காளிதாசனின் ரகுவம்சம் : 31 to 35
காளிதாசனின் ரகுவம்சம் : 31
அஜன் தன் நல்லாட்சியினைத் தொடர்ந்தான், அவன் ஆண்மையுடன் ஆளும் பூமி எனும் பெண்ணும் இந்துமதியும் அவன் மேல் கொண்ட அன்பின் அடையாளமாக தன்னிடமுள்ள எல்லாமும் கொடுத்தார்கள். பூமிபெண் அவனுக்குத் தன்னிடம் உருவான எல்லாவற்றையும் சிறந்து கொடுத்தாள். அப்படியே இந்துமதியும் அழகான ஆண்மகவினை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தாள்.
ஆயிரம் கரங்களைக் கொண்ட சூரியனுக்குப பிரகாசம் உடையவனும், பத்து திசைகளிலும் பெரும் புகழ் பெறப்போகும் மகனை தசரதன் எனப் பெற்றாள் இந்துமதி, அவனே பின்னாளில் பத்து தலை கொண்ட ராவணனை அழிக்கும் ராமனின் தந்தையுமானான் என்பதால் அப்பெயர் பொருத்தமானதாயிற்று.
ஒவ்வொரு மானிடனுக்கும் தேவர் கடன், பித்ருகடன், ரிஷி கடன் என மூன்று உண்டு. காரணம், இம்மூவரும் இல்லாமல் ஒருவன் இல்லை, இந்தப் பூமியில் வாழவும் முடியாது. அதனால் தேவர்குரிய கடனை யாகங்களினாலும் , ரிஷிகளுக்குரிய கடனை மந்திரம் ஓதி வழிபடுவதாலும் பித்ருக்களுக்குரிய கடனை முறைப்படி தர்ப்பணம் செய்வதாலும் தீர்க்கலாம், தனக்குப் பின் தன் மகன் பித்ரு காரியம் செய்ய வந்துவிட்டான் என்பதால் மகிழ்ந்தான் அஜன்.
இதனால் அவன் பரிவேஷம் எனும் வட்டம் அமைந்து ஒளிகுன்றியிருந்த சூரியன் போல் முன்பு வாடியிருந்தவன் இப்போது அவ்வட்டம் நீங்கி வெளிவந்த சூரியன் போல் பிரகாசமாயிருந்தான்.
அஜன் செல்வத்தால் மட்டும் பிறருக்கு உதவிடவில்லை. அதைத் தாண்டி தன் நற்குணத்தால் எல்லோருக்கும் ஆறுதலாய் இருந்தான், பலமில்லாதர்க்கு தன் புஜபலத்தால் உதவினான். அப்படியே நிறைய கற்றிருந்த அவன் அடக்கமான அறிவினால் அறிவார்ந்த பெரியொர்களுக்கும் நல்ல சிந்தனையால் உதவிகள் செய்தான்.
உரிய காலத்தில் பெய்து உலக உயிர்களைக் காத்துச் செல்லும் மழைபோல் தன் குடிகளை உரிய நேரம் காத்துக் குறைகளை எல்லாம் நோக்கிய அஜன், ஓய்வு பொழுது ஒன்றில் இந்துமதியுடன் நகரினை அடுத்த உத்யாவனத்துக்குச் சென்று இந்திரன் தன் மனைவியுடன் தேவலோக சோலையில் மகிழ்ந்திருப்பதைப் போல் மகிழ்ந்திருந்தான்.
அப்போது வானத்தில் நாரத முனிவர் வந்து கொண்டிருந்தார், தென்முனையில் உள்ள கோகர்ணம் எனும் சிவாலயத்துக்குச் சென்று ஈசனை வழிபடுவதற்காக அவர் வடக்கே இருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பூமியில் இல்லாத தேவலோக மலர்களின் மாலை ஒன்று அவரின் மஹதி எனும் வீணையில் தொங்கிக் கொண்டிருந்தது, காற்று அந்த மயக்கும் மணத்துக்காக மாலையினை பறிக்க விரும்பியது போல் வீச அம்மாலை அந்த வீணையில் இருந்து விழுந்தது.
மணமிக்க அந்த மலர்களில் தேனுக்காக இருந்த வண்டுகள் மாலை விழுந்தபின்னும் வீணையில் அமர்ந்திருந்தன, கருத்த அந்த வண்டுகள் வீணையில் அமர்ந்திருந்து அசைந்த அக்காட்சியானது காற்று அந்த மாலையினைக் கவர்ந்துவிட்டதே என வீணை கண்ணீர் விடும் காட்சி போல் இருந்தது.
வானில் இருந்து விழுந்த அந்த மாலை அதுவரை உலகில் யாரும் முகர்ந்தறியா இனிய மணத்தினைப் பரப்பிற்று, அயோத்தி மக்கள் அந்த மணத்தினை அறிந்து வியந்தார்களே தவிர எங்கிருந்து அது வருகின்றது என்பதை அறிய முடியாதவர்களாய் இருந்தனர்.
அம்மாலை நந்தவனத்தில் அமர்ந்திருந்த இந்துமதியின் மார்பின் மேல் விழுந்தது, நாரதரின் வீணையினை விட தான் இருக்க வேண்டிய இடம் இதுதான் என அது அறிந்ததுபோல் வேகமாக வந்து அமர்ந்து கொண்டது.
அம்மாலை அவள் மார்பில் பட்டு சரிந்தது, தன் மார்பின் மேல் மாலை விழுவதை சில நொடி மட்டுமே கண்ட இந்துமதி அபப்டியே உணர்விழந்து கண் மூடினாள், ராகுவினால் விழுங்கப்படும் சந்திரன் மறைவது போல் அவள் உயிர் மறைந்து போயிற்று.
அவள் புலன்களெல்லாம் சரிய அங்கமும் சரிந்து வீழ்ந்தபோது அவளோடு அதிர்ச்சியில் அஜனும் வீழ்ந்தான், விளக்கினில் எரியும் தீபச்சுடர் சில நேரம் எண்ணெயுடன் கீழே விழுவதை போல அவள் அஜனோடு சேர்ந்து வீழ்ந்தாள்.
இந்துமதியும் அஜனும் ஒரு சேர விழுவதை கண்ட பணியாளர்கள் கூடி அச்சமிட்டு பெரும் ஓலி எழுப்பினார்கள், அந்தச் சோகமான குழப்பமான ஒலியினால் அஞ்சிய, தாமரைகள் நிரம்பிய தடாகத்தில் வாழும் பறவைகளும் அஞ்சி அவர்களோடு சேர்ந்து கதற துவங்கி அந்தத் துயரத்தில் பங்கெடுத்தன.
மயக்கமடைந்த இருவரையும் பணியாளர்களும் வைத்தியர்களும் கூடி விசிறிவிட்டு ஆசுவாசப்படுத்தினர், அதில் அஜன் நல்ல ஆயுள் இருந்ததால் எழுந்து கொண்டான், ஆயுள் இல்லாதவனுக்கு மருந்து பயனளிக்காது என்பதால் இந்துமதி எழவில்லை, மரித்தே போனாள்.
தளர்ந்துவிட்ட தந்திகளை உடைய வீணை போல் கிடந்த அவளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான் அஜன், அவள்மேல் அவன் கொண்ட அன்பு அவ்வளவு மிகுதியானது.
உயிரற்ற இந்துமதி ஒளிகுன்றிய நிலவு போல் இருந்தாள், அவளை இழந்த அஜனும் மனதால் இறந்திருந்ததால் முகம் வெளிரியபடி இருந்தான், அவளை ஏந்தியபடி இருந்த அவன் தோற்றம் விடியற்காலையில் மான் உருவோடு தோன்றும் ஒளிமங்கிய சந்திரன் போல் இருந்தது.
உறுதியான இரும்பையும் கடும் வெப்பம் உருக்கி மென்மையாக்கிவிடுவதைப் போல உறுதிமிக்க அஜனின் நெஞ்சமும் அவள் கொடுத்த வெப்பதுயரால் உருகிப்போயிற்று, அதுவரை வாழ்வில் கண்ணீரும் துக்கமும் காணாத அஜன் முதன் முறையாக அழுது புலம்பினான்,எல்லோர் வாழ்விலும் ஒருமுறையாவது அழுவதற்கென வரும் காலம் அவனுக்கும் வந்தது.
மானிட வாழ்வெனும் வானில் துயரமெனும் இடியோடு புலம்பல் எனும் மழை பெய்ய வேண்டும் என்பது விதி. அதன் படி இடிதாக்கிய அஜன் மழைபோல் புலம்ப ஆரம்பித்தான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 32
தந்தி தளர்ந்து கிடக்கும் வீணை போல் மரித்துக் கிடந்த இந்துமதியினை மடியில் ஏந்தி புலம்பல் ராகம் பாடினான் அஜன்.
“ஓ கதறும் மனமே அறிந்துகொள், தெய்வம் ஒரு உயிரைப் பறிக்க முடிவு செய்துவிட்டபின் மெல்லிய மலர் கூட அதற்கு ஆயுதமாகின்றதென்றால் அதனை எதிர்க்க மானுடனால் எப்படி முடியும்? மெல்லிய மலரைக் கொண்டே ஒரு உயிரை அதனால் பறிக்கமுடியுமென்றால் இவ்வலகில் வேறு எந்தப் பொருள்தான் தெய்வத்தின் கருவி ஆகாது?
