடல் நினைவுக்கு வராமல் வணங்கமுடியாது, “மருதமலை மாமணியே” எனும் வரியன்றி அந்தமலை முருகன் ஏது?
மதுரைக்கு சென்றால் “மங்கல மங்கையர் குங்குமம்” என தொடங்கி அவரின் ஏகபட்ட பாடல்கள் அலைமோதும்
தமிழகத்தின் பிரசித்தியான கோவிலெல்லாம் அவர் பாடல்களின்றி வணங்கமுடியாது எனும் அளவு மனதோடு கலந்தவை அந்த பக்தி பாடல்கள்
அந்த அளவு அவரின் இந்துமத சேவை இருந்தது, சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன் முதல் பட்டினத்தார் அருள்வரை இல்லாமலது சாத்தியமில்லை
தமிழ் எவ்வளவு அழகான மொழி, உணர்வுகளை கொட்ட பொருத்தமான மொழி என்பது அவரின் பாடல்களில்தான் தெரிந்தது
எப்படி இப்படி அழகான உருக்கமான பாடல்களை அவரால் எழுதமுடிந்தது என்பதற்கு அவரே பதில் சொன்னார்
“நான் எழுதிய பாடல்கள் பெரும்பாலாவை சங்க இலக்கிய பாடல்களே, தமிழக இந்து புலவர்கள் பாடிய பாடல்களே
நான் பரணில் இருந்த பலாபழத்தை வெட்டி தருகின்றேன் அவ்வளவுதான், என்னை போல் எழுதவேண்டுமானால் நீங்கள் ஒரு இந்து என்பதை உணருங்கள்”
ஆம், தூய இந்துகவிஞன் இந்துமரபில் வந்த கவிஞன் எப்படி பாடுவான் என்பதை அவர் இந்துமதத்தில் கரைந்து காட்டினார்
அதனாலே பாணராகவும் சித்தராகவும் தன்னை காட்டிகொண்டார்
எந்த இடத்திலும் தன் கடந்தகாலம் நிகழ்காலம் என எதையும் அவர் மறைக்கவில்லை, தன்னை பற்றி மதுவும் மாதரார் உறவும் கொண்ட கோலத்தை கூட புறநானூற்று பாணர்களின் வாழ்வியல் இதுதான் நான் அதில் ஒருவன் என எளிதாக கடந்து சென்றார்
தமிழக கவிஞர்கள் வரிசையில் நல்ல மரபு கவிஞனாக, மங்கல அமங்கல சொல் தெரிந்தவனாக,சபையில் பேசவேண்டிய சொல் அறிந்தவனாக, தவிர்க்க வேண்டிய வார்த்தைகளையும் அருவருப்பான வார்த்தைகளையும் சரியாக தவிர்த்தவனாக, காமத்தை கூட இலைமறை காயாய் அழகாய் பாடியவனுமாக அவனுக்கு எக்காலமும் இடம் உண்டு
1950க்கு பின் இந்துமத கவிஞர்களில், எழுத்தாளர்களில் அவனுக்கு முதல் இடம் உண்டு, அந்த சிம்மாசனம் அவனுக்குரியது
அவனிடம் சிலாகிக்கும் இன்னொரு விஷயம் அவன் சுத்தமான தேசியவாதி, திராவிட மோசடி பிம்பத்தை திராவிட மாயையினை முதலில் உடைத்தவன் அவனே
திராவிடத்தின் போலி முகமூடியினை, இந்துவிரோத துவேஷத்தை அவனும் ஜெயகாந்தனுமே அன்று கிழித்து கொண்டிருந்தார்கள், சோ ராமசாமி பின்னாளில் சேர்ந்து கொண்டார்
அதை தொடங்கிவைத்தவன் அவனே
ஆனால் இன்றிருக்கும் இந்து எழுச்சியும் தேசாபிமானமும் அன்று இல்லை, அவன் நம்பிய நேருவும் இந்திராவும் காமராஜரும் சிறுபான்மை புள்ளியிலும் இன்னும் பல விஷயங்களிலும் திமுகவின் கொள்கையோடு பொருந்துவார்கள் என்பது அவனுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று
அந்த வெறுப்பில் முழு ஆன்மீகம் பக்கம் திரும்பினான் ஆனால் தேசத்தையு தேச நலனையும் ஒரு காலமும் விட்டு கொடுக்கவில்லை, முழு இந்துவாக இந்துமத பெருமைகளை முழங்கி கொண்டே இருந்தான்
அந்திம காலங்களில் தமிழக அரசவை கவிஞனாக இருந்தாலும் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை, சிந்தையெல்லாம் ஞானமும் தர்க்கமுமே குடிகொண்டிருந்தது
இன்றிருக்கும் இந்து எழுச்சி அன்றே இருந்திருக்குமானால் மிகபெரிய இடத்துக்கு அவன் சென்றிருப்பான், ஆனால் பரிதாபத்துகுரிய கவிஞனுக்கு விதி அதுவல்ல
தனிபட்ட வகையில் ஒவ்வொரு கனமும் கூட வரும் வரிகள் அவனுடையது, அதனில்தான் உலகை கவனித்தோம், அதில்தான் உலகின் அழகான விஷயமெல்லாம் ரசித்தோம், அந்த ரசனைதான் எவ்வளவோ சிரமங்களிலும் வாழ்வினை சுமையாக கருதாமல் கடக்க உதவிற்று
