இந்துமதம் மனிதனுக்கு எதெல்லாம் மகா முக்கியமோ, எதையெல்லாம் மனிதனின் சொந்த முயற்சியில் ஒரு காலமும் உருவாக்க முடியாதோ, எது இன்றி மனிதன் வாழமுடியாதோ அவை எல்லாம் தெய்வத்தின் கருணை என உணர்ந்து அவையெல்லாம் தேவதை அம்சம் என சொல்லி கொடுத்தது

எதெல்லாம் உயிர்களை உருவாக்கும் சக்தி கொண்டதோ அதையெல்லாம் பெண் தெய்வமாக்கிற்று, பெண்களால் உயிர்களை உருவாக்கமுடியும் என்பது போல ஆறுகளாலும் முடியும் என்பதால் ஆறுகளை தெய்வமாக்கிற்று

மானிட உயிர்களை வளர்ப்பதில் ஆறுகள் தாய்போல் நிற்பதால் அதனை தாய் என கொண்டாடிற்று, அந்த தாயினை ஒரு நாளில் அதை வணங்கவும் சொன்னது. ஆடிமாதம் பெருக்கெடுத்து ஓடும் நதிகளை அம்மனின் அம்சமாக வணங்க சொன்னது

வானியல் கோள்களின் சஞ்சாரபடி நீர் ராசி கொண்ட கடககராசியில் வரும் வெள்ளத்துக்கு குருவின் அருளால் சக்தி அதிகம், அந்த நீர் ஒவ்வொருவர் தலையிலும் படும்படி ஒரு நாளை குறித்தார்கள் முன்னோர்கள்

எல்லா ஆறுகளுக்கும் அந்த வழிபாடு உண்டெனினும் காவேரிக்கு அது தனி அடையாளமாயிற்று, ஆடிமாதம் 18ம் நாள் தனி சிறப்பாயிற்று

18 என்பது இந்துமதத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று, பாரத போர் முதல் ஆலய படிகட்டு வரை 18 என அன்றே குறித்துவைத்தது , மகா புராணங்களின் எண்ணிக்கையும் பதினெட்டு

18 நாள் வழிபாடு என்பது அன்றைய வழக்கமாய் இருந்தது என்பார்கள்

18 நாள் பக்தியோடு தவமிருந்து கோவில் விழாக்களை முடித்து, பெருகிவரும் வெள்ளத்தை வணங்கி விதைப்பினை தொடங்குதல் அன்று வழக்கமாயிற்று

தமிழக ஆறுகளில் தனி சிறப்புமிக்கது காவேரி, அதுவல்லா தமிழகத்தை நினைத்துபார்த்தல் என்பதே முடியாது. அது தொடக்கத்தில் எங்கோ பாய்ந்தது எனவும் அகத்தியர் காலத்தில்தான் தமிழக பக்கம் திரும்பிற்று எனவும் சில புராண செய்திகள் உண்டு

அதன் பலனோ என்னவோ கங்கைக்கு அடுத்து தொடக்கம் முதல் முடிவு வரை ஏகட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களை கொண்டது அந்த காவேரி ஆறு, நதிகளில் அது சிறப்பானது

தலைக்காவேரி ஆலயம், சாமுண்டீஸ்வரி ஆலயம் என தொடங்கி தமிழகத்தின் கடைகோடிவரை பாருங்கள் அதன் கரை ஆலயமெல்லாம் மகா பிரசித்திபெற்றவையாகவும் தனி சக்தியாய்ந்தவை என்றும் தனித்து அறியபடும்

தெய்வசக்தியும் வழி வழி வந்த மக்களின் ஆசியும் அந்த தனித்துவத்தை பெற்று கொடுத்திருகின்றன, அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது.

அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி பிரசித்திபெற்றது.

உலகின் பழமையான‌ நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் அதன் கரையிலேதான் உருவானது

இன்னும் ஏராளமான பெருமைகள் அதன் கரையிலே உருவாயின, ஒன்றல்ல இரண்டல்ல சொன்னால் பெருமை தாங்காது.