அது புரிந்தும் ஏன் அழுகின்றாய், நான் அழாதே எனச் சொன்னாலும் கலைந்த மேகமாய்க் கிடக்கும் அவளைக் கண்டு ஏன் அழுகின்றாய்? நீயும் நானும் அழுது ஆவதென்ன?
தெய்வத்தின் விருப்பம் இலவம்பஞ்சு மூலமாகவும் நிறைவேறும், எப்பொருளாலும் அது தான் நினைத்ததை செய்யும் போது நாம் அழுது என்னாகும்?
உயிர்களின் முடிவை செய்யும் எமன் மெல்லியப் படைப்பினை மென்மையானவற்றைக் கொண்டே முடிக்கின்றான், மெல்லியத் தாமரையினை மெல்லிய பனியாலே அழிக்கும் அவன், என் மெல்லிய இந்துமதியினை மெல்லிய பூவாலே முடித்துவிட்டான். அவ்வகையில் அவனுக்கும் கருணை உண்டோ?
இதே மாலையினை நான் என் நெஞ்சிலும் போட்டு என்னையும் கொல் என்கின்றேனே. ஆனால் அது ஏன் என்னைக் கொல்லவில்லை? அவளைக் கொன்ற மாலை என் உயிரை ஏன் பறிக்கவில்லை?
அந்த ஈசனின் விருப்பப்படி சில இடங்களில் அமிர்தம் விஷமாகின்றது, சில இடங்களில் விஷம் அமிர்தமாகின்றது, இங்குப் பொருளின் தன்மையால் விளைவது எதுவுமில்லை, விளைவதெல்லாம் ஈசன் ஒருவன் விருப்பமே.
ஓ மனமே, இது என் துரதிருஷ்டமின்றி வேறு என்ன? இடியாய் இறங்கிய இம்மாலை அபூர்வ இடியன்றோ? மேகம் கொடுக்கும் இடி பூமியினைத் தாக்கி அங்கிருப்போர் அனைத்தையும் அழித்துப்போடும், ஆனால் இந்த மலர் கொடுத்த இடி இங்கே இந்த அரசின் கொடிமரத்தை தாக்கி என் கொடியினை மட்டும் அழித்துப்போட்டது, இந்தக் கொடிமரம் மட்டும் பிழைத்ததென்ன? யார் எனக்கு இந்தக் காரணத்தை உரைப்பார்கள்?”
எனச் சொன்னவன் தேம்பி அழுது அவளை உலுக்கி முழுக்க மனம் உடைந்தவனாய்ப் புலம்ப ஆரம்பித்தான்.
“என் உயிரனைய இந்துமதியே, நான் உன்னை மிகவும் நேசித்தேன் என்றாலும் என் மேலும் பிழைகள் உண்டு, நான் உனக்கு மிக சிறிய துன்பங்களைக் கொடுத்தபோதும் நீ என்னுடன் பேசாமல் இருந்ததில்லையே?, இப்போது நான் ஒருகுற்றமும் செய்யாமல் புல்முனை துன்பமும் தராமல் இருக்கும் இந்நேரம் ஏன் என்னோடு பேசமாட்டேன் என்கின்றாய்.
முன்பெல்லாம் நான் குற்றம் செய்தபோதும் அதைக் கொஞ்சமும் மனதில் வையாமல் பேசியவள் நீ, இப்போதும் நான் அப்படியே இருந்தும் ஏனம்மா பேச மறுக்கின்றாய்?
என் வாழ்வே, நான் வாழ்வில் கண்ட ஒரே ஒரு இன்பமே என்னைப பார், எனக்காக நான் தேடிய ஒரே ஒரு உயிரே, என் கௌரவமே என்னைப்பார், எனக்கு இந்நாடு பெருமையல்ல, நான் இஷ்வாகு குலம் என்பது பெருமை அல்ல, நான் வீரனோ கவிஞனோ அறிஞனோ என்பது பெருமையல்ல, என் ஒரே பெருமை நீ எனக்கு மாலையிட்டாய் என்பதல்லவா.
அதைத்தானே நான் என் வாழ்வின் பெருமையாக கருதுகின்றேன், ஒளிகொடுக்கும் தீபமே வீட்டை எரிப்பதுபோல் எனக்கு விளக்கான நீயே என்னை எரித்தால் நான் என்னசெய்வேன்?
என் அன்பே, நீ என்ன நினைத்துவிட்டாயோ? நான் உன்மேல் அன்பற்றவன் என்றோ இன்னொருத்தி மேல் பிரியமாகிவிட்டேன் என்றா நினைத்துவிட்டாய்? இல்லையென்றால் நீ என்னைவிட்டு இன்னொரு உலகுக்குச் செல்வது ஏன்? அதுவும் சொல்லாமலே சென்றது ஏன்?
இந்த உலகில் எந்தநாட்டில் நீ இருந்தாலும் நொடிப் பொழுதில் உன்னை நான் தேடிவருவேன் என்பது தெரிந்தா நான் வரமுடியா இன்னொரு உலகம் சென்றாய்? என் மேல் அப்படி என்ன கோபமம்மா…”
சொன்னவன் வெடித்து அழுதான். அவனோடு அவன் அரண்மனை ஊழியச் சேனையும் அழுதது.
“ஓ நெஞ்சமே நான் பாவி, அவள் உயிர் பிரியும் நேரம் நான் மயங்கி வீழ்ந்தபின் ஏன் எழுந்தேன்? என் உயிர்மட்டும் ஏன் திரும்பி வந்தது?
நான் அவளை நினைந்து அழுது துடிக்கும் படி கொடும் தண்டனையாக இந்த உயிர்மட்டும் ஏன் திரும்பி வந்தது? இதைவிட கொடுந்தண்டனை என்ன இருக்கமுடியும்? விதியின் கொடும்பலன் உயிர் பிரிவதால் அல்ல உயிர் திரும்ப வருவதாலும் உண்டு என ஈசன் விதித்தால் இம்மானிடன் என்னதான் செய்ய இயலும், நீயும் என்னோடு அழு நாம் அழுவதற்காக அல்லவா அவனால் படைக்கப்பட்டிருக்கின்றோம்.
ஐயோ, என் மணிமகுடமே உன் முகத்தினைப் பார், நான் உன்னோடு விளையாடியதால் ஏற்பட்ட வியர்வை கலையுமுன்னே உன் உயிர் கலைந்ததென்ன? அந்த வியர்வை துளி மறையுமுன்னே நீ மறைந்ததென்ன?
இந்த நிலையற்ற உலகில் நான் என்ன மன்னன்? எனக்கென்ன செல்வாக்கு? எனக்கென்ன பெருமை? இங்கு எல்லாமே வீண், எல்லாமே காற்றைக் கையில் பிடிப்பதற்குச் சமம் என்றபின் இவ்வுலக வாழ்வின் பொருள்தான் என்ன?
ஓ என் வாழ்வின் பொருளே, என்னை விட்டு ஏன் மறைந்தாய்? உனக்கு விருப்பமில்லாததை என் மனதால் கூட நான் நினைத்ததில்லையே, அப்படி இருந்தும் என்னை விட்டு செல்ல ஏன் முடிவு செய்தாய்? நான் இந்நாட்டுக்கு அரசனாக என் கடமையினைச் செய்தேனே அன்றி என் முழு மனதால் உன் ஒருத்தியைத்தானே நேசித்தேன், என் புலம்பலை கூடக் கேட்காமல் சென்றுவிட்டாயே?
இவ்வுலகில் என் ராஜ்ஜியத்தை விட எல்லாவற்றையும் விட நான் நேசித்த என் பொன்னே எழுந்திரு”
அவன் இப்படியெல்லாம் புலம்பும்போது காற்று மெல்லியதாக வீசியது, அது அவளின் கூந்தலை மெல்ல அசைக்க அவன் கண்கள் விரித்து வேகமாய் அழுதுச் சொன்னான்.
“ஓ. அழகிய கரங்களைக் கொண்டவளே, மலர்கள் அணிந்ததும் சுருள்கோலம் கொண்டதும் வண்டுகள் போல கரிய நிறம் கொண்டதுமான உன் கூந்தல் ஆடுகின்றதே , அதோ அது உயிர்கொண்டு ஆடுவதை போல் நீயும் எழுந்து அசைய மாட்டாயா? எனக்காக எழுந்திரு.
ஹிமாலய குகைகளில் த்ருணன் ஜோதி எனும் கொடி இரவில் ஒளிர்ந்து குகையெல்லாம் வெளிச்சம் தரும், அற்புத கொடியான இந்துமதியே அந்தக் கொடி போல் ஒளிர்ந்தெழுந்து என் துயரம் போக்க மாட்டாயா. இனி என் வாழ்வில் இருளன்றி வேறு என்ன?
