சூரசம்ஹாரம் : 01

இந்து சமயத்தின் 18 புராணங்களில் ஒன்று கந்தபுராணம், அதன் நாயகன் முருகபெருமான்

அர்ஜூனா சேனைதலைவர்களின் நான் கந்தன் என்கின்றான் கீதையில் கண்ணன்

ஆம் கண்ணனை போல் ஞானகடவுளாக வணங்கபடுபவன் முருகன். கண்ணனும் முருகனுமே உபதேசிக்கும் கடவுளர்களாக, ஞானத்தின் மூலங்களாக போற்றபடுகின்றார்கள்

முருகனுக்கான இடம் அங்கே பெரிது

ஆம், இந்து தர்மத்தில் அவனுக்கான இடம் பெரிது, இன்றும் உலகமெல்லாம் வணங்கபடும் அவனின் கீர்த்தியும் வல்லமையும் புகழும் அழகும் மிக மிக பெரிது

அந்த முருகன் ஞானபண்டிதன், ஆப்த்பாந்தவன், தர்ம காவலன், ஞான வேலன், தலையெழுத்தையே மாற்றும் தர்மவேலன்

ராமாயணம், மகாபாரதத்துக்கு சற்றும் குறையாத புராணம் கந்தபுராணம். அதை வடமொழியில் குமாரசம்பவம் என காளிதாசன் எழுதி தமிழகத்தில் அருணகிரிநாதர் முதல் யார் யாரோ எழுதி கொண்டாடினார்கள்

கந்தபுராணம் முதல் திருமுருகாற்றுபடை வரை வந்து குவிந்தது

அதிலும் அந்த கடைசி 6 நாள் போர் என்பது சூரசம்ஹாரம் சம்பவத்தின் உச்சகட்ட காட்சி, மகாபாரத போருக்கும் ராமாயண போருக்கும் கொஞ்சமும் குறையாதது

கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆயுதங்களை அவை சொல்வது இன்றைய விஞ்ஞானம் அந்த கொடும் ஆயுதங்களின் கால வாசலில் நுழைந்துவிட்டதை சொல்கின்றது

அம், கந்தபுராணத்தில் சொல்லபடும் ஆயுதமெல்லாம் எதிர்காலத்தில் சாத்தியம் என்பதை இப்பொழுதே வல்லரசுகளின் ஆயுதபெருக்கம் சொல்கின்றது

சூரசம்ஹாரம் நடந்ததா என்றால் நடந்தது, ஏகபட்ட ஆதாரங்கள் உண்டு. ஏகபட்ட இலக்கியங்களில் அதன் பதிவு உண்டு

அப்போர் நடந்ததையும் அதை தொடர்ந்து தென்னக பகுதிகளின் நில அமைப்பே மாறிபோனதையும் சிலப்பதிகாரம் தெளிவாக சொல்கின்றது

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” என சொல்கின்றது அவ்வரிகள்

அந்த உக்கிரமான போரின் கடைசி 6 நாட்கள் மகா விறுவிறுப்பானவை, அந்த அசுர கூட்டத்தை முருகன் வதம் செய்த கடைசி நாட்கள் அவை, திருசெந்தூர் கடற்கரையில் நடந்த அந்த சம்பவம் இன்றுவரை கொண்டாடபடுகின்றது

ஆம், அது அங்குதான் நடந்தது, கடைசியில் சூரன் மாமரமாய் நின்ற இடம் மாம்பாடு என்றாயிற்று பின் அது மணற்பாடு என மாறிபோயிற்று

ஏகபட்ட சாட்சிகளும் அடையாளங்களும் இன்றும் என்றும் கொண்ட அந்த போரின் காட்சிகளை இந்த சஷ்டிநாட்களில் காண்பது நல்ல விஷயம்

அந்த சூரபத்மன் கோஷ்டிகளின் அட்டகாசம் எல்லை மீறிற்று தேவர்களை சிறைபிடித்தது முதல் அண்டமெல்லாம் அவர்கள் ஆட்சி நிலைக்க, விஷ்ணுவே அவர்களை அழிக்கமுடியாமல் தடுமாறும்பொழுதுதான் முருகபெருமான் பிறந்து வளர்ந்து அன்னையிடம் வேல்வாங்கி திருசெந்தூர் நோக்கி வருகின்றான்

