சூரசம்ஹாரம் : 02

வீரபாகு தூது செல்ல கிளம்பிய நேரம் சூரபத்மன் மாளிகை கொதித்தெழுந்தது, தாரகன் எனும் தன் தம்பியினை கொன்ற முருகனை பிடிக்க தன் சேனைகளுடன் தயாரானான் சூரபத்மன்

ஆனால் அவனின் தம்பி சிங்கமுகனும் அவன் அமைச்சர் அமோகன் என்பவனும் நிதானமாக சில ஆலோசனைகளை சொன்னார்கள்.

“சூரபத்மா, யாராலும் கொல்லமுடியாத தாரகனை சிவமைந்தன் வீழ்த்தியிருக்கின்றான் என்றால் அவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, ஒருவேளை சிவனே அவனை தூண்டிவிடுகின்றாரோ என்னவோ? நாம் அவசரபட்டு மோதுவதில் பலனில்லை

ஒரு சிறுவனை ஏன் அனுப்பியிருக்கின்றார்கள் என யோசியுங்கள், இந்த மகா சக்திவாய்ந்த அசுரகுலத்தை அழிக்க , மாபெரும் பலம் படைத்த நம்மை அழிக்க சிவனுக்கு ஒரு சிறுவன் போதும் என அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை தவிர என்ன அர்த்தம் இருக்க முடியும்?

ஒரு சிறுவனை அனுப்பி, ஒரு சிறுவன் கையால் மடிந்தனர் அசுரர் என்ற அவப்பெயரை உண்டாக்குகின்றார்கள்ம் இதை தவிர்க்க வேண்டியது நம் கடமை ” என்றார்கள்

யோசித்த சூரபதுமன் தன் அசுரபடையின் தேர்ந்த உளவாளிகளை திருசெந்தூருக்கு நோட்டமிட அனுப்பினான் அவர்கள் கிளி, பருந்து.மயில் பல வடிவில் கிளம்பினார்கள்

ஆம், பருந்து உயர இருந்து பார்க்கும் கிளி அருகில் இருந்து பார்க்கும், மயில் கிளறி பார்க்கும் எனும் பல நுணுக்கமான உளவு தகவல் திரட்டல் அது
(இன்றைய செயற்கைகோள், விமானம், ஆளில்லா ட்ரோன் போன்றவன்ற்றின் சாயல் இது)

அந்நேரம் வீரபாகுவும் சூரனின் மகேந்திரபுரி நோக்கி ஏகினான், வீரபாகுவும் அனுமன் சாயல் எல்லா சாகசங்களையும் அவனால் செய்யமுடியும், அதனால் அழகாய் பறந்து சென்றான் அவன்

அந்த மகேந்திரபுரி இன்றைய இலங்கையினை அடுத்து இருந்தது, இதனால் அந்த வான்வெளியினை தாண்டி செல்லும்பொழுது இலங்கையின் காவலன் வீரசிங்கன் அவனை தடுத்தான் அவனை அடித்து வீழ்த்தி மகேந்திரபுரியினை அடைந்தான் வீரபாகு

அந்த நகரம் சொர்க்கத்துக்கு இணையாக இருந்தது, தங்க நகரமாக சுத்தமாக ஜொலித்தது , சிவாலயங்கள் கைலாயம் போல் அமைக்கபட்டிருந்தது, 108 அண்டங்களிலும் அவ்வளவு அழகான பாதுகாப்பான ஊர் இல்லை எனும் அளவில் அது ஜொலித்து கொண்டிருந்தது

