நாச்சியார் திருமொழி 21
அன்று கோகுலாஷ்டமி என்பதால் ஏகபட்ட வேலைகள் ஆண்டாளுக்கு இருந்தன, அதிகாலையிலே குளிக்க குளத்தின் கரைக்கு தோழியரோடு வந்துவிட்டாள் , உடைகளை ஒரு மரத்தடியில் வைத்துவிட்டு அவர்கள் குளிக்க நீரில் இறங்கியபொழுது கடுமையாக குளிர்ந்தது
அந்த கடும் குளிரில் “கிருஷ்ணா கிருஷ்ணா” என சொல்லியபடியே இறங்கியதில் அவர்களுக்கு குளிரவில்லை ஆனந்தமாக மூழ்கி குளித்தார்கள், நன்றாக நீந்தி குளித்துவிட்டு கரைக்கு வந்தால் ஆடைகளை காணவில்லை
ஆண்டாள் நமட்டு சிரிப்புடன் கண்ணனை நோக்கி பாடினாள்
“கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தரு ளாயே”
( கோழி கூவும் முன்பே இந்த நீரில் மூழ்கி குளிக்க வந்தோம், இதோ சூரியனும் வந்துவிட்டான். பாம்பின் மேல் படுத்திருக்கும் பரந்தாமனே, நாங்கள் சக்தியற்றவர்கள். இனி இந்த குளத்து பக்கமே வரமாட்டோம், நாங்கள் உன்னை வணங்கி கேட்டுகொள்கின்றோம் எங்கள் உடைகளை கொடுத்துவிடு)
என சிரித்தபடி பாடிமுடித்தாள், அவளோடு இருந்தவர்களும் சிரித்தார்கள்
“அவன் இன்னும் திருந்தவில்லையடி” என்றாள் ஒருத்தி, “எடுத்தால் அவள் துணியினை மட்டும் எடுக்கலாமே நம் எல்லோர் துணியும் ஏன் எடுத்தான்” என்றாள் இன்னொருத்தி
“மரத்தின் மேல் பாருங்கள், அவன் வழமையே அதுதான், அவன் அங்கேதான் இருப்பான்” என்றாள் இன்னொருத்தி
வழக்கமாக மிக தாமதித்து வரும் கண்ணன், அன்று மிக கோபத்தோடு உடனே வந்தான், வந்தவன் “உங்கள் உடைகள் அந்த மரத்தின் அடியில் இருக்கின்றன, குளத்தில் நீந்தியதில் இடம் மாறி வந்துவிட்டு என்னை பழிக்கின்றீர்கள்” என சொல்லிவிட்டு மறைந்தான்
ஆண்டாள் “கண்ணா..” என மன்றாடி அழைத்து கொண்டே இருந்தும் அவன் வரவே இல்லை
அவனுக்கு கோபம் வரும் என ஆண்டாளுக்கு தெரியும், ஆனால் அப்படி இரு உக்கிரகோபத்தை அவள் கண்டதில்லை அதுவும் எல்லோரும் சிரித்ததில் அவன் அவமானமாகிவிட்டான் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்
சோகமாக வீட்டுக்கு வந்தவள் பூஜைக்கு தயாரனாள், வழக்கம் போல் கண்ணன் சிலைக்கு மாலையிட்டு அழைத்தும் அவன் வரவில்லை
அவள் கண்ணனின் பாடல்களை பாடியும் அவன் வரவில்லை
அவளுக்கு முகம் சுருங்கிற்று, அவனுக்கு பிடித்தமான வெண்ணையும் அவலும் இன்னும் பலவும் படைத்தாலும் அவன் வரவே இல்லை
ஆண்டாள் அவனை அழைத்து அழைத்து பார்த்தாள் அவன் வரவில்லை, உடைந்த குரலில் அழைத்தாள் அப்பொழுதும் அவன் வரவில்லை
அவளுக்கு கண்ணீர் தாரைதாரையாக கொட்டிற்று, கண்ணில் விழுந்த நீரை எடுத்து அவன் சிலையின் கால்களில் தடவி அழுதாள் அப்பொழுதும் அவன் வரவில்லை
கையில் இருந்த வைரம் காணாமல் போனது போல பெரும் ஆற்றாமையும், கப்பல் நிறைய பொன்னை தொலைத்தது போல சோகத்திலும்,உயிரில் பாதி பிரிந்தது போல இயலாமையிலும் அவள் வீழ்ந்து கிடந்தாள்
வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, மூக்கினை உறிஞ்சியபடி அவள் புலம்ப ஆரம்பித்தாள், கேவி கேவி அவள் திணறி திணறி புலம்பினாள்
“கண்ணா நான் உன்னை அறியாதவளா?