கடலுக்குள் மிகபெரிய தீவில் கோட்டைகட்டி மகேந்திரபுரி என பெயரிட்டு சூரபத்மன் அமர்ந்திருந்தாலும் அவன் தம்பி தாரகாசுரன் நிலத்தில் காவல் இருந்தான், சுருக்கமாக சொன்னால் சூரபத்மனின் எல்லை காவலன் அவன்

சூரனின் எல்லைக்கு வந்துவிட்ட முருகனும் தாரகாசுரனும் மோத தொடங்குகின்றார்கள், முதல்நாள் போர் அப்படித்தான் தொடங்குகின்றது

முருகனின் ஒன்பது தளபதிகளில் முக்கிய தளபதியான வீரபாகுவும் தாரகனும் மோதுகின்றார்கள் , தாரகன் யானை முகம் கொண்ட பெரும் அசுரன், மாபெரும் பாராக்கிரமசாலி

வீரபாகு தாரகனின் படைகளை அடித்து விழ்த்திகொண்டிருந்த செய்தி கேட்டு தாரகனே களத்துக்கு வந்தான், அவனை முதலில் எதிர்கொண்டவர் வீரபாகுவின் உபதளபதியான வீரகேசரி

வீரகேசரியின் அம்புகளையும் ஆயுதங்களையும் நொறுக்கி தள்ளி தேவர் சேனையில்பெரும் சேதத்தை ஏற்படுத்திய தாரகாசுரன் ஒரு கட்டத்தில் வீரகேசரியினையே மயக்கத்தில் தள்ளினான், அவரும் சரிந்தார்

தாராகசுரனை தனியாக எதிர்கொண்டான் வீரபாகு, அவனிடம் நீங்களெல்லாம் யார்? எதற்காக இங்கே யுத்தம் செய்ய வந்தீர்கள் என தாரகன் கேட்க, நாங்கள் முருகன் தலமையிலான தேவர் படைகளென்றும் சூரபத்மனை வென்று அவர்களை விடுவிக்க வந்திருப்பதாகவும், சூரபத்மன் பணிந்து தேவர்களை விடுவித்து சரணடைந்தால் யுத்தம் தவிர்க்கபடும் எனவும் தெரிவித்தான் வீரபாகு

அதை கேட்டு இடிபோல் சிரித்தான் தாரகன், காரணம் அது அன்று நடக்க வாய்ப்பே இல்லாத அல்லது கனவில் கூட காணமுடியாத கற்பனை அது, அவ்வளவு பலமாக இருந்தது சூரபத்மன் வரமும் அவன் சுற்றமும்

ஏ வீரபாகுவே, முடிந்தால் என்னை தொட்டுப்பார். என்னை தாண்டித்தான் அண்ணனிடம் செல்லமுடியும், உன்னை நானே பொசுக்குகின்றேன் என பாய்ந்தான் தாரகன்

தாரகனை நோக்கி வீரபாகு எய்த அம்புகளும் ஆயுதங்களும் எருமைக்கு கொசு கடித்தது போல இருந்தன, அவற்றை எளிதாக தட்டிவிட்டு தாக்கினான் தாரகன்

உக்கிரமான அவன் தாக்குதல் பலமாய் இருந்தது, சக்திவாய்ந்த அஸ்திரங்களை பயன்படுத்தினான் அதில் முதலில் ஆக்னேய அஸ்திரத்தை ஏவினான்

இது மிகபெரிய வெப்பத்தை கொடுக்கும் அஸ்திரம், அது விழும் இடத்தில் மிகபெரிய வெப்பம் ஏற்படும் , பதிலுக்கு வீரபாகுவும் அதே அஸ்திரத்தை எரிய நிலமை சரியாயிற்று

(ஆம், வெப்பத்தை வெப்பமேதான் கட்டுபடுத்தும் என்கின்றது இன்றைய விஞ்ஞானம் அதை அன்றே சொல்லியிருக்கின்றது கந்தபுராணம்

