எந்த கலைஞனுக்கும் ஞானம் முக்கியம், ஞானமும் தெளிவும் கொண்ட கலைஞன் படைத்த எதுவாயினும் உலகில் அழியாமல் நிற்கும், காலம் காலமாக அந்த படைப்பும் நிற்கும் அவன் போதனையும் நிற்கும்

ஞானமில்லாமல் தெளிவில்லாமல் குழம்பி தவித்து புரட்சி புண்ணாக்கு என்றோ, காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வந்த படைபுக்களோ உலகில் நில்லாது

விஞ்ஞானம் அடிக்கடி மாறிகொண்டே இருக்கவும் ஒரு காலத்து விஞ்ஞானி மறுகாலத்தில் மறுக்கபடவும் ஞானமில்லா விஞ்ஞானமே காரணம், அரசர்கள் வரலாற்றில் காலமெல்லாம் சிலர் நிலைக்கவும் ஞானமே காரணம்

வரலாற்றில் நிலைத்துவிட்டவரெல்லாம் ஞானம் நிரம்ப பெற்றவர் அன்றி வேறல்ல‌

அறிவு என்பது தேடி தேடி பெறுவது, ஞானம் என்பது இயல்பில் வருவது. தேனி தேடி தேடி தேனை சேர்க்கலாம் ஆனால் மலரில்தான் தேன் இயல்பாய் ஊறும் தேனி அதை உருவாக்க முடியாது

எழுத்தாளர்களிலும் இலக்கியவாதிகளிலும் இந்த ஞானம் கொண்டோர் வரலாற்றில் தனித்து நிற்பர் அவர்கள் காவியம் அழியாது, அவர்களும் அழியா புகழ்பெறுவார்கள்

காளிதாசன், கம்பன், ஒளவை, வள்ளுவன் என பெரும் வரிசை இன்றும் என்றும் நிலைத்து நிற்க அந்த ஞானமே காரணம்

ஞானமில்லா எழுத்து என்னாகும் என்பதற்கு தமிழக பாக்கெட் நாவல்களும் அனுதினமும் பிளாஸ்டிக் குப்பை போல் பெருகும் சிறுகதைகளும், பலபோக்கு கவிதைகளுமே சான்று

இங்கு ரசனைமிக்க எழுத்தாளர்கள் உண்டு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள் உண்டு, வரலாறும் நாவலும் கொடுப்போர் உண்டு

ஆனால் ஞானமிக்க எழுத்தாளர் மிக குறைவு, அந்த குறைவானவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அய்யன் பாலகுமாரன்

ஜாணகிராமன் போல வெறும் பெண் உணர்ச்சி எழுத்தோ, சில வசனகர்த்தா போல சினிமா வசனகர்த்தாகவோ முடிந்திருக்க வேண்டிய வாழ்வு திருவண்ணாமலை ஞானியால் ஞானமாக மாற்றபட்டது

தன்னை அறிதல் என்பது எல்லோருக்கும் வாய்க்காது அது பாலகுமாரனுக்கு வாய்த்தது முன் ஜென்ம வரம், அந்த வரத்தில்தான் தான் யாரென கண்டார், தன் கர்மா எதுவென கண்டார்

பெரும் சிற்பியான தான் அம்மிகொத்துதலுக்கு சரியானவன் அல்ல என்பது புரிந்தது, தன் கர்ம வழியினை சரியாக உணர்ந்தார் அதிலிருந்து அவர் பாதை மாறிற்று

உறுதியாக சொல்லலாம் அவருக்கு நாவல் எழுதும் அவசியமே அவருக்கு இல்லை, ஒரு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடி என்றால் ஒரு வசனகர்த்தா கதாசிரியரால் தனக்கு இத்தனை கோடி என எளிதாக கணக்கிட முடியும்

அதுவும் பாலகுமாரனால் பல கோடிகளை கோர முடியும், நிச்சயம் சாதாரண எழுத்தாளனென்றால் அதைத்தான் செய்திருப்பான்

ஆனால் பாலகுமாரனின் மனம் ஒரு கட்டத்தில் பணத்தில் நிறைவுற்றது, பணம் தன் வாழ்க்கையின் நோக்கத்துக்கு சுதர்மத்துக்கு தடை போடும் என உணர்ந்து சினிமாவினை சட்டென உதறினார்
பட்டினத்தார் சித்தி அடைய கிளம்பியது போன்ற சாயல் இது

அப்படி அதன் பின் ஞானமும் வரலாறும் ஆன்மீகமும் எழுதி அசத்தினார், மிக பெரிய தெளிவும் தத்துவம் போதனையும் அவர் எழுத்தில் மிகுந்திருந்தன.