பிருந்தாவனத்தில் நீ இருந்ததே 10 வயதுக்கு உள்ளேதான், அதுவும் ராதா உன்னோடு சிலவயது மூத்தவள். அந்த பால்யவயதில் எல்லோருக்கும் பிடித்தமான சிறுவன் நீ
விளையாட்டாய் நீ செய்யும் பெரும் காரியங்களும் அந்த சிரிப்பும் புன்னகையும் மாயையும் எல்லோருக்கும் பிடித்திருந்தது, பொதுவாக பெண்களுக்கு அழகான குழந்தையினை பிடிக்கும் அக்குழந்தை வீரனாகவும் விளையாட்டுதனமாகவும் இருந்தால் எல்லோருக்கும் கொஞ்ச தோன்றும்
அப்படித்தான் உன்னையும் சுற்றி சுற்றி வந்து விளையாடினார்கள், ஒருமுறை நீ கங்கையில் குளிக்கும் பொழுது உன் ஆடையினை வெள்ளம் அடித்து சென்றது, அதை பார்த்த பெண்கள் சிரித்தார்கள்
அந்த அவமானத்தில்தான் நீ அவர்கள் குளிக்கும்பொழுது ஆடைகளை மறைத்து வைத்து விளையாடினாய், அதுவும் அது மிக பால்ய பருவம், குழந்தைதனம் தவிர ஏதும் அறியா பருவம்
அப்படிபட்ட காலத்தில் நீ விளையாட்டாக விளையாடியதைத்தானே சொன்னேன், அதற்கு அவ்வளவு கோபமா, சரி நான் செய்தது தவறுதான் மன்னித்துகொள்” என கெஞ்சினாள்
இடையில் இருமலும் அவளுக்கு வந்தது, தன்னால் முடிந்தமட்டும் அழுது புலம்பினாள் அவன் வரவில்லை
இனி அவன் வரமாட்டான் என்பதினை அவளாகவே முடிவு செய்தாள், கண்களை துடைத்து கொண்டாள், தலையினை முடிந்துகொண்டு ஆடையினை சரிசெய்து அமர்ந்து கொண்டாள்
அவன் சிலையினை கூர்ந்து நோக்கி சொன்னாள்
“கண்ணா, நடந்ததை சொல்லியும் நீ வரவில்லை. நீ மாயவன் எல்லாவற்றையும் குறிப்பால் நடத்தும் மாயக்காரன், உன் ஒவ்வொரு அசைவும் ஞானபோதனை ஆனால் இந்த மடமாந்தருக்குத்தான் புரியவில்லை
எனக்கு புரிந்ததை சொல்கின்றேன், அது சரியென்றால் வா இல்லையேல் நான் உன்னிடம் வருகின்றேன்
கண்ணா, உடலுக்கு ஏன் ஆடை? ஆடையற்ற உடல் அவமானமிக்கது , அருவருப்பானது. ஆடைதான் உடலுக்கு அழகு மட்டுமா ஆடை? மானத்தை மறைப்பதே அதுதான்
அந்த ஆடைதான் உடலுக்கு மானமும் அழகும் கொடுப்பது
மானிட உடலுக்கு ஆடை போல மானிட ஆன்மாவுக்கு அழகு எது கண்ணா? அறிவும் ஞானமும். இந்த இரண்டும் இல்லா ஆன்மா அவமானமானது, அருவெருக்கதக்கது, புறக்கணிபடகூடியது
ஆடையற்ற உடலோடு ஒருவன் பொதுவெளிக்கு வந்தால் எவ்வளவு அவமானமோ அப்படியான நிலை ஞானமற்ற ஆத்மாவுக்கு
கண்ணா ஆடை கொடு என கெஞ்சிய நாடகமெல்லாம் கண்ணா எங்களுக்கு ஞானம் கொடு அறிவினை கொடு என நாங்கள் மன்றாட வேண்டிய அவசியத்தை சொன்னதல்லவா?