ஓ தாமரையில் சிறந்தவளே, பகலில் விரிந்த தாமரை மேல் சுற்றும் வண்டுகள் மாலையில் அது கூம்பும் போது உள்ளே சிக்கிக் கொண்டு வெளிவரமுடியாமல் வாடி அலைமோதும். காண்போர் கண்களுக்கு அது வருத்தமாகும், எந்தத் தாமரையினால் அந்த வண்டு மகிழ்ந்ததோ அங்கே தீராச் சோகத்தில் அது சிக்கிக் கொள்ளும், இங்கு உன் தாமரை முகத்திலும் நான் அப்படிச் சிக்கிக் கொண்டேனே. என் வல்விதி ஏன் இப்படி அமைந்தது? ஏன் துன்ப இருள் சூழ்ந்தது? இந்த தாமரையினை மூட வைத்தது.
ஓ என் கை நழுவிய என் செல்வமே, உனக்குத் தெரியாததா? அந்தச் சந்திரன் அமாவாசை அன்று வானத்தை பிரியும், பகலில் பிரியாத சக்கரவாகப் பறவைகள் இரவில் பிரியும், ஆனால் நிச்சயம் வானை சேர்வோம் எனச் சந்திரனும், விடிந்ததும் சேருவோம் எனச் சாகர பட்சிகளும் நம்பிக்கையால் பிரியும், ஆனால் நானோ இங்கு எந்த நம்பிக்கையில் உன்னைப் பிரிவேன். எந்த ஆறுதலில் நான் உன்னைக் கைவிடுவேன்?
ஓ என் பொய்த்துப்போன வரமே, சிறிய தளிரையும் நீ தாங்கமாட்டாய். தீபத்தின் வெப்பத்தைக் கூட தாங்கமாட்டாய். இப்போது பெரிய விறகினைச் சுமந்து கொடிய தீயினை நீ ஏற்பாயே. இதிலிருந்து உன்னை நான் எப்படிக் காப்பேன், என் குடிகளை, கால்நடைகளைக கூட காக்கும் என்னால் உன்னை இந்த நெருப்பில் இருந்து காக்கமுடியாதே, அதை நினைத்துபார்க்கவே என் நெஞ்சம் நடுங்குகின்றதே.
ஓ என் முன் ஜென்ம பலனே, யாக நெருப்பில் நெய் இட்டேன், இன்னும் ஸ்மிதுகள் எல்லாமும் இட்டேன், உன்னையும் அதே நெருப்பில் இடவேண்டும் என்றால் நான் எப்படி இடுவேன், எந்தத் தெய்வம் உன்னை அவிபாகமாக கேட்டதோ அது யாரென தெரிந்தால் மோதி அழித்து உன்னை மீட்பேனே? ஆனால் யாரென தெரியமால் என்ன செய்வேன்?
ஓ என் இன்னிசையே, உன் அணிகள் மிக்க ஒட்டியாணம் உன் முதல் தோழி, உன் கால் சலங்கை இரண்டாம் தோழி. அவை உன்னோடு எப்போதும் பேசுமே, இப்போது நீ அமைதியாகிவிட்டதால் அவைகளும் அமைதியாகி உன்னோடு இறந்துவிட்டதே, ஆனால் நான் இறக்கவில்லையே ஏன்?
ஓ என் சோலையே, நீ என்னை தனியே விட்டுச் சென்றாலும் உன்னையும் தனித் தனியாக விட்டே செல்கின்றாய், உன் குரல். குயிலில் உண்டு, உன் நடை அன்னத்தில் உண்டு, உன் பார்வை மானில் உண்டு, உன் அசைவு கொடியில் உண்டு எனும் நம்பிக்கையில் நீ சென்றுவிட்டாய்?
ஆனால் இவைகளா எனக்கு ஆறுதல்? இவை தனித்தனியே எனக்கு என்ன தரும்? அவை எல்லாம் கலந்த நீ மட்டும்தானே எனக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும்?
ஓ என் தளிரே, அதோ அந்த மாமரத்தின் அருகே தரையில் கிடக்கும் பிரியங்கா எனும் கொடியினைப் பார், அந்தக் கொடியினை மாமரத்தில் படரவிட்டு அவைகளுக்கு மணம் செய்யவெண்டும் என்றாயே? இனி யார் அதனைச் செய்துவைப்பர்? அதைக் கூட நடத்திவைக்காமல் கிளம்பிவிட்டாயே ஏன்? என் மேல் கோபம் இருக்கலாம் அந்தக் கொடிமேல் என்ன கோபம்?
ஓ மலர்களின் மலரே, நீ வளர்த்த அசோகமரம் அதோ பூக்க தயாராகின்றது, அதனை உன் தலையில் சூடி மகிழ்ந்து பார்க்க ஆசைகொண்டேன். ஆனால் உன் தர்ப்பணத்தில் அல்லவா அதை இனி வைக்கவேண்டும். அதில் வேதனை ஒன்றேதானே எனக்கு மிஞ்சும்?
ஓ நினைவிழந்த மலரே, உனக்கு நினைவுண்டா? அம்மரம் பூக்காமல் இருந்தது, நீ மணி அணிந்த உன் கால்களால் அதை மெல்ல மிதித்தாய் அதன் பின்பே அது பூக்கத் துவங்கிற்று, இது எல்லா மரங்களுக்கும் கிடைக்கா வாய்ப்பு என்பதால் அது மகிழ்ச்சியில் அதிகம் பூத்தது. அம்மரம் இன்று அம்மலர்களை உதிர்த்து உனக்காய் அழுகின்றது, உன் பிரிவால் அது கலங்கி கண்ணீர்விடுகின்றதே, மரமே உனக்காக இப்படி அழும்போது என் நிலைமை என்ன?
ஓ பேச்சற்றவளே, கிண்ணரை போல அழகான குரலைக் கொண்டவளே, மணமிக்க இந்த மகுள மலர்களை உனக்கு மேகலையாக நாம் தொடுத்து கொண்டிருந்தபோதே பாதியில் இப்படி சென்றுவிட்டாயே, இனி மீதத்தை தொடுத்து நான் யாருக்குச் சூட்டுவேன்? யார் என்னோடு இனி அமர்ந்து தொடுப்பார்கள்?, இந்த மாலையினை போலவே என் வாழ்வின் மகிழ்ச்சியும் பாதியில் முடிந்ததென்ன?
ஓ என் நிறைவே, இங்கு என்ன இல்லை எனக் குறைபட்டு எதைத் தேடிச் சென்றாய்? இங்கு உனக்கு எல்லாமும் உண்டு, பெருமையான குலம் உண்டு, அன்பான பந்தமும் சுற்றமும் உண்டு, உனக்கென ராஜ்ஜியமே உண்டு, கண் நிறைந்தவனாய் உனக்கென வாழும் கணவனாய் நான் உண்டு, மூன்றாம் நாள் வளர்பிறையாய் மகனும் உண்டு. எல்லாம் இருந்தும் நீ எதையோ தேடிச் செல்வதைப் போல் சென்றது நியாயமே இல்லையே.
ஓ என் இனிமையின் மென்மையே உன்னோடு என் தைரியம் போனது. நான் இனி பலமற்றவன், ஓய்வில் விளையாட இனி நீ இல்லை. அதனால் நான் இனி விளையாட்டும் அற்றவன், உன் இனிய பாடல் இல்லாததால் இனி எனக்குச் சங்கீதமுமில்லை, வசந்த விழா போன்ற ஆடல் பாடல் கொண்டாட்டமும் நீ இல்லாமல் எனக்கில்லை.
என் படுக்கையின் நிம்மதி நீ அன்றோ, இன்றோடு என் படுக்கையும் அழிந்தது.
ஓ என் மணமிகுந்த ஆபரணமே, என்னை ஆபரணங்களால் பூட்டி அழகு பார்ப்பவளே. நீ இல்லாததால் அந்த ஆபரணங்களும் எனக்கு இனி அவசியமில்லை, உன்னை அழகு செய்த அணிகலன்களெல்லாம் இனி பெருமையற்று வீழ்ந்து கிடப்பதை போலவே நானும் வீழ்ந்துகிடப்பேன்.
ஓ என் சகலமுமே, நீ எனக்கு அன்பும் இன்பமும் தந்த மனைவி மட்டுமல்ல. என் அரண்மனையின் விளக்கும் குலபெருமையும் மட்டுமல்ல, நீ என் அவையில் மந்திரி, என் தனிமையின் ஆப்த துணைவி, சங்கீதம் முதலிய கலைகளை எனக்குச் சொல்லிக் கொடுத்த குரு என எனக்கு எல்லாமுமாக இருந்தாய், என் மனைவி நீ, ராணி நீ, குருவும் நீ, மந்திரி நீ, துயரம் போக்கும் மாமருந்து நீ, என் தனிமைக்குச் சாயும் தோளும் நீ.
உன் ஒருத்தியினைப் பறித்ததால் எமன் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டானே, நான் இனி என்னசெய்வேன்? எனக்கு இனி யார் உண்டு?
ஓ என் இன்பமே, எப்போதும் இனிய மணமும் சுவையும் கொண்ட மதுவினை என் வாயில் முதலில் ஊற்றி பின் உன் வாய்க்கு மாற்றி சுவைத்து பருகி கண்களை மயக்கமடைய செய்து களித்திருப்பாய், இனிய மதுவால் உன்னை மகிழ்வித்த நான் இதோ எள்ளும் தண்ணீரும் கலந்து அத்தோடு என் கண்ணீரும் கலந்து உனக்குத் தரப்போகின்றேனே இதை எப்படிப் பருகுவாய்?
