செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை

தமிழக மதுகொடுமை நிலை முன் எப்பொழுதும் இல்லா வகையில் உச்சத்தை எட்டியிருக்கின்றது, பெண்களுக்கான தனி பார் என அதிரவைத்த தமிழகம் இப்பொழுது பள்ளி மாணவிகள் குடித்து வீழும் காட்சிகளை காண தொடங்கியிருக்கின்றது

இது மாபெரும் வீழ்ச்சி, ஒரு உன்னத நாகரீக சமூகம் வீழ்ந்து சரிந்திருப்பதின் கண்ணீர் காட்சி

இங்கு எல்லாமே மாறிவிட்டது, வந்தவழி தெரியாமலும் செல்லுமிடம் தெரியாமலும் நடுகாட்டில் திகைத்து நின்று மரங்களில் முட்டிமோதி பள்ளத்தில் விழும் அவலம் தொடர்கின்றது

மது என்பது ஒவ்வொரு நாட்டிலும் அதன் சீதோஷ்ண நிலைக்கு இயற்கையே கொடுக்கும் விஷயம், அப்படித்தான் சில நாடுகளின் திராட்சையும் சில நாடுகளின் கரும்பும் இன்னும் சில நாடுகளில் சிலவகை பழங்களின் சாறும் இருந்தன‌

தமிழகத்தின் மதுவழக்கம் இருவகையாக இருந்தது

முதலாவது தமிழக சீதோஷ்ன நிலைக்கு இயற்கையாக பனைமரமே தரும் கள், இது உடலுக்கு நல்லது என்றாலும் போதை தரகூடியது, அக்காலத்தில் பகலெல்லாம் உழைத்துவிட்டு மாலை இதனை அருந்துதல் வழமை , ஆனாலும் இதனை அருந்துவோர் சமூகத்தில் புறக்கணிகபட்டவர்களாக இருந்தார்கள்

இழிவானவர்களாவும் பழகதக்காதவர்களாகவும் விலக்கித்தான் வைக்கபட்டார்கள்

இன்னொரு வகை மது மூலிகை சாறு , காயம்பட்ட நோயாளிகள் வலிக்காக அவர்களின் தூக்கத்துக்காக சிலவகை மூலிகையாய் தயாரிக்கபடுவது இது (இதுதான் பின் பேட்டரி,மண்டை ஓடு என கள்ளச்சாராயமாக மாறியது)

இப்படி இருந்த தமிழகத்தில் வெள்ளையன் காலத்தில் வெளிநாட்டு மது ஊடுருவியது, மொகலாயர் காலத்தில் மது வகைகள் திராட்சை சாறுவடிவில் வந்தாலும் இந்துக்களிடம் பெரிதும் ஊடுருவவில்லை

வெள்ளையன் கண்ட கருமாந்திரத்தையும் குவித்தான் கரும்பு சக்கை சாறு, திராட்சை, பார்லி, உருளை என எதிலிருந்து எப்படியெல்லாமோ எடுக்கபடும் விஷயங்களை வியாபாரமாக்கினான், தமிழக சீதோஷ்ண நிலைக்கு ஒத்துவராத அந்த குடிவழக்கம் பல நோய்களுக்கும் சமூக பாதிப்புக்கும் காரணமாயிற்று

எனினும் இந்துக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர், காரணம் குடியின் தீமையினை இந்துமதம் சொன்னது போல் இன்னொரு மதம் சொன்னதில்லை

அது குடி எவ்வளவு ஆபத்தானது என்பதை அதன் மாபெரும் வழிகாட்டி மற்றும் இதிகாச நூல்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சொல்லியிருந்தது

கண்ணனின் யாதவ வம்சம் அழிய காரணமே மது என்பதால் அதனை கவனமாக தவிர்க்க சொல்லியது இந்துமதம்

“நெருப்பை நெய்யால் அணைப்பாயோ” என குடிகார சுக்ரீவனுக்கு புத்தி போதித்ததும் அம்மதமே, அதாவது குடிப்பதால் உன் கவலை தீருமோ என அது குடியின் கொடுமையினை சொல்கின்றது

