ஆசியாவில் மட்டுமல்ல உலகின் மிகபெரிய கோவில்களில் நெல்லையப்பர் கோவிலுக்கும் இடம் உண்டு, இன்றும் உலகின் மூன்றாம் பெரியதேர் (திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்து) நெல்லையப்பருடையது
நெல்லுக்கு சிவபெருமான் வேலியிட்டு காத்த அந்த தலம் காலத்தால் மிக மிக பழமையானது, தென்னகம் மண்மூடிபோன காலத்துக்கு முன்பே அது இருந்தது, பின்னாளில் அது மீட்டெடுக்கபட்டது
அந்த ஆலயம் பாண்டியர்களின் தனிபெரும் ஆலயமாக இருந்தது, அகத்திய பெருமானும் இன்னும் பலரும் வணங்கிய அத்தலம் தனிபெருமையுடன் நின்றது
சோழருக்கு திருவாரூர் என்றால் பாண்டியருக்கு மதுரை தனிபெரும் ஆலயமாக இருந்தது, அம்மனுக்கும் சிவனுக்கும் தனி தனி சன்னதிகள் என அதன் வடிவம் பரந்து விரிந்தது, மதுரையும் திருவாரூரும் தனி பெரும் ஆலயமாக திகழ்ந்தன
வரலாற்றில் நெல்லை ஆலயம் பல காலம் சேரநாட்டின் கையில் இருந்தது, இன்றைய குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்டவை சேரநாட்டு பகுதிகளே,சேரன் தன் அம்மனை வைத்து வணங்கிய இடம் “சேரன் மகாதேவி” என்றாயிற்று
அப்படி நெல்லை வரை சேரநாடு நீண்டிருந்த காலம் உண்டு, பாண்டியருக்கும் சேரருக்கும் அடிக்கடி கைமாறும் பகுதியாக அது இருந்தது, சேரருக்கும் பாண்டியருக்கும் தாமிரபரணியும் அதன் விளைச்சலும் குறியாக இருந்தன, தென்னக முத்து குளித்தலிலும் கவனம் இருந்தது
சேர மன்னர்களும் அந்த நெல்லையப்பரை வணங்கினார்கள், பின்னாளில் பாண்டியர் கற்றளி எனும் கல் ஆலய காலம் வந்தபொழுது அதனை கற்றளியாக கட்ட தொடங்கினார்கள்
அக்காலத்தில் சமணம் பெரும் சக்தியாய் ஆட்டம் போட்டது, அந்நேரம் பாண்டிய சோழ நாடுகள் சமணத்தில் வீழ்ந்தன, சேர நாடு தன் தனிதன்மையாலும் சமணருக்கு சவால்விடும் தாந்ரிக வழிபாட்டாலும் தப்பி நின்றது
சேரநாட்டை பெருமளவில் சமணர்களால் ஆக்கிரமிக்கமுடியவில்லை காரணம் மலையாள வழிபாடுகளின் தாந்த்ரீகம் எனும் முறைதான் சமணரின் ரகசிய ஆயுதம் அதை சேரநாடு அழகாக முறித்து போட்டது
எனினும் மதுரையில் சமணர்களால் நடந்த குழப்பத்தால் திருநெல்வேலி சேர நாட்டிடம் சிக்கியது
கூன்பாண்டியனை திருஞானசம்பந்தர் குணமாக்கி நிமிர்த்து சைவனாக்கி , சமணரை ஓட அடித்தபின் நின்றசீர் நெடுமாறனாக எழுந்து நின்றார் அந்த கூன்பாண்டியன்
நாயன்மார்களில் முக்கியமானவர் அந்த நின்றசீர் நெடுமாறன்
அவர் மனம் விழித்துகொண்டது, சமணத்தால் தன் ராஜ்ஜியம் சீரழிந்திருப்பதை அறிந்தவர் போர் பல செய்து இழந்ததை மீட்டார்
அவ்வகையில் நெல்லை குற்றாலம் என பகுதிகள் அவன் வசம் வந்தது, அவரின் “நெல்வேலி போர்” சரித்திரமுக்கியத்துவமானது
