காளிதாசனின் ரகுவம்சம் : 51-55

காளிதாசனின் ரகுவம்சம் : 51

முற்றிய காமம் மூளையினைச் சிதைக்கும் என்பதுபோல காளை போன்ற ராமன் மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகை தன் விருப்பத்தைதா தெரிவித்தாள், சீதை எனும் பெண் அங்கே இருந்தபோதும் அவளைத் தாண்டி தன் ஆசையினை வெளிப்படுத்தினாள், மலர் வாசமற்றது போனது போல அந்தச் சூர்ப்பனகை நாணமற்றுப் போனாள்.

அழகிய தோற்றமுடைய ராமன் தன்மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகையினை நோக்கிப் “பெண்ணே, நான் மனைவியுடன் இங்கே இருக்கின்றேன் க்ஷ, நீ தனித்திருக்கும் என் தம்பியினை அடைவாயாக” என லட்சுமணனை நோக்கி அவளை அனுப்பினான், தன் தம்பிமேல் அவன் கொண்ட நம்பிக்கை அப்படி அனுப்ப வைத்தது.

ராமனின் சொல்லுக்குக் கட்டுபட்டாள் சூர்ப்பனகை, காற்றில் ஆடும் தென்னைப் போல ராமனின் சொல்லுக்கு அவள் கட்டுப்படும்படி அந்த மயக்கம் இருந்தது, ஆனால் லட்சுமணனோ தன் அண்ணனைக் காக்கும் கடமையில் இருப்பதால் ஒரு நொடிக் கூட அவளுக்குத் தரமுடியாது எனச் சொல்லிவிட அவள் மீண்டும் ராமனிடமே சென்றாள்.

வெள்ளம் வற்றிய நதி மெலிந்து தன் ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு கரையினைத் தொட்டுச் செல்வது போல அவள் ராமனிடமும் லட்சுமணனிடமும் மீண்டும் ஓடி ஓடி வந்தாள்.

தான் கொண்ட ஆசையினால் இப்படித் தடுமாறும் சூர்ப்பனகையினை நோக்கி சீதை சத்தமிட்டுச் சிரித்தாள், அந்தச் சிரிப்புத்தான் பௌர்ணமி காலத்தில் பொங்கும் கடல்போல சூர்ப்பனகையின் மனதைக் கொந்தளிக்கச் செய்தது.

பௌர்ணமி போன்ற சீதை பிரகாசமாகப் புன்னகைக்க அந்தச் சூர்ப்பனகை மனம் கடல் போல் அவமானத்தில் ஆர்ப்பரித்து.

அப்படி ஆவேசமான சூர்ப்பனகை “ஹே பெண்ணே, ஒரு பெண்மான் பெண் புலியினைச் சீண்டியதுபோல் நீ உன் பரிகாசத்தால் என்னைச் சீண்டிவிட்டாய், அதன் பலனை இப்போது காண்பாய்” எனச் சொல்லி தன் பயங்கர வடிவினைக் காட்டியபடி அவள் மேல் பாய்ந்தாள்.

சூர்ப்பனகையின் அந்த இடிபோன்ற குரலைக் கேட்ட சீதை அஞ்சியபடியே ராமன் பின்னால் ஒடுங்கிக் கொண்டாள், அந்நேரம் சூர்ப்பனகை தன் ராட்சச உருவை அடைந்தாள். அது அச்சமூட்டும்படி இருந்தது, ஆலமர விதை நொடியில் மரமானது போல் அவள் பெரும் உருவம் காட்டி மிரட்டினாள்.

அரக்கர்கள் தங்கள் பசப்பினை விட்டு சுயகுணத்துக்குத் திரும்பும்போது அவர்களின் சுயரூபமும் தானே வரும், அப்படிச் சூர்ப்பனகை ஆத்திரத்தில் நின்றபோது அவள் இயல்பான ராட்சத குணத்தைப் பெற்றுக்கொண்டாள், அவளின் குரலின் ஆவேசத்தையும் மூர்க்கத்தையும் கொண்டே அவள் ராட்சத வடிவை பெற்றுவிட்டாள் என்பதை அவள் முகம் காணாமலே உணர்ந்தான் லட்சுமணன்.