அதே சுக்ரீவனை கொண்டே மதுவின் கொடுமைகளை ராமாயணம் சொல்கின்றது

ஆட்சி கிடைத்தவுடன் மறுபடியும் உற்சாக குடியில் வீழ்கின்றான் சுக்ரீவன், சீதையினை தேடுவதை மறக்கின்றான், குடி அவனை ஆட்கொள்கின்றது

இதை காணும் ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணனுக்குக் கடும் கோபம் வந்து அவன் சீற, தன் தவறு சுக்கிரீவனுக்குப் புரிகிறது. “மது அருந்தியதால் கெட்டேன்”என்று லட்சுமணனிடம் மதுவின் தீமைகளைச் சொல்லிப் புலம்பி மன்னிப்புக் கேட்கிறான் அவன்

ஆம், மது செய்நன்றி மறக்க செய்யும், கடமையினை செய்யவிடாது கெடுக்கும் , மானத்தை வாங்கும் என்றெல்லாம் போதிக்கின்றது ராமாயணம்

இன்னும் அனுமன் சுக்ரீவனின் மதுதயாரிக்கும் சாலைகளை அடித்து உடைத்து வானர சேனைகளை நல்வழிக்கு திருப்பும் காட்சிகளும் உள்ளன‌

மது,மாது, சூது என மூன்றும் ஒரு மனிதனை என்ன ஞானியினையே வீழ்த்திவிடும் என்பதால் இம்மூன்றும் களையபட வேண்டியவை என்பதில் கவனமாக இருந்தது இந்துமதம்

மிதமிஞ்சிய செல்வம் இம்மூன்றுக்கும் காரணம், அந்த வீழ்ச்சியின் வாசல் என்பதால் அது தர்மங்களை ஊக்குவித்தது

“செம்மையில் அறஞ்செய்யாதார் திரவியம் சிதறவேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே” என தாசி தன் மகளுக்கு சொல்வதாக இந்து புலவரின் போதனை பாடலும் உண்டு

இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் போதனையும் இம்மூன்றால் ஏற்படும் அழிவு பற்றித்தான் போதிக்கும், இதனில் மது எனும் கள் மங்கையோடும், சூதோடும் சேர்ந்தால் பேரழிவு நிச்சயம்

இந்து புலவனான வள்ளுவன் “கள்ளுண்ணாமை” எனும் ஒரு அதிகாரமே இயற்றி மது பற்றிய எச்சரிக்கையினை செய்தான்

அப்படிபட்ட தமிழகத்தில் குடி என்பதும் மது என்பதும் மிக இழிவான செயலாக பார்க்கபட்டன, குடிபழக்கம் கொண்டோரை நாயினும் கீழாக நோக்கிய சமூகம் இது

வெள்ளையன் ஆட்சியில் கூட இந்துக்களின் நாகரீகமும் வாழ்வியலும் இந்த வழக்கத்தை களைந்தன, குடிகாரர்கள் என்பவர்களை அச்சமூகம் மிக ஒதுக்கி வைத்திருந்தது, தான் குடிப்பதை ஒவ்வொரு குடிகாரனும் கஷ்ட்டபட்டு மறைத்த காலங்களும் இருந்தன‌

வெள்ளையன் காலத்து மதுவழக்கத்தை தடுத்து நிறுத்தியதில் இந்துக்களுக்கும் அவர்களின் வாழ்வியலுக்கும் பெரும் பங்கும் இருந்தது

பக்தி எனும் பெயரில் அருமையான வாழ்வியலை கொடுத்தது இந்துமதம், இந்துக்கள் இருநேர வழிபாடு கொண்டவர்கள், அதுவும் சுத்தபத்தமான வழிபாடு கொண்டவர்கள், அவர்கள் ஆலய வழிபாடும் அப்படியே

இந்த வழிபாடும் பக்தியும் இருக்குமிடம் மது ஊடுருவ முடியாது, வேலை வழிபாடு என இருக்கும் ஒருவனுக்கு குடித்து வீழ நேரம் கிடைக்காது, குடித்தால் வேலை கெடும் பூஜை கெடும் என கருதும் ஒருவன் அதற்கு அடிமையாக முடியாது