இந்த ஆக்னேய அஸ்திரம் இன்று ரஷ்யா வைத்திருக்கும் பெருவெப்ப குண்டுகளை போன்றது, அன்றே இதெல்லாம் சாத்தியம் என இந்துமதம் சொல்லியிருக்கின்றது)

ஆத்திரமுற்ற தாரகன் தொடர்ந்து வருணாஸ்திரம் எனும் நீரை ஆயுதமாக்கும் அஸ்திரம், ஸௌரம் எனும் சூரிய தன்மை கொண்ட அஸ்திரம் என எல்லாமும் பயன்படுத்தினார்கள் இருவரும்

வீரபாகுவுக்கும் அதிர்ச்சி அதை விட தாரகனுக்கும் பெரும் அதிர்ச்சி, காரணம் இந்த அஸ்திரங்களை பதிலுக்கு எதிர்ப்பவர்கள் சாதாரணமானவர்களாய் இருக்கமுடியாது

வீரபாகு கடைசியாக தன் மிகபெரும் அஸ்திரமான வீரபத்திர அஸ்திரத்தை வீசினார், இது எதிரே எது இருந்தாலும் உருக்கும் வல்லமை கொண்டது (சிறிய அணுஆயுத சாயல்)., அதை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினான் தாரகன்

மிக வல்லமையானவனும் சூரபத்மன் தன்னை நம்பி நிறுத்திய இடத்தில் தோல்வியினை பெற்றவனுமான தாரகன் தந்திரமாய் ஓடி சென்று கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டு அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட்டான், காரணம் தோல்வியினை அண்ணனிடம் சொன்னால் அவன் பொறுத்து கொள்பவன் அல்ல‌

இதனால் மலைக்குள் இருந்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான், யோசிக்கும் பொழுது அவனுக்கு தந்திர திட்டம் உருவானது

அது மலை என்றாலும் தாரகனின் சொல்லுக்கு கட்டுபடும், அவன் சொன்னதை செய்யும்

அப்படியே மலையின் பிளவில் நின்று வீரபாகுவினை பார்த்து சிரித்துவிட்டு ஓடினான் தாரகன், வீரபாகு படைகள் அவனை தேடி கொண்டு மலைக்குள் புகுந்தபொழுது மலையினை அவர்களை சுற்றி மூடி கொள்ள உத்தரவிட்ட தாரகன் அடுத்த பக்கம் ஓடிவிட்டான்

மலைக்குள் வசமாக சிக்கியது வீரபாகுவின் படை, கடும் இருட்டில் மிக உறுதியான மலைக்குள் அவர்கள் சிக்கிவிட்டனர், அவர்களை மீட்க சென்ற வீரகேசரியின் படைகளையும் மலையினை வைத்து சுற்றி மூடிகொண்டான் தாரகன்

தேவர்படைகள் அனைத்தும் மலைக்குள் சிக்கிகொள்ள அசுரபடை விண் அதிரும் வண்ணம் ஆர்பரித்ததது, தேவர்படைகள் ஒழிந்தன என கொக்கரித்தன‌

மலையில் சிக்கிய வீரபாகு முருகனை மனமார நினைக்க அந்த இடத்தில் தன் தேரில் தோன்றினார் முருகன்

அதுவரை அவரை நேரில் பார்த்திராத தாரகன், முருகனின் அழகில் மெய்மறந்தான். அந்த பாலக தோற்றத்து 6 முகமும் 12 கரமும், இரக்கம் மிகுந்த விழிகளும், உடலில் தோன்றிய ஒளியும் அவன் தேவர்படைகளுக்கு தலைவன் என்பதை தெளிவாக சொன்னது

அதுவும் அவன் சாதாரண தேவர்களில் ஒருவராக இருக்கமுடியாது என அவன் விசாரித்தபொழுதுதான் முருகன் சிவகுமாரன் என்பதை சொன்னார்கள்

அவன் முன் மண்டியிட்டான் தாரகன், மகிழ்ந்து சொன்னான்

“அய்யனே, இவ்வளவு வடிவான உன்னை மகனாக பெற்ற சிவன் பாக்கியவான், நானும் உம்மை காணும் வரம் பெற்றேன், சிவன் எங்களுக்கும் நிறைய வரம் கொடுத்திருக்கின்றார்

