ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 08

“ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்துகொள்”

அதாவது எல்லா உயிர்களுக்குள்ளும் சிவனே இருக்கின்றான் என்பதை உணர்ந்து அவைகள் மேல் அன்பு செலுத்தி, கருணையமாகி அந்த உன்னத நிலையில் உனக்குள் இருக்கும் சிவனை உணர்ந்து அறிந்துகொள் என்பது பொருள்

இந்த தத்துவம் இந்துக்களின் ஆதார தத்துவம், எல்லா உயிரிலும் அப்படியே நமக்குள்ளும் இருப்பது சிவனே ஒரே சக்திதான் எல்லோரிலும் குடிகொண்டுள்ளது என்பதை வலியுறுத்தும் மதம் இந்துமதம்

வள்ளுவன் எனும் இந்து புலால் மறுத்தல், கொல்லாமை என இரு அதிகாரமே இயற்றினான்

அகத்தியர், திருமூலர் என எத்தனையோ ஞானியர் இதனை வலியுறுத்தி சொன்னார்கள், எல்லா உயிரிலும் சிவன் உண்டு என்ற உண்மையினை உணரும்பொழுது கர்வம் ஒழிகின்றது, மானிடர் மட்டுமல்ல எல்லா உயிரும் சமம் எனும் சமத்துவம் ஓங்குகின்றது, அந்த நிலையில் வாழ்வும் உலகமும் இனிதாகின்றது

கீதை இதை மறைமுகமாக சொல்லும் எல்லா உயிரில் இருந்து இயக்குவது ஒரே சக்தியே என அது சொல்லும்

”எவ்வுயிரும் நீங்காதுறையும் இறை சிவனென்று எவ்வுயிர்க்கும் அன்பாயிரு” என்பது சைவநெறி வாக்கு, அவ்வை அதைத்தான் அழுத்தமாக சொல்கின்றாள்

இந்த வரியினை “உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்” என இந்த தலைமுறைக்கு சொன்னவன் பாரதி