எங்கள் உடையினை நீ வைத்திருக்கின்றாய் என கோபியர் கெஞ்சியது என்ன கண்ணா? அறிவும் ஞானமும் உன்னிடமே இருக்கின்றது அதை எங்களுக்கு தந்து எங்கள் அறியாமையினை மறைக்க எங்கள் ஆத்மா அறிவோடு இருக்க அருள்வாய் என்பதல்லவா?
அதுதானே கண்ணா நீ சொன்ன ஞானநாடகம் , அதை அறியாதவளா நான்
உன்னைவிட பெண்களின் மானம் காத்தவன் யார் உண்டு கண்ணா, உன் வாழ்வு முழுக்க உன்னால் வாழ்ந்த பெண்கள் கோடி உண்டே தவிர உன்னால் கண்ணீர்விட்ட பெண் என ஒருத்தியினை காட்டமுடியுமா?
ஆயர்பாடி பெண்கள் முதல் எவ்வளவு பெண்கள் உன்னால் வாழ்ந்தார்கள் உன்னால் நிம்மதி அடைந்தார்கள், பெண்களுக்கு உன்னைபோல் காவல் அளித்தது யார் கண்ணா?
பாஞ்சாலி மானத்தை காக்க அப்படி மாயசேலை கொடுத்த உன்னையா பெண்கள் உடைகளை திருடினாய் என சொல்லமுடியும்? அப்படி சொல்வது முழு மடதனம் அல்லவா?
உன்னிடம் ஞானமும் அறிவும் குவிந்திருக்கின்றது, மானிட ஆன்மா அது இல்லாமல் நாணி குறுகி நிற்கின்றது, எங்கள் ஆன்மாவுக்கு மானமும் அறிவும் தரும் ஞானத்தை அணிவிப்பாய் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம்
அன்று கோபியர் கேட்டது அவர்கள் ஆடையினை அல்ல, மரத்தின் மேல் இருந்து நீ வைத்திருந்ததும் அவர்கள் ஆடையினை அல்ல, மானிட கண்களின் பலவீனத்துக்கு உன் நாடகத்தை புரிந்துகொள்ளாதோருக்கு அப்படி தோணலாம்
உண்மையில் அது ஆத்மாக்களின் குரல், உயர்ந்த இடத்தில் இருக்கும் உன்னை நோக்கி மானமிழந்து நிற்கும் ஆன்மாக்களின் குரல், நாணி நிற்கும் ஆத்மாக்களின் மன்றாட்டு, ஆத்மாக்களின் கெஞ்சல்
கண்ணா ஞானமும் அறிவும் ஆத்மாவுக்கு கொடு என்றுதான் ஒவ்வொரு ஆன்மாவும் உன்னிடம் கெஞ்சுகின்றது, அந்த நாடக தத்துவமும் அதுதான்
பாஞ்சாலி சேலையினை விழாமல் காத்த உன்னிடம் நாம் சந்தேகம் கொள்ளமுடியுமா?” என புலம்பியவள் அப்படியே சரிந்து விழுந்தாள்
அவள் முகத்தில் யாரோ நீர்தெளிப்பது போலிருந்தது, கண்களை திறந்து அவள் பார்த்தபொழுது புது பட்டுபுடவை ஒன்று அவள் மேல் போர்த்தபட்டிருந்தது
ஆண்டாள் மகிழ்ச்சியுடன் அதை அணிந்துவந்து பார்த்தபொழுது சிலைமுன் இருந்த வெண்ணையும் பலகாரமும் காணாமல் போயிருந்தது , வெண்ணையின் ஈரம் சிலையின் வாயோரம் வழிந்து கொண்டிருந்தது
ஆண்டாள் அச்சிலையினை அணைத்தபடி உற்சாகமாக கோகுலாஷ்டமி கொண்டாடிகொண்டிருந்தாள், அவளை போல மகிழ்ச்சியானவர்கள் அன்று உலகில் யாருமே இல்லை