குடித்தால் கோவிலுக்கு செல்லமுடியாது என அஞ்சும் ஒருவன் குடியினை தொடமுடியாது

ஆம், அந்த இந்து தர்மம் இந்த குடிவழக்கத்தை பெரிதாக கட்டுபடுத்தியிருந்தது

இந்துமத போதனையும் வாழ்வியலும் விரதமும் விழாக்களும் தேரோட்டமும் பூஜையும் குடியினை அருகிலே சேர்க்கமுடியாதபடி வாழ்க்கை முறையினை இந்துக்களுக்கு கொடுத்தது

அந்த நாகரீக சமூகம் இதனை சுதந்திர போராட்டத்திலும் காட்டிற்று

சீனாவின் கடற்கரைகளில் அபினை பரப்பி சீனர்களை போதை பித்தர்களாக்கி தன் “அபினி போர்” மூலம் ஹாங்காங்கை பெற்ற வெள்ளையன் இந்தியாவிலும் குடி கலாச்சாரத்தை பெருக்க திட்டமிட்டு பல வகை மது வகைகளை பரவவிட்டான்

காந்தி அதை கண்டித்துத்தான் “மது ஒழிப்பு” போராட்டம் நடத்தினார், அப்பொழுது காந்தியின் தொண்டனாக இருந்த ஈரோட்டு ராம்சாமி கூட தன் தென்னைமரங்களை எல்லாம் வெட்டியதாக சொன்னார்

அன்று மதுவால் வீழ்ந்த சமூகம் சுதந்திர போராட்டத்தை வீழ்த்தும் எனும் அச்சத்தால் மதுவினை களைந்தே தீருவது என சபதம் செய்தது இந்தியா

காங்கிரசும் அதை செய்தது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்தது , இந்து மகாசபை உள்ளிட்ட பல அமைப்புக்களும் அதனை செய்தன‌

உள்ளாட்சி அமைப்பு தொடங்கபட்டபொழுது 1937-ல் சென்னை ராஜதானியில் ராஜாஜி முதல்வராக இருக்கையில் மதுவிலக்கு கொள்கை அறிவிக்கப்பட்டது. பிற்பாடு காங்கிரஸ் ஆட்சி பதவி விலகியதும், 1944-ல் ஆங்கிலேய அரசு தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி.

அவர் ஒரு சுத்தமான இந்து, இந்துக்கள் ஞானத்தில் ஊறிய மிகபெரிய அறிவாளி, அவர் மதுகொடுமையினை கண்டித்து 1944லே எழுதினார்

“மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?’ என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல.

இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால், ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் அதிகரிக்கும் குற்றங்களும் குறையும்”

எவ்வளவு அழகான ஞானமான வரிகள்?

இந்த மதுவழக்கம் சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் தடுக்கபட்டது, காமராஜர் அதில் உறுதியாக இருந்தார், காந்தியின் சீடனாக மதுகடைகளை தடுத்தே வைத்திருந்தார்

அண்ணா கூட உறுதியாக இருந்தார், “ஒரு குடும்பம் வாழ 100 குடும்பத்தை கொல்லமாட்டேன்” என்பதில் சரியாக இருந்தார்

ஆனால் தன் “ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி” என பொய் வாக்குறுதி நிறைவேறவும், இலவச திட்டங்களுக்காகவும் கருணாநிதி அந்த பாதகத்தை கையில் எடுத்தார்

1944ல் வெள்ளையன் இந்திய மக்கள் நாசமாக போகட்டும் என தொடங்கிய திட்டத்தை மறுபடி 1971ல் கையில் எடுத்தார் கருணாநிதி

உன்னத தமிழகம் அங்குதான் வீழ தொடங்கிற்று

அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி 1971-ல் எடுத்தபோது, கொட்டும் மழையிலும் அவரை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து, மன்றாடினார் முதுபெரும் தலைவர் ராஜாஜி. அதை கருணாநிதி பொருட்படுத்தவில்லை.

பின் தேர்தல் நேரம் மூடுவதும் ஆட்சிக்கு வந்து மதுகடைகளை திறப்பதும் வாடிக்கையாயின‌

(1937-லிருந்து 2001 வரை, 1944- 47, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர பெரும்பாலான காலங்களில் தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.

