நாச்சியார் திருமொழி 22
நாச்சியார் திருமொழி 22
அன்றும் அதிகாலையில் தோழியரோடு நீராட வந்தாள் ஆண்டாள், கண்ணன் எழுந்து வருமுன் நீராடிவிட்டு சென்றுவிடவேண்டுமென அவர்கள் முன்னதாகவே வந்திருந்தார்கள்
அவர்கள் நீராடிகொண்டிருக்கும் நேரம் இனிய குழலோசை கேட்கின்றது, ஆச்சரியபட்ட ஆண்டாளும் தோழிகளும் அது கண்ணனின் குழல் என்பதை அறிந்து புன்னகைக்கின்றனர், அதிகாலை குளிர்ந்த நேரமாதலால் நீரில் மூழ்கி இருக்கவும் முடியாது
குழலோசையினை கேட்டார்களே தவிர கண்ணனை அவர்களால் காணமுடியவில்லை, ஒருவேளை அவன் அங்கே எங்காவது மறைந்திருக்கலாம் என்றவர்கள் அவன் தங்கள் ஆடையினையும் மறைத்து வைத்திருக்கலாம் என நினைந்தார்கள், அவர்கள் ஆண்டாளிடம் அவனிடம் கோரிக்கை வைக்க சொன்னார்கள்
ஆண்டாள் பாடினாள்
“இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்.”
(இங்கே எப்படி வந்தாய்? தேன் ததும்பும் துளசியை அணிந்தவனே!எங்கள் அமுதே!உடை இன்றி பெண்கள் ஆண்கள் முன் வரலாமா? அதனால் நாங்கள் வரமாட்டோம்.எங்களிடம் உடை இல்லை.அவசரப்பட்டு என் முன்னே வந்து விடாதே, உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடுபவனே,குருந்தை மரத்தில் ஒளித்து வைத்திருக்கும் எங்களது உடைகளைக் கொடுத்துவிடு )
மனமுருக பாடிவிட்டு பார்த்தால் ஆடை கரையோரமே இருந்தது, குழலோசையுமில்லை கண்ணனுமில்லை
ஏதோ நம்மை அச்சுறுத்தவந்தான் போலிருக்கின்றது என சொல்லிவிட்டு அதிகாலை பூஜைக்கு கிளம்பி சென்றார்கள்
ஆண்டாள் பூஜையெல்லாம் முடித்து அதே குளத்தின் கரைக்கு வந்திருந்தாள், அவள் மனம் அந்த குரலொலியினையே சுற்றி சுற்றி வந்தது
மெல்லிய குளிர்காற்று வீசிற்று , பறவைகள் பறந்தும் குளகரையில் அமர்ந்தும் கொண்டிருந்தன, சிறிய மீன்கள் நீந்தி கொண்டிருந்தன, ஆடுமாடுகளும் குளித்து கொண்டிருந்தன
குளத்தின் அலைகள் அடிப்பது போல் ஆண்டாளின் மனம் கண்ணன் நினைப்பில் அடித்து கொண்டிருந்தது, குருந்தை மரத்தடியில் அமர்ந்திருந்த அவளுக்கு மெல்லிய குரலோசை கேட்டது
கண்ணன் வந்துவிட்டான் என்பதை அறிந்து அவள் மனம் பெரும் மகிழ்ச்சி கொண்டது, சட்டென பறக்கும் குளக்கரை பறவை போல , மடைதிறந்தால் சீறும் வெள்ளம் போல அவள் மனம் ஆர்பரித்தது ஆனாலும் வெளிகாட்டாமல் அமர்ந்திருந்தாள்
கண்ணன் குழலை இசைத்தபடியே அருகே வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான், அமர்ந்தவன் ஆண்டாளின் சேலை முந்தானை தரையில் இருந்ததை எடுத்து அவள் மேல் போர்த்திவிட்டு சொன்னான் “சும்மாவே என்னை சேலை திருட வந்தான் என்கின்றாய், அதனால் இது உன்னிடமே இருக்கட்டும்” என்றான்
ஆண்டாள் சிரித்து கொண்டு அவன் கரங்களை பற்றி கொண்டாள்
வழக்கமான புன்னகையுடன் கேட்டான் கண்ணன் “ஆண்டாளே அது என்ன பாடல் , அதன் பொருள் என்ன?”
“பொருளெல்லாம் ஒன்றுமில்லை, குளிக்கும் இடத்துக்கு நீ வந்தால் வேறு எப்படி பாடுவார்களாம்” என்றவள் முகத்தை வெட்கத்துடன் குனிந்து கொண்டாள்
அதென்ன “விதியின்மையால் அது மாட்டோம்” என்றாயே” ஒன்றும் புரியவில்லை என புரியாதது போல் கேட்டான் கண்ணன்.
