ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 02

“பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால்”

பலவிதமான பாடல்களை பாடுதல், பக்தியில் நடனமிடுதல் இதர உடல்ரீதியான வழிபாட்டு பிரார்த்தனைகளை விட முக்கியமானது மனதால் செலுத்தபடும் பக்தி, சிந்தையால் செலுத்தபடும் பக்தி என்பது பொருள்

பாடுவது ஒரு வழிபாடு, ஆடலும் உண்டா என்றால் உண்டு, மனதை முழுக்க லயிக்க செய்யும் விஷயங்களிலெல்லாம் பக்தியினை செலுத்தியது இந்துமதம், அப்படி ஆடல் கலை மூலமும் மனதை ஒருமித்த தியானத்துக்கு கொண்டு செல்லலாம் என்பது அம்மதம் வலியுறுத்தும் உண்மை

நல்ல நடனம் ஒரு தியானத்துக்கு சமம்

இதனாலே சிவனே ஆடியும் பாடியும் வழிகாட்டினார்

சிவனுக்காய் பாடும்பொழுதும் ஆடும் பொழுதும் இன்னும் பூஜையோ மந்திரங்களோ சொல்லும்பொழுதும் சிந்தை முழுக்க சிவனே இருத்தல் வேண்டும், சிவன் இல்லா சிந்தையுடன் செய்யும் எந்த ஆடலும் பாடலும் பலன்ளிக்காது என்பது ஓளவை சொல்லும் தத்துவம்

(இந்த குறளை இன்னும் ஆழமாக பாடுதல் என்றால் தியானத்தின் உச்சியில் கேட்கும் நாத ஒலி அதாவது சிலம்பொலி என்றும் ஆடல் என்பதை ஆறு சக்கரங்களும் குலுங்கி எழும் சக்தி என்றும் சிலர் விளக்கமளிப்பார்கள்

இந்த அதிகாரம் பக்தியுடமை என்பதால் இந்த விளக்கம் இங்கு பொருந்தாது , பக்தி செலுத்துவதை இங்கு சொல்லும் ஒளவை ஆடலிலும் பாடலில் சிவசிந்தை நிறைந்த மனம் வேண்டும் என்பதைத்தான் சொல்கின்றார்)