அதனால் ஆசிரமத்துக்குள் ஓடியவன் தன் குறுவாளை எடுத்து வந்து அவள் காதுகளையும் மூக்கையும் அறுத்துப்போட்டான், ராட்சரின் சக்தி மூக்கின் நுகர்விலும் செவியின் ஓசையிலும் உண்டு என அறிந்தவன் அதைச் செய்தான், அதனால் அரக்க வடிவடைந்ததால் அழகற்ற சூர்ப்பனகை மீண்டும் அவலட்சணம் அடைந்தாள்.

சூர்ப்பனகையினை அதாவது விரலில் நீண்ட நகமுடைய அந்தச் சூர்ப்பனகை ஆகாயத்தில் எழும்பியவளாய் தன் நகமிக்க விரல்களைக் காட்டி ராம லட்சுமணர்களை அச்சுறுத்தியபடியே வேகமாகப் பின்வாங்கிச் சென்றாள்.

அப்படிச் சென்றவள் ஜனஸ்தானம் எனும் ராவணின் எல்லையினை அடைந்தாள், அங்குத் தனக்கு நேர்ந்த அவமானம் ராட்சத குலத்துக்கே நேர்ந்துவிட்ட அவமானமென தன் ஒன்றுவிட்ட தம்பியானவனும் கொடியவனுமான கரன் என்பவனிடம் சொன்னாள்.

அவளின் அலங்கோலமும் கேவிய குரலும் கேட்ட கரண் தன் சேனையோடு கிளம்பினான், அவள் முன்னே வழிகாட்ட கரணின் சேனை பின்னால் வந்தது, அங்கஹீனமான ஒருத்தியினை முன்னிறுத்தி வந்த அசுரர் கூட்டம் அது அபசகுணம் என்பதை அறியாதபடி வேகமாய் வந்தது.

ஆயுதங்களுடன் வேகமாக வந்துகொண்டிருந்த அரக்கக் கும்பலை தன் வில்லால் வென்றுவிடலாம் என வில்லை உயர்த்திய ராமர் சீதையினைக் காக்கும்படி லட்சுமணனுக்கு உத்தரவிட்டு அரக்கச் சேனையினை எதிர்கொண்டார்.

பதினான்காயிரம் அரக்கர்களை ராமன் ஒருவனே தன்னந்தனியாக எதிர்த்துப் பாணங்களைப் பாய்ச்சினான், ஆனால் அந்த பதினான்காயிரம்பேரும் தங்கள் முன் ஒவ்வொரு ராமன் அதாவது பதினான்காயிரம் ராமன் நின்று மோதுவதுபோல் குழம்பிப் போனார்கள், ராமனின் வேகம் அப்படி இருந்தது.

கரணின் தளபதியான தூஷன் ராமனை தீவிரமாக எதிர்த்தான், எப்போதும் நற்பெயர் பெறும் ராமன் தன்மேல் விழும் பழியினை நீக்குவது போல் தூஷனனைச் சண்டையில் இருந்து நீக்கும்படி வேகமானான்.

ராமனின் அம்புகள் ஒரே நேரம் கரண், தூஷனன், திரிசரஸ் எனும் மூவரையும் குறிவைத்தன, அவ்வம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏகப்பட்டது என்றாலும் ஒரே வேகத்தில் வந்ததால் மூன்றும் ஒன்றாக ஏவப்பட்டது போல் இருந்தது, ராமன் பாணம் தொடுத்த வேகம் அப்படி இருந்தது.