அய்யனே இது தேவர்களுக்கும் எமக்குமான தீராபகை இதில் நீங்கள் ஏன் தலையிடவேண்டும், தயவுசெய்து அகன்றுவிடுங்கள்” என கோரினான்

“அதர்மத்தை அழிக்க எமக்கு எந்தை உத்தரவிட்டிருக்கின்றார் நாம் வந்தோம்” என முகம்மலர சொன்னான் முருகன்

அவ்வளவுதான், அசுரகுணம் மறுபடியும் தாரகாசுரனுக்கு தலைக்கேறிற்று, “பாலனே விஷ்ணுவின் சக்ராயுதமே என்னிடம் தோற்று என் நெஞ்சில் ஒட்டிகொண்டிருக்கின்றது, சிவபெருமான் மகன் என்பதால் இன்னும் ஒருமுறை உன்னை மன்னிக்கின்றேன் திரும்பி போ” என எச்சரித்தான்

முருகன் புன்னகையினை பதிலாக தர யுத்தம் மூண்டது, அவனின் அஸ்திரங்களெல்லம் முருகபெருமான் முன் பலனற்று வீழ்ந்தன, முருகபெருமான் தாரகனின் தும்பிக்கையினை துண்டித்தார் ஆனால் அது வளர்ந்து கொண்டே இருந்தது, ஒரு கட்டத்தில் முருகபெருமானின் தாக்குதலை சமாளிக்க அஸ்திரமின்றி மலைக்குள் மறுபடியும் ஒளிந்துகொண்டான் தாரகன்

அந்த மலைநோக்கி தன் வேலை வீசினார் முருகபெருமான் அந்த பிரமாண்ட மலை தூள் தூளானது, வீரபாகு படை வெளிவர தனியாக மறைவின்றி நின்றான் தாரகன்

(இந்த மலையினை முருகன் தகர்த்தது இன்று அமெரிக்கா மலைகுகைகளை தகர்க்க பயன்படுத்தும் பங்கர் பிளஸ்டர் குண்டுகளின் சாயலை கொண்டிருப்பது கவனிக்கதக்கது)

ஆனாலும் 3 வடிவெடுத்தான் தாரகன். வித்யுன்மாலி, தாராஷன், கமாலாஷன் (கமலஹாசன் அல்ல) என மூன்று வடிவில் அவன் உடனே நகரங்களை உருவாக்கி அதில் ஒளிந்துகொண்டான்

முருகபெருமான் தன் பார்வையிலே அந்நகரங்களை எரித்துவிட அங்கிருந்து தப்பி ஓடிய தாரகனை முருகனின் வேல் கொன்றது

விஷ்ணுவாலும், தேவேந்திரனாலும் வெல்லமுடியாத தாரகனை அங்கே வீழ்த்திபோட்டான் முருகன், தேவசேனை ஆர்பரித்தது, தேவர் பூமாரி பொழிந்தனர்

செய்தி அறிந்து தாரகனின் மகன் அசுரேந்திரனும் அவன் தாயும் ஓடிவந்து கதறினார்கள், அவன் உடலை தகணம் செய்தார்கள், என் தந்தையினை கொன்ற சிறுவனை அழிப்பேன் என அவன் சாம்பலில் சத்தியம் செய்த அசுரேந்திரன் தன் பெரியப்பா சூரபத்மனிடம் விஷயத்தை சொல்ல மகேந்திரபுரி விரைந்தான்

முருகன் படைகள் திருசெந்தூரில் முகாமிட்டன, அங்கு ஐந்து லிங்கங்களை செய்து வணங்கிகொண்டிருந்தார் முருகபெருமான் (இன்றும் அவை திருசெந்தூர் கோவிலில் உண்டு)

அங்கிருந்து கடலை தாண்டி மகேந்திரபுரி செல்லும் முன் சூரனுக்கு கடைசி வாய்ப்பினை கொடுக்க வீரபாகுவினை தூதாக அனுப்பினார் முருகபெருமான்