நிச்சயம் அவர் மட்டும் அந்த போரை நிகழ்த்தியிராவிட்டால் சேர நாடு நெல்லைவரை பரவியிருக்கும், கன்னியாகுமரி போல நெல்லையும் மலையாள வாசனை வீசும் பகுதியாய் இருந்திருக்கும்
அந்த நின்றசீர் நெடுமாறனும் அவரின் தளபதி குலசிறையார் எனும் நாயனாரும், மன்னனின் மனைவி மங்கையர்கரசியாரும் நெல்லை பாண்டியரிடம் வர முக்கிய காரணம்
அவர்கள் கைக்கு நெல்லை வந்தபின்புதான் நெல்லையப்பர் கோவில் பிரமாண்டமாக எழும்பியது, பெரும் விரிவாக்கம் நடந்தது, திருநாவுக்கரசர் வந்து பாடிய தலம் அது
அந்த ஆனிமாதம் சிவனுக்கு பல விழாக்கள் நடக்கும் மாதம் என்பது போல தென்னகத்தில் ஒரு வகை மகிழ்ச்சி நிலவும் காலமாய் இருந்தது
பனைதொழில் வியாபரங்களும் புன்செய் பயிர் வியாரமுமாக மக்களிடம் பணம் புரளும் காலம், குற்றால மலையின் சாரல் நெல்லை வரை வீசி செல்லும் சுகந்தமான காலம், தாமிரபரணியும் புதுவெள்ளம் காணும்
இந்த மகிழ்வான காலத்தில் ஆனிமாதம் அனுஷ நட்சத்திரத்தில் தேரோட்டம் என நாள் குறித்தார்கள் அந்த நாயன்மார்கள்
மிகபெரும் தேரும் அந்த மன்னரால் செய்யபட்டது, உலகின் மூன்றாம் பெரிய தேர் அது. திருவாரூர் தேர் போல அது நிலைக்கு வர பல வாரங்களாகும் காலமும் இருந்தது
நெல்லையப்பர் ஆலயம் மிகபெரும் சொத்துக்களுடன் ஏகபட்ட நிலங்களுடன் பெரும் நகைகளுடன் காலம் காலமாக நீடித்து நிற்க வழி செய்தார் நின்றசீர் நெடுமாற நாயனார்
அந்த கோவிலின் பெருமையும் வரலாறும் பெரிது, எத்தனையோ சித்தர்களும் மகான்களும் ஞானியரும் வலம் வந்த ஆலயம் அது
தென்னகம் அல்ல வெள்ளையன் காலத்தில் தமிழகமெங்கும் நடந்த அநீதி கோவிலுக்கும் தெப்ப குளத்தையும் வெட்டி சாலைகள் வந்தது, எல்லா இந்து ஆலயமும் இப்படி நுணுக்கமாக வெட்டபட்டன
அந்த அநீதிக்கு நெல்லையப்பர் ஆலயமும் தப்பவில்லை இப்பொழுது தெப்பகுளம் துண்டிக்கபட்டு ஆலய வீதிகள் சாலைகளாகி கோலமே மாறிவிட்டது, இனி ஒரு காலம் இவை மீட்டெடுக்கபட வேண்டும்
இன்று நெல்லையப்பர் ஆலய தேரோட்டம் நடக்கும் நாள்
நெல்லை எவ்வளவு பாரம்பரிய சிவபூமியாய் இருந்தது என்பதையும், நின்றசீர் நெடுமாறன் எனும் நாயனார் எவ்வளவு பெரும் சிவனடியாராய் இருந்தார் என்பதையும் அந்த தேரோட்டம் நினைவுக்கு வருகின்றது
இன்று அவ்வாலயம் சில சக்திகளின் சதியால் கோலம் மாறியிருக்கலாம், கால் அலம்பிவிட்டு கோவிலுக்கு செல்லமுடியாதபடி தெப்பகுளமும் குளங்களும் இல்லாமல் இருக்கலாம், காலில் நீர்தெளிக்க கூட வசதியில்லாதபடி குறுக்கபட்டிருக்கலாம்
சமணர் காலம் எனும் கொடும் காலத்திலே சம்பந்தர் எனும் பாலகன் மூலம் நின்றசீர் நெடுமாறனை எழுப்பி அவன் மூலம் நெல்லையப்பர் ஆலயத்தை புதுப்பித்து கொண்ட சிவன், இந்த நவீன சமணர் காலத்திலும் உரிய நேரத்தில் அந்த ஆலயத்தை ஜொலிக்க வைப்பார் அது சத்தியம்
