ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 10
“காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்”
இக்குறளுக்கு காடுகளிலும் மலைகளிலும் தவம் செய்தால் உணர்வு இறைவனோடு கூடும் என பொருள் கொள்வார் உண்டு எனினும் இன்னும் ஆழமாக நோக்கினால் ஒளவை சொன்ன தத்துவம் புரியும்
இங்கு காடு என்பது சுடுகாட்டினை குறிப்பது, மலை என்பது சிவன் வாழும் கயிலாயத்தை குறிப்பது
இந்த வாழ்வு நிலையற்றது என்றேனும் ஒருநாள் சுடுகாட்டில் முடிவடைய போகின்றது, அது தவிர்க்கபட முடியாதது எனும் எண்ணத்தோடும், சுடுகாட்டில் வாழ்வு முடியும்பொழுது கயிலாயமலையில் வாழும் சிவனோடு ஜீவன் கலக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் தவம் செய்தால் ஞான உணர்வு அடையலாம் என்பது பொருள்
ஆம், வாழ்வு நிலையற்றது கயிலாயம் வாழும் சிவனின் பாதமே நிலையானது எனும் சிந்தையும் அது கொடுக்கும் தெளிவும்தான் தவத்தின் அடிப்படையான தத்துவம் என்பது ஒளவை வாக்கு