வீரபாகு அனுமாரின் சாயல் அல்லவா?, அவரால் பறக்கமுடியும் உருவை சுருக்க முடியும் விஸ்வரூபம் எடுக்கமுடியும், பார்வையில் மறையமுடியும். அந்த சக்திமிக்க வீரபாகு அந்த நகரை அடைந்தபொழுது அந்த நகரின் காவலன் யாழிமுகனின் மகன் கஜாமுகன் அவனை தடுக்க சண்டை மூண்டது, வீரபாகு விஸ்வரூபமெடுத்தார் கஜாமுகன் மிகபெரிய மலையினையும் ஆலமரங்களையும் அவன் மேல் வீசினான், ஆனால் வீரபாகு தன் அஸ்திரங்களால் அவற்றை உடைத்து அவனையும் ஒழித்து நகருக்குள் மறைவாக புகுந்தார்

தேவர்களும் தேவலோக பெண்களும் சிறைவைக்கபட்ட இடத்தை அடைந்து அவர் முருகபெருமான் வந்திருப்பதையும், விரைவில் இவர்கள் விடுதலை செய்யபட இருப்பதையும் அறிவித்தான், அதுவரை தங்களுக்கு விடிவே இல்லை என ஏங்கிய தேவர்கள் வீரபாகுவின் வருகையால் மகிழ்ந்து நம்பிக்கை கொண்டனர்

முருகன் தூதனாக சூரனின் சபைக்கு ஏகினான் வீரபாகு

அங்கே தன் மண்டப‌ தர்பாரில் மகன்கள், தம்பிகள், தளபதிகள் புடைசூழ சிம்மாசனத்தில் கொலுவீற்றிருந்தான் சர்வ சக்திபடைத சூரன், அவன் முன் சட்டென ஒரு ஆசனத்துடன் தோன்றிய வீரபாகு அதில் அமர்ந்துகொண்டு “சூரபத்மா” என அழைத்தார்

ஆம், சூரனுக்கு முன் முருகனின் தூதன் நின்றுகொண்டிருந்தால் அது முருகபெருமானுக்கு அவமானம் என ஆசனமிட்டு அமர்ந்தான் வீரபாகு

தாரகனை கொன்ற முருகனையும் அவன் படைகளையும் அழிப்பது எப்படி என சிந்தித்துகொண்டிருந்த சூரனின் சபை அந்த திடீர் காட்சியால் சலசலத்தது, பலத்த காவலை மீறி தீடீரென அங்கு தோன்றிய வீரபாகுவினை கடும் கோபத்துடன் பார்த்தான் சூரன்

வீரபாகுவோ முருகன் கோரிக்கைபடி தேவர்களை விடுவிக்க முருகன் கோருவதாகவும் அதை செய்துவிட்டால் யுத்தமில்லை என சமாதானம் பேசினான்,. ஆனால் அதை தன் தன்மான பிரச்சினையாக அகந்தையில் கண்ட சூரபத்மன் கொதித்தெழுந்தான் , “தூதனே, நான் அவர்களை விடுவிக்காவிட்டால் என்ன செய்வாய்?, அந்த பொடியன் என்னை என்ன செய்துவிடுவான்” என உறுமினான்

வீரபாகுவோ “முருகனை பழிக்காதே” என பதிலுக்கு சொன்னா, “அடேய் பழித்தால் என்னடா செய்வாய்” என எகத்தாளமாக சூரன் கேட்டான், அவன் கோட்டை அவன் அரண்மனையில் அவன் அப்படித்தான் அகந்தையாய் கேட்டான்

“முருகனை பழித்தால் இங்கேயே உம்மை கொல்வேன்” என வீரபாகு உறும, “தூதனாக வந்து என்னையே மிரட்டுகின்றாயா? தூதனாக வந்தவனை கொல்ல கூடாது என்பதால் பார்க்கின்றேன்” என சொல்லி அவனை பிடிக்க உத்தரவிட்டான் சூரன்

இரண்டாயிரம் கைகள் கொண்ட அசுரர்கள் எவ்வளவோ முயன்றும் வீரபாகுவினை பிடிக்கமுடியவில்லை, மாய ஆட்டம் காட்டினான் வீரபாகு