இத்தோடு முதல்நாள் காட்சிகள் நிறைவு பெறுகின்றன‌

இந்த காட்சிகள் சூரசம்ஹாரத்தின் முதல்நாளில் நடந்தேறின, இவற்றின் உண்மையான மறைபொருள் விளங்க எளிதானது

அந்த வீரபாகுவினை மானிட ஆத்மாவாகவும் தார்கனை மாயையாகவும் கொண்டால் விஷயம் எளிதில் விளங்கும்

ஆம் இந்த ஜீவாத்மா அந்த மாயையுடன் பெரும் யுத்தம் புரிகின்றது, விதவிதமான வடிவங்களில் மாயை ஜீவாத்மாவுக்கு பலவகையில் நெருக்கடி கொடுத்து மயக்கபார்க்கின்றது

அதில் முடிந்தவரை போராடும் ஆத்மா ஒரு கட்டத்தில் வழிதெரியாத இருளில் வசமாக சிக்கி கொள்கின்றது, அதில் இருந்து முருகபெருமானின் ஞானம் வேலாக வந்து மீட்டெடுக்கின்றது

ஆம், ஞானம் ஆன்மாவுக்கு வழிகாட்டும் என்பது முதல் தத்துவம்

தாரகனின் பலமான தும்பிக்கை வெட்ட வெட்ட முளைத்தது என்பது ஆசையும் மயக்கமும் வெட்ட வெட்ட துளிர்க்கும் என்பதே, அவன் மலையில் ஒளிவதாக சொல்வது ஆசையினை மாயையினை அழித்ததாக சொன்னாலும் மனதின் ஓரம் அது வெளிதெரியாமல் மறைந்திருக்கும் என்பதன்றி வேறல்ல‌

அந்த ஒளிந்திருக்கும் ஆசையினை ஏதாவது ஒரு அடைக்கலத்தின் மறைவில் ஒளிந்திருக்கும் ஆசையினை இறையருள் மட்டுமெ ஒழிக்கும்

ஆம், இங்கே ஆசைகளுக்கு சில காவல்கள் உண்டு. சன்னியாசியின் பற்றற்ற கோலத்தை கூட காணிக்கை என வரும் பணங்கள் செலவு கணக்கு எனும் மாயையினால் மாற்றிவிடும்

பெண்ணாசையோ மண்ணாசையோ ஏதோ ஒருவகையில் நியாயபடுத்த காரணம் கிடைத்துவிடும் அந்த காரணத்தின் பின்னால் ஆசைகள் வளர்ந்து வரும், களைகள் பயிரோடு வளர்தல் போல் இவை வளரும்

நன்றாக உண்ண மதுகுடித்தால் சரி என நியாயபடுத்தி கடைசியில் நாசமாய் போவதெல்லாம் இவ்வாறே , அதாவது ஒரு சில வழக்கங்களை ஒழிக்காமல் மனிதன் ஞானம் அடைய முடியாது

இதைத்தான் மலை என்றும் காவல் என்றும் இங்கே உருவகபடுத்துகின்றார்கள்

அந்த தாரகன் 3 உருவமாய் மாறினான் என்பது மண், பெண், பொன் ஆசையினை குறிக்கும், அதையும் ஒழித்தார் முருகபெருமான் என்பது அவரை வணங்குவோர்களை எந்த மாயையும் நெருங்காது என்பதை சொல்கின்றது

சரி, அந்த தாரகனின் மகன் ஓடினானே எங்கே? அதுதான் விஷயம்

எல்லா மாயைகளுக்கும் ஒரு பந்தம் உண்டு, ஒன்றை கொல்ல கொல்ல அதோடு சம்பந்தபட்ட எல்லா மாயைகளும் வந்து கொண்டே இருக்கும்

ஆசையில் இருந்து காமம், பேராசை, வஞ்சகம், சூது, கோபம், குரோதம், வெறி என ஒவ்வொன்றாய் அது பெருகிகொண்டே இருக்கும். பேராசை பெற்றெடுக்கும் குழந்தைகளும் அதன் உறவுகளும் ஏராளம்

அவை ஆன்மாவினை அலைகழித்து முக்திபெறாமல் தடுக்கும் என்பதன்றி வேறல்ல விஷயம்