1991க்கு பின்புதான் நிலமை மோசமாயிற்று)

இதனில் மிக வருத்தமான விஷயம், எம்,ஜி ராமசந்திரனும் இலவச திட்டங்களுக்காக மதுகடைகளை திறந்ததே

இவ்வளவுக்கும் அவர் சினிமாவில் வெற்றிபெற காரணமே அவரின் நல்ல வேடங்களும் மதுவினையோ புகையினையோ தொடாத , நல்ல வழிகாட்டிய வேடங்களாலே

உன்னத நடிகனான சிவாஜி மது, புகை என வேடங்களை தாங்கி தன் புகழை கெடுத்ததும், மதுவினை தொடாமலே நடித்து உச்சம்பெற்ற ராமசந்திரன் பின் மதுகடைகளை தமிழகத்தில் அனுமதித்தும் வரலாற்று சோகம்

எம்,ஜி ராம்சந்திரன் காலத்தில்தான் டாஸ்மாக் தொடங்கபட்டது, சாராய சக்கரவர்த்திகளெல்லாம் அப்பொழுதுதான் உருவானார்கள்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்), 1983-ல் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் -1956 இன்படி, இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது.
ஆளும்கட்சிக்கு வற்றாத வளம் தரும் காமதேனுவாக டாஸ்மாக் உணரப்பட்டது அக்காலத்தில் தான். ‘பாக்கெட் சாராயம்’ எனப்படும் மிக மோசமான வஸ்து தமிழகத்தில் ஆறாக ஓடியதும் அக்காலத்தில் தான்.

எனினும் 1987- மீண்டும் மதுவிலக்கு வந்து, தமிழகப் பெண்களின் நெஞ்சில் பால் வார்த்தது.

2001-ல் அதிமுக ஆட்சியின்போது, மீண்டும் மதுவிலக்கு கொள்கை தூக்கி எறியப்பட்டது. மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதாகக் கூறி, அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மதுவிலக்கைத் தளர்த்தினார்.

அதனை அப்படியே தொடர்ந்தார் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி

அதுவும் கள்ளுண்ணாமை எழுதிய வள்ளுவனுக்கு சிலைவைத்த கருணாநிதி, கள்ளுகடை மறியலை செய்த ராம்சாமியின் சீடன் என தன்னை சொல்லிகொண்ட கருணாநிதி

இதில் வேடிக்கை என்னவென்றால், டாஸ்மாக் துவங்கியபோது (1983), கள்ளச்சாராயத்தைத் தடுத்து மதுவிற்பனையை முறைப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. அதுவே 2003-ல் மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மது விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டது.

2001-ல் மதுவிற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் முயன்றபோது மது வர்த்தகத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நடத்திய கூட்டணி ஏலமுறையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அபோதுதான், டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக மது விற்பனையில் இறங்குவது என்று அரசு முடிவெடுத்தது.

அக்டோபர் 2003- இல் ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்- 1937’இல் திருத்தம் செய்ததன் மூலம், டாஸ்மாக்கிற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக தனியுரிமை அளிக்கப்பட்டது.

அப்போது இதனை கடுமையாக எதிர்த்த திமுக, 2006-ல் தான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் வருவாயைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசின் கொள்கையையே தொடரத் தீர்மானித்தது. மது வியாபாரத்தில் மட்டுமே இவ்விரு கட்சிகளிடையே நல்லிணக்கம் காணப்படுகிறது.

2013-14 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ. 23,401 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ. 1,721 கோடி அதிகம். மதுப் பயன்பாடு அதிகரிப்பு, மதுவகைகளின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் வருமாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் டாஸ்மாக் வருவாய் (காண்க: பட்டியல்) அரசுக்கு இனிப்பாக இருக்கலாம்; ஆனால் அது நாட்டையே அழிக்கும் விஷம் என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

தமிழக அரசின் வற்றாத அமுதசுரபியாகக் கருதப்படும் டாஸ்மாக், முற்றிலும் அரசு நிறுவனம். கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு, அவற்றை தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, மதுவிற்பனையை முறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, மதுவை விற்று வருகிறது.