சிலப்பதிகாரம், தஞ்சை பெரிய கோயில், திருவையாறு கர்நாடக இசை போன்ற அழியா கலைகள் ஒரு எடுத்துகாட்டே தவிர இன்னும் ஏராளம் உண்டு

அந்த காவேரியில் ஆடிபெருக்கு மகா விஷேசமாக கொண்டாடபடும், அன்றைய காலங்களில் மிக சரியாக ஆடி மாதம் அது பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றது, அன்று கன்னடத்தில் அணைகள் இல்லை, தமிழகத்தின் அதன் துணையாறுகளான அமராவதி, பவானி, நொய்யலிலும் அணைகள் இல்லை,

எப்படி பெருக்கெடுத்து வந்திருக்கும் காவேரி, நினைத்தாலே இனிகத்தான் செய்கிறது, அப்படியும் ஒரு காலம் இருந்திருக்குன்றது.

ஒரு அணையுமின்றி அது எப்படி பொங்கி வந்திருக்கும் என்பதை நோக்கும் பொழுதே அந்த ஆற்றில் கல்லணையினை எப்படி கட்டினார்கள் என்பதில்தான் ஆச்சரியம் அதிகமாக மின்னும்

எப்படி கல்லை கொண்டு சென்றார்கள், எப்படி அடித்தளமிட்டார்கள், எப்படி ஆற்றை திருப்பினார்கள் என்பதற்கு இன்றுவரை விடை இல்லை

எகிப்தின் பழங்கால அணைகளுக்கு ஈடாக சொல்லபடும் கல்லணையில் எப்படிபட்ட நுட்பம் என இன்றுவரை தெரியாது, எல்லாமே அனுமானம்.

அந்த கல்லணை மூலம் அக்கால சோழநாடே செழித்தது, செழித்தது என்றால் முப்போகம் தவறாமல் விளைந்தது, எல்லா வகை நெல்லும் அங்கே விளைந்தது என்கின்றார்கள்.

வருடமெல்லாம் ஓடினாலும் இந்த ஆடிமாதம் அது புதுவெள்ளத்தோடு வரும், அதனை வணங்கி வரவேற்றிருக்கின்றார்கள்

உண்மையில் காவேரி வற்றாத ஆறெல்லாம் அல்ல, ஆடியில் அது பொங்கி இருக்கின்றது மற்ற காலங்களில் ஏதோ ஓடியிருக்கின்றது

அக்காலத்திலே ஆடியில்தான் புதுவெள்ளம் பொங்கி இருக்கின்றது, இன்று ஆடியில் மட்டும் தமிழக பக்கம் வருமாறு அதன் நிலை மாறிற்று

ஆடியில் பொங்கி வரும், அந்த பெருக்கெடுத்த காவேரியினைத்தான் பூ தூவி வணங்கிவிட்டு விதைக்க சென்றிருக்கின்றார்கள், நன்றியோடு

அந்த புதுவெள்ள காவேரியினை தன் அன்னையாகவே நினைத்து வணங்கி இருக்கின்றார்கள், பெண்கள் தங்கள் தாலிக்கு அந்த அன்னையின் ஆசீர்வாதம் வேண்டி வணங்கி அந்த நீரை தாலியில் தொட்டு வைக்கின்றார்கள்

எல்லா தமிழ் இலக்கியங்களும் காவேரியினை பாடி இருக்கின்றன, வான் பொய்யினும் தான் பொய்யா காவேரி என புறநானூறு சொல்கின்றது,

கம்பன் பல இடங்களில் அதனை எப்படியெல்லாமோ கொண்டாடி இருக்கின்றான், கோசலை நாடு கவேரி நாட்டுக்கு காவேரி கரைக்கு நிகரானது என ஒரே வரியில் அசத்தினான் கம்பன்

சிலப்பதிகாரத்தில்

“உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தன்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப‌
நடந்தாய் வாழி காவேரி” என

இளங்கோ அடிகளும் ஆடி பெருக்கினை அழகாக வர்ணிக்கின்றார்.

