ஸ்ரீ சக்கர

இந்துக்களின் வழிபாட்டில் ஸ்ரீ சக்கர வழிபாடு முக்கியமான ஒன்று, சக்கரம் என்றால் வண்டியில் பூட்டுவதுதான் சக்கரம், வட்டமாக இருப்பதுதான் சக்கரம் என்றல்ல‌
சக்கரம் என்றால் சுழற்சி, ஒரு சக்தி ஓய்வில்லாமல் இயங்கி கொண்டே இருந்தால், மறுபடி மறுபடி அது சுழன்று கொண்டே இருந்தால் அதுதான் சக்கரம்
அவ்வகையில் உலகை இயக்கும் அந்த மகா சக்தியினை சக்கரவடிவில் குறிப்பாலும் இன்னும் மானிட சிந்தையால் புரிந்துகொள்ளமுடியாத சில அடையாளமிட்டும் வணங்கினார்கள் இந்துக்கள். அந்த சக்திதான் சக்கரமாக இந்து ஆலயங்களில் ஸ்தாபிக்கபட்டது, ஆதி சங்கரர் ஸ்தாபித்த சக்கரங்கள் எல்லாம் அவ்வகையே
அந்த சக்கரத்தின், அந்த பெரும் சக்தியின் மூல வடிவம் விஷ்ணுவின் அம்சங்களில் ஒன்று
பெருமாளின் கையில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவமே, சங்கு சீரான வளர்ச்சியினை கொடுக்கும் சக்தி குறிப்பது கருடன் ஆத்மாவின் மூல சக்தி, ஆதிஷேஷன் ஆதார சக்தி, கதையும் வாளும் காக்கும் சக்தி இன்னும் தீமைகளை அழிக்கும் சக்தி என எல்லா சக்திகளின் மொத்த இணைப்பாக அவற்றை இணைத்து பயன்படுத்தும் மாபெரும் சக்தியாக பெருமாள் இருக்கின்றார் என்பதே அவர் சக்கரமும் சங்கும் இன்னும் ஆயுதம் பல ஏந்தியும் நிற்கும் கோலத்தின் ஞானவடிவம்
இந்துக்களின் இந்த புரிதலும் மிக நுட்பமாக நோக்கிய தன்மையும் மிகவும் ஆச்சரியமானது
இந்த பிரபஞ்சத்தில் ஏகபட்ட சக்திகள் இயங்குவதை அறிந்த அவர்கள் ஒவ்வொன்றும் தனி தனி செயலுக்காக இயங்குவதையும் அதை ஒரு பெரும் சக்தி மையமாக இருந்து இயக்குவதையும் அறிந்தார்கள்
அப்படி அறிந்தவர்கள் மானிடருக்கு இப்பொழுது நேரடியாக சொன்னாலும் புரியாத ஞான தத்துவங்களை அவர்கள் புரியும் வகையில், சங்கு சக்கரம் என சொல்லி வைத்தார்கள்
இந்த சக்திகளெல்லாம் பகவான் பூமியில் அவதாரம் எடுக்கும்பொழுது அவருக்கு துணையாக வருவார்கள், பகவான் ராமனாக வந்தால் லட்சுமணாக ஆதிஷேஷன் வருவான் இன்னும் பல சக்திகளும் பல வடிவங்களில் வரும்
அப்படி பகவான் கண்ணனாக வந்தால் அந்த பெரும் சக்தி வந்தால் அந்த சக்கர சக்தி சுதர்சன சக்கரமாக கையில் வந்து அமரும்
ஆம், இடைவிடாமல் இயங்கும் பெரும் சக்தி பரம்பொருள் கண்ணனாக வரும்பொழுது சுதர்சன சக்கரமாக வந்து எதை அழிக்கவேண்டும் என பகவான் விரும்பினாரோ அந்த இயக்கத்தை சரியாக முறித்துபோட்டு அழித்தது
அதனை பல இடங்களில் காணலாம், யானையினை கவ்விய முதலையினை அழித்தது முதல் ராவணனின் முன்னோர்களை அழித்தது இன்னும் ஏகபட்ட அரக்கர்களை அசுரர்களை அழித்தது என ஏகபட்ட இடங்களில் அந்த சக்கரம் எதிரிகளை அழித்த காட்சி உண்டு
அதர்மங்களை அழிக்கும் சக்தி அது
பகவான் கையில் சுதர்சன சக்கரம் சுழன்ற ரகசியம் இதுதான், எது தீமையோ எது அதர்மமோ எது தர்மத்தையும் நியாயத்தையும் அடக்கி வைத்திருக்கின்றதோ அதை அந்த சக்கர சக்தி பகவானின் உத்தரவில் அழித்துவிடுகின்றது