மனிதரிடம் கடைசி வரை அகங்காரமோ, ஆர்பாட்டமோ , கர்வமோ, எழுத்து சிம்மாசத்தின் உச்சியில் இருக்கின்றோம் எனும் மமதையும் கொஞ்சமுமில்லை

அவர் எல்லோருக்கும் நண்பனாய் இருந்தார், கொடிய எதிரியும் அவரை பழித்துவிட முடியாது. பழித்தோரும் பின்னாளில் அவரிடமே சரணடைந்தனர்.

அதுதான் ஒரு துறவியின் மனம், அதில் சரியாக இருந்தார் பாலகுமாரன்

மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு, சும்மா அர்ஜூனனை போருக்கு அழைத்து செல்வான் கண்ணன், ஏகபட்ட போர்கள் நடந்தன. அர்ஜூனனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை, சலிப்புற்றான். ஆயினும் சொல்வது கண்ணன் என்பதால் போரிட்டான்

அந்த போர்களின் அனுபவமே குருஷேத்திரம் எனும் கொடும்போரில் அர்ஜூனனுக்கு கை கொடுத்தது, அப்பொழுதுதான் அர்ஜூனனுக்கு புரிந்தது , “கண்ணன் நம்மை தயார்படுத்தியிருகின்றான்”

அப்படி தன் 270க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏகபட்ட சினிமா வசனங்கள், 200க்கும் மேற்பட்ட கதைகளெல்லாம் தான் அவதரித்த மிகபெரிய நோக்கத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்ந்தார்.

அந்த அனுபவங்களையெல்லாம் கொட்டி அவர் எழுதியதுதான் “கங்கை கொண்ட சோழபுரம்” மற்றும் என்றும் தமிழ் உலகில் கோபுரமாக இன்னும் அந்த “உடையார்”.
இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல். தஞ்சை கோவிலுக்கு அதை விட இன்னொருவன் காணிக்கை வைத்துவிட முடியாது

காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே

முன்னோர்களின் ஏதோ நினைவு அல்லது பூர்வ ஜென்ம‌ தொடர்ச்சி அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்.

இந்துமதத்தின் சித்தர்களின் சாயலாகவும் அவர் அறியபட்டார், கண்ணதாசனின் இறுதிகாலம் போலவே பாலகுமாரனுக்கும் ஆன்மீக ஞானம் உச்சத்தில் இருந்தது

இன்று அவரின் பிறந்தநாள்

எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது
அந்த மெல்லிய பூங்காற்றில் ஆலயமணி போன்ற ஆன்மீகமும் சோழனின் வாள் சத்தமும், உளி சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது ஒருவித சுகம்

எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டருக்கின்றனர்

ஞானம் கலந்த எழுத்து என்பதை அவர் நிரம்ப கொடுத்தார், ஆன்மீகம் கலந்த எழுத்து எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதை அவர் காட்டினார்.

அவர் எழுத்து நதியின் அணைகட்டு, நாமெல்லாம் பயனுற்றோம். அவர் கைகாட்டினார் நாம் வழிகண்டோம், அவர் படிக்கல்லாய் அமர்ந்தார், நாமெல்லாம் நல்வழி ஏறி சென்றோம்

அவர் மழையாய் பொழிந்தார் நாம் மனநிலமெல்லாம் செழுமை அடைந்தது

உயர்ந்த ஞானமிக்கோர் எல்லாம் ஒரே வரிசையே

அதில் வசிஷ்டர் முதல் அகத்தியர் போன்ற சித்தர்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள். அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட சித்தர் பாலகுமாரன்.

