ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – அருளுடமை / குறள் : 01
ஓளவையின் முதல் நூறு ஞானகுறளை பார்த்துவிட்டு 101ம் குறளுக்கு செல்கின்றோம்
முதல் 100 குறளின் பிரபஞ்ச தத்துவம் உடலில் இருப்பதையும், உடலின் அமைப்பையும் அதன் நுட்பமான அசைவையும் அந்த உடலில் கலந்திருக்கும் இறைசக்தியினை யோகபயிற்சி, மூச்சுபயிற்சி மூலம் உணர்வது எப்படி என்பதையும் விளக்கிய ஒளவையார் அடுத்தடுத்து இறைநிலையினை நோக்கி மானிடரை அழைத்து செல்லும் வழிகளை போதிக்கின்றார்
ஒளவையின் முதல் 100 குறளில் அவர் தவம் பற்றி சொல்லுதலும் தவம் என்பது முற்பிறவிதொடர்ச்சி என சொல்வதை வள்ளுவன் தன் குறளின் துறவியலில் சொல்லியிருப்பது குறிப்பிடதக்கது
ஆம், ஒளவையார் எழுதிய ஞானகுறள் எனும் ஒப்பற்ற இந்து நூலின் தொடர்ச்சித்தான் வள்ளுவன் எழுதிய இந்துகாவியமான திருகுறள்
அந்த மூல நூலும் வள்ளுவனின் குருவுமாகிய ஒளவை அருளுடமை என இந்த அதிகாரத்தில் சொல்வதை வள்ளுவனும் அப்படியே “அருளுடமை” எனும் அதிகாரத்தில் வைத்தான்
அருள் என்பது வேறொன்றுமல்ல, இறைவன் மனிதன் மேல் அருளும் கருணை, பக்தி செய்யும் எல்லோருக்கும் பரமன் அருள் கிட்டாது அதற்கு பகவானின் கருணை வேண்டும்
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என மாணிக்கவாசக பெருமான் சொன்னதும் இதுதான்
அதைத்தான் “அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை” என அழுத்தமாக சொன்னான் வள்ளுவன்
அந்த வள்ளுவனுக்கு சிந்தனையினை இவ்வகைக்கு தூண்டியது ஒளவை எழுதிய இந்த அதிகாரம், அதைத்தான் இப்பொழுது காணபோகின்றோம்
முதல் குறள் இதோ
“அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்”
இக்குறள் “அருளினால் அன்றி அகத்து அறிவில்லை அருளின் மலம் அறுக்கலாம்” என பொருள் தரும்
அதாவது பகவானின் அருள் ஒன்றாலே அகத்தில் அறிவு உண்டாகும், ஞானம் வரும் அந்த அருளால்தான் பாவங்கள் எனும் தள்ள வேண்டியவற்றை (மலம்) அறுக்கலாம் என பொருள்
மலம் என்றால் குற்றம் அல்லது மாயை என பொருள்படும், அது ஆணவம், கன்மம், மாயை என மூன்றாக பிரியும், மும்மலம் என சொல்லபடுவது இதுதான்
“மலமறு மூன்றின் மயக்கம் அறுத்தே” என ஒளவையார் சொன்னது இதைத்தான்
ஆணவம் என்றால் அகங்காரம் கர்வம் எனும் பொருளில் வரும், தான் எனும் ஆணவமே முதலில் களைய வேண்டிய பாவம்
கன்மம் என்பது ஆசை, பொறாமை போன்ற குணங்கள் இவை பல பாவங்களுக்கு அடிதளமாகின்றன
மாயை என்பது நிலையற்ற விஷயங்களை நிலையானதாக கருதி மயங்கி அந்த மயக்கத்தில் செய்யும் பாவங்கள்
இந்த பாவ தொடர்ச்சியில் மனிதனின் பிறவி தொடரும், அந்த பிறவி சுழற்சியினை அறுக்க இந்த மும்மலமும் அறுத்தல் அவசியம்
இந்த மும்மலங்களையும் இறை அருளால்தான் ஒழிக்கமுடியும், அந்த அருளை பெற வேண்டும் என்பது குறளின் பொருள்
தன்னைப்பற்றிய கற்பனையில் மிதப்பது எல்லாருக்கும் இயல்பு. இந்த மாயைக்கும் அளவில்லை. இறைநிலையை எய்த விரும்புவோர் மாயை மலத்தைக் கழிக்க வேண்டும்.