கண்ணீரும் சோகமும் பிரிவும் அவன் பாடல்களிலே ஆறுதலாக வந்தது
அவன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதமே எமக்கு இந்துமதத்தின்பால் புதிய வாசலை திறந்துவிட்டது, இன்று இந்துமதத்துக்கு இவ்வளவு எழுதமுடிகின்றது என்றால் அவனும் ஒரு காரணம், அதை சொல்லாமல் இருக்க முடியாது
பள்ளி, கல்லூரி காலமெல்லாம் அவன் பாடல் வரியே வாழ்வை சுகமாக்கியது, அழகிய பெண்களை காணும் பொழுதெல்லாம் அவனின் வரிகளிலே ரசிக்க முடிந்தது
இன்றும் கல்லூரியினை கடந்து சென்றால் “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடல் நினைவுக்கு வராமல் போகாது
தாயும் தந்தையும் இறந்த சோகமெல்லாம் அவன் பட்டினத்தாரை பிழிந்து தந்த சாற்றை அருந்தியிராவிட்டால் கடந்திருக்க முடியாது
மகனையும், மகளையும் காணும்பொழுதெல்லாம் அருகே மனைவியினை காணும்பொழுதெல்லாம் “நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம்வரை தாய்மனதை காத்து நிற்பேன்” என்ற வரி ஒலிக்காமல் இருக்காது
லவுகீக வாழ்வின் பக்கமெல்லாம் அவனே கூட வருவான்
அழகான சோலைகளை கடக்கும் பொழுது மட்டுமல்ல அழகான பெண்கள் கடந்து செல்லும் பொழுது கூட “ஊஞ்சலுக்கு பூச்சூட்டி” “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” என கவிஞன் கூட வருவான்
கோவில் கருவறையில் அம்மனை கண்டால் அவனின் அம்மன் பாடலெல்லாம் ஒலிக்கும், கண்ணனை கண்டுவிட்டால் சித்தமெல்லாம் அவன் பாடல்தான் வரும்
மலேசிய திருநாட்டை அனுதினமும் பார்க்கும் பொழுதெல்லாம் “அக்கரை சீமை அழகினிலே” என்ற வரி வராமல் போகாது
சீனபெண்களை காணிம்பொழுதெல்லாம் “மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள்” என்ற வர்னனை நினைவுக்கு வராமல் இருக்காது
மதுகோப்பைகளை கண்டால் அவனின் பிரசித்தியான பாடல்கள் வராமல் தாண்ட முடியாது
ஆனால் காதலோ, காமமோ, பொருளோ, லவுகீகமோ எதை பாடினாலும் அவனை அறியாமல் ஒரு தத்துவத்துவம் குடிகொண்டிருக்கும், ஒரு புராண கதை இருக்கும், வரலாறு இருக்கும், இலக்கியமும் இலக்கிய நயமும் இருக்கும்
அவன் ஜாதகம் சுக்கிரனும் குருவும் சேர்ந்தது என்பார்கள். அதனால் சுகங்களோடு கூடிய போதனை அழகாய் பொருந்தியிருந்தது
அவன் தன்னைபற்றி எழுதியது “கோப்பையிலே என் குடியிருப்பு” பாடல் என்பார்கள், அப்படி அவனே சொன்னாலும் உண்மையில் எழுதியது மகாகவி காளிதாஸ் படத்தில் எழுதினார்
“கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்
அலை என்னும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் அவையில் பாட விட்டாள்”
ஆம், அப்பாடல்தான் அவர் அவருக்கு அவரே எழுதிய பொருதமான வரி
கலைமகள் காளிதாசன் எழுதாததையெல்லாம் எழுதசொல்லி அவனை அனுப்பி வைத்தாள், அவன் ஆண்டாளும் கம்பனும் பாடாததையெல்லாம் சேர்த்து பாடி வைத்தான்
இன்னும் அவன் பாடவேண்டியது பல இருந்தபொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது
பொதுவாக தெய்வீக புலவர்களுக்கும், நாட்டுபற்று மிகுந்த புலவர்களுக்கும் சோதனை அதிகம் வரும், லவுகீகத்தில் வரும் சோதனையெல்லாம் அவர்கள் கால கல்வெட்டில் வைரங்களாக மின்னும் இது இறைசித்தம் அல்லது ஜாதக அமைப்பு
