சேவல் விருத்தம் : 02

சேவல் விருத்தம் : 02

“எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
கரத்தடர்த் துக்கொத் துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர்கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
சரணஅழ கொடுபுரி யும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவற் றிருத்து வசமே.

பாடலின் முதல் வரி இதோ

“எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்”

இவ்வரி “எரி அனைய வியன் நவிரம் உள கழுது பல பிரம ராட்சதர்கள் மிண்டுகள் செயும்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது நெருப்பு போல் தோன்றி விரிந்த (எரி அணைய வியன்) தலைமுடிகளை உடைய பேய்கள் (நவிரம் உள கழுது) பலவகைபட்ட பிரம்ம ராட்சதர்கள் என பொருள்

இரண்டாம் வரி இதோ

“ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்”

இவ்வரி “ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை ஈனப் பசாசுகளையும்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது ஏவலால் வரும் பிசாசுகள் இன்னும் தனித்துவமான பிசாசுகள் (நனி பேய்கள்) கொலை செய்யும் துஷ்ட பிசாசுக்கள் ( ஈன பிசாசு) என எல்லாவகை பிசாசுக்களையும் என பொருள்

மூன்றாம் வரி ஒலிக்கின்றது

“கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்”

இவ்வரி “கரி முருடு பெரியமலை பணை எனவும் முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கண்” என பிரிந்து வரும்

அதாவது கரிய நிறமான முரடான பெரிய மலை போலவும் பனைமரம் போலவும் உயர்ந்து (முனையின் உயர் ) ஆகாயம் வரை (ககனம்) உயர்ந்து நிற்கும் கொடிய பார்வையினை கொண்ட என பொருள்

நான்காம் வரி இதோ

“கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
கரத்தடர்த் துக்கொத் துமாம்”

இவ்வரி “கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர் கரத்து அடர்த்துக் கொத்துமாம்” என பொருள் பிரிய வரும்

அதாவது பூதங்களையும் (கடிகளையும்) மட மட என்ற சப்தத்துடன் அஞ்சி அலறும்படி (மறுகி அலறிட) காலில் உள்ள நகங்களால் (உகிர் கரத்து அடர்த்து) கொத்துமாம் என பொருள்

இனி ஐந்தாம் வரி

“தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர்கிடு கிடென நடனம்”

இவ்வரி “தரணிபல இடம் என வன மத கரிகள் தறிகள் பணி சமணர் கிடு கிடு என நடனம்” என பிரிந்து பொருள் தரும்

பலவகை இடங்களில் வசிக்கும் (தரணி பல இடம்) மதம் பிடித்த யானை (வன மத கரிகள்) தூணை (தறி) இடிப்பது போல அட்டகாசம் செய்த சமணர் கிடு கிடுவென ஆடும்படி என பொருள்

ஆறாம் வரி இதோ

“தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
சரணஅழ கொடுபுரி யும்வேள்”

இவ்வரி “தண்டைகள் சிலம்புகள் கலின்கலின் எனச் சிறிய சரணம் அழகொடுபுரியும் வேள்” என பிரிந்து வரும்

அதாவது காலில் அணிந்துள்ள தண்டையும் சிலம்பும் இனிய கிண்கிணி ஒலியோடு சிறிய திருவடிகளோடு நடக்கும் மன்னன் என பொருள்

இனி ஏழாம் வரி

“திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்”

இவ்வரி “திரிபுரம் அது எரிய நகை புரியும் இறையவன் மறைகள் தெரியும் அரன் உதவு குமரன்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது முப்புரம் எனும் திரிபுரத்தை தன் சிரிப்பாலே எரித்த இறைவனும் வேதங்களினால் அறியபடுபவனமுனான சிவனுக்கே (அரன்) உதவும் அவன் மகன் என பொருள்

இனி கடைசி வரி

“திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவற் றிருத்து வசமே.”

இவ்வரி “திமிர தினகர முருக சரவணபவன் குகன் சேவல் திருத் துவசமே” என பிரிந்து பொருள் தரும்

அதாவது இருளை (திமிர) போக்கும் சூரியனான (தினகர) நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவ ( சரவண பவன்) குகனுமானவன் கையில் இருக்கும் கொடியின் சேவலே அது

பாடலின் முழு பொருள் இதுதான்

நெருப்பு போல் தோன்றி, படர்ந்துள்ள, தலை முடிகளை உடைய பேய்கள், பலவகைப்பட்ட பிரம்ம ராட்சதர்கள், குறும்புகள் செய்யும், பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள், தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள், கொலைகளைப் புரியும் துஷ்ட பிசாசுகளையும், கரு நிறம் வாய்க்கப்பெற்று, கரடு முரடான, பெரிய மலை போலவும், மூங்கில்கள் போலவும், முயன்று, உயர்ந்து ஆகாச வரையிலும் நிமிர்ந்து நிற்கும், கொடிய பார்வையை உடைய பூதங்களையும், மட மட என்கிற சப்தத்துடன் பயந்து அலறும்படி, கையில் உள்ள நகங்களால் கொத்தித் தாக்கும் சேவல்

(அது யாருடைய சேவல் என்றால்)

பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த, மதம் பிடித்த காட்டு யானைகள் போலவும், தூண்கள் போலவும், வாழ்க்கை நடத்தி வந்த, அமணர் கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி, காலில் அணிந்துள்ள தண்டைகளும் சிலம்புகளும், தனது சின்ன திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும் முருகபெருமான்

முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி புன்முறுவல் பூத்த இறைவரும், வேதங்களால் அறிவிக்கப்படும் சிவபெருமான், உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு அருளிய குமாரக் கடவுள், அஞ்ஞான இருளை நீக்கும் ஞான சூரியனான முருகன், நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன், அடியார்களின் இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.

நேரடியாக இப்படி பொருள் சொன்னாலும் அதன் ஞான தத்துவம் கொஞ்சம் கவனிக்கதக்கது

இப்பாடல் பேய்கள் பிசாசுகளை சொல்லி அதோடு போரிடும் சேவல் என காட்சிகளை விளக்குகின்றது, அதாவது பேய்கள், பிசாசுகள், பிரம்ம ராட்சசர்கள் போன்ற கொடும் துஷ்ட சக்திகளிடம் இருந்து முருகனின் சேவல் காவலை அளிக்கும் என்கின்றது

“பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட”

என்பது கந்த சஷ்டி வரிகள், அதுவும் முருகபெருமான் இம்மாதிரி துஷ்ட சக்திகளிடம் இருந்து அடியார்களை காப்பார் என்பதை தெளிவாக சொல்கின்றது

இந்த உலகில் கண்ணுக்கு தெரியாத சூட்சும சக்திகளில் நல்லவையும் உண்டு, மூர்க்க குணமும்பொல்லா குண்டமும் கொண்ட துஷ்ட சக்திகளும் உண்டு

ஆனால் இந்த துஷ்ட சக்திகள் எல்லோரையும் பிடித்து ஆட்டுமா என்றால், மிகபெரிய மாந்தீரிகத்தால் இதனை எல்லோர்மேலும் ஏவிவிட முடியுமா என்றால் நிச்சயம் முடியாது

அது சாத்தியம் என்றால் எல்லா நாட்டு ஆட்சியாளரும் மந்திரவாதிகளாகவே இருப்பார்கள், ரானுவமும் காவலும் அவசியமே இல்லை எதுவுமே தேவையில்லை எல்லாவற்றையும் இந்த துஷ்ட சக்திகளை கொண்டே சாதிக்கலாம்

ஆம் அது சாத்தியமில்லை

உண்மையில் ஒருவனின் கர்ம வினை, பூர்வ ஜென்ம வினைபடியே இவை ஒரு மனிதனுக்கு தாக்குதலை கொடுக்கும், அதற்கு ஜாதகபலன் முன் ஜென்ம வினை என பலவும் முக்கியமானவை

ஒரு ஜென்மத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகும் ஆத்மாக்கள் அல்லது தீரா வெறி அல்லது வெறுப்பு வன்மத்துடன் வாழ்வை முடிக்க்கும் ஆத்மாக்கள் தனக்கு இந்நிலைக்கு காரணமான ஆத்மாவினை தேடி பிடித்து பழிவாங்கும்

ஒரு துஷ்ட சக்தியினை அப்படி ஏவிவிட்டால் கூட அது முன் ஜென்ம தொடர்பு இல்லாமல், கொடுவினை பாதிப்பு இல்லாமல் ஒருவனை தொடமுடியாது

இந்த கர்மவினை இருக்கும்வரை எல்லா தொந்தரவும் ஒருவனுக்கு இருக்கும் அவன் ஆத்மா குழம்பி திரியும் அது இயல்பாக இராது, அமைதி கொள்ளாது, பெரும் அலைகழிப்பில் அது படாதபாடுபடும்

முருகபெருமான் அதனை வெல்லும் வைராக்கியத்தை அருள்வார், முருகனின் பார்வையில் அந்த கர்ம வினைகள் எரிந்துவிடுகின்றன, கர்ம வினைகள் தீர்ந்தபின் அங்கு துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் இல்லாமல் ஆகின்றது

அந்நிலையில் ஆத்மா முழு தெளிவினை அடைகின்றது, தெளிவான ஆத்மா முக்தியினை அடையும்

அதைத்தான் பாடல் சொல்கின்றது, முருகனை பணிந்தால் முன் ஜென்ம வினை அகலும், முன் ஜென்ம வினை அகன்ற ஆத்மாவிடம் துஷ்ட சக்திகளின் ஆட்டம் செல்லாது

யோகமொழியில் இப்பாடல் இன்னொரு வகையில் விளக்கபடும்

அதாவது ஞானத்தை தேடி ஒரு ஆத்மா பயணபடும் பொழுது யோகத்திலோ தவத்திலோ அது ஒன்றும்பொழுது மாயைகள் அதனை மயக்கும், அந்த மாயை ஒன்று ஆசைகாட்டி மயக்கும் அல்லது அச்சுறுத்தி மயக்கும்

உலக எல்லா இன்பங்களையும் காட்டி மயக்குவது ஒருவகை என்றால் எல்லா பயங்கர கோலங்களையும் காட்டி மிரட்டுவது இன்னொருவகை

முருகனை பணிந்தால் அந்த இரு மாயைகளும் அகலும், முப்புரம் எரித்த சிவனின் மகன் அதாவது ஆணவம் கண்மம் மாயை என மூன்று பெரும் அடிப்படை ஆசைகளையும் எரித்த சிவனின் மகனான முருகன் அப்படியே தந்தை போல் மாயையினை வேரறுப்பான் அவன் பாதம் பணிதல் வேண்டும் என்பது இன்னொரு பொருளாகும்

ஆக முன் ஜென்ம வினை அகலவும், மாயைகள் எவ்வுருவில் வந்தாலும் அவை பயங்கர கோர உருவில் வந்தாலும் முருகனை பணிந்தால் அவை அகலும், அவை அகன்றபின் ஆத்மாவுக்கு எந்த சிக்கலுமில்லை மாயை நீங்கிய வாழ்வு முக்தியினை அருளும் என்பது பாடலின் பொருளாகும்