சூரபத்மனின் மகன்களில் ஒருவன் வஜ்ஜிரபாகு, அவன் இந்திரனை வென்ற பலசாலி, அவன் வீரபாகுவினை பிடிக்க தன் பத்தாயிரம் குதிரை கொண்ட தேரில் ஏறினான் வீரபாகுவோ 20 ஆயிரம் கலசமுள்ள கோபுரத்தை பிடுங்கி அவன் தேர்மீது வீசி தேரை சரித்து வஜ்ரபாகுவினை இழுத்து போட்டு மார்பிலே அடித்து கொன்றான், தொடர்ந்து அந்த நகரையே நாசமாக்கிவிட்டு திருசெந்தூர் ஏகினார் வீரபாகு

சூரனின் சபை வெலவெலத்தது அது அதுவரை அவர்கள் காணா பெரிய அடி, முதல் அடி

தாரகனை அழித்ததை தொடர்ந்து அவர்கள் கோட்டைக்குள்ளே ஒருவன் வந்து சூரனின் மகனை கொல்வதெல்லாம் நினைத்துபார்க்கமுடியா வீழ்ச்சி. தாமகோபன் போன்ற தளபதிகள் “சூரனே, முருகன் சக்திமிக்கவன் நாம் சரணண்டைந்து தேவர்களை விடுவிப்பதே நாம் வாழும் வழி” என சொன்னாலும் சூரனின் அகந்தையும் ஆணவமும் அதை ஏற்கவில்லை

அழிவுக்கு முந்தையது அகந்தை

மகனை இழந்த துக்கத்தை தாண்டிவந்தான் சூரன், தம்பியினையும் மகனையும் கொன்ற முருக சேனையினை ஒழிப்பேன் என அண்டம் அதிர சூளுரைத்தான்

முதலில் நகரை சீர்படுத்த பிரம்மனை அழைத்தான் அவரோ முருகனை தாண்டி வரவில்லை, அதனால் என்ன நான் இன்னொரு அண்டத்தின் பிரம்மனை அழைக்கின்றேன் என அழைத்து நகரை சீர்படுத்தி காவலை பலபடுத்தினான்

ஆம் அவன் பெற்ற வரத்தின்படி 108 அண்டங்களில் இருந்து அந்தந்த பிரம்மாக்களை அவனால் அழைக்க இயலும்

அதே நேரம் மயில், கிளி, பருந்து என அவன் அனுப்பிய அசுர உளவாளிகள் திருசெந்தூர் நிலவரத்தை சொல்லி முருகனின் சக்தியினையும் பெரும் சேனையினையும் அவற்றின் பலத்தையும் சொன்னார்கள், அத்தோடு அவன் கால்வைத்ததும் கடல் சகதியாகி முருகன் படைகள் அதில் நடந்து மகேந்திரபுரி நோக்கி வந்து கொண்டிருப்பதையும் சொன்னது

அதிர்ந்த சூரன் சமுத்திரராஜனை அழைத்து என்னாயிற்று என கேட்டான், முருகன் கால்பட்டதும் தன் நிலை இப்படியாயிற்று என வருந்தியவனை விரட்டிவிட்டு போருக்கு தயாரானான்

சூரனின் மகன்களான பானுகோபன்,இரணியன், சூரனின் தம்பி சிங்கமுகன் அவன் மகன் அதிசூரன், தாரகனின் மகன் அரியேந்திரன், தளபதி தாமகோபன், காலஜித்தன், அனேகன், சிங்கன், சூரபதுமன் தங்கை அஜமுகியின் மகன் அஜமுகன் என பெரும் வீரர்கள் சூரனிடம் உண்டு, அவர்களிடம் பலமான அஸ்திரங்களும் உண்டு

இவர்கள் எல்லோரும் போருக்கு கிளம்பினர் எனினும் இரண்டாம் நாள் போரை திட்டமிட்டவன் பானுகோபன், அவன் சூரியனையே வென்றதால் அப்பெயர் அவனுக்கு கிடைத்தது