ஓ என் செல்வமே, எல்லாச் செல்வங்களையும் அதனால் இன்பம் பெறும் வழி எல்லாமும் பெற்ற எனக்கு இனி வாழ்வில் இன்பமில்லை. என் பெரும் செல்வமான நீ என்னை விட்டு அகன்றுவிட்டதால் இனி எந்தச் செல்வத்தாலும் எனக்கு இன்பமில்லை.
மூக்கை இழந்தவனுக்கு ஏது பூவின் மணம்? நாக்கை இழந்தவனுக்கு ஏது உணவின் சுவை? செவியினை இழந்தவனுக்கு புல்லாங்குழலாலும் மிருதங்கத்தாலும் ஆவதென்ன? உன்னை இழந்தபின் இனி எனக்கு வாழ்வில் என்ன?
எவ்வளவு அழகிய காட்சிகள் கண்முன் இருந்தும் குருடனுக்கு என்ன பலன்? என் கண்ணை நான் இழந்துவிட்டதால் இனி என் முன் என்ன இருந்தாலும் அதனால் நான் காண்பது ஒன்றுமில்லை? உன்னாலே என் செல்வமெல்லாம் இன்பம் தந்தன, நீ இல்லாத இனிவரும் காலங்களில் அவற்றுக்கு என்னை ஈர்க்கும் சக்தி கொஞ்சமுமில்லை”
கோசல தேசத்து மன்னனான அஜன் இந்துமதியினை இழந்து இப்படி ஓங்கி விடாமல் புலம்பி அழுது சோக மழையினை கண்களால் கொட்டி, தலையில் தன் கையால் இடித்து அழுத காட்சிக் காண்போர் எல்லாரையும் அழவைத்தது, அவனின் அழுகை கண்டு நந்தவனத்து மரங்கள் கூட பிசினை வடித்து அழுதன, செடிகளும் ஆடி ஆடி அழுது துயரம் கொண்டன.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 33
அஜன் அவளை மடியில் கிடத்தி அழுது புலம்பி களைத்துப்போனபின் அவன் உறவினர்கள் அவள் உடலை அவன் மடியில் இருந்து எடுத்துத் தகனம் செய்யும் பணிகளைச் செய்தனர். அஜன் தன் உயிரைத் தன்னிடம் இருந்து பிரித்ததை போல துவண்டு போனான், சக்தியினைப் பிரிந்த சிவனைபோல் வீழ்ந்து கிடந்தான்.
உறவினர்கள் இந்துமதிக்குச் செய்யவேண்டிய காரியங்களை ஒவ்வொன்றாக செய்தார்கள், சுமங்கலியான அவளுக்கு அணிகலனெல்லாம் அணிவித்து அழகூட்டி திலகமிட்டு அவள் உடலை அகில் மர கட்டையும் சந்தன கட்டையும் நிரம்பிய சிதையில் வைத்து நெருப்பிட்டார்கள், அழகிய பூ ஒன்று நெருப்பில் கருகுதல் போல் அவள் எரிந்துபோனாள்.
அவளுக்காய் அழுதே களைத்து போன அஜன், அந்த நெருப்பில் தன் வாழ்வும் மகிழ்ச்சியும் எரிவதைக் கண்டு உயிரின் மூலம் வரை தீரா வேதனை கொண்டான்.
இந்துமதியினை அவன் தன் உயிருக்கும் மேலாக நேசித்தான் என்றாலும் அவன் அவளோடு நெருப்பில் இறங்கவில்லை. காரணம், பெரும் அறிஞனும் மக்களை காக்கும் நற்குடி வழி வந்தவனுமான அஜன் ஒரு பெண்ணுக்காக நாட்டையும் மக்களையும் கைவிட்டு செத்துபோனான் எனும் அவபெயர் தனக்கும் தன் குலத்துக்கும் வந்திவிடக் கூடாது என்பதற்காய் சாகாமல் நின்றானே தவிர வாழவேண்டும் என்ற ஆசையால் அல்ல, அவன் வாழ்வு என்பது அவளோடே எரிந்துபோயிற்று.
அவள் சாம்பலை கண்டபடியே அதே நந்தவனத்தில் அமர்ந்திருந்தான் அஜன். மன்மதனை எரித்த சாம்பல் அருகே அழுது புலம்பியபடி இருந்த ரதியின் மனக்கொதிப்பு போல் அவன் வேதனை இருந்தது. அடுத்த 10 நாட்களும் அங்குத் தங்கியிருந்தபடியே இந்துமதிக்கான எல்லாக் கிரியைகளையும் செய்து முடித்தான் அஜன்.
10 நாட்கள் முடிந்தபின்பு விடியற்காலை சந்திரன் போல் ஒளிகுன்றிய அஜன் தன் அரண்மனைக்குத் திரும்பினான், ஒற்றை பறவையாய்த் திரும்பிய அவனைக் கண்ட நகரபெண்களெல்லாம் கண்ணீர் வடிக்க, தன் மனதின் பெரும் பாரம் நகர பெண்களின் கண்களில் நதியாக வழிந்தோடியதால் இலகுவான மனதை உணர்ந்தான்.
தன் ஆசிரமத்தில் இருந்தபடி மனக்கண்ணினால் நடப்பதை அறிந்தார் வசிஷ்டமுனிவர், ஒரு அரசன் தளர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்பதாலும் தன் கடமை அக்குலத்தை காப்பது என்பதாலும் பெரும் மனக்குழப்பத்தில் இருந்த அஜனைத் தேற்றும்படி ஒரு சீடரை அனுப்பினார், பெரும் யாகம் ஒன்றை அவர் தொடங்கியிருந்ததால் அவரால் அந்நேரம் அஜனைக் காணச் செல்லமுடியவில்லை.
அந்த சீடமுனிவர் வந்து அஜனை சந்தித்தார், கடும் நெருப்பில் உருகும்போதும் மின்னும் பொன்னை போல அந்தத் துயரிலும் அஜன் அவரை வரவேற்று அமரசெய்து தன் வழமையான பண்பில் தவறாமல் இருந்தான்.
அந்த முனிவர் பேசத் துவங்கினார் “மன்னரே முனிவர்களுள் சிறந்த வசிஷ்டர் உன் மனத்துயரை அறிந்தவயாயினும் அவரால் ஒரு யாகத்தின் பொருட்டு எழுந்துவரமுடியா நிலையில் உன் மன உறுதியினை காக்கும்பொருட்டு சில மொழிகளை உனக்குச் சொல்ல என்னை அனுப்பினார், கொஞ்சநேரம் உன் செவியினை மனதோடு எனக்குத் தருவாயாக.
என் மொழிகளை நீ உன் உள்ளத்தில் பதியவைப்பதால் பெரும் மனவுறுதி அடைவாய். அதனால் உன் குருபக்தியும் உலகறியும் வண்ணம் விளங்கும்.
மன்னா வசிஷ்டரின் பெருமையினை நீ அறிவாய், அவர் பூலோகம், பாதாள லோகம், மேலோகம் என மூவுலகிலும் முக்காலமும் அறிந்தவர், அவர் அறியாதது என எதுவும் எக்காலமும் எங்கும் இல்லை என்பதால் உன் மனவேதனை தீருவதற்கான பதிலை அவரே உரைத்தார். அதைக் கவனமுடன் கேட்டு உன் மனக்காயத்தின் மருந்தாய் இடுவாயாக.
இந்துமதிக்கு நிகழ்ந்ததை எண்ணி மானிட சுபாவத்தில் நீ கலங்குகின்றாய். ஆனால், அவள் யார் எப்படி இங்கு வந்து இந்த முடிவினை பெற்றாள் என்பதை அறியும் சக்தி உனக்கு இல்லை. அது மகா ரிஷிகளுக்கு மட்டும் தெரிந்த ரகசியம், அந்த ரகசியத்தை உனக்கு உன் கவலை தீரும்படி உரைக்க நான் அனுப்பப்பட்டேன்.
நெடுங்காலம் முன்பு திருமணபிந்து எனும் முனிவர் கடும் தவம் இயற்றினார், அவரின் தவத்தால் தன் பதவிக்கு ஆபத்து என அஞ்சிய இந்திரன் அவர் தவத்தை கலைக்க ஹரிணி எனும் தேவலோக மங்கையினை அனுப்பினான்.
அவள் வந்து முனிவரின் தவம் கலையும்படியாக அதைக் கைவிடும்படியாக தன்மேல் மோகம் கொள்ளும்படி மயக்க முனைந்தாள், அவள் மிக்க அழகியாக இருந்தாலும் காந்தத்தால் தங்கத்தை கவரமுடியாது என்பது போல் முனிவரை அவளால் ஈர்க்கமுடியவில்லை என்றாலும் தொடர்ந்து முயன்றாள்.
