குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 48

“உறுதி பயப்ப கடைபோகா வேனும்
இறுவரை காறு முயல்ப – இறுமுயிர்க்கும்
ஆயுண் மருந்தொழுக்க றீதன்றா லல்லனபோல்
ஆவனவு முண்டு சில”

அதாவது ஒருவன் சாகக் கிடக்கும் நிலையிலும் உயிர்காக்கும் மருந்தை ஊற்றி அவனை காக்க முயற்சித்தல் வேண்டும், காரணம் பிழைக்காது என கைவிடபட்ட‌ உயிர் கூட சில நேரங்களில் பிழைத்துக் கொள்வதும் உண்டு.

அப்படியே முடியாது என நினைக்கவைக்கும் சில காரியங்கள், கடைசிவரை பலன் கிடைக்காது என்று தோன்றினாலும், இறுதி எல்லை வரை சிலர் முயற்சி செய்வவேண்டும், இறை அருளாலும் காலம் கைகொடுப்பதாலும் அது கைகூட வாய்ப்பு உண்டு

இதே பாடலின் பொருளை, அதாவது விடா முயற்சியினை ஒளவை ஒரு பாடலில் சொல்வாள்

“அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா”

அதாவது தொடர்ந்து முயன்றாலும் முதிர்ச்சியுறும் நாள் வராமல் எடுத்த செயல்கள் முதிர்ச்சி அடையாது. கூட்டத்தோடு இருந்து உருவத்தால் நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் உரிய பருவ காலம் இல்லாமல் பழுக்காது.

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”

என வள்ளுவன் சொன்னதும் இந்த பாடலின் சாரமே.