இந்த தத்துவத்தைத்தான் அந்த இடைவிடாத பெரும் சக்தியினைத்தான் சக்கரத்தாழ்வார் என்றார்கள்
பில்லி சூனியம், எதிரிகளின் அதர்ம தொந்தரவு, அச்சம்,பயம், வீண் குழப்பம், பெரும் போராட்டம் என எதெல்லாம் மானிடனை லவுகீக வாழ்வில் அச்சுறுத்துமோ அதையெல்லாம் தீர்த்து தருபவர் சக்கரத்தாழ்வார்
அந்த சக்கரம் அழியாத சக்தி, நில்லாத சக்தி, தொடர்ந்து இயங்கும் சக்தி எனும் வகையில் எக்காலமும் பாதுகாவலை கொடுத்து கொண்டே இருக்கும்விஷ்ணுவின் அடையாளமாக சங்கும் சக்கரமும் இடம்பெற்றன, ஒரு பக்கம் சங்கும் இன்னொரு பக்கம் சக்கரமுமில்லா விஷ்ணு ஆலயமில்லை
அந்த சக்கரத்தை தனியாக வைத்தும் வழிபட சொன்னார்கள், ஆலயங்களில் தனி இடம் உண்டு
இன்னும் இந்துக்கள் வைணவ ஆலயங்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி இடம் கொடுத்தார்கள், அநீதியும் அக்கிரமமும் ஒழிய அவரிடம் வேண்டும் பொருட்டு தனி மந்திரங்களும் பிராத்தனைகளும் வைத்தார்கள்
மொத்தம் 1008 வகை சுதர்சன மந்திரங்கள் உண்டு என்றாலும் 108 மந்திரங்கள் மிகப் பிரபலமாக உண்டு, அவற்றை பிரார்த்தித்தாலே நல்ல பலன் உண்டு
காயத்ரி மஹாமந்திரம், சூரிய மண்டலம் நடுவே உள்ள ஸ்ரீமந்நாராயணன் – ஸ்ரீசுதர்சன பகவான் இவர்களைக் குறிப்பதாகும். எனவே தினமும் காயத்ரீ ஜபம் செய்த பின்னரே சுதர்சன ஜபம் செய்யவேண்டும் என்பார்கள் சாஸ்திரத்தில் தேர்ந்தோர்
யந்திரம் என்றால் திரும்ப திரும்ப ஒரு சக்தியினை வெளியிடுவது என பொருள், இதனால் சக்தி தரும் உபாயங்களை யந்திரங்கள் என்றார்கள் இந்துக்கள்
ஸ்ரீ சுதர்ஸன யந்திரம், ஸ்ரீ சுதர்ஸன மகா யந்திரம் என இரண்டும் முக்கியமானது யந்திரங்களுடன் கூடிய படத்தை கண்ணாடி போட்டு பூஜையில் வைத்து ஸ்நானம் செய்து மிகவும் ஆசாரத்துடன் வழிபாடு செய்து வர வேண்டும். எண்ணிய காரியங்கள் யாவற்றிலும் வெற்றி பெறலாம்.
யந்திரங்கள் சாதாரணம் அல்ல, ஓடும் ஆற்றை அணையும் கால்வாயும் திருப்புவது போல, ஓடும் மேகங்களை மலையின் காடுகள் ஈர்ப்பது போல பிரபஞ்சத்தின் சக்திகளை சில நல்ல அதிர்வு அலைகளை ஈர்ப்பதுதான் யந்திரம்
ஞானியர்களும் ரிஷிகளும் மிக துல்லியமாக பொதுநல நோக்குடன் வரைந்த யத்திரங்களுக்கு எக்காலமும் பலன் உண்டு, அந்த சக்கர யந்திரங்களின் அஸ்திபாரத்தில்தான் பல ஆலயங்கள் இன்று சக்தியாய் நிற்கின்றன என்பதற்கு ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஆலயங்களே சாட்சி
அந்த சக்கரங்களின் மூல சக்தியாய் இருக்கும் வடிவத்தைதான் சக்கரத்தாழ்வார் என்றார்கள் இந்துக்கள்
கருடாழ்வார் போல சக்கரத்தாழ்வாரும் மிகவும் பிரசித்தியானவர், இன்று அவருக்கான குருபூஜை. ஆனிமாதம் சித்திரை நட்சத்திரம் அவருக்கானது
ஏன் ஆனி சித்திரையினை வைத்தார்கள்?
சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்
அந்த செவ்வாய் ஆனிமாதத்தில் புதனின் ராசியான கன்னி மற்றும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும். இந்த சேர்க்கை மிகுந்த பலன்களை தர கூடியது, இதனால் அந்த நாள் விஷேஷம் என சக்கரத்தாழ்வாருக்கு ஒதுக்கபட்டது
சக்கரத்தாழ்வாரை அறுகோண வடிவின் இடையில் நிறுத்தினார்கள் இந்துக்கள், ஒரு வகையில் இது முருகபெருமான் தத்துவமே
செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட முருகபெருமான் துஷ்டசக்திகளை அழிப்பவர், அதே வகையில்தான் சக்கரத்தாழ்வாரும் போற்றபடுகின்றார், ஒரே சக்தியின் அம்சம் இரு இடங்களில் இப்படி சொல்லபட்டிருக்கின்றது
சக்கரத்தாழ்வாரில் கால பைரவரின் கோலமும் இருப்பதை காணமுடியும்
இந்துக்களின் வைஷ்ணவ ஆலயங்களிலெல்லாம் தனி சக்தியுடன் வீற்றிருப்பார் அந்த சக்கரத்தாழ்வார், திருவரங்க ஆலயம் மதுரை திருமோகூர் ஆலயமெல்லாம் அவருக்கு தனி இடமும் ஏகபட்ட வழிபாடுகளும் உண்டு
அவர் சன்னதியில் நெய்தீபமிட்டு, துளசி அல்லது அரளி போன்ற சிகப்பு நிற பூக்களின் மாலைஇட்டு ஒவ்வொரு சித்திரை அன்றும் 11 முறை முதல் 24, 54, 108 முறை என இந்த மந்திரத்தை சொன்னால் பலனளிக்கும்
“ஓம் மஹா ஸுதர்சனாயஸர்வ சத்ரு ஸம்ஹர ஸம்ஹரஸர்வ க்ஷுத்ரம் மாரய மாரயஸர்வ ரோகம் நிவாரய நிவாரயமஹா ஸுதர்சனாய சக்ர ராஜாய ஹும்பட் ஸ்வாஹா”
இன்று ஆனி சித்திரை அவருக்கானது, இடைவிடாமல் இயங்கும் அந்த பெரும் சக்தியினை ,எப்பொழுதும் இயங்கி தீயவர்களையும் அவர்கள் அடாவடிகளையும் அழிக்கும் அந்த பெரும் சக்தியினை வேண்டி லவுகீக வாழ்வில் எதிரிகள் தொல்லை நீக்க வேண்டுகின்றார்கள் இந்துக்கள்
அப்படியே மானிட ஆத்மாவினை சூழ்ந்து நிற்கும் எல்லா கொடிய குணங்களையும் மாயைகளையும் அறுத்து வீழ்த்தி ஆத்மாவுக்கு விடுதலை கொடுக்கும் சக்தியும் அந்த சக்கரத்தாழ்வாருக்கு உண்டு, அதுதான் முதல் தத்துவம்
யானையின் வாயினை கவ்விய முதலையினை சக்கரம் அறுத்தது என்பதும் இன்னும் பல இடங்களில் பல தலைகளை அறுத்தது என்பதும் ஆத்மாவினை பிடித்திருந்த மாயையினை அது அறுத்தது அத்தோடு அந்த ஆத்மாவுக்கு விடுதலை கிடைத்தது எனும் பெரும் தத்துவமே

அந்த வல்லமையான சக்கரத்தாழ்வாரை அவரின் ஜெயந்தியில் வணங்கும் எல்லா அன்பர்களுக்கும் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வாழ்த்துக்கள்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்