“ம்ம்ம் நீ இருக்கும் பொழுது எப்படி குளித்த உடையுடன் கரைக்கு வரமுடியும்?” என்றவள் நாணத்தால் சிவந்து கைகளால் கண்களை பொத்தியபடி அவன் மேல் சாய்ந்து கொண்டாள்
கண்ணன் அவளை அணைத்து கொண்டே கேட்டான் “குளத்தின் கரையில் இருந்து என்ன விரட்டவா அப்பாடலை பாடினாய், உண்மையினை சொல்” என்றான்
“எல்லோரும் இருக்கும் பொழுதுஅப்படித்தான் பாடமுடியும்” என மெல்ல சொன்னாள் ஆண்டாள்
கண்ணன் புன்னகைத்தான்
இப்படியெல்லாம் வந்து ஏன் உன் பெயரை கெடுத்துகொள்கின்றாய் என செல்லமாக கடிந்து கொண்டாள் ஆண்டாள்
அப்படியானால் பாடலின் பொருளை சொல், இனிஅப்பக்கம் வரமாட்டேன் என சொல்லிவிட்டு குழலை இசைக்க ஆரம்பித்தான் கண்ணன்
நிச்சயமாக என்றாள் ஆண்டாள், புன்னகைத்தபடி குழலை இசைத்தான் கண்ணன்
மெல்ல மயங்கிய ஆண்டாள் சொன்னாள் “கண்ணா, ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் விரும்பும் ஆணோடு நீரில் விளையாட பிடிக்கும், எனக்கும் அது விருப்பம்தான், ஆனால் எல்லோரும் இருக்கும்பொழுது என்ன செய்வதாம், அதனால் அப்படி பாடினேன்” என்றவள் அவன் தோளை இறுக பற்றி கொண்டாள்
“யாரும் இல்லாமல் வந்தால் நீரில் ஆடலாமே” என்றான் கண்ணன்
“கன்னி பெண்களுக்கு அப்படி சமூகத்தில் விதி இல்லை, என்னை மணந்துகொண்டுவிட்டால் அந்த சிக்கல் இல்லை” என்றவள் அவனை இன்னும் அழுத்தமாக பிடித்து கொண்டாள்
“உரிய காலம் வரும்வரை பொறுத்திரு” என்ற கண்ணனிடம் இருந்து செல்ல கோபத்துடன் அவள் விலகி கொண்டாள், சட்டென மறைந்தான் கண்ணன்
அவன் அம்மரத்தின் பின்னால் இருப்பான் என தேடினாள் காணவில்லை, இன்னொரு மரத்தின் பின்னால் நிற்பான் என் தேடினாள் காணவில்லை
தேடி தேடி ஓய்ந்தவள் குளகரையிலே அமர்ந்து புலம்ப ஆரம்பித்தாள்
“பூலோக வாழ்வு என்பது குளத்துநீர் போன்றது, வற்றும் மறுபடி பெருகும் வற்றும் பெருகும் என சுழற்சிகளை கொண்டது, அந்த சுழற்சியில் ஆத்மா நீராட வரும் பிறப்பு இது
இந்த அற்ப மானிட ஆத்மா பிறந்துவாழும் பூமிகரைக்கு எல்லா மண்டலங்களுக்கும் நாயகனான பரமாத்மா வருவது ஆச்சரியமல்லவா?
அதனாலே “இங்குநீ எப்படி வந்தாய்” என பாடினேன்
தேன் போன்ற துளசியினை சூடியவனே என்றேன், துளசியின் எல்லா பாகங்களும் பயன்பட கூடியது, துளசிதான் பகவானின் சிலையில் எல்லா பாகங்களிலும் சாற்றபடவும் கூடியது. விஸ்வரூபமாய் நிற்கும் பரம்பொருள் எல்லா பாகங்களினாலும் ஆத்மாவினை அணைத்து கொள்கின்றான் என்பதை குறிப்பால் சொன்னேன்
எல்லா பாகமும் புனிதமான துளசி போன்றவனே என்றேன், அப்படி புனிதமானவனாக இருந்தாலும் தேன் போன்ற இனிமையானவனே, மாயனே, ஆத்மாவுக்கு அழியாத வாழ்வளிக்கும் அமுதே” என்றேன்
இது கூட புரியாமல் திரும்ப கேட்டால் எப்படி, அதை சொல்வதற்குள் ஓடிவிட்டான் என அவள் சொல்லிகொண்டிருக்கும் பொழுதே மாய கரங்கள் அவளை வளைத்துபிடித்தன
அவள் காதோரம் அக்குரல் கேட்டது “என்னையே ஏமாற்ற பார்க்கின்றாயா? “விதியின்மையால் அது மாட்டோம்” என்றாயே” அது என்ன?”?