அவரின் சமூக நாவல், தத்துவ நாவல், இன்னும் ஆன்மீக நாவல், புராண கதைகள் என எவ்வளவோ சிகரம் இருந்தாலும் இமயத்தில் கைலாயம் போல மின்னுவது “உடையார்”

நிச்சயம் சாகித்ய அகாடமி அல்லது ஞானபீடம் விருது வழங்கி கொண்டாட வேண்டிய படைப்பது அது, கண்ணதாசனின் சேரமான் காதலி எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கபட்டு உடையாருக்கு மறுக்கபட்டதென்றால் அதுதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் இந்து துவேஷம்

இந்துமத நாவல்களுக்கோ,இந்து தத்துவத்தை அழகாக சொல்லும் நாவல்களுக்கோ, பாரத பாரம்பரியத்தை, தமிழக இந்துக்களின் பிரமாண்ட வாழ்வியலை சொல்லும் புத்தங்களுக்கு இங்கு அங்கீகாரம் வராது

அந்த அளவு மர்ம கரங்கள் பாரதத்தின் பல அசைவுகளை ஆட்டிவைக்கின்றன‌

உடையார் நாவல் எல்லா மொழியிலும் மாற்றபட்டு பாரதம் முழுக்க செல்லவேண்டிய இந்து இலக்கியம், ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை பாஜகவும் செய்யவில்லை

அதே நேரம் தமிழக பல்கலைகழங்கங்களில் பாருங்கள் கண்ட குப்பை நாவலெல்லாம் ஆய்வு, ஆராய்ச்சி என உயர்த்தபட்டிருக்கும் இவ்வளவுக்கும் தரமில்லாதவை

தமிழின் ஒப்பற்ற இலக்கியமான உடையார் அப்படி அல்லாமல் புறக்கணிக்கபட ஒரே காரணம் எழுதியவன் தூய இந்து, அந்த நாவல் தமிழக இந்துக்களின் இந்து நாவல் என்பதே

ஆனால் எதைகண்டும் பின்வாங்காமல் பெய்யும் மழைபோல தன் ஞானத்தை மழையாய் பெய்வித்தார் அந்த ஞானி

“உடையார்” “கங்கை கொண்ட சோழன்” என அவர் அடுத்தடுத்து கொடுத்த பிரமாண்ட நாவல்களும் அதனிடையே கொடுத்த ஆன்மீக நாவல்களும் அப்படி சிறப்பு வாய்ந்தவை

“கடிகை” எனும் நாவல் கால கல்வெட்டு, அக்காலத்தை கண்முன் நிறுத்திய வரலாற்று நூல்

இன்னும் எவ்வளவோ சொன்னார் அந்த சித்தர், அவர் எழுத்து சித்தர் அல்ல, அவர் முழு ஞானி, ஞானமெல்லாம் குடிகொண்ட பெரும் சித்தர்

எல்லாம் அவருக்கு தெளிவானது, எதெல்லாம் புரிந்துகொள்ள முடியாததோ அதெல்லாம் அவருக்கு மிக எளிதாக புரியும், புரிந்ததை எல்லோருக்கும் புரியும்படி விளக்கி சொல்லவும் அவரால்தான் முடியும்

“உடையார்” போலவே முத்தாய்ப்பாய் வரவேண்டியது அவரின் “மகாபாரதம்”

அந்த அளவு மகா பிரமாண்டமாய் வேரில் இருந்து அல்ல, விதையில் இருந்து பாரதத்தை தொட்டு சொன்னவர் யாருமில்லை, அந்த இதிகாசத்தை பிரமாண்டமாக தொடங்கினார்

ஆனால் அதை முடிப்பதற்குள் அவர் விதி முடிந்தது, தமிழ் இலக்கிய உலகின் மிகபெரிய சோகம் அது

அதை முடிக்க இனி அவர் பிறந்து வந்தால்தான் முடியும், அந்த பெரும் இலக்கியத்தை முடித்துவைக்க அய்யன் மறுபடி பிறந்துவரட்டும்

இன்று அந்த சித்தனின் பிறந்தநாள்

அந்த அற்புத சித்தனை, எழுத்துலக வேந்தனை, இலக்கிய சிற்பியினை அனுப்பிய தெய்வத்துக்கு நன்றி செலுத்தும் நேரம், அந்த ஞானமழையினை கொடுத்த தெய்வத்துக்கு நன்றி செலுத்தும் நேரம்

மொட்டை கோபுரமாக நிற்கும் அவன் தொடங்கிய மகாபாரத்தை முடித்து வைக்க அந்த காளிதாசனும் கம்பனும் ஒளவையும் கலந்த பிறப்பை மறுபடியும் அனுப்பி வைக்க கையேந்தி நிற்கின்றது இந்துக்கள் உலகம்