இதனை நிர்வகிக்க இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் ஐவர் நியமிக்கப்படுகின்றனர். ஐ.ஏ.எஸ் படிப்பது சாராய வியாபாரம், ஐ.பிஎஸ் படிப்பது அதற்கு காவல் இருக்க எனும் அளவு மாகாணம் நாசமாகிவிட்டது

டாஸ்மாக் வருவாய் குறையும் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிரமாகப் பாடுபட்டு கள்ளச் சாராயத்தை ஒழிக்கின்றனர். நாட்டு மக்கள் கள்ளச் சாரயம் குடிப்பதை விட நல்ல சாராயம் குடிப்பதே நாட்டிற்கு நல்லது என்பது தானே அரசின் கொள்கை?

இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளை (ஐஎம்எஃப்எஸ்) கொள்முதல் செய்வது, அவற்றை வர்த்தகம் செய்வது ஆகியவையே டாஸ்மாக்கின் பணிகள்.

இதற்கென மாநிலம் முழுவதும் 41 கிடங்குகள் இயங்குகின்றன. விவசாய விளைபொருளைப் பத்திரப்படுத்த கிடங்குகள் உள்ளனவோ இல்லையோ, மதுவகைகளை பத்திரப்படுத்த கிடங்குகள் அதிநவீனமாக அமைக்கப்படுகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் 4,035 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உள்ளன.

இந்நிறுவனத்தை இயக்க 350 அரசு ஊழியர்களும், பல்வேறு துறைகளிலிருந்து தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட 300 அரசுப் பணியாளர்களும், தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்யும் 28,000 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 95 அதிகாரிகளும் உள்ளனர். இது டாஸ்மாக் இணையதளம் தரும் தகவல். இந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியச் செலவினம் மிகவும் குறைவே. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் பெருகிவிட்டன. அது தனிக்கதை.

தவிர, மதுவகை கொள்முதலிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசுக்கு வருவாய் என்பது மாறி, ஆளும் கட்சிக்கு தேர்தல்கால ஆபத்பாந்தவனாக இக்கொள்முதல் முறை மாறியிருக்கிறது.

அதிமுக திமுக என இரு கட்சிக்காரனும் மது ஆலைகளை நடத்துகின்றான்

எம்ஜி ராம்சந்தர் காலத்தில் ராமசந்திர உடையார் என்பவர் தொடங்கிய மது ஆலைகள் இன்று இரு கட்சியினராலும் நடத்தபட்டு தேர்தல் கால நிதிமையங்களாக நிற்கின்றது

இவற்றுக்கு தரகட்டுபாடுமில்லை அந்த சோதனையின் விவரம் தெரியவுமில்லை , மிக மோசமான சரக்கு அவை, அவற்றை குடித்தால் ஆரோக்கியம் நாசம், சாவு நிச்சயம்

இந்த தரமற்ற சரக்குகள் விற்பனையில் புகுந்து, ஏற்கனவே தள்ளாடும் குடிமகனை மேலும் நாசமாக்கி நடுத்தெருவில் வீழ்த்துகின்றன.

டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டி அமைக்கப்படும் மதுக்கூடங்கள் (பார்) நடத்துவது தான் அரசியல்வாதிகளின் இப்போதைய முக்கியமான தொழில். பெரும்பாலும் ஆளும்கட்சிப் பிரமுகர்களே பினாமி பெயர்களில் இவற்றை நடத்துவதால், இங்கும் முறைகேடுகள் உச்சம். உதாரணமாக, இங்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள காகிதக் கோப்பை ரூ. 5-க்கு கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுகிறது. குடிமகனின் வருவாயைச் சுரண்டுவதில் டாஸ்மாக் நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன இந்த பார்கள்.

ஆக மொத்தத்தில், அரசுக்கு பல்லாயிரம் கோடிக் கணக்கில் வருமானம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு முறைகேடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான லஞ்சம், ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்குக் கிடைக்கும் கோடிக் கணக்கான பார் வருவாய், அரசியல்வாதிகள் நடத்தும் மது உற்பத்தி ஆலைகளின் பலகோடி லாபம் ஆகிய பல அம்சங்கள் பின்னிப் பிணைந்தது மது விற்பனை உலகம். அரசு என்னும் தலையை டாஸ்மாக் என்னும் வால் ஆட்டும் விந்தைக்கு ஆதாரம் இதுவே.