ராமனின் அம்புகள் திரிசரஸ், தூதனனின் உடலை துளைத்து மின்னல் போல் சென்றதால் அவற்றில் ரத்த்கறை இல்லை. இதனால் ராமன் கையில் இருந்தது போலவே அந்த அம்புகள் புத்தம் புதியதாய் இருந்தன, அந்த அரக்கச் சேனையில் ராமனின் பாணங்கள் அவர்கள் தலையினை அறுத்துப்போட்டதால் உடல்கள் கொஞ்சநேரம் நின்று சரிந்தன, தலையும் உடலும் ஒட்டிய யாரும் அங்கு இல்லை.

இவ்வாறு அரக்கசேனை முழுக்க ராமன் அழித்துப்போட்டதால் அங்கு வந்த கழுகு கூட்டங்க்ளின் நிழல் மேகம் போல் விழுந்தது.

கரண் முதலான வலுவான அசுரர்கள் அழிந்ததும் மிகுந்த ஆக்ரோஷமான சூர்ப்பனகை இலங்கை வேந்தனான ராவணனைத் தேடிச் சென்றாள், அவள் மனம் முழுக்கச் சீதையினைப் பழிவாங்கும் வஞ்சமே நிறைந்திருந்தது.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 52

சூர்ப்பனகை ராவணனிடம் நடந்த அனைத்தையும் சொன்னபோது அவன் பெரும் ஆத்திரமடைந்தான். தன் தங்கையினை அங்கபங்கம் செய்து, கரண் முதலானோரை ராம லட்சுமணர் அழித்துப்போட்டது அவனின் பத்து முகங்களிலும் ராமன் காலால் மிதித்தது போல் அவமானமாயிருந்தது.

அவன் ராம லட்சுமணரின் பலம் பற்றி அறிந்ததால் அவர்களுடன் நேராக மோதாமல் மாரீசனை மாய மான்வடிவில் அனுப்பி அவர்கள் இருவரையும் திசைமாறச் செய்து தனித்து நின்ற சீதையினை அவன் கவர்ந்து சென்றான். யாருமற்ற சீதைக்காக தசரதனின் நண்பனும் நீண்ட ஆயுள் கொண்டதுமான ஜடாயு எனும் கழுகு மட்டும் போராடியது, ஆனாலும் ராவணனை தடுக்கமுடியாமல் அது தன் சிறகுகளை இழந்து வீழ்ந்தது.

அந்த மாய மானால் திசை திருப்ப பட்ட ராம லட்சுமணர் திரும்ப வந்து சீதையினைக் காணாமல் தேடினார்கள். அங்கே அறுபட்ட சிறகுகளுடன் வீழ்ந்து கிடந்த நிலையிலும் தசரதனுக்கான தன் நன்றிக்கடனை தீர்க்கும் பொருட்டு உயிரை நெஞ்சில் பிடித்திருந்த ஜடாயுவினைக் கண்டார்கள்.

ஜடாயு தன் வார்த்தைகளால் சீதையினை ராவணன் கவர்ந்து சென்றான் எனச் சொன்னான். ஆனால், தன் உடல் காயங்களால் தான் சீதையினைக் காக்க‌ எவ்வளவு போராடினேன் என்பதை வார்த்தைகளின்றி சொன்னபடி உயிர்நீத்தான்.

ஜடாயுவின் மரணத்தால் கொஞ்சம் மறந்திருந்த தசரதனின் பிரிவு வலி மீண்டும் ராமனுக்குள் பதிமூன்று வருடம் கழித்து எழுந்து பெரும் சோகத்தைக் கொடுத்தது. தசரதனுக்குத் தன்னால் செய்யமுடியாத கடமையினை ஜடாயுவுக்குச் செய்து தன் கைகளால் தீ மூட்டிய ராமன் எல்லாக் கிரிகைகளையும் செய்து முடித்தான்.

ராவணனைத் தேடிச் செல்லும் வழியில் நீளமான கைகளையும் வாயில் வயிற்றினையும் நகரமுடியாக் கால்களையும் கொண்ட கபந்தன் எனும் அசுரனை ராமன் எதிர்கொண்டான், அவன் நீண்ட தோள்களை ராமபிரான் வெட்டிப் போட்டதால் கபந்தனின் சாபம் நீங்கிற்று. தனக்கு விமோசனம் கொடுத்த ராமனுக்கு நன்றி கடனாக சுக்ரீவனை அவனுக்குக் காட்டி கொடுத்து அவன் நட்பைப் பெறும்படி வழி செய்தான் கபந்தன்.