அந்த கரங்களை விடுவித்து தன் கைகளை கால் முட்டோடு சேர்த்து அணைத்து தலைவைத்தபடி சொன்னாள் ஆண்டாள்
“குளத்தில் இருந்து கரையேறுவது போல் பிறவி முடிந்து கரையேறுவதற்கு விதிகாலம் முடியவேண்டும் அல்லவா?, விதி முடிந்தால்தானே ஆத்மா உன்னை அடையும்”
அந்த வரிகளை கேட்டதும் கண்ணன் அவள் முன் வந்து அமர்ந்து அவள் தலையினை நிமிர்த்தி கன்னத்தோடு கைவைத்து அவளையே நோக்கினான்
அவன் கண்களை உற்று பார்த்து சொன்னாள் ஆண்டாள் “ஆம், குளித்து முடிக்காமல் கரையேறமுடியாது, விதிமுடியாமல் உன்னை அடைய முடியாது
ஆடையின்றித்தான் மானிட பிறப்பு தொடங்குகின்றது, ஆடையினை கூட எடுத்து செல்லமுடியாமல் அது முடிகின்றது அதைத்தான் சொன்னேன்” என்றாள்
கண்ணன் தலையாட்டினான் “உடலை ஆடையாக கொண்டது ஆத்மா என்கின்றாயா?” என்றான் கண்ணன்
“இல்லை கண்ணா இன்னொரு உடல் வேண்டுமென்றால் இன்னொரு பிறப்பல்லவா அர்த்தமாகும், இன்னொரு பிறப்பு எடுத்து உனக்காக ஏங்கிகொண்டிருப்பதை விட பிறப்பற்ற நிலையில் உன்னோடு கலந்து இருந்துவிடுவதுதானே ஆனந்தம்” என்றவள் தன் முகத்தில் இருந்த கண்ணனின் கரங்களை இறுக பற்றி கொண்டாள்
“விரையேல் குதி கொண்டு அரவில் நடித்தாய்” என்றாயே என்ன பொருள் என்றான் கண்ணன்
“காளிங்கன் எனும் பாம்பு மேல் நதி நீரில் ஆடினாய் அல்லவா, அதை சொன்னேன் குளித்து கொண்டிருந்தேனா, அப்பொழுது அன்றுநீரின் மேல் அப்படி ஆடும் அந்த கோலம் கண்ணுக்குள் வந்தது”
கண்ணன் சிலிர்த்தான், “எல்லாவற்றிலுமா என்னை காண்கின்றாய் ஆண்டாளே”
“ஆம், நான் காணும் இடமெல்லாம் உன்னை ஒவ்வொரு காட்சியில் கண்டு கொண்டேதான் இருப்பேன், அதை தவிர எனக்கு என்ன தெரியும்” என்றாள்
“ஏன் காளிங்கன் எனும் பாம்பினை சொன்னாய்” என்றான் கண்ணன்
“அதுதானே கண்ணா சட்டையினை உரிக்கும், பாம்பு ஒவ்வொரு பருவத்திலும் சட்டை உரித்து தன்னை புதுப்பிக்கும் அல்லவா?, அப்படி ஆன்மாவுக்கான உடையும் காலத்துக்கு ஏற்றபடி மாறவேண்டும் அல்லவா?” அதைத்தான் சொன்னேன் என்றாள்
கண்ணன் அவளையே நோக்கி கொண்டிருந்தான், ஆண்டாள் புன்னகைத்தபடி சொன்னாள்
“இதுதான் பாடலின் பொருள் கண்ணா
இந்த வாழ்வு குளத்து நீர் போன்ற சுழற்சி கொண்டது அங்கு இந்த ஆத்மா நீராட வந்திருக்கின்றது, இந்த அற்ப ஜீவாத்மா இருக்குமிடம் பரமாத்மா எப்படி வரமுடியும் , அப்படியும் நீ வந்ததால் வியப்பே வருகின்றது
உன்னிடம் வந்து சேர விதியும் வேண்டும், அது இல்லாமல் ஆத்மா கரையும் ஏறமுடியாது
வந்தவனிடம் சில வரம் கேட்காமல் எப்படி?
உடலுக்கு ஆடை அழகு அது மானத்தை மறைக்கும், ஆத்மாவுக்கு அறிவும் ஞானமுமே அழகு அதுவும் வளர வளர அறிவும் ஞானமும் வளர்தல் வேண்டும், பாம்புக்கு கூட பருவத்துக்கு சட்டை கழற்றி புது தோல் சட்டையாக வளர வழிசெய்த நீ இந்த ஆத்மாவுக்கு அறிவு சட்டை தருவாயா
ஆடையற்ற உடல் அருவருப்பானது அல்லவா? அது மானமில்லாதது அல்லவா? அப்படி ஆத்மாவுக்கும் ஞானமும் அறிவும் ஆடையாக அணியபட்டால்தானே அழகு
அதைத்தான் உன்னிடம் கேட்கின்றோம், துளசி அணிந்த எம்பெருமானே, மாயவனே , கண்ணனே எங்களுகுக்கு அந்தந்த காலத்துகுரிய அறிவும் ஞானமும் தந்து எங்கள் ஆத்மா அவமானபடாமல் வாழ அருள் செய்வாய்”
கண்ணன் அதை கேட்டு புன்னகைத்தான், மெல்ல மெல்ல அவன் உருவம் காற்றில் புகைபோல் கரைந்தது, ஆண்டாள் அதையே பார்த்து கொண்டிருந்தாள், மிக்க மகிழ்வுடன் அவள் வீட்டுக்கு செல்ல கிளம்பியபொழுது குருந்தை மரத்தின் மேல் இருந்து ஒரு புத்தாடை அவள் மேல் விழுந்தது
அதை தன் முகத்தோடு அணைத்து ஆனந்தம் கொண்டிருந்தாள் ஆண்டாள்