அந்த முனிவரோ ஊழிக்கால வெள்ளம் போன்ற தன் கோபத்துக்குப் பொறுமை எனும் கரையிட்டே வந்தார். அவளோ தொடர்ந்து அவருடன் விளையாட அந்தக் கரை உடைந்தது. பிரளயமாய்ப் பொங்கிப் பெரும் சீற்றம் கொண்ட முனிவர் “நீ தேவலோக தன்மையினை இழந்து மானிடப் பெண்ணாய் மாறுவாய்” எனச் சபித்தார்.
அந்தச் சாபம் கேட்டதும் துடித்த ஹரிணி அவரிடமே மண்டியிட்டு கெஞ்சினாள் “முனிவ முக்காலமும் அறிந்த நீர் என் நிலை அறியமாட்டீரோ, நான் வேண்டுமென்றா இதைச் செய்தேன்? இந்திரனின் அடிமையான நான் அவனிடும் உத்தரவை எப்படி மீறமுடியும்? ஏவிவிட்ட அவனை விட்டு என்னைத் தண்டிப்பது எப்படி நியாயமாகும்?
சாபமிட்ட திருவாயால் எமக்கு விமோசனும் உரைத்து வாழவைப்பீர்” என மன்றாடினாள்.
பகலில் தகிக்கும் பாலைவனம் இரவில் அதே அளவில் குளிருதல் போல முனிவருக்குக் கோபம் எவ்வளவு பெருகுமோ அவ்வளவு இரக்கமும் பெருகும், அவள் நிலைமை கண்டு இறங்கிய முனி “என் சாபத்தின்படி நீ மானிட பெண்ணாய்ப் பிறந்தாக வேண்டும், ஆனால் எப்போது தேவலோக மலரை நீ காண்பாயோ அப்போது உன்சாபம் நீங்கி நீ தேவலோகம் அடைவாய்” என விமோசனமும் சொன்னார்.
அந்த ஹரிணியே முனிவர் சாபப்படி விதர்ப்பநாட்டின் இளவரசியாக பிறந்து உன்னை அடைந்து உன் மனைவியாக இங்குவந்து வாழ்ந்து நாரதரின் தேவலோக புஷ்ப மாலையால் விமோசனமடைந்து தன் சாபம் நீங்கி இந்திரலோகம் சென்றுவிட்டாள்.
அவளின் சாபவிமோசனத்தாலே இப்படி நடந்தது என்பதை உணர்ந்து அவளைப் பற்றிய கவலையினை மனதில் இருந்து நீக்கிவிட்டு ராஜ்ஜிய பரிபாலனத்தில் கவனம் செலுத்துவாய், மனைவி என்பது வெறும் பெண் உருவம் அன்று, அது ஒரு ஆணுக்கான பொறுப்பு, அந்த மனைவி ஸ்தானத்தில் இருப்பவளைக் காக்கும் பொறுப்பு.
அதனால் இந்த ராஜ்ஜியத்தையே நீ மனைவியாக ஏற்று நன்முறையில் நடத்தி காத்து வருவாயாக, பிறக்க ஒரு காலம் உண்டென்றால் எல்லோருக்கும் இறக்கவும் ஒரு காலம் உண்டல்லவா? தோன்றியது எல்லாம் மறையும் என்பது படைப்பின் விதி அதை உன்னாலும் யாராலும் மாற்றமுடியாது என்பதை உணர்ந்து அதை ஏற்றுக்கொள், மனதிடம் அடைந்து துயரம் நீங்கிக் கடமையினைச் செய்.
மன்னா, செல்வம் வரும்போது செருக்கும் அகம்பாவமும் வருவது மானிடர்க்கு இயல்பு, நீயோ இந்த பெரும் ராஜ்ஜியம் கிடைத்தபோதும் நீ கற்ற சாஸ்திரங்களின் போதனையால் சிறிதும் கர்வமும் அகம்பாவமும் கொள்ளாமல் வழிதவறாமல் மிகுந்த கவனமாய் மனச்சலனம் இல்லாமல் நின்று கடமை செய்தாய்.
இப்போது நீ அடைந்த துயருக்குக் காரணம் உண்டு என்றாலும் இப்போதுதான் நீ கற்ற சாஸ்திரங்களின் ஞானத்துடன் மனதெளிவும் உறுதியும் பெற்றுத் தைரியமாய் நிற்றல் வேண்டும், இந்த வைராக்கியத்தில்தான் உன் அறிவையும் ஞானத் தெளிவையும் உலகம் அறிந்துகொள்ளும்.
மன்னா, நீ எல்லாச் சாஸ்திரமும் விதியும் வேதமும் அறிந்தவன், நசிகேசன் கதை முதல் உனக்கு எல்லாமே போதிக்கப்பட்டிருக்கின்றது, அப்படியான நீ உண்மையினை அறிந்தவன்.
நீ அழுது புலம்புவதால் இந்துமதி திரும்ப வரமாட்டாள். அவளால் வரவும் முடியாது, நீ அவளோடு சேர்ந்து இறந்தால் கூட ஒவ்வொரு ஆத்மாவும் அதனதன் நன்மை தீமைக்காக வேறு வேறு வழியில் அதற்கான உலகுக்கும் மறுபிறப்புக்கும் அனுப்பப்படும், அங்கும் உன் வழி வேறு, அவள் வழி வேறு என்பதால் நீ இறந்தாலும் அவளை மீள அடையமுடியாது. இந்தப் பாசபந்தம் எனும் மாய மயக்கத்தை அகற்றி உண்மையினைத் தெளிந்துகொள்.
அந்தத் தெளிவில் கவலையற்ற மனதுடன் அவளுக்கான தர்ப்பணங்களை மட்டும் செய்து வா, அவள் அதிலே திருப்தியுற்று மகிழட்டும், இறந்தோருக்காக தர்ப்பணம் செய்யாமல் அவரை நினைந்து அழுதுக் கொண்டே இருந்தால் அந்தக் கண்ணீர் இறந்தோரை மிகுந்த துயருக்குள்ளாக்கும் என்பதை அறிந்தவன் நீயன்றோ?
அதனால் அவள் வருத்தப்படாமல் இருக்க நீ முதலில் வருத்தமில்லாமல் இரு”
இப்படி முனிவர் பேச பேச அவன் கேட்டுக் கொண்டே இருந்தான், முனிவர் இன்னும் பெரிய தத்துவங்களை அவனுக்கு போதிக்கத் தொடங்கினார்.
“மன்னா, இவ்வுலகில் மனிதன் முதலான எல்லா உயிர்களுக்கும் மரணம் என்பது இயல்பானது, அது எப்போது வேண்டுமானாலும் வரும், அது ஆச்சரியமல்ல. அந்த மரணத்தில் சிக்காமல் நாட்களை நீட்டி வாழ்வதுதான் விசித்திரமானதும் ஆச்சரியமானதுமாகும்.
அதனால் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு நீடிப்பதைத்தான் எதிர்பாரா லாபமாக ஒவ்வொரு மானிடனும் கருதுதல் வேண்டும்.
அறிவற்றவரும் மாய பாசவலையில் சிக்கியவருமே தனக்கு வேண்டியர் இறப்பதை பெரும் துக்கமாகக் கொள்வார்கள், இதயத்தில் ஈட்டி பாய்ந்ததை போல் பெரும் வலி கொள்வார்கள். ஆனால் ஞானம் கொண்டவர்களோ தனக்கு நெருக்கமானவர்கள் பிரிவதை மனதில் இருந்து ஒரு முள் அகற்றப்படுவதை போல் எடுத்துக் கொள்வார்கள்.
எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவனுக்கு உற்றார் உறவினர் பாச பந்தங்கள் குறைவோ அவ்வளவுக்குக் கவலைகளும் குறைவு, எவனுக்குப் பிரியாமனவர்களின் எண்ணிக்கை அதிகமோ அவனுக்கு கவலையும் துயரமும் மிக அதிகம்.
மன்னா! நம் வேதங்கள் சொல்வதென்ன? எப்போதும் சேர்ந்தே இருக்கும் உடலும் ஆன்மாவும் கூட அவ்வப்போது பிரிகின்றன, சில சமயம் சேராமலும் போகின்றன, அப்படியான உலகில் சம்பந்தமே இல்லாத ஒருவர் பிரிவதைக் கண்டு மனம் கலங்கலாமா? அந்த இந்துமதி எங்கிருந்து உன்னிடம் வந்தாள்? அவள் வருவதற்கு முன்பும் நீ இருந்தாய் அவள் இல்லாதபோதும் இருப்பாய். உன் கடமையினைச் செய்வாய், இங்கே இடையில் வந்த அவள் ஒரு மாய பந்தம் எனும் தெளிவு இன்னும் உனக்கு வராமல் இருக்கலாமா?
நன்னடத்தை கொண்ட மன்னா, நீ மிக்க அறிவும் ஞானமும் கொண்டவன், காற்றில் மரங்கள் அசையலாம். ஆனால், மலை அசையலமா? அப்படி மலையும் மரமும் காற்றால் அசைந்தால் மலைக்கு பெருமைதான் என்ன? அறிவில் சிறந்த உனக்கும் அறிவற்றவர்க்கும் வித்தியாசம்தான் என்ன?”