கங்கை நதிக்கு கொஞ்சமும் குறையா வரலாற்று பழமை கொண்டது காவேரி, உலகில் நைல், யூப்ரடீஸ் என பல பலநதிகளுக்கு உள்ள வரலாறும் அந்த நதிக்கே உண்டு

அந்த காவேரி தமிழனின் அடையாளம், தமிழனை உருவாக்கிய ஆறு, தமிழ் கலைகளை வளரவைத்த ஆறு

அந்த நன்றியோடு ஆடிபெருக்கினை கொண்டாடலாம், காவேரியினை நன்றியோடு வணங்கலாம்

அந்த காவேரி அன்னைதான் தங்களுக்கும் தங்கள் பயிருக்கும், ஆடுமாடுகளுக்கும் நீர்வார்ப்பவள் என்ற நன்றி அன்றைய இந்துக்களிடம் ஓங்கி இருந்திருக்கின்றது

இப்படிபட்ட நன்றியும் நாகரீகமும் உலகில் எந்த இனத்திடம் இருந்தது? இந்துக்களிடம் மட்டும்தான் இருந்தது

ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா, தமிழகம் வந்த காவேரி அன்னையினை பூத்தூவி வரவேற்கும் விழா

தமிழரின் பெரும் நன்றிக்கு எடுத்துகாட்டான கலாச்சார விழா

“இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி

இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தேவ மங்கையடி” என்ற வாலியின் நிதர்சன வரிகள் காதோடு கேட்கும் நேரமிது

ஆயிரம் அர்த்தமுள்ள வரிகள் அது.

ஆம் காவேரி கரை ஆலயங்களையும் காவேரி செழிக்க வைக்கும் நிலங்களையும் பாருங்கள், காவேரி என்பது ஆறே அல்ல, அது ஒரு வரம், தெய்வம் தமிழருக்கு கொடுத்த தனிவரம்

அந்த தெய்வத்தை பூ தூவி வணங்கி வரவேற்று நன்றி பெருக்கில் நிறைந்து நிற்கும் நாள் ஆடிபெருக்கு

காவேரி என்றல்ல ஒவ்வொரு நதியும் இந்நாளில் நன்றியோடு வணங்கபட வேண்டியது, அப்படியே அவற்றை காக்க உறுதி ஏற்க வேண்டிய நாளும் இதுவே

காவேரி என்றல்ல எதெல்லாம் பழம்பெருமையும் புராதானமும் கொண்ட நகரமோ ஊரோ ஆலயமோ அதெல்லாம் ஆற்றங்கரையில்தான் அமைந்திருக்கும், அவ்வகையில் ஒவ்வொரு ஆறும் ஆயிரமாயிரம் வரலாறுகளை கொண்டிருக்கின்றது

எத்தனையோ லட்சம் ஆன்மாக்கள் அதை சுற்றி நிற்கும், எத்தனையோ ஆயிரம் நினைவுகளை ஆறுகள் சுமந்து நிற்கும், அந்த நாளில் அந்த ஆற்றை வணங்கி அதன் சக்தியினை பெற்றுகொள்வது இந்துக்களின் கடமையாகின்றது

ஆறு என்பது சாதாரணம் அல்ல, மழையாக பொழியும் உயிசக்தியினை நிலமெல்லாம் கொண்டு உயிரூட்டும் ஒரு பெரும் சக்தி

அந்த சக்தியில் வானலோக பிரபஞ்ச சக்தி முதக் உயிர்சக்தியும் கலந்திருக்கின்றது, அந்த உயிர்சக்திதான் பயிராக விளைந்து மானிட உயிர்களை காக்கின்றது

அதனால் அந்த சக்தியினை பெறத்தான் இந்துக்களுக்கு புதுவெள்ள ஆடிபெருக்கில் வணங்க சொன்னார்கள் முன்னோர்கள், அதனை ஒவ்வொரு நதியிலும் செய்தல் நல்லது