தனிபெரும் புலவனாக காளிதாசன் பெண்களால் ஏற்பட்ட சிக்கலில் சிக்கினான், கம்பனுக்கு மகன் வடிவில் வந்தது சோதனை, இப்படி ஒவ்வொரு தனிபெரும் புலவனுக்கும் சோதனை வரும்
அப்படி கண்ணதாசனும் அலைகழிக்கபட்டபொழுதுதான் மிஷனரிகளின் சதியில் கிறிஸ்தவ பக்கம் விழுந்தான், இயேசு காவியமெல்லாம் அப்பொழுதுதான் வந்தது
இன்னும் 100 கிறிஸ்தவபாடல் எழுதுவது இன்னும் என்னனெல்லாமோ எழுதுவது என முடிவும் ஆயிற்று
அரசியலாலும் லவுகீகத்தாலும் தன் வழக்கமான உற்சாகமான வாழ்க்கைமுறையாலும் பெரிய குடும்பத்தை உருவாக்கியதாலும் அந்த கவிஞனுக்கு அது நடந்தது
நிச்சயம் இந்துக்களோ இல்லை தேவஸ்தானங்களோ இந்து அபிமான கட்சிகளோ அவனை தாங்கியிருந்தால் அந்த துயரம் நடந்திருகாது
அவன் தொழில்படி, கவிஞனின் வாழ்வியல் தர்மபடி அது சரி, காசுகொடுத்தால் எழுதுது புலவன் தொழில்
ஆனால் கர்மாபடி அது தவறு, இந்துதர்மத்தை தாங்க வந்து அதை நோக்கி வழிநடந்து யாரும் ஆற்றமுடியா பணிகளை இந்துமதத்துக்கு ஆற்றும் கர்மத்தின்படி வழிதவறி செல்வது தவறு
52 வயது ஆகியிருந்தபொழுது தன் கர்மத்தின் படியினை அவன் தாண்டினான், வாழ்வும் முடிந்தது
சிகாகோவில் இன்னொரு விவேகானந்தாராக முழங்கியிருக்க வேண்டிய அந்த தெய்வீக கவிஞன் இயேசுகாவியம் எழுதிய கையோடு சென்றுவிட்டு சடலமாக திரும்பினான்
இன்று அந்த தெய்வீக கவிஞனுக்கு பிறந்தநாள்
“நல்லதோர் வீணை செய்தே” எனும் வரி அவனுக்கும் அழகாய் பொருந்தும்
அவன் தன் சுயசரிதத்தில் எழுதியிருக்கும் வரிகளோடு நோக்கினால் அவன் சிறையில் இருந்தபொழுது உடன் இருந்த சாதாரண தொண்டரான அன்பில் தர்மலிங்கம் பேரன் இன்று கல்வி அமைச்சர்
கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞனின் பேரன்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதே தெரியாது
ஆம்,அவன் கொஞ்சம் அனுசரித்திருந்தால் இன்று அவன் சந்ததி மாபெரும் வாழ்வு வாழ்ந்திருக்கும் ஆனால் நாட்டுக்காகவும் இந்துமதத்துக்காகவும் அதை துறந்தவன் அந்த கவிஞன்
பணமும் பதவியும் கருதாமல் ஆத்ம திருப்திக்காய் அவன் கொட்டிய ஞானமுத்துத்தான் இன்று இந்துமதத்தின் பாடலாகவும் நூல்களாவும் அலங்கரிக்கின்றன
காலமாற்றத்தால் அவன் தடுமாறினாலும், அவன் அந்திமகால வீழ்ச்சி விதி என்றாலும் தன் வாழ்வின் பெரும் தவமமாக அவன் இந்துமதத்தை கொண்டாடி பாடி எழுதிய சேவையினை மறுக்கமுடியாது
அந்த தெய்வீக கவிஞனுக்கு இன்று பிறந்தநாள் , “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என பாடிய அவனுக்கு, தன் தந்தை மனமாய் நின்று “ஏன் பிறந்தாய் மகன , ஏன் பிறந்தாயோ?” என தனக்கு தானே தாலாட்டு பாடிய அவனுக்கு
“தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள்,
வந்து பிறந்துவிட்டோம்
வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம்
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது” என பிறவியினயே தத்துவமாக பாடிய அவனுக்கு இன்று பிறந்தநாள்
இந்து தெய்வங்களையும் அதன் சிறப்புக்களையும் கம்பனை போல் ஆண்டாளை போல் பாடியவனுக்கு பிறந்த நாள்
இந்திய நாட்டின் தேசபக்தி பாடல்களை பாடிய இன்னொரு பாரதிக்கு பிறந்தாள்
காலமெல்லாம் இங்கு நிலைத்துவிட்ட கவிஞனுக்குதமிழின் தெய்வீக தென்றலுக்கு, காலம் தந்த தனிபெரும் கருணைக்கு தேசம் பெரும் அஞ்சலி செலுத்துகின்றது
கண்ணனின் கை சங்கு அவன், அப்படித்தான் கீதை முதல் பாரதம் வரை அழகாக முழங்கினான், அவ்வகையில் தமிழகத்தின் முதல் “சங்கி” அவனே