முனிவர் சொல்ல சொல்ல அவன் கேட்டுக் கொண்டே இருந்தான். ஓங்கிப் பொழியும் மழை மெல்ல மெல்ல நிற்பது போல் முனிவர் தன் போதனையினை முடிக்க அவன் அவரை வணங்கி பெரிய மரியாதை செய்து திருப்பி அனுப்பினான், நகர எல்லை வரை வந்து அவரை அனுப்பிவைத்தான்.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 34
வாழ விதி இல்லாதவனுக்கு மருந்து வேலை செய்யாது, தரித்திரமே விதியானவனுக்கு செல்வம் கொடுத்தாலும் தங்காது. அப்படியே கண்ணீரே இனி விதி என விதிக்கப்பட்ட அஜனிடமும் அந்த முனிவரின் போதனைகள் பலன் கொடுக்கவில்லை.
விளக்கு அருகிருக்கும் வரை பிரகாசிக்கும் சிலையின் முகம் விளக்கு அகன்றதும் இருளவடைவதை போல அந்த முனிவர் அகன்றதும் தன் துக்கத்தில் மூழ்கினான் அஜன், ஞானியரின் ஆசிகளெல்லாம் அதன் பலனில்லா வீட்டில் தங்காது என்பது போல் முனிவரின் போதனைகளெல்லாம் அவனிடம் தங்காமல் அவரிடமே சென்றுவிட்டன.
அவளுக்கு பின் அஜன் எட்டு வருடமே வாழ்ந்தான். அந்த எட்டு வருடத்திலும் அவள் தொட்ட பொருட்கள், அவள் பேசிய பேச்சின் நினைவுகள் எனப் பகலிலும் இரவில் தூக்கத்தின் கனவிலே அவளுடன் சந்திப்பதுமே இந்த எட்டு வருட காலத்தை அவன் வாழ்வில் நீடித்தது.
ஆற்றில் குதித்து மகிழும் மீன் அதே ஆற்றுநீரில் குழம்பாகி மிதப்பது போல எந்த இந்துமதி அவனின் மகிழ்ச்சியானாளோ அவளே அவனின் அஸ்தமனத்துக்கும் காரணமானாள்.
அரண்மனை மாடத்தில் வளரும் ஆலமர மெல்லிய வேரானது அரண்மனை சுவரையே பிளப்பது போல், மெல்லிய இடை கொண்ட இந்துமதியின் பிரிவு எனும் துயரம் அவன் மனதில் துன்ப முளையாக இறங்கி பெரிதாகப் பிளந்தது, எந்த மருத்துக்கும் அந்தப் பிளவு அடைபடவுமில்லை, அந்த வேர் அகலவுமில்லை, அது நோயாயிற்று.
நோய் வந்தால் கவலையுறும் மாந்தர் நிறைந்த உலகில் அந்த நோய் அவளைச் சந்திக்கும் வரமென கருதி மகிழ்ந்தான் அஜன்.
புதிய குருத்தினைக் கண்ட பழைய தென்னை ஓலை தன்னை வருத்தி விடைபெற விரும்புதல் போல் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவனும் பெரும் அடக்கமும அறிவும் கொண்ட மகன் தசரதனை நாட்டின் குடிகாக்கும் மன்னனாக மகுடம் சூட்டிவிட்டு பெரும் கவலையும நோயும் கொண்ட தன் உடலை பட்டினியிட்டு வருத்தி உயிர்துறக்க முடிவு செய்தான்.
காரணம் வேறுவகையில் உயிர்துறத்தல் சொர்க்கத்தில் நுழையத் தடையாகிவிடும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
மகன் தசரதனுக்கு முடிசூட்டியவன் கங்கையும் சரயு நதியும் சேரும் புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி உயிரை கரைத்தான், அதனால் தேவருள் ஒருவனாக மாறி சொர்க்கத்தை அடைந்தான், அங்கே முன்னமே சென்றிருந்த இந்துமதி இப்போது தெய்வீக தன்மையின் அழகில் ஜொலித்தபடி நின்று அவனை வரவேற்றாள், சொர்க்கத்தின் நந்தவனத்தில் அவன் அவளோடு மகிழ்ந்திருந்தான்.
அஜன் மறைவால் இருண்டு போன உத்திரகோசம் எனும் கோசலை நாட்டுக்கு விடிவெள்ளியாய் எழுந்தான் தசரதன், அவனின் ஆட்சியில் எல்லா வளமும் ஆசியும் பெருகிற்று, அவன் புலன்களை ஒடுக்கியவன், தன்னை வென்றவன் எனும் வகையில் முனிவர்களில் ஒருவனாகவும், பகைவர்களை வீரத்தால் வென்றதால் வீரமிக்க அரசர்களில் ஒருவனாகவும் நின்றான்.
அந்தத் தசரதன் முனிவன் அரசன் என இரு வகையிலும் அவன் முன்னிலையில் இருந்து முனிவனுக்கு முனியாக அரசனுக்கு அரசனாக நின்று ஆட்சி செய்தான்.
தசரதன் அரசமரபுப்படி தகப்பன் வீழ்ந்தபின் குடிகளை சரியான நேரத்தில் தாங்கினான் என்பதால் மக்கள் அவன் மேல் மிகுந்த அன்பு கொண்டனர், தாய் தந்தையில்லா அவனுக்கு நாட்டின் மக்களே தாயும் தந்தையுமானார்கள். அவர்கள் அவனுக்குக் கொடுத்த ஆதரவும் அவன் கட்டளைக்குப் பணிந்து பெரும் பலமாக நின்றதும் மலையினை தகர்த்த சுப்பிரமணியருக்கும் அவர் கையில் இருக்கும் பலமிக்க வேலுக்குமான பந்தமாய் இருந்தது.
தசரதன் தன் தேச மக்கள் தங்கள் கடமையினைச் சரியாகச் செய்யும்படி உரிய நேரத்தில் எல்லா உதவியும் செய்பவனாக இருந்தான், இதனால் மக்களின் யாகத்தின் பலனை பெற்றுக்கொண்டு உரிய பருவத்தில் தவறாமல் மழை பொழிந்து மக்களைக் காக்கும் இந்திரனின் கடமையில் அவனும் பங்கெடுத்துக் கொண்டான்.
யாகத்தின் அவிர்பாகம் வாங்கும் இந்திரன் தவறாமல் உலகுக்கு மழை வழங்குவது போல், மக்களிடம் வரி வாங்கிய தசரதன் உரிய காலத்தில் அவர்களை நல்லமுறையில் உதவிகள் பல செய்து காத்து வந்தான்.
தசரதன் தெய்வமும் மகிழும் ஆட்சி நடத்தியதால் கடவுளின் கோபத்தினால் வரும் கொள்ளை நோய்களோ இதர நோய்களோ அவன் தேசத்தில் கால் வைக்கமுடியவில்லை, கொள்ளை நோய்களே வர அனுமதியில்லா தேசத்தில் பகைவர்கள் எப்படி வருவார்கள்?
நோயும் பகைவரும் இல்லாததால் மகிழ்ந்த பூமி தன் சிறந்த விளைச்சலால் அத்தேசத்தை இன்னும் வளப்படுத்திற்று.
தசரதனின் தாத்தா ரகு பத்து திசைகளையும் வென்றவன், அவன் தந்தை அஜன் எதிரிகள் அனைவரையும் வென்றவன். அந்த வம்சத்தில் வந்த தசரதன் தந்தைக்கும் தாத்தாவுக்கும் சற்றும் குறையாத பராக்கிரமம் கொண்டவன் என்பதால் அவன் தேசம் முன்னோர்கள் காலம் போலவே பொன் குவியும் தேசமாய் இருந்தது.
அந்த தசரதன் குற்றம் செய்தோரை தண்டிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை. அதே நேரம் தேவைபட்டோர்க்கு உதவுவதில் யோசிப்பதுமில்லை. இதனால் அவன் தண்டிப்பதில் எமனாகவும் வள்ளன்மையில் குபேரனாகவும் பொன்மழை பொழிந்து எல்லா மக்களையும் வாழவைப்பதில் வருணனாகவும் திகழ்ந்தான்.
கள்வர்களும் ஆந்தையும் நாகமும் விரும்பாததும், நன் மக்கள் அனைவரும் யோகியரும் பசுக்களும் விரும்பும் சூரியனாக அவன் திகழ்ந்தான்.
அவன் நாட்டு மக்கள் ஒன்றையே நினைத்தவன் கருணை உள்ளம் கொண்டவன் இதனால் வேட்டை என வனத்தில் புகுந்து உயிர்களைக் கொல்லும் பொழுது போக்கு அவனிடத்தில் இல்லை, சூதாட்டம் அவனிடம் ஒட்டவில்லை, சந்திர ஒளியில் மயக்கும் மதுபானம் பருகும் ஆர்வமும் அவனுக்கு இல்லை, காண்போரை மயக்கும் இளம்பெண்களின் வனப்பும் அவனை ஈர்க்கவில்லை.
அவன் வேட்டை, சூதாட்டம், மது, மாது என அரசர்களுக்குரிய இயல்பில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தான்.
