குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 76
“பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறனன்றே யாயினு மாக – சிறுவரையும்
நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய்”
இன்னொருவன் மனைவியின் உறவுக்காக அவள் வீட்டு வாசலில் காத்திருப்பது அறம் ஆகாது, அவள் தரும் இன்பம் நல்ல இன்பமாக தோன்றினாலும் அது பலன் தராது, அதனை தொடர்ந்தால் உடலும் உள்ளமும் ஒருவித அச்சமும் பயமும் கொண்ட நோயால் பாதிக்கபடும், அப்படிபட்ட நோயினை தவிர்ப்பது நல்லது என்பது பாடலின் பொருள்
ராமாயணம் எனும் இதிகாசமே அடுத்தவர் மனைவியால் நிகழும் தீமைகளை சொல்கின்றது, மகாபாரத கதையின் முக்கிய திருப்பமே பாஞ்சாலியினை தன் மடியில் துரியோதனன் அமரசொன்ன அந்த இடத்தில்தான் நடந்தது
இதே போதனைதான் பல இடங்களில் இந்துக்களால் திரும்ப திரும்ப சொல்லபட்டது, வள்ளுவன் இதற்காக இரு அதிகாரங்களையே அமைத்தான்
“அறன் வரையானல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று” என்பது வள்ளுவன் வாக்கு
அந்த ஞானபோதனையினைத்தான், ஆண்டாண்டுகாலம் இந்துக்கள் வலியுறுத்தும் தத்துவத்தைத்தான் இப்பாடலில் பாடுகின்றார் குமரகுருபரர்