லோகமான்யா
இந்திய சுதந்திரத்தின் அவசியத்தை முதன் முதலில் கம்பீரமாக கேட்ட ஜனநாயக தலைவர் அவர்தான், ஆயுத முனையில் இந்தியாவினை அடக்கிவிட்டு இன்னும் ஏகபட்ட குழப்பங்களை “புரட்சி” சமூக நீதி “சாதி ஒழிப்பு” “சமத்துவம்” என வெள்ளையன் விதைத்துவிட்டு இந்த குழப்பங்களிலே இனி இந்தியாவினை ஆளலாம் என ஓரளவு நிம்மதி கொண்டிருந்த நேரமது
வெள்ளையனே இந்தியாவினை நல்வழியில் உயர்த்துவான் அவன் வராவிட்டால் இந்தியரெல்லாம் காட்டுமிராண்டிகள், வெள்ளையன் சென்றுவிட்டால் நாம் வாழமுடியாது எனும் விபரீத அடிமை எண்ணங்கள் விதைக்கபட்டு வளர்ந்த காலம் அது
அப்பொழுதுதான் அந்த மனிதன் மகராஷ்டிரம் ரத்னகிரியில் 1856ல் பிறந்து வளர்ந்தார், அது கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவினை பெற்றிருந்த காலங்கள்
அப்பொழுது பள்ளியில் கணித பிரிவில் முதல் மாணவனாக வந்திருந்தான் அந்த சிறுவன், அவன் கணித மேதையாக பெரும் பொறியாளராக வரும் வாய்ப்பு இருந்தது, ஆசிரியர் அதைத்தான் வற்புறுத்தினார்கள் அவனோ சட்டத்தை தேர்ந்தெடுத்தான்
ஏன் என எல்லோரும் கேட்க அச்சிறிய வயதிலே சொன்னான் “நம் நாட்டில் சுதந்திர போராட்டம் நடக்கின்றது, நம் தலைவர்கள் கைதுசெய்யபடுகின்றார்கள், அவர்களை விடுவிக்க சட்டம் அவசியம் அந்த படிப்பு அவசியம்”
மிக சிறிய வயதிலே இப்படி நேசித்த அந்த சிறுவன் பின் பால கங்காதர திலகராக சட்டம் பயின்ற வழக்கறிஞராக காங்கிரசில் சேர்ந்தார்
அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது
பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது
மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது பின்னாளில் விடுதலையாக விடிந்தது
தன் சட்டபடிப்பின் மூலம் அவர் ஒரு வேலி போட்டுகொண்டு பேசிய பேச்சும் எழுதிய எழுத்துமே அவரை லோகமான்யா எனும் அளவுக்கு உயர்த்தியது
லோகமான்யா என்றால் மக்களின் பெரும் தலைவன் என பொருள்
(இந்த லோகமான்யா எனும் பெயரை முறியடிக்கவே மகாத்மா எனும் பெயர் பின்னாளில் உருவாக்கபட்டது)
காங்கிரஸ் போராட்டம் தவிர வேறு வழிதெரியாத திலகருக்கு ஞானபார்வை கொடுத்தவர் விவேகானந்தர், புனேவுக்கு வந்த விவேகானந்தர் சுமார் 10 நாட்கள் திலகரோடு தங்கியிருந்த காலமே இந்திய வரலாற்றின் புதிய பாதையினை திருப்பியது
விவேகானந்தருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு இந்துமத எழுச்சியே இத்தேசத்தின் விடிவு என்பதை ஆத்மார்தமாக நம்ப வைத்தது.
மொழி, இனம் என பிரிந்து கிடந்த இந்தியாவினை இணைக்கும் ஒரே விஷயம் இந்துமதம், அது ஒன்றால் மட்டுமே இத்தேசம் பிணைக்கபட்டது
நாடு முழுக்க மொழியாலும், இனத்தாலும் விடுதலை உணர்ச்சியினை எழுப்ப சிரமமான நிலையில் மதத்தால் அது எளிது என்பது திலகருக்கு புரிந்தது, மதத்தை விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தினார்
அரசியல் கட்சிக்கு தடை, அரசியல் பேச தடை என்றிருந்த காலங்களில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்க பிரிட்டிசார் யோசித்தபொழுது அதுவரை சாதாரண நிகழ்வாக இருந்த பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தை இந்திய எழுச்சி ஊர்வலமாக சாதுர்யமாக நடத்தினார் திலகர்
இந்திய சுதந்திரத்திற்காக இந்து மதம் எனும் சக்தியினை கையில் எடுத்தாரே தவிர, ஒருகாலமும் மற்ற மதங்களை அவர் பழித்தாரில்லை, வரலாறு அதை சொல்கின்றது
கேசரி எனும் பத்திரிகையும் மராட்டா எனும் பத்திரிகையினையும் அவர் நடத்தினார், அதில் மராட்டா பத்திரிகை இந்தியா முழுக்க தனி செல்வாக்கை கொடுத்தது அதை தாண்டி ஐரோப்பாவிலும் அது கொண்டாடபட்டது
வங்கத்து குதிராம் போஸ் வங்க பிரிவினையினை எதிர்த்து குண்டு வீசிய நேரம் அதை ஆதரித்து தன் இதழில் மிக தைரியமாக எழுதினார் திலகர்
குதிராம் போஸுக்கு தூக்குவிதிக்கபட்டபொழுதும் அதை கண்டித்த ஒரே தலைவர் திலகர்தான்
யாருக்கும் இல்லாத தைரியம் அவருக்கு இருந்தது, இதனால் திலகருக்கு ஆதரவு பெருகிற்று
இதனை கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு அவரை சிறையில் அடைக்தது அதுவும் பர்மாவில் உள்ள தனி சிறையில் அடைத்தது, அப்பொழுது அவரின் உடல் நலமும் பாதிக்கபட்டது