அவன் இந்திரனிடத்திலும் எளிமையாக பேசினான், அவனின் வேடிக்கை பேச்சில் கூட யாரையும் புண்படுத்தாமல் கவனமாய் இருந்தான், கொடிய பகைவரை கூட மனதால் வதைக்காத வார்த்தைகளையே அவன் கையாண்டான். காரணம், அவனுக்குக் கோபம் என்பது வாய்த்ததில்லை.
அவன் தன்னைப் பணிந்தோரை வாழவைத்தான், தன்னை அடக்க நினைப்போரை அழித்துபாபோட்டான். இதனால் அவனை நெருங்கியோர்க்கு வாழ்வு சாவு என்ற இரு வாய்ப்பினில் ஒன்றே கிடைத்தது.
பெரிய வீரனான தசரதன் நாண் ஏற்றிய ஒரே ஒரு வில்லினை கையில் ஏந்தி ஒரே ஒரு ரதத்தில் ஏறி இந்த கடல் சூழ்ந்த இந்த உலகை வென்றான், அவனின் பெரும் யானை குதிரை உள்ளிட்ட சேனைகள் அவனுக்கு வெற்றி கோஷமிட சென்றனவே அன்றி போரிட அவசியமில்லாதபடி அவன் வில் பலமாய் நின்றது.
ஒரு வில்லால் அவன் பெற்ற பெரும் வெற்றியினைக் கொண்டாட கடலே பெரும் ஒலியுடன் அவனுக்காய் சங்கநாதம் முழங்கி ஜெயபேரிகை கொட்டிற்று.
நூறு கூரிய முனைகளை கொண்ட வஜ்ராயுதம் எனும் பலமான ஆயுதம் கொண்ட இந்திரன் மலைகளின் சிறகுகளை வெட்டியது போல பகைவர்களுக்கு துணையாக வருபவர்களை தசரதன் அழித்துப் பகைவரின் பலம் பெருகாமல் பார்த்துக் கொண்டான்.
தேவர்கள் இந்திரனை வணங்குவது போல் பல நூறு அரசர்கள் தசரதனை வணங்கினார்கள், அவர்கள் தசரதனைப் பணிந்து காலை தலையால் தொடும்போது அவர்கள் கிரீடத்தின் மணி ஒளிகள் பட்டு தசரதனின் கால் நகங்கள் மின்னின.
தசரதன் எதிரி நாட்டின் அரசர்களைக் கொன்றபோது அவர்களின் மனைவியர் அலங்காரமின்றி அஞ்சிக் கிடந்தனர். ஆனால், அறிவுடை மந்திரிகளோ தசரதனை அறிந்ததால் அந்த அரசிகளின் இளம் புதல்வர்களை தசரதன் கால் முன் வீழச் சொன்னார்கள். அது கண்டு மனமிரங்கிய தசரதன் அவர்கள் ராஜ்ஜியத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு திரும்பினான்.
இப்படி நாடுகளை வீரத்தால் வெல்வதை விட அவர்கள் மனதை அன்பால் வென்றான்.
ஒரு அரசன் கண்காணிக்க வேண்டிய 12 வகை மாந்தர்களையும் அவன் கண்காணித்தே வந்தான். நண்பன், பகைவன் , நண்பனின் நண்பன் , நண்பனின் பகைவன், பகைவனின் நண்பன், நடுநிலையில் இருப்பவன், உதாசீனபடுத்துபவன் என ஒரு அரசன் 12 வகையான கண்காணிப்பை செய்யவேண்டும் அதைச் சரியாக செய்தான் தசரதன்.
இதனால் ஆபத்து காலத்தில் இருந்ததை போலவே போர் அற்ற அமைதி காலத்திலும் ஓய்வு காலத்திலும் அவன் மிகுந்த எச்சரிக்கையாய் இருந்தான். ஒரு அரசன் சிறு பிழை செய்தாலும் சிறு கவனக்குறைவு செய்தாலும் லட்சுமி நீங்கிவிடுவாள் என்பதால் மிகுந்த கவனத்துடன் அவன் நாட்டை வழிநடத்தினான். இதனால் லட்சுமி மிக மகிழ்ந்ததால். அவன் செல்வம் அங்கே தங்கியிருந்தது.
தாமரையினைக் கையில் வைத்திருப்பவளும் செல்வத்தின் அதிபதியுமான லட்சுமி தேவி தசரதன் தன்னிடம் இரந்து நிற்போரை அவமதிக்காத தசரதனின் குணத்தில் மகிழ்ந்து அவன் அரண்மனையிலே இருந்தாள், விஷ்ணுவினை விட்டு நீங்காத அவள் அந்த விஷ்ணுவின் அம்சம் கொண்ட தசரதனிடத்திலும் நீங்காமல் மகிழ்ந்திருந்தாள்.
மலையில் பிறக்கும் நதி கடலை தேடிக் கணவனாய் அடைதல் போல கணவனைத் தெய்வமாய் கருதும் பெண்கள் மூவர் ஷத்திரிய வீரனான அவனைக் கணவனாக தேடி வந்து அடைந்தார்கள்.
தெட்சண கோசலை நாட்டு அரசன் மகள் கௌசல்யா , மகத நாட்டு மன்னன் மகள் சுமித்ரா, கேகய நாட்டு அரசன் மகள் கைகேயி என மூவரும் அவன் மனைவியராகி அவனால் பெருமை அடைந்தனர், அவனும் அவர்களால் பல பெருமைகளை அடைந்தான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 35
மூன்று மனைவியரை பெற்ற தசரதன் இந்திரனைப் போலவே அறிவு, வீரம், செல்வம் என மூன்று வரங்களையும் கொண்டவனாய் இந்திரனுக்கு நிகரான ஆட்சியினைச் செலுத்தினான். உலக மக்களை வழிநடத்த வந்த பூலோக இந்திரனைப் போல் அவன் ஜொலித்தான்.
தேவலோக இந்திரன் தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தசரதனை அழைத்துக் கொண்டான், தசரதனனின் வீரத்தால் தேவலோகம் காக்கப்பட்டது, அதனால் அச்சம் நீங்கிய தேவலோக பெண்களெல்லாம் அவனின் பெரும் வீரத்தை தங்கள் பாடல்களில் புகழ்ந்து ஆடிப்பாடினார்கள்.
பொல்லாத அசுரர்கள் இந்திரனின் படையோடு மோதும் போதெல்லாம் பெரும் புழுதி எழாதபடி தசரதன் தடுத்தான், அவன் வில்லேந்தி இந்திரன் முன்னின்று அசுரர்களை அழித்துப்போட்டதால் அவர்களின் குருதி வெள்ளமென பாய்ந்து தரையினை நனைத்துப்போட்டது இதனால் புழுதி எழாமல் அடங்கிற்று.
தசரதன் யாகங்கள் பல செய்பவன், அதனால் யாகம் செய்யும் காலத்தில் அவன் தவசிகள் கோலத்தில் காட்சியளிப்பான், மான் தோலை அணிந்து இடையில் தர்ப்பத்தின் கயிறை அணிந்து அத்தி மரத்தால் செய்த தண்டத்தை ஏந்தியிருப்பான், யாகம் செய்வோர் நகத்தால் உடலை சொரியக் கூடாது என்பதால் கையில் மான் கொம்பையும் வைத்திருப்பான், இப்படியான யாகசாலை கோலத்தில் இருக்கும் தவசிகளிடம் சிவபெருமான் உறைவார் என்பதால் தசரதனிடமும் சிவனின் அம்சம் தெரிந்தது.
தவமும் யாகமும் செய்த தசரதர், யாகத்தின் முடிவால் செய்யப்படும் ஸ்நானத்தால் தூய்மையான நிலையினை அடைந்தவன், இன்னும் புலன்களை அடக்கிய யோகி நிலையில் இருந்ததால் தேவர்களில் ஒருவராக அவர்களுடன் சரிக்குச் சரி அமர்ந்தார், இவ்வுலகில் எந்த அரசனுக்கும் பலம் வாய்ந்த அசுரர்க்கும் அவன் தலை வணங்கியதில்லை. மாறாக, உலகம் வாழ மழைபொழியும் இந்திரன் ஒருவனுக்கே செவிசாய்த்தான்.
அவன் யமன், குபேரன், இந்திரன் என மூவருக்கும் சமமான இடத்தை பெற்று அவர்களின் செயல்களைச் செய்து வந்ததால் அவனை வணங்கும் பொருட்டு பூமியில் புதிய புஷ்பங்களுடன் அவற்றின் இனிய வாசனையுடனுன் வசந்தகாலம் எழுந்தது, அரசன் தசரதனைப் பூக்களால் வணங்கும் பொருட்டு அது மலர்களோடு எழுந்தது.
அந்நேரம் சூரியனும் குபேரன் இருக்கும் வடதிசை நோக்கி செல்லத் தன் தேர் சாரதி அருணனைப் பணித்தான், அருணனும் சூரியத் தேரின் குதிரைகளைத் தென் திசையில் இருந்து வடக்கு நோக்கி திருப்பினான், பூலோகத்தார் அதனை உத்ராயண காலம் எனச் சொல்லிக் கொண்டார்கள்.