தேரோட்டம் நடக்கும் நேரம் அந்த நாயனாரையும் மனமார நினைக்க வேண்டும், நெல்லையப்பர் சன்னதி முன் இருக்கும் மண்டபம் அவர் பெயரால் இன்றும் அழைக்கபடுகின்றது
ஆலயத்தின் உள்ளே சிவனை பார்த்தபடி அவரும் அவரின் மனைவி மங்கையர்கரசி நாயனாரும் வணங்கி நிற்கும் சிலை இன்றும் உயர உண்டு
ஆனால் அடையாளமே தெரியாதபடி கரிய நிறத்தில் சுவரோடு சுவராக அது கரிபிடித்து அலங்கோலமாய் நிற்பதெல்லாம் மனம் வலிக்க செய்யும் காட்சிகள்
அம்மன்னனுக்கு அந்த நாயனாருக்கு நெல்லை ஆலயத்தின் உள்ளேயும் வேறு சிலை இல்லை, ஆலயத்துக்கு வெளியேயும் அடையாளமில்லை
இருக்கும் ஒரே அடையாளமும் சிவ சன்னதிக்கு முன் அடையாளமற்று நிற்கின்றது
விரைவில் அந்த நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் உரிய அடையாளங்கள் தஞ்சையில் ராஜராஜனுக்கு நிறுவபட்டது போல் நிறுவபட வேண்டும், அதை உரியவர்கள் செய்யாவிட்டால் காலம் ஒருநாளில் செய்யும்
நெல்லையின் பெருமை அந்த நெல்லையப்பர், எத்தனையோ காலம் காலமாக அந்த மண்ணையும் மக்களையும் தன் வழியில் காத்துவரும் நெல்லையப்பர்., எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் ஜொலித்து மீண்டெழும் சக்திநாதன் அந்த நெல்லையப்பர்
மதுரை மீனாட்சிபோலவே சிறப்பானவள் அந்த காந்திமதி அம்மை, மதுரை ஆலவாய் நாதன் பெருமைக்கு சற்றும் குறையாதது நெல்லை ஆலயம். ஒருவகையில் இரண்டும் இரட்டை ஆலயங்கள்
இன்று தேரோட்டத்தால் விழாகோலம் பூண்டிருக்கின்றது நெல்லை, அந்த தேரோட்டத்துக்கும் கொண்டாட்டத்துகும் காரணமான நின்றசீர் நெடுமாறனும் மங்கையரகரசியாரும் சிலையாய் உள்ளே சிலையாய் நின்று சிவனை காண்பது போல் வெளியேயும் சிலையாய் நின்று தேரோட்டத்தையும் காண வழிசெய்ய வேண்டும், அது நடக்கும்
அதற்கு முன்னால் உள்ளே சுவரோடு சுவராக கரிய கல்லாக மாறிகொண்டிருக்கும் அந்த நாயனாரின் சிலை நல்ல முறையில் ஜொலித்து உரிய அடையாளம் செய்யபட வேண்டும்
காரணம் அந்த வரலாறு அப்படி, சிவன் மதுரையினை மீட்டு நெல்லையினை மீட்டு தானே இம்மண்ணின் அரசன் என நிரூபித்த மெய்சிலிருர்க்கும் வரலாறு, அந்த வரலாற்றில் அவர் கை கருவியான பாண்டிய மன்னனுக்கு உரிய அடையாளம் நிறுத்தபட்டு எல்லா சந்ததியும் அதை காத்து வரவேண்டும் அது அவசிய தேவை
நெல்லையப்பர் தேரோட்டம் காணும் எல்லா மக்களுக்கும் வாழ்த்துக்கள், நெல்லையப்பனும் காந்திமதி அன்னையும் வற்றா தாமிரபரணி போல எல்லா மக்களையும் ஆசீர்வதிகட்டும், ஆன்மீகமும் தேசியமும் மக்களிடம் செழித்து வளரட்டும்