முருகன் ஒரு சிறுவன் என்பதால் அவனுடன் மோத சிறுவர்களே போதும், பெரியவர்கள் வந்தால் அவமான இழுக்கு என கருதி இந்த சிறுவர்படைகளையே அனுப்பியது சூரபதுமன் அவை

பானுகோபன் தன் சகோதரன் அரியேந்திரன் மற்றும் அதிசூரன் தலமையில் போருக்கு வந்தான்

அஜமுகனும் வந்திருந்தான்

ஆம் தலமை அதிசூரனும் அரியேந்திரனும் பானுகோபன் மேற்பார்வையாளள், களத்தில் இருபுறமும் தயாராக யுத்தம் தொடங்கிற்று

முருக சேனையில் வீரபாகு தலமையில் தாக்குதலை தொடங்கினார்கள், அசுர சேனை அல்லோலபட்டது வீரபாகுவினை கொல்ல அதிசூரன் தண்டத்தால் முன்னேறியபொழுது உக்கிரன் எனும் பூதம் அவனை எதிர்கொண்டது

உக்கிரனை நோக்கி தன் சக்திமிக்க ஆயுதங்களை பிரயோகித்தான் அதிசூரன் ஆனால் அவற்றையெல்லாம் எளிதாக சமாளித்தான் உக்கிரன், ஆத்திரமிக்க அதிசூரன் நாராயண அஸ்திரம் எனும் பலமான அஸ்திரத்தை ஏவினான் அதை தன் நாவிலே வாங்கி கொண்டான் உக்கிரன்

அந்த அஸ்திரத்துக்கு யாரும் தப்பமுடியாது என்பதால் அதிர்ந்த அதிசூரன் பிரம்மனை அழைத்து “இந்த அஸ்திரம் இவனிடம் மட்டும் தோற்றதேன், எல்லோரையும் கொல்லும் அந்த அஸ்திரம் இவனிடம் பலிக்கவில்லையே ஏன்?” என அரற்றினான்

பிரம்மனோ “யார் சிவனையும் முருகனையும் மனமார நினைப்பார்களோ, அவர்களை இந்த அஸ்திரம் தாக்காது” என்றார்

ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அதிசூரன் சக்திமிக்க‌ பாசுபதாஸ்திரத்தை ஏவினான் , உக்கிரன் ஆயுதமின்றி தலைகுனிந்து சிவனை நினைக்க அந்த அஸ்திரம் சிவனிடமே சென்றது

ஆம், யார் சிவனை மனமார நினைத்து நிற்பார்களோ அவர்களை அந்த ஆயுதம் தாக்காது

எல்லா ஆயுதங்களும் வீசி பலமிழந்து நின்ற அதிசூரனை உக்கிரன் தண்டத்தால் மார்பில் அடித்து கொன்றான், அதை கண்ட அஜமுகன் அங்கே கோபத்துடன் விரைந்தான்

அவனை முண்டன் எனும் பூதம் எதிர்கொண்டது, அவனை நோக்கி தன் சக்ராயுதத்தை வீசினான் அஜமுகன். முண்டனோ ஆயுதங்கள கீழே போட்டுவிட்டு சிவநினைவில் சரண்டைந்தான். சக்கராயுதம் முன்டனிடன் ஆயுதம் இல்லாததால் அவனை விடுத்து அஜமுகன் கழுத்தையே அறுத்தது, அதன் சக்தியும் தர்மமும் அது

ஆம், ஆயுதம் இல்லாதவர்களை நோக்கி அது ஏவபட்டால் அனுப்பியவனையே அது ஒழித்துவிடும்

அதிசூரனும், அஜமுகனும் சரிந்து கிடப்பதை கண்டு ஆத்திரத்தில் வந்தான் அரியேந்திரன் அவனுக்கும் வீரபாகுவுக்கும் யுத்தம் வலுத்தது

