குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 91

“நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமே
அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் – எல்லி
வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல்”

அதாவது ஒருவன் நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் பல காரியங்களை செய்தாலும் அதனால் சில இக்கட்டில் சிக்கி அல்லன செய்யவேண்டிய நிலையும் வரும், காட்டில் பயணம் செய்பவன் நல்ல நோக்கத்துக்காக் பயணம் செய்தாலும் சில கள்வர்கள் அவன் பொருளை பறித்து அவன் நோக்கத்தை சிதைப்பர் என்பது பாடலின் பொருள்

ஒருவன் நல்லது செய்ய நினைத்தாலும் நல்லபடிவாழ நினைத்தாலும் அவன் நினைத்தபடியெல்லாம் செய்துவிட முடியாது, காலமும் சூழலும் அதற்கு துணை செய்ய வேண்டும் அது ஊழ்வினை பயனால் நடக்கும். இதனால் சில இடங்களில் பெரும் சோதனை வரும்பொழுது மனம் கலங்க கூடாது விதிபடித்தான் நடக்கின்றது என்பதை புரிந்து மனதை தேற்றிகொள்ள வேண்டும் என்பது குமரகுருபரர் சொல்லவரும் கருத்து

நல்ல விஷயங்களை செய்ய முயற்சி செய் , ஆனால் அது திசைமாறி சென்றால் வருந்தாதே, நினைத்தபடி செய்து முடிக்கவில்லை என வருந்தாதே, நினைத்தபடி வாழமுடியவில்லை என கலங்காதே, இங்கு எதுவும் உன்கையில் இல்லை எல்லாம் எங்கோ முடிவுசெய்யபட்ட ஒன்று என்கின்றார் குமரகுருபரர்