சின்னப்ப தேவர்

த‌மிழகத்தில் எத்தனையோ முருகபக்தர்கள் இருந்தாலும் அவருக்கு தனி சிறப்பு உண்டு, ஒரு வகையில் காலத்தால் முருகன் அனுப்பிய அடியார் அவர்

கோவை பக்கம் மருதமலை அருகே பிறந்தவர் அவர், எத்தனையோ தொழிலை செய்தார் அத்தனையும் நஷ்டம், தொட்டதெல்லாம் நஷ்டம் எனும் நிலையிலும் முருகன் மேலான அவரின் பக்தி குறையவில்லை

பால்பண்ணை முதல் சிறிய சண்டை நிலையம் வரை நடத்தியும் அவர் கஷ்டம் தீரவில்லை

ஆனால் தொடர்ந்து தன் வீரமாருதி உடற்பயிற்சி நிலையத்தை நடத்தினார், கத்திசண்டை முதல் கம்புசண்டை வரை அதில் அவரால் பயிற்றுவிக்கபட்டது

மிக உறுதியான கட்டுப்பாடும் பக்தியும் கொண்ட அவர் தன் சோதனை காலத்தில் முருகனை மறக்கவில்லை

ஒருமுறை 20 ரூபாய் அவருக்கு கடன் இருந்தது, அதை கட்ட வழியில்லாமல் மருதமலை முருகனிடம் அழுது புலம்பி வந்தபொழுது காலியான சிகெரெட் பெட்டி ஒன்றை எடுத்து பார்த்தபொழுது உள்ளே 20 ரூபாய் இருந்தது

அந்த இடத்தில் முருகனை விழுந்து வணங்கி, அவன் எக்காலமும் தன்னோடு இருப்பதை உணர்ந்ததாக தேவரே சொல்லியிருக்கின்றார்

ஆம், 20 ரூபாயினை கட்ட வழியில்லா முருக பக்தனாக அவர் தடுமாறியபொழுதும் அவரின் இயல்பில் அவர் மாறவில்லை

முதலில் கட்டுமஸ்தான உடலை நன்றாக பேணினார், மது மாது போன்ற பழக்கம் அவரிடமில்லை , பொய் அடிதடி போன்ற சர்ச்சைகளில்லை

இப்படி வறுமையோடு போராடி முருகனை மனமார நினைந்தபொழுதுதான் அவருக்கு அதிர்ஷ்டம் எம்ஜி ராம்சந்தர் உருவில் வந்தது

ஆம், கோவையில் ஜூபிடர்ஸ் பட நிறுவணம் வந்தது அதில் எம்ஜி ராம்சந்தர், நம்பியார் உள்ளிட்டோர் இருந்தனர், அவர்களுடன் சண்டை நடிகர் எனும் வகையில் அறிமுகமனார் தேவர்

அவரின் சண்டை நுணுக்கமும், ஆஜானுபாகுவான தோற்றமும், முருக பக்தியும், முக்கியமாக ஒழுக்கமும் ராமசந்திரனை கவர்ந்தன‌

இருவரும் நண்பர்களானார்கள், தேவர் புது தன்னம்பிக்கை பெற்றார். ராமசந்திரனுடன் அவர் சகோதரன் போல் பழகினார்

ராம்சந்தருக்கு ஒரு அபூர்வ குணம் இருந்தது, அது அவரின் அபரிமிதமான உள்ளுணர்வு ஒரு மனிதரை பார்த்தவுடன் அவரை கணித்து அவரை தன்னோடு வைக்கலாமா விலக்கலாமா எனும் தேர்ந்த குணம் அது

அவர் சினிமாவிலும் அரசியலிலும் உச்சம்பெற அதுதான் காரணம்

அப்படிபட்ட ராமசந்திரன் தேவரின் முதல் படத்தில் நடிக்க சம்மதித்தார், தேவர் தயாரிப்பாளரானார்

வெறும் 10 ஆயிரம் பணத்துடன் சென்னை வந்து மார்வாடிகளும் செட்டிகளும் லட்சங்களை கொட்டும் தொழிலில் சட்டை போடா வேட்டிகட்டிய பாமரனாக முருகன் மேல் பாரத்தை போட்டு படமெடுத்தார் தேவர்