ராமனைப் போலவே ராஜ்ஜியத்தையும் மனைவியினையும் பறிகொடுத்துத் தவித்துக் கொண்டிருந்த சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இயல்பான பந்தம் உடனே உருவாயிற்று.

சுக்ரீவனுக்காக வாலியினை வதம் செய்தான் ராமன், இரும்பு இருக்கும் இடத்தில் தங்கத்தை வைத்தது போல் வாலி இருந்த அரியணையில் சுக்ரீவனை அமரவைத்தான்.

ராமனுக்காக சுக்ரீவன் ராஜ்ஜியத்தின் வானரங்கள் அங்குமிங்கும் அலைந்து சீதையினைத் தேடின, அவை ராமனின் மனவோட்டம் போல் எங்கெங்கோ சுற்றி சுற்றி அவளைத் தேடியலைந்தன‌.

தென் திசை சென்ற வானரங்கள் ஜடாயுவின் அண்ணன் சாம்பாதியினைக் கண்டன, அவனே சீதையினை ராவணன் இலங்கைக்குக் கொண்டு சென்றதைச் சொன்னான், அந்த வானரங்களில் ஒருவனான அனுமன் ஆசை துறந்த ஞானியர் பிறவிக்கடலை கடப்பது போல் கடலைக் கடந்து லங்காபுரிக்குச் சென்றான்.

அங்கே ராவணின் அசோகவனத்தில் விஷக்கொடிகள் நடுவே சஞ்சீவினி கொடிபோல் வாடிக் கிடந்த சீதையினைக் கண்டான்.

சீதை தன்னை ராமனின் தூதுவன் என நம்ப வேண்டி அனுமன் ராமனின் மோதிரத்தை சீதையிடம் கொடுத்தான், அந்த மோதிரத்தை கண்ட சீதையின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து அதன் மேல் துளித் துளியாக விழுந்தது, அது அம்மோதிரத்துக்கு அவள் கொடுக்கும் அன்பான வரவேற்பாய் இருந்தது.

ராவணனைக் காண விரும்பிய அனுமன் அங்கு மரங்களைப் பிடுங்கி அரக்கர்களை அடித்துக் களம்பேரம் செய்தான். அவனை அடக்க வந்த ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்றுபோட்டவன் பெரும் சேதம் விளைவித்தான், இதனால் அவனை அடக்க பிரமமஸ்திரத்தை ஏவினான் ராவணனின் மகன் இந்திரஜித்தன்.

அதற்குச் சிறிது நேரம் கட்டுப்பட்ட அனுமன் பின் சிலிர்த்தெழுந்து சீதையின் நெஞ்சில் இருந்த அக்னியினை ராவணன் மாளிகையில் இறக்கிவைத்து எரியவிட்டான், அப்படியே ராமனுக்காக சீதையிடம் இருந்து ஒளிமிக்க சூடாமணி ஒன்றைப் பெற்று கடலை மேகம் போல் தாவிக் கடந்தான்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 53

அரக்கர்களின் தலைநகரான லங்காபுரியினை எரித்துப் போட்டு லாவகமாகப் தப்பிய அனுமன் சீதை கொடுத்த சூடாமணியினை ராமனிடம் கொடுத்தான். தானாக உருவானதும் ஒளிமிக்கதுமான அந்தச் சூடாமணி சீதையின் களங்கமற்ற மனதின் உருவமாய் இருந்தது.

அந்தச் சூடாமணியினை அன்பினால் மிகுந்த ராமன் தன் மார்போடு வைத்துக் கொண்டான், அது சீதையினை அணைத்த ஸ்பரிசத்தை அவனுக்குக் கொடுத்ததால் கண்ணை மூடி கொஞ்சநேரம் அந்தப் பரவசத்தில் சஞ்சரித்தான்.