உலகமே பிரிட்டனை கண்டித்தது. குறிப்பாக ஜெர்மனியின் மார்க்ஸ் முல்லர் பிரிட்டன் ராணிக்கே அதனை கண்டித்து கடிதம் எழுதினார், அம்மாதிரி அளவில் கண்டனம் பெருக பெருக திலகருக்கு விடுதலை கிட்டியது
திலகரின் வழியில் லாலா லஜபதிராய், வ.உ சிதம்பரனார் என மாபெரும் தியாகிகள் எல்லாம் உருவானார்கள், ஏராளமான தியாக தீபங்களை ஏற்றியவர் திலகர்
உண்மையில் திலகரின் வழியில் வந்தவர்களே இத்தேசத்தின் மாபெரும் தியாகிகள் வரிசையில் நிற்கின்றனர் என்பதுதான் வரலாறு, அவரின் தியாகத்தால் எழுந்த எழுச்சி அப்படி இருந்திருக்கின்றது
காந்தியின் வருகைக்கு பின் திலகர் தீவிரவாதி என முத்திரைகுத்தபட்டாலும் திலகருக்கான அபிமானம் இத்தேசத்தில் குறையவில்லை
கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டினார், வெள்ளையனை இந்திய மக்கள் தூக்கி எறியமுடியும் என்ற நம்பிக்கையினை விதைத்தார்
இந்தியர் மேல் அபிமானம் கொண்டிருந்த , இந்தியரின் நியாயத்தை ஓரளவு பேசிய பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பில் இருந்தார், அவர்களை சந்திக்க அவர் லண்டன் சென்ற வேளையில்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது
அதை தொடர்ந்து இந்தியா திரும்பினார், அதன் பின் உடல்நலம் பாதிக்கபட நோயுற்று இறந்தார்
பின்னாளில் லேபர் கட்சியின் அட்லி இங்கிலாந்தில் பிரதமரான போழுதே இந்திய சுதந்திரம் கிடைத்தது, திலகர் இறந்து 27 வருடமான பின்பு அது நடந்தாலும் லேபர் கட்சி எனும் தொழிலாளர் கட்சியே இந்திய விடுதலையினை கொடுக்கும் என்ற திலகரின் தீர்க்க தரிசனம் தப்பவில்லை
இந்நாட்டில் மாபெரும் சுதந்திர எழுச்சியினை ஏற்படுத்தியவர் என்ற முறையிலும், “சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்” என முழங்கி நின்ற சுதந்திர போராளி என்ற வகையிலும் திலகர் இந்நாட்டின் தலைமகன்
சட்டம் படித்து நாட்டுக்கு போராட வந்து தன் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் தேசத்துக்காக அர்பணித்த மகான் அவர், ஏற்கனவே பர்மா சிறைவாசத்தால் நோயுற்ற அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பாதிப்பில் அஞ்சலி செலுத்தி “இம்மக்களின் தியாகம் வீணாகாது” என சொல்லி மறைந்தார்
அந்த தலைமகனுக்கு இன்று நினைவு நாள், தேசம் அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றது
திலகருக்கு இந்தியாவில் பிடித்த மாகாணங்களில் சென்னை தமிழகமும் ஒன்று, சென்னை வரும்பொழுதெல்லாம் அவரும் பாரதியாரும் வ உ சியும் சென்னை கடற்கரையிலே உரையாடுவார்கள் பொது கூட்டம் நடத்துவார்கள்
அதனால் அந்த இடம் “திலகர் திடல்” என்றானது
தேசபற்று மிக்க அந்த இடத்தின் பெருமையினை மறைத்து தேசபக்தியினை குலைக்கும் விதமாகத்தான் திராவிட கல்லறைகள் அப்பக்கம் பின்னாளில் எழும்பி இன்று திலகர் திடல் சுருக்கபட்டிருக்கின்றது, சிலருக்கு அப்படி ஒரு இடம் அங்கு இருப்பதே தெரியாது
அந்த திடலில் திலகருக்கு வ.உ.சி பாரதியுட பிரமாண்ட சிலை வைக்கபட வேண்டும், அதன் அடியில் “சுதந்திரம் எம் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்” எனும் அந்த வீரமான முழக்கங்கள் சென்னை கடற்கரையின் எப்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி வழிவகை செய்து வைக்கபடல் வேண்டும்
காலம் அதை ஒருநாள் நிச்சயம், செய்யும்
வெள்ளையனிடம் அடிமையாய் இருந்து அவன் தரும் உரிமைகளை பெற்று வாழ்வதை தவிர வேறு வழியே இந்தியாவுக்கு இல்லை என காங்கிரஸ் சொல்லிகொண்டிருந்த காலங்களில் , “சுதந்திரம் எம் உரிமை” என முதலில் முழங்கிய அம்மகானை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இந்நாளில் வணங்கி கொண்டிருக்கின்றார்கள்
திலகர் கனவுகண்ட அந்த சுந்தந்திர இந்தியா இப்பொழுதுதான் உருவாகி கொண்டிருக்கின்றது எனும் வகையிலும் 75ம் ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களிலும் அம்மகானின் வழிகாட்டலும் நினைவுகளும் எக்காலமும் இங்கு நிலைத்திருக்கும்