ராமசந்திரனின் ஒத்துழைப்பில் “தாய்க்கு பின் தாரம்” படம் 1956ல் வந்தது, அது தேவருக்கு பெரும் புகழை பெற்று கொடுத்தது

மருதமலை ஆலயத்துக்கு அனுதினமும் ஏறி அழுத பலனை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றார் தேவர்

ஆம் முருகன் அவரை கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபடிகளில் ஏற்றினான்

ராம்சந்தரும் அவரால் வளர்ந்தார், அதே நேரம் சாதுரியமாக ஒரு வரமும் வாங்கினார் அதில் தன் திரை எதிரி சிவாஜிக்கு செக் ஒன்றும் வைத்தார்

சாதி ரீதியாக சிவாஜியும் தேவரும் ஒரே இனம் என்பதால் சிவாஜியினை தேவர் வளர்த்துவிடுவாரோ என அஞ்சினார், ஆனால் நன்றி எனும் குணம் கொண்ட சின்னப்ப தேவர் கடைசி வரை சிவாஜியோடு இணையமாட்டேன் என சத்தியம் செய்தார் அதை கடைசிவரை காத்தார்

தாய்க்கு பின் தாரம் என தொடங்கிய வெற்றி கணக்கு பின் மிக அதிரடியாக தாய் சொல்லை தட்டாதே, வேட்டைக்காரன் என தொடர்ந்தது

சரோஜாதேவியினை இங்கு அறிமுகபடுத்தியது தேவர்தான்

தாயைக் காத்த தனயன்’, குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். ஜொலித்தார்

தேவருக்கு கோடிகள் கொட்டின‌

தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான்

எல்லோரையும் “முருகா” என வாய்நிறைய அழைத்த தேவர் ராம்சந்திரனை முருகன் வடிவாகவே மனமார அழைத்தார்

1970க்கு பின் தேவரின் படங்களில் மிருகங்கள் தலைகாட்டின, ஆம் சிங்கம் புலி யானை ஆடு என எல்லாவற்றையும் நடிக்க வைத்தவர் அவர்தான்

தேவரின் மிக சிறந்த பங்களிப்பு அவரின் பக்தி வேறு படம் வேறு என இருந்ததே இல்லை, கடைசிவரை தன் படங்களில் இந்து பக்தியினை சொல்லி கொண்டே இருந்தார்

‘துணைவன்’, ‘தெய்வம்’ ‘வெள்ளிக்கிழமை விரதம்’ ’வேலும் மயிலும் துணை’ என மிகசிறந்த பக்தி படமெல்லாம் கொடுத்தார்

அவரின் மிகசிறந்த பணி தன் படங்களில் கிருபானந்தவாரியார் சுவாமிகளை நடிக்க வைத்தது

ஆத்திகம் தமிழகத்தை ஆளவந்த காலத்தில் அதுவும் சினிமா ஒன்றையே பிரதானமாக கொண்ட காலத்தில் தன் சினிமாவில் ஆத்திகம் பேசியவர் தேவர்

ராமனை செருப்பால் அடித்தும், மீனாட்சியும் காமாட்சியும் திக கும்பலால் மகா கொச்சையாக விமர்சிக்கபட்டபொழுது தன் படங்களில் குன்னகுடி வைத்தியநாதன், கண்ணதாசன் என நடிக்க வைத்து தன்னால் முடிந்த ஆத்திகம் வளர்த்தவர் அவர்

ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்தை சரியாக அடையாளம் கண்டவர் தேவர்தான்

சாண்டோ சின்னப்ப தேவர் என்பவர் ஒரு சாமான்யம் அல்ல, அவர் ஒரு அதிசயம், நம்பமுடியா ஆச்சரியம்

சாதாரண குஸ்தி பள்ளியின் வாத்தியார் ஒருவர் சினிமாவுக்கு செல்வதும் அங்கு தயாரிப்பாளராக நிலைப்பதும் சாதாரணம் அல்ல‌

அதுவும் ஏகபட்ட வெற்றிபடங்களை கொடுத்து நிலைத்ததும் சாதாரணம் அல்ல‌

ஒரு தமிழக கிராமத்தான் மும்பைக்கு சென்று திலிப்குமாரை நடிக்க வைக்க சாக்கு மூட்டை நிறைய பணத்தை கட்டி கொண்டு அவர் முன்னால் கொட்டியதும் சாதாரணம் அல்ல‌

