ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 06

“நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு”

அதாவது இந்த உலக மயக்கமான விருப்பு, வெறுப்பு, பந்தம், பாசம் போன்றவற்றை மறந்தால் அவற்றில் இருந்துவிடுபட்டு ஆசை மயக்கம் கடந்த பெரு ஞானநிலையினை அடைந்தால் மீண்டும் பிறப்பில்லை என்கின்றார் ஒளவையார்

மனதில் எழும் நினைவுகளும் ஆசைகளுமே எல்லா துன்பத்துக்குமே காரணம், நடந்ததை நினைப்பதும் இப்படி நடக்கவேண்டும் என நினைப்பதுமே மானிடரின் எல்லா துயரத்துக்கும் காரணம், அந்த நினைப்பை வெறுத்து அறுத்து நடந்ததையும் எதிர்கால ஆசைகளையும் துறந்தால் ஞானம் பெருகும், அந்த பெருநிலையில் இன்னொரு பிறவி வாய்க்காது

விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் மனதை அடக்கி கொண்டு தவமிருந்தால் முக்தி கிட்டும் , பிறப்பற்ற நிலை வாய்க்கும் என்கின்றார் ஒளவையார்