தமிழகத்தில் மதுவிற்பனைக்கு எதிராக பரவலாக குரல்கள் ஒலித்தாலும் கூட, அரசு அவற்றைக் கருத்தில் கொள்ளாததற்கும் இதுவே காரணம். பொன்முட்டையிடும் வாத்து போன்ற டாஸ்மாக் வர்த்தகத்தைக் கைவிட தமிழக அரசு தயாரில்லை. ஆக, மக்களைக் காக்க உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட டாஸ்மாக் இன்று மக்களை சிறுகச் சிறுகக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

மதுகடைகளை மூடுவேன் என வந்த ஸ்டாலினும் அதனை தொடர்வது இப்படித்தான்

மதுவின் கொடுமைகள் குறித்து தனியே விளக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் எந்தத் தெருவிலும் விழுந்துகிடக்கும் இளைஞனே மதுவின் கோரத்திற்கு நேரடிச் சான்று. மதுப்பழக்கத்தால் நாசமாகும் இளைஞர் சமுதாயம்; குலையும் குடும்ப உறவுகள்; சிதையும் பொருளாதாரம்; மங்கும் உழைப்புத் திறன், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.

வயது வந்தவர்கள் கூட மறைந்து குடித்த காலம் மாறி, பள்ளி செல்லும் எட்டாம் வகுப்பு மாணவனே குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆண்களோடு சரிநிகர் சமானமாக பெண்களும் குடித்துவிட்டு கும்மாளமிடும் கலாசாரம் எல்லை மீறி, குற்றச்செயல்கள் பெருகுகின்றன. குடியே ஒரு பெருமையாக மாறிவரும் நாசகாரக் கலாசாரமும் உருவாகி வருகிறது.

இன்று அரசியல் கூட்டங்கள் மதுப்புட்டி விநியோகம் இல்லாமல் சாத்தியமில்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது. மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் மது தவிர்க்க முடியாத அம்சம் என்ற பாவனையும் உருவாகி வருகிறது. இதனால் குடிநோய்கள் பெருகுகின்றன.

தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை முடக்குவதாகவும், கல்லூரி மாணவர்களைத் தடம்புரளச் செய்வதாகவும், மது அரக்கன் உருவாகி இருக்கிறான்; உள்நாட்டுத் தயாரிப்பான கள்ளைக் குடித்தால் குற்றம், வெளிநாட்டு மதுவகையான பிராந்தியைக் குடித்தால் சரியானது என்ற தவறான நிலைப்பாடு அரசாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குடலும் ஈரலும் வெந்து மாயும் தமிழ் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதில் வேதனை என்னவென்றால், மது விற்பனை வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் அனைவரும் அறிந்தவையாக உள்ளன. இந்த விற்பனையை விசேஷ நாட்களில் அதிகரிக்குமாறு அரசே உத்தரவிடுகிறது. ஆனால், மதுவின் தீமையால் இறக்கும் குடிமக்களின் எண்ணிக்கை குறித்த சுகாதாரப் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. ஆயினும், மருத்துவமனைகளில் கல்லீரல் அழுகல் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

மதுப்பித்து, ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, சாராய மயக்கம், கணைய அழற்சி, குடற்புண், இதயநோய், மனநல பாதிப்பு, சுயநினைவிழப்பு போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை குடிப்பழக்கம் உருவாக்குகிறது. ஆரோக்கியமான சமுதாயம் அமைய குடிப்பழக்கம் விரோதி என்பதை அரசு மறந்துவிட்டது.

மூதறிஞர் ராஜாஜி ஒரு கதை சொல்வார். “ஒருவனிடம் ‘மதுவை அருந்துதல், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தல், அவளது கைக்குழந்தையைக் கொலை செய்தல்’ என்ற மூன்றில் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று சைத்தான் உத்தரவிட்டது. மற்றவை பெரும் பாவம் எனக் கருதிய அந்த மனிதன், மதுவை அருந்தினான். போதை ஏறியதும் அவன், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தான். அதற்கு இடையூறாக இருகப்பதாக என்று எண்ணி அழுத குழந்தையையும் கொலை செய்தான். எனவே, எல்லாப் பாவங்களுக்கும் மூலமான மதுவை ஒழிக்க வேண்டும்; பூரண மதுவிலக்கு மூலம் மதுவைக் கட்டுப்படுத்தினாலே ஏராளமான குற்றங்கள் குறையும்” என்பார் ராஜாஜி.

“கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே” என்கிறார் இந்து ஞானி திருவள்ளுவர் (குறள்- 926). இதற்காக ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரமே படைத்த அவரைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், குறள் வழி நடப்பதை மதுபோதையால் தவிர்க்கிறோம்.

மதுவின் கொடுமையை விளக்காத இலக்கியம் தமிழில் இல்லை. ஆனால், பழம்பெருமை பேசிக்கொண்டே முச்சந்தியில் கிடக்கும் குடிகன்களைக் கடந்துபோகிறோம்.

பெண்கள் அதுவும் மாணவிகள் குடிக்க ஆரம்பித்திருப்பது பெரும் சமூக ஆபத்து , தமிழக சரக்குகள் விஷத்துக்கு சமமானவை அது வலிமையான ஆண்களையே உடல்நலத்தால் வீழ்த்தும் எனும்பொழுது உடலால் பலவீனமான அதுவும் பருவபெண்கள் குடிப்பது கர்ப்பபை முதல் பல பாதிப்புக்களை கொடுக்கும்

பெண்கள்தான் சமூகத்தின் அச்சாணி, ஆண்களின் குடி சமூகத்தை 30 சதவீதம் முடக்கும் என்றால் பெண்களின் மதுவழக்கம் 100 சதவீதம் முடக்கும்

தமிழகம் பெரும் நாசத்தில் சிக்கியிருக்கின்றது

இந்த மதுவழக்கத்தை சட்டத்தால் திருத்தமுடியாது, மனவியல் நிபுணர்கள் என சொல்லி தரும் ஒருவித போதை மாத்திரை மருந்தால் திருத்தமுடியாது

இந்த ஆபத்தை முறியடித்து இதன் ஆணிவேரை பிடுங்கி எறியும் சக்தி இந்து ஆன்மீகத்துக்குத்தான் உண்டு

கண்ணனின் யாதவ வம்சம் குடியால் அழிந்த கதை, சுக்ரீவன் கதை இன்னும் பல இந்து புராணங்களை படித்தவன் குடியினை தொடமாட்டான்

தர்மன் கதை , நளன் கதையினை கேட்டவன் ஆன்லைன் ரம்மி பக்கமே வரமாட்டான்

இந்து ஞானி வள்ளுவனின் குறள் சரியாக விளக்கபட்டால் மாணவ சமூகம் குடியினை தொடாது

சினிமா குப்பைகளையும், தமிழக சினிமா டிவி சேனல்கள் எனும் கொள்ளிவாய் பிசாசுகளை விடுவித்து இந்து பாரம்பரிய வழிபாட்டையும் பக்தியினையும் பூஜைகளையும் விரதங்களையும் சரியாக பின்பற்ற செய்தாலே இளம் தலைமுறை சரியாக வளரும்

இந்துமதம் என்பது ஒரு வாழ்வியல் முறை அதிகாலை பூஜை அந்திகால பூஜை என ஒருவனை சரியாக பூஜையிலும் விரத்த்திலும் அமர்த்தினால் அவனால் குடிக்கும் அறைக்கு செல்லமுடியாது

கோவிலும் வழிபாடும் முக்கியம் என ஒருவன் பழகினால் அவனால் தவறான குடிபக்கம் செல்லமுடியாது

குடியினை வளர்க்கும் முக்கிய விஷயம் மாமிச உணவும் நண்பர்களும்

உணவில் கட்டுபாடு கொண்டுவந்தால் குடிவழக்கம் தானாய் குறையும், தமிழகத்தின் குடிவழக்கம் சுவையான உணவிலும் பிரியாணி உள்ளிட்ட மாமிச வழக்கத்திலும் தீவிரமாகின்றது

விரதமும் பூஜைகளும் மாமிச உணவை குறைக்கும் அங்கே மதுவும் குறையும்

தவறான நண்பர்களின் வழிகாட்டுதலும் குடிக்கு முழு காரணம்

இப்பொழுது குடி அதிகரிக்க பெரும் காரணம் குடும்ப விழாக்களும், பண்டிகைகளும், விடுமுறைகளும்