சாதாரண குஸ்தி வாத்தியார் கலைதுறையில் நுழைந்து படங்களை மக்கள் ரசனைக்கேற்ப எடுத்து, பாடல் காட்சிகள் இன்னும் சுவாரஸ் விஷயங்களை தேர்ந்தெடுத்து வெற்றிபெற்றதெல்லாம் சாமான்யம் அல்ல‌

அதெல்லாம் முருகன் கொடுத்தவரம், கடைசிவரை மேல் சட்டை அணியாத அணிய தெரியாமல் வெறும் நாரியலை மட்டும் சூடி திரிந்த அந்த அப்பாவி மனிதன் சாதித்ததெல்லாம் முருகன் அருளே

திரைதுறையில் மது மாது என எந்த வழக்கமும் இல்லாமல் இருந்த மகா உத்தமர்களில் அவருக்கே எப்பொழுதும் முதலிடம்

அவரால் எத்தனையோ பேர் வாழ்ந்தார்கள், எம்ஜி ராம்சந்தர் முதல் கண்ணதாசன் வரை வெளிபடையாக வாழ்ந்தார்கள், இன்னும் மறைமுகமாக வாழ்ந்தவர்கள் ஏராளம்

ஒரு அமாவாசைக்கு பூஜை போட்டு அடுத்த அமாவாசை தாண்டி வரும் 40 நாளுக்குள் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எப்படி எனும் நுணுக்கத்தை அவர்தான் கற்று கொடுத்தார்

அவரின் வெற்றிக்கு இப்படி நுணுக்கமான உழைப்பே பெரும் காரணம்

அவரால் வாழ்ந்தவர்கள் கோடி உண்டே தவிர, தேவரால் தாழ்ந்தவர்கள் என ஒருவரை கூட எங்கும் காட்டமுடியாது

அதுவும் நன்றிகெட்ட சினிமாதுறை, காசு ஒன்றுக்காக எது எல்லாமோ நடக்கும் அத்துறையில் தேவர்மேல் யாரும் கடைசிவரை ஒரு குறை சொல்லமுடியாது

மிக நேர்மையான முறையில் தான தர்மத்தோடு தொழிலை அவர் செய்து கொண்டிருந்தார்

ஒரு படத்தின் லாபத்தினை நான்காக பிரித்து கொள்வார் தேவர், அதில் ஒரு பகுதி முருகனுக்கு செல்லும், அவனை கடைசிவரை தன் பங்காளியாக வைத்திருந்தார்

ஒரு பகுதி குடும்பம் , ஒருபகுதி நல்லகாரியங்கள் என்றும் செல்லும் ஒரு பகுதிதான் அடுத்த படத்துக்கு செல்லும்

முருகனுக்கு அவர் அள்ளிகொடுத்த திருபணிகள் ஏராளம் மருதமலை முதல் திருசெந்தூர் மண்டபம் வரை சாட்சிகள் இன்றுவரை உண்டு

எப்பிறப்பிலோ முருகனின் அடியாராக வாழ்ந்த ஆத்மா ஒன்று இப்பிறவியில் மருதமலை அடியானாக பிறந்து தமிழகத்தின் உன்னத இடத்தை அடைந்து முருகனுக்கோர் அடையாளமாக நின்றது

ஆன்மீகத்தில் கிருபானந்தவாரி போலவே லவுகீக வாழ்வில் சின்னப்ப தேவர் முழு முருகபக்தனாய் அடையாளமாய் நின்றார்

சாண்டோ சின்னப்ப தேவர் எனும் பெருமகன் மறக்க கூடியவன் அல்ல, அவனால் வாழ்வு பெற்றவர்களில் ராம்சந்தர் பல இடங்களில் அதை வாய்விட்டு சொன்னார், தேவர் இல்லாவிட்டால் நான் இல்லை என்பதை நன்றியோடு சொன்னார்

கண்ணதாசன் “கம்பனுக்கோர் சடையப்பன் எனக்கோர் சின்னப்பன்” என அதற்குமேல் வார்த்தையின்றி சொன்னார்

