ஓளவை ஞான‌குறள் : 48

ஓளவை ஞான‌குறள் : 48

“மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு”

இக்குறள் “மோட்டின் நீர் நாற்றம் முளை முட்டை போலுமே வீட்டுள்ளே நிற்கும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும்

அதாவது மேட்டுபக்கம் இருந்து நீர் பள்ளத்துக்கு பாய்வது போலவும், மலரின் மணம் தானாக பரவுதல் போலவும், விதையில் இருந்து முளை வெளிவருவது போலவும், முட்டையில் இருந்து குஞ்சு தானாக உருவாகி வெளிவருதல் போலவும் மனதில் சிவம் இயல்பாகவே இருக்கின்றது

இன்னும் ஆழமாக நோக்கினால் மேடான இடத்தில் இருந்து நீர் பாய்தல் இயல்பு ஆனால் முறைபடுத்தினால்தான் பாசனம் செய்யமுடியும்

மணம் வீசுதல் மலரின் இயல்பு ஆனால் அதனை பறித்து வைக்கவேண்டிய இடத்தில் வைத்தால்தான் பலன், அந்த சுகந்தத்தை அனுபவித்தால்தான் மகிழ்ச்சி

விதையில் உயிர் உண்டு ஆனால் மண்ணும் நீரும் சூரிய ஒளியும் இல்லாமல் அது முளைவிடாது

முட்டைக்குள் உயிர் உண்டு ஆனால் தாய்பறவை அதனை அடைகாத்து பேணினால்தான் குஞ்சு உருவாகி வெளிவரும்

அப்படித்தான் சிவம் மனதில் இயல்பாக உண்டு, யோகத்தாலும் தவத்தாலும் அதனை அறிந்து சிவபலனால் முக்தியினை அடையலாம் என்பது குறளின் பொருள்