குடும்ப விழாக்களிலும் பண்டிகைகளிலும் பூஜைக்கும் ஹோமங்களுக்கும் யாகங்களுக்கும் இன்னும் தர்மங்களுக்கும் இடம் கொடுத்தால் குடிமறையும் அந்த பணம் நல்ல வழிக்கு திரும்பும்

விடுமுறைகளில் ஆலய தரிசனமும் நெடுந்தூர ஆலய தேடலும் நல்ல பொழுதை நல்ல சிந்தனையினை கொடுக்கும்

பூரண இந்துவாக இந்து கலாச்சாரத்தில் வாழ்வதே குடியினை ஒழிக்கும் வழி, அப்படித்தான் இச்சமூகம் குடியிலும் சூதிலும் பெண்ணிலும் சிக்காமல் உன்னத சமூகமாய் இருந்தது, இந்தியா மட்டுமல்ல கிழக்காசிய சமூகம் அப்படித்தான் இருந்தது

கிழக்காசியாவில் புத்தம் பரவி இந்துமதத்தை ஒழித்ததும் அங்கு சூதும் இன்னும் பலவும் மேல் எழுந்தன, சைனா முன்பு பலவீனமாகி போக சூதும் போதையும் காரணம், பின் அவற்றை ஓரளவு கட்டுபடுத்தித்தான் எழுந்தார்கள்

தாய்லாந்து போன்ற நாடுகளின் நிலைஉலகறிந்தது

ஆனால் இந்தியா பெரும் போராட்டத்தில் எழவும் சுதந்திரம் அடைந்து இவ்வளவு பெரும் சக்தியாக எழுந்து நிற்கவும் இந்துமதமும் அதன் வாழ்வியலும் மிக முக்கிய காரணம்

இந்துமதம் இருக்கும் வரை இந்துமதம் வீழாது என்றுதான் மதரீதியாக , கலாச்சார ரீதியாக பெரும் தாக்குதல்கள் தொடுக்கபடுகின்றன‌

அதுவும் தமிழகத்தில் திராவிட பகுத்தறிவு முகமூடியுடன் சினிமா, அரசியல், குடிவகை என பலவகை வழிகளில் அந்த தாக்குதல் நடக்கின்றது

அதனில் தன்னை அறியா தன் பெருமை அறியா சமூகம் சிக்குகின்றது

குடியால் வீழும் மாணவ மாணவியரை கண்டால் அதுதான் நினைவுக்கு வருகின்றது

குலகல்வி கொடியவன் என உத்தமன் ராஜாஜியினை, மதுகடைகளை நெருங்கவிடாமல் வைத்திருந்த உத்தமனை விரட்டிய திராவிட கும்பல் இன்று பள்ளி மாணவிகளையும் குடிக்க வைத்திருப்பதெல்லாம் பெரும் கொடுமை

ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் ஈரோட்டு ராம்சாமி மதுகடைகளை எதிர்த்தவர் அவர் வழி ஆட்சி என சொல்பவர்கள் மதுகடைகளை திறந்துவைத்திருப்பதுதான் பெரும் முரண்பாடு

“கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?” என்பான் பாரதி

தமிழக அரசின் செயல்பாடு அப்படித்தான் இருக்கின்றது

அந்த மாணவியர் யாரென தெரியவில்லை ஆனால் அவர்கள் தரங்கெட்ட குடியினை குடித்து வீழும் பொழுது பாரதி சொன்ன அந்த வரிகள்தான் கண்ணீரை வரவழைக்கின்றன‌

பாஞ்சாலி பந்தயத்தில் வைக்கபடும் பொழுது பாரதி அழுவான்

“செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?”

அப்படி அந்த குழந்தைகளை நினைத்து மனம் அழத்தான் செய்கின்றது

இந்துமதமும் அதன் போதனையும் பூஜையும் வழிபாடும் வாழ்க்கைமுறையுமே இந்த குடி எனும் சமூக கொடுமையில் இருந்து தமிழகம் விடுபட ஒரே வழி, அதனில் சரணடைதல் ஒன்றுதான் வழி