ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 10
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல்
இவ்வரி “செறிந்து அறிந்து நாடி செவ்விதாய் உள்ளே அறிந்து அரணை ஆராய்ந்து கொளல்” என்பது பொருள்
உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து இருக்கும் அந்த சிவனை, மனதின் உள்ளே ஆராய்ந்து அறிந்து கண்டு கொள்ள வேண்டும் என்பது குறளின் பொருள்
சிவன் ஒவ்வொரு உயிரிலும் பொருளிலும் இருக்கின்றார், உயிருக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த பூமியிலும் அதற்கு வெளியேயும், அண்டவெளியிலும் அதற்கு வெளியேயும் சிவன் இருக்கின்றார்
இன்னும் ஒளவை தன் விநாயக அகவலில் சொன்னது போல “அணுவிற் அணுவாய் அப்பாலுக் அப்பாலாய்” என உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் சக்தி சிவன், அந்த சிவனை மனதினால் ஆராய்ந்து தேடி காண வேண்டும் அதுதான் உண்மையான பக்தி என்பது பொருள்
சிவம் எனு பெரும் சக்தி எங்கும் வியாபித்திருக்கின்றது, அது உன்னுள்ளும் இருக்கின்றது, உன்னுள்ளே தேடி அவனை காண்பாய் எனும் பக்தியின் உச்சநிலையினை இக்குறளில் போதிக்கின்றார் ஒளவையார்