வானில் பறந்த வீரபாகு வாளால் அவனின் ஒரு கரத்தை வெட்டினான், ஆனாலும் ஒரு கரத்துடன் சண்டையிட்டான் அரியேந்திரன் , கடும் யுத்ததில் அவனை வீழ்த்தினான் வீரபாகு

தன் படைதலைவர்கள் அனைவரும் கொல்லபடுவதை கண்ட பானுகோபன் திகைத்தான், முருகனை வெல்ல பெரும் அஸ்திரமும் இன்னும் பல வரங்களும் தேவை என உணர்ந்து சம்பிரதாய தாக்குதல்கள் சில செய்துவிட்டு திரும்பிவிட்டான்

காரணம் அந்த யுத்தத்தை அவன் பெரிதாக எதிர்பார்க்கவில்லை , சில நாழிகைகளில் வென்று வீரபாகுவினை கட்டி கொண்டு சென்றுவிடலாம் என்றுதான் வந்திருந்தான் ஆனால் நடந்ததோ தலைகீழ்

பெரும் வீரனான பானுகோபன் தோற்று திரும்பியதையும் அவன் உயிர்பிச்சை பெற்று திரும்பியிருப்பதையும் அறிந்த சூரபத்மன் மகனின் குனிந்த தலையினை பார்த்து கொக்கரித்தான், அடுத்தநாள் போரில் தானே சென்று முருகபடையின் தலைவன் வீரபாகுவினை தூக்கிவருவதாக சபதமெடுத்தான்

மறுநாள் சூரனோடு அவனின் தளபதி தாமகோபன், அமோகன் உள்ளிட்டோர் களம் கண்டனர்

தாமகோபன் சூரனின் தளபதிகளில் முக்கியமானவன், அவனை விட முக்கியமானது அவன் யானை, அந்த யானை ஆயிரம் தந்தங்களும் பெரும் பலமும் கொண்டது. அதன் துதிக்கை எந்த உலகையும் புரட்ட கூடியது அதை வெல்வோரோ கொல்வோரோ யாருமில்லை எனும் பலத்துடன் எதிரிகளை பந்தாட கூடியது

அந்த யானையின் வரம் அது

அந்த யானையின் அட்டகாசம் எல்லை மீறி இருந்தது, தேவசேனைகளை துவம்சம் செய்தது பெரும் அழிவினை கொடுத்து நாசபடுத்திகொண்டிருந்தது

வீரபாகுவினால் அதை அடக்கமுடியா நிலையில் முருகபெருமானை நோக்கினார், முருகபெருமான் ஒரு தண்டத்தை தொட்டு அவனிடம் கொடுத்தார். அதை கொண்டு யானையின் மந்தகத்தில் அடித்தபொழுது அது சரிந்தது

உயிர்விடும் நிலையில் யானை முருகபெருமானை நோக்கி சொன்னது, “முருகா நான் இந்த பிரபஞ்சத்தை தாங்கும் திக் கஜங்கள் எனும் எட்டு யானைகளில் ஒருவன், என்னை பிடித்து வந்து இந்த சூரனின் சேனை மிக கொடுமைபடுத்தி அடிமைபடுத்தியது இன்று உன்னால் விடுதலை பெற்றேன்” என சொல்லி மரித்தது

யானை இறந்ததும் மகா சோகமுற்றான் தாமகோபன், அவனுக்கு இந்த யானையினையே கொன்றவர்கள் சாதாரமானவர்கள் இல்லை என புரிந்தது, ஆனாலும் தொடர்ந்து யுத்தம் புரிந்தான் முருகபெருமானின் உபதளபதியான வீரகேந்திரன் வாளால் அவன் கதையினை முடித்தான்

அதுவரை காட்சியினை பார்த்து கொண்டிருந்த சூரபதுமன் அதற்கு மேலும் பொறுக்காமல் களம் புகுந்தான், அவனின் வில்லானது சக்திவாய்ந்தது, அவன் நாணேற்றி அதை அசைத்த ஒலியிலே அண்டமெல்லாம் கிடுகிடுத்தது

(தொடரும்..)