குபேரன் பெரும் தனவான் என்பதால் அவனிடம் குதிரை விற்கப்போகும் குதிரை வியாபாரி போல் சூரியன் உற்சாகமாகச் சென்று கொண்டிந்தான்.
அந்த அழகிய வசந்த காலத்தில் செடிகளில் பூக்களும் மரங்களில் தளிர்களும் முதலில் வந்தன; மலர்கள் வந்ததும் வண்டுகள் வந்தன; வண்டுகள் மலருக்கு மலர் தாவி மகரந்த பொடிகளைத் தூவியதால் காய்கள் வந்தன; அவை கனிந்ததும் அவற்றை உண்ண குயில்கள் வந்தன; இவைகளால் இனிய காட்சியும் மணமும் காதுக்கு இனிய ஓசைகளும் எல்லா இடமும் கேட்கத் துவங்கின.
முறையான வகையில் செல்வம் கொண்டிருக்கும் மன்னனை நோக்கி யாசகம் வாங்குவோர் வந்து நிற்பது போல, அந்த வசந்த காலத்தில் தேன் நிறைந்த தாமரைகளை நோக்கி வண்டுகளும் அன்னப் பறவைகளும் வந்து குவிந்தன.
அழகான வசந்த காலத்தில் அசோக மரங்கள் இளம் தளிராலும் மலர்களாலும் குலுங்கின, பெண்கள் அசோக மரத்தின் தளிரைப் பூக்களோடு காதோரம் ஆசையாய் சொருகி மகிழ்ந்தனர், மரங்களில் இருக்கும்போதே அழகாகத் தோன்றிய அந்த தளிர்கள் பெண்களின் காதோரம் வந்தபோது இன்னும் அழகாயின. அப்பெண்களின் அழகோ இன்னும் இன்னும் கூடிற்று.
அப்பெண்களைக் கண்ட ஆண்களுக்குள் ஆசை நெருப்பினை அந்த அழகிய காட்சி எரியவைத்தது.
அமைதியான ஆண்கள் மனதில் அலங்காரமும் அழகும் ஒருசேர உரசிவிட்டு, சிக்கிமுக்கி கற்களில் இருந்து எழும் நெருப்பை போல் அம்மனதை எரியவைக்கும் சக்தி பெண்கள தவிர யாருக்கு உண்டு?
வசந்தகாலத்தைத் தரும் பூமி லட்சுமி தன் நெற்றி, கண், கன்னம், தோள், மார்பு என அழகாக பூசி வரையும் வண்ணங்கள் போல மலர்கள் பூத்துக் கிடந்தன, பெண்கள் தங்கள் அங்கத்தில் வரையும் மீன், இலை உள்ளிட்ட அழகிய வண்ண வடிவங்கள் போல் இருந்தன, அந்த மலர்களில் நிரம்பிய தேனுக்காக வரும் வண்டுகளின் இனிய ரீங்காரத்துக்கு அம்மலர்களே காரணமாகவும் இருந்தன.
மகிழம் உள்ளிட்ட சில மரங்கள் பூக்க தோஹதம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அழகான பெண்கள் தங்கள் வாயில் இனிய மதுவினை நிரப்பி அதன் வேரில் ஊற்றுவார்கள் அதற்கு தோஹதம் எனப் பெயர். அப்படிப் பெண்களின் வாயால் மது பெற்ற மரங்கள் அந்த மதுவினைத் தேனாக மலர்களில் வைத்தன, அந்த மலர்களைத் தேடி வந்த வண்டுகள் மொய்த்ததால் மரமே அடர்த்தியாயிற்று.
வசந்த காலத்தின் பலரசமரம் தன் சிவந்த மொட்டுக்களுடன் காட்சியளித்தது. அந்தச் சிவந்த மொட்டுக்கள் ரத்த சிவப்பாய் முனைகள் வளைந்து நின்ற கோலமானது, கலவி செய்யும் போது மிகுந்த ஆசையில் நாணத்தை விட்ட பெண் ஒருத்தி தன் நகத்தால் தன் அன்பன் மேனியில் நகத்தால் உண்டாக்கிய சிவந்த காயம் போலிருந்தது.
வசந்தகாலப் பெண்ணின் மோகத்தால் கீறப்பட்ட பரரசமரம் தன் மொட்டுக்களை அப்படிக் காயமாகக் காட்டி நின்றது.
வசந்த காலத்துக்கு முன்பு பனிகள் மிகுந்திருந்தன, அந்தப் பனியினைப் போக்க சூரியனாலும் முடியவில்லை. இதனால் பெண்களின் உதடு குளிரால் வெடித்திருந்தது, குளிர்மிகுந்த நேரத்தில் முத்தும் பொன்னும் கொண்ட மேகலையினைக் கூட அவர்கள் இடையில் அணிந்திருக்கவில்லை.
வசந்த காலத்தில் சூரியனால் அந்தப் பனி குறைந்தது. இதனால் பெண்களின் உதடுகள் மீண்டும் அழகாயின அவர்கள், அவர்கள் இடையில் மீண்டும் மேகலை வந்து ஒளிவீசிற்று.
அழகான அக்காலத்தில் மாமரத்து கொம்பினில் அரும்புகள் துளிர்த்தன, அவை காற்றில் அசைந்த காட்சியானது மாமரம் அபிநயம் பிடித்து பரதம் ஆட முயல்வது போலிருந்தது, காற்றில் அசையுற ஆடிய மாந்தளிர்கள் ஆசைகளை வென்ற முனிவர்கள் மனதையும் கலைத்துப் போட்டு ஈர்ப்பது போலிருந்தது.
வசந்த கால துவக்கம் மெல்ல மெல்ல பரவிற்று. முதலில் மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசின, வசந்தம் முழுக்க பரவியிருக்கவில்லை என்பதால் ஒருசில குயில்களே கூவத் துவங்கின, அது அன்பானவன் அருகில் நிற்கும் நாணமிக்க பெண்கள் பேசும் மிகக் குறைவான வார்த்தை போல் இருந்தது.
வசந்தம் பெருகும் போது எல்லா இடமும் கொடிகள் அழகான மலர்களைக் கொண்டிருந்தன, அவற்றின் மணத்தினால் ஈர்க்கப்பட்ட வண்டுகள் அங்குச் சூழ்ந்து ரீங்காரமிட்டன, காலையில் மலர்களின் மேல் சூரிய ஒளி பட்டவுடன் அவை மின்னி மெல்லப் புன்னகைப்பது போல் தோன்றின, இதமான மெல்லியக் காற்றில் அக்கொடிகள் அசைந்து கொண்டிருந்தன.
இக்காட்சியானது வண்டுகள் எழுப்பிய இன்னிசையில் கொடிகள் மலர்களோடு சிரித்தபடி நடனமாடி மகிழ்வித்தது போலிருந்தது, வசந்தகாலத்தை கொடிகள் நடனமாடி இன்முகத்தோடு வரவேற்ற காட்சியாய் இருந்தது.
பெண்கள் இனிய மது அருந்தி வசந்த காலத்தை வரவேற்று மகிழ்ந்தார்கள், மது எப்போதுமே மன்மதனின் துணைவனாகும். பெண்கள் பல வகை கேளிக்கைகளைச் செய்து அன்பானவனை முழுக்க மகிழ்விக்க மது துணை செய்யும், அளவோடு பெண்கள் அருந்தும் மது அவர்கள் கணவன் மேல் முழு அன்புகொண்டு எல்லா இன்பங்களையும் திறக்கும் திறவுகோலாய் இருந்தது.
இனிய வசந்த காலத்தில் வீடுகளின் அருகில் உள்ள குளங்களில் தாமரைகள் பூத்திருந்தன. நீர்வாழ் பறவைகள் அங்கு விரும்பி வந்து நீந்தி விளையாடின. இந்தக் காட்சி அழகிய முகமும் ஒலிக்கும் மேகலை அணிந்த பெண்களின் மனதில் மகிழ்ச்சி தரும் காட்சியாய் இருந்தது.
கார் காலத்தில் இரவு பொழுது நீண்டிருந்தது. அது கருமையாகவும் இருந்தது. வசந்த காலத்திலோ பொழுது நீண்டு இரவு குறுகிற்று. அதுவும் சந்திர ஒளியில் இரவும் கலை இழந்தது. அந்த இரவுபெண் வசந்தகாலம் எனும் ஆணால் நிராகரிக்கபட்டவள் போல் கலை இழந்துபோனாள் என்பது போல் இரவு பொழுது வெளிறிக் கிடந்தது.
வசந்தகால தொடக்கத்தில் பனி முற்றிலும் விலக சந்திரனின் ஒளி முழுக் கதிர்களோடு பிரகாசித்தது, அந்தக் கிரணங்கள் கலவி இன்பம் பெறுவோரின் களைப்பை நீக்கி இன்னும் உற்சாகத்தை கொடுத்தது.
வசந்த காலத்தில் மன்மதன் மீன் கொடியேற்றி ஆட்சி செய்கின்றான் என்பதால் மானுடன் உள்பட எல்லா உயிர்களிடமும் மயக்கமும் காதலும் தோன்றுகின்றன, அந்த மன்மதனின் பலத்தை சந்திரன் இன்னும் அதிகரித்துக் கொடுத்தான்.
(தொடரும்..)