இதெல்லாம் ஏதோ ஒரு தெய்வத்தால் இல்லை முருகனால் நடத்தபட்ட காட்சிகள், மிக சரியான காலத்தில் அவரை சரியாக நடத்திய தெய்வம் அவர்தொட்டதையெல்லாம் துலங்க செய்து மிகபெரிய இடத்தில் வைத்தது

வாழ்வில் எதற்கும் கலங்காத தேவர் கலங்கிய இடம் ஒன்று உண்டு

அது தேவரின் “தெய்வம்” படத்தின் பாடல் உருவான காட்சி, எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள், காட்சி விளக்கபடுகின்றது. பக்தன் ஒருவன் முருகனை நோக்கி, முருகா நீயே அடைக்கலம் தேவருக்கும் மனிதருக்கும் இவ்வுலகுக்கும் நீயே அடைக்கலம் என பாடும் காட்சி அது

தேவரை பார்க்கின்றார் கண்ணதாசன், அவரின் வாழ்வு முழுக்க அறிந்தவர் அவர். அப்படியே தேவரின் பின்னால் இருக்கும் மருதமலை முருகனையும் காண்கின்றார், பாடல் பிறக்கின்றது

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை”
மருதமலை மாமணியே முருகையா” அந்த வரிக்கு தேவரின் முகம் மெல்ல கலங்கிற்று

“தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா” என்ற அடுத்தவரிக்கு கண்ணதாசனை கட்டி அழ ஆரம்பித்தார் தேவர்

ஆம், அந்த வரி வானலோக தேவர்களுக்கானது அல்ல, முழுக்க சின்னப்ப தேவருக்கானது. அதை புரிந்து வரியாய் வைத்தார் கண்ணதாசன்

தேவரின் தோற்றத்தினை அதாவது குங்குமம் சந்தணமெல்லாம் சூடி அவர் நிற்கும் அழகையும் தைபூச பண்டிகையினை அவர் கொண்டாடும் தோரணையினையும் அழகாக பதிந்து வைத்தார் கண்ணதாசன்

அது அந்த‌ முருகனே கண்ணதாசன் மனதில் புகுந்து தேவருக்காக எழுதிய பாடல்

நீறுபூசிய நெற்றியும், விபூதியும் சந்தணமும் பூசிய உடலுமாய் வாயெல்லாம் “முருகா” என எல்லோரையும் அழைத்து மிகபெரிய முருகபக்தனாய், நாத்திகம் நடுவே ஆத்திக சந்தணத்தை மணக்க செய்த அடியாராய் திரையுலகிலும் தமிழுலகிலும் தனித்து நின்று, மும்பைவரை தன் வெற்றிகொடியினை பறக்கவிட்ட அப்பெருமகனுக்கு இன்று பிறந்தநாள்

மருதமலை ஆலயம் உள்ளவரை அவனியில் அவர் பெயரும் நிலைத்திருக்கும், அவர் புகழுக்கு முடிவே இல்லை

தமிழகம் மட்டுமல்ல, தமிழ் மட்டுமல்ல இங்கு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் முருகன் விளையாட்டே, அப்படி இரு சூப்பர்ஸ்டார்களை முருகபக்தரான தேவர் மூலம் முருகன் அடையாளம் காட்டினான்

ராமசந்திரனை வளர்த்து திராவிட சதிகாரகும்பலுக்கு கடிவாளம் போட தேவருக்கு கருணை காட்டினான் முருகன்

திரைதுறை மூலம் தமிழகத்தை குழப்பலாம் என சதிகார கும்பல் நினைக்குமாயின் தேவரை போல் இன்னும் பல பக்தர்களை முருகன் அனுப்பிகொண்டே இருப்பான், முருக பெருமானின் தமிழகத்தின் எந்த துறையினையும் சதிகார கும்பல் தொட்டு கூட பார்க்க முடியாது என்பதுதான் தேவர் பிறந்தநாள் சொல்லும் தத்துவம்

காலம் அதை சுழன்று சுழன்று உண்மையாக்கிகொண்டே இருக்கும், காட்சிகள் அதை விளக்கி கொண்டே இருக்கும்