ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 04

“கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு”

இக்குறள் “கறுப்பு வெளுப்பு சிவப்பு உறுபொன் பச்சை அறுத்து உருவ மாற்றி இரு” என பொருள்படும்

ஞானமார்க்கத்தை போதிக்கும் ஒளவை ஏன் நிறங்களை பற்றி சொல்கின்றார் என்றால் இந்துக்கள் ஐம்பூதங்களையும் புலன்களோடு அதற்குண்டான தொடர்போடு சொன்னார்கள், அந்த புலன்களை அடக்க அந்த ஐம்பூதங்களின் தன்மையினை அதனதன் வகையின் நிறத்தால் சொன்னார்கள்

கறுப்பு என்பது காற்றினை குறிக்கும் நிறம், மிதுனம் எனும் காற்று ராசியின் அதிபதியாக சனிகிரகத்தை இந்துமதம் சொல்லிற்று அந்த சனியின் நிறம் கறுப்பு

காற்று என்பது மிக பெரிய இயங்குநிலைக்கு அல்லது சக்தி நிலைக்கு வரும்பொழுது அது கருநிறத்தைத்தான் காட்டும், கருப்பாக வரும் மழைமேகம் முதல் அக்னி எரியும் பொழுது வரும் புகை வரை , அதாவது ஒரு இயக்கம் நடக்கும் பொழுது வரும் புகை வரை கருப்பு நிறமே

(இந்த விஞ்ஞான யுகத்திலும் அதனை கவனிக்கலாம்)

அப்படிபட்ட சக்திமிக்க காற்றினை கருப்பு நிறத்தால் குறிக்கின்றார் ஒளவையார், கிராமங்களில் இன்றும் சூட்சும சக்திகளை “காத்து கருப்பு” என சொல்வது கவனிக்கதக்கது, இது ஒளவை சொன்ன இந்த வழி வந்ததே

அப்படியே ஆகாயம் எனும் வெளிக்கு வெண்மை நிறத்தை சொன்னது இந்துமதம், விரிந்த வெண்ணிற பூக்கள் தெய்வத்துக்கு சமர்பிக்கபடுவது அப்படியே

சிவப்பு என்பது நெருப்பை குறிப்பது, நெருப்பு கணல் சிவப்பு நிறமே

பொன் என்பது நிலத்தை குறிப்பது, பூமியின் நிறம் ஏறகுறைய பொன்னை போன்றது

பச்சை என்பது நீரை குறிப்பது, நிலத்தோடு சேர்ந்தால் பச்சை நிற உயிர்களை உருவாக்குவது அல்லது பச்சை தாவரங்கள் பயிர்கள் வாழ ஆதாரமானது என்பதால் நீர் பச்சை நிறமாயிற்று

இப்பொழுது இந்த ஐந்து சக்திகளையும் மானிட புலன்களோடு ஒப்பிடுகின்றார் ஒளவையார்

உடலில் கண், மூக்கு, வாய், காது, மேனி என ஐவகை உறுப்புக்கள் உண்டு.

இதனில் மூக்கும் காதும் காற்றின் வழி வருவதை கிரகிப்பவை, நல்ல மணம் நல்ல குரல் என அவை மயங்கும்

கண் என்பது நெருப்புக்கு ஒப்பானது, வெளிச்சத்தில்தான் ஒரு பொருளை காணமுடியும், தீபம் இல்லா இடத்தில் எதையும் காணமுடியாது, அந்த கண்கள் காட்சியால் மயங்குபவை

வாய் என்பது நல்ல சுவையால் மயங்குவது, நீரால் உருவாகும் அனைத்து பொருட்களிலும் அது மயங்கும், நீரின்றி எந்த உணவுபொருளும் இல்லை என்பது குறிப்பிடதக்கது

மெய் எனும் உடல் நிலத்திலும் வெளியிலும் காணும் எல்லா சுகங்களிலும் மயங்கும், தொடுதல் தழுவுதல் இன்னும் பெரும் செல்வம் அளத்தல், அள்ளுதல் என அது நிலத்தோடும் ஆகாயத்தோடும் சம்பத்தபட்டது

ஆக ஐம்புலன்களையும் அடக்க வேண்டும், அப்படி அடக்கினால் அதனதன் மூல இயல்பை (உருவம்) அடக்கினால் முக்தி அடையலாம் என்பதைத்தான் இந்த குறளில் சொல்கின்றார்

ஏன் ஐம்புலம் என சொல்லாமல் ஐம்பெரும் சக்திகளை கொண்டு சொன்னார்?

ஐந்து சக்திகளும் பலம் வாய்ந்தவை, அந்த ஐந்து சக்திகள் பின் உடலின் ஐம்புலன்களும் சென்றால் அது மாபெரும் பேராசையாக சென்றுகொண்டே இருக்கும் அன்றி அதற்கு முடிவே வராது, அப்படி ஆசைவயபட்டு செல்லும்பொழுது அங்கு முக்திக்கு வாய்ப்பே இல்லை

அதனால் ஐம்புலன்களையும் உலகை இயக்கும் சக்திகளிடம் இருந்து துண்டித்து கட்டுபடுத்தி அதன் இயல்பில் இருந்து மாற்றி நின்றால் முக்தி உறுதி என்கின்றார்

காட்சியில் மயங்காமல், நல்ல மணம் , ஒலி, சுவையில் மயங்காமல் பூமி கொடுக்கும் பொன் பொருளில் மயங்காமல் புலன்களை அடக்குதலே முக்திக்கு வழி என்பது பொருளாகும்