சீதை இருக்குமிடம் தெரிந்ததால் ராமன் மிகுந்த நம்பிக்கையுடன் உற்சாகமடைந்தான், சீதை இருக்கும் லங்காபுரியினைச் சுற்றியிருக்கும் கடல் அதனால் அவனுக்குக் கடக்கக் கூடிய சிறு அகழியாகத் தெரிந்தது.

வானரப்படையின் உதவியுடன் ராமன் கடலைக் கடந்து சீதையினை மீட்கக் கிளம்பினான், அந்நேரம் வானரங்களில் சில பறக்கும் சக்தி கொண்டவையாக இருந்தாதால் அவை பூமியில் நடவாதபடி ஆகாய மார்க்கமாகச் சென்றன, தரையிலும் வானிலும் படை நடத்தியபடி ராமன் சென்றான். இதனால் வானிலும் தரையிலும் பெரிய சேனையால் இட நெருக்கடி ஏற்பட்டது.

ராமன் லங்காபுரி நோக்கி வருகின்றான் என்றதும் நற்புத்தியினை ராட்சத லட்சுமியின் கருணையால் பெற்றிருந்த ராவணனின் தம்பியான விபீஷ்ணன் தென் கடலின் கரையில் இருந்த ராமனிடம் வந்து சரணடைந்தான்.

சரியான நேரம் எடுக்கப்படும் நல்ல உபாயங்கள் பெரும் பலனைத் தரும், அவ்வாறே தன்னைச் சரணடைந்த விபீஷ்ணனுக்கு அரக்கர்களின் ராஜ்ஜியத்தைத் தருவோம் என ராமன் உறுதியளித்தான்.

கடலைக் கடக்க வேண்டி வானரங்களுடன் ஒரு பாலத்தை கட்டினான் ராமன், வளைந்து நெளிந்த அப்பாலம் பகவான் விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன் ராமனுக்காக பாற்கடலை விட்டு இந்த உப்புக்கடல் மேல் மிதந்து படுத்தது போல் இருந்தது.

அந்தப் பாலம் மூலம் வானரப்படையுடன் இலங்கையினை அடைந்தான் ராமன், அவரோடு சென்ற படையின் ஒரு பிரிவான பொன்னிறமான வானரங்கள் அங்கிருந்த தங்கம் பதித்த கோட்டைச்சுவர்களைச் சுற்றி நின்றன, இதனால் இரு தங்கச் சுவர்களைக் கொண்ட நகரம்போல் லங்காபுரி தோன்றிற்று, சீதையினைச் சிறைபிடித்த ராவணனை அவன் மக்களோடு இப்படி முற்றுகை சிறையிலிட்டான் ராமன்.

அதைத் தொடர்ந்து ராவணனுக்கே வெற்றி என அரக்கர்கள் ஆர்ப்பரிக்க, ராமபிரானுக்கே வெற்றி என வானரங்கள் ஆர்ப்பரிக்க மிகப் பயங்கரமானதும் எட்டுத்திசையும் பரவக் கூடியதும் எல்லா உலகமும் அஞ்சுவதுமான பெரும் போர் அங்கு ராமனின் வானரச் சேனைக்கும் ராவணனின் அரக்கச் சேனைக்கும் இடையே தோன்றிற்று.

அரக்கர்கள் பெரிய ஆயுதங்களுடன் வந்தார்கள். ஆனால், வானரங்களுக்கு அவர்களின் கூரிய நகமிக்க பலமான கைகளே ஆயுதங்களாயின. அரக்கர்களின் கையில் இருந்த பரிகாயுதம் எனும் உலக்கை போன்ற ஆயுதங்களை மரங்களை பிடுங்கி வீசியும், அரக்கர்களின் கதாயுதத்தை பெரிய பாறைகளை எறிந்தும் முறியடித்த வானரங்கள் அரக்கர்களின் யானைப்படையினைக் குன்றுகளைப் பெயர்ப்பதைப் போல யானைகளைப் புரட்டி அடித்து வீசி அழித்தனர்.

யுத்தம் இங்கே துவங்கும்போது ராவணன் அதை அறிந்தவனாக இல்லை. அவன் சீதையினை ஏமாற்றி மனதால் அவள் உடைந்து அவன் வசப்படும்படி தந்திரம் செய்தான். அதன்படி வித்யுஜ்ஜிஹ்வன் எனும் அரக்கனின் மாய வேலைப்படி ராமனின் தலையினைச் செய்து அதைத் தட்டில் வைத்து சீதை முன் வைத்துச் சொன்னான், “ஹே பெண்ணே, உன்னை மீட்க வந்த கணவனின் தலை இதோ, இனி உன்னை மீட்க எவர் உண்டு, அதனால் என்னை மனமார மணப்பதை தவிர உனக்கு வழியில்லை” என மிரட்டினான்.

அந்தத் தலைகண்ட சீதை அது ராமனின் தலையென நம்பி மூர்ச்சையானாள், அந்நேரமே யுத்தம் தொடங்கிய செய்தி கேட்டு ராவணன் அவ்விடம் விட்டு அகன்று சுவேவ பர்வதம் எனுமிடத்தில் முகாமிட்ட ராமனை நோக்கிச் சென்றான். அவனுடன் அரக்கன் வித்யுஜ்ஜிஹ்வனும் சென்றாதால் அந்த மாய ராமன் தலை தானாக மறைந்தது.

மூர்ச்சை அடைந்திருந்த சீதைக்கு நீர் தெளித்து அவளை இயல்பாக்கிய திரிசடை என்பவள் அது ராவணன் செய்த மாயை என்பதைச் சொல்லி ராமன் யுத்தம் தொடங்கிய செய்தியினைச் சொல்லி அவளைத் தேற்றினாள்.

திரிசடையின் மொழியாலும் அந்த மாயத் தலை மறைந்ததாலும் நம்பிக்கை கொண்ட சீதை துக்கத்தை ஒழித்தாள். ஆனால், வெட்கம் அடைந்தாள், ராமன் இறந்தான் எனும் செய்திகேட்டு தான் இறக்காமல் இருந்ததை எண்ணி தனக்காக மரணத்துடன் போரிடும் அன்புமிக்க ராமன் இறந்தான் எனும் செய்தி கேட்டும் தான் இறக்காமல் எழுந்துவிட்டதை எண்ணி வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டாள்.

அங்கே யுத்தம் கடுமையாக நடந்தது. ராவணனின் மகன் இந்திரஜித்தன் பெரும் ஜாலம் செய்தாலும் பலவகை அஸ்திரங்களைப் பாவித்தாலும் ராம லட்சுமணரை அவனால் வெல்ல இயலவில்லை. ஆனாலும், யுத்த தர்மம் தாண்டி சூரியன் மறைந்தபின்பும் அவன் போரைத் தொடர்ந்தான். ராமரிடம் தேர், ஆயுதம் என எல்லாம் இழந்த அவன் இரவு துவங்கும் நேரம் அந்தரத்தில் மறைந்தபடி தன் பலமிக்க நாக அஸ்திரத்தால் ராம லட்சுமணரை கட்டிப்போட்டு தாக்கினான், நாகங்களால் கட்டுப்பட்ட ராம லட்சுமணர்கள் செயலற்றனர், லட்சுமணனோ மூர்ச்சையானான்.

தம்பியின் நிலை கண்டும் தன்னால் உதவ முடியவில்லையே என ராமன் கட்டுண்ட நிலையில் கலங்கியபோது அங்கே கருடன் தோன்றினான், தன் ஜென்ம பகைவனைக் கண்ட நாகங்கள் அங்கே சக்தி இழந்து ஓடின. கட்டுக்கள் நீங்கிய ராம லட்சுமணர்களைக் கருடன் தன் சிறகுகளால் தடவிக் கொடுத்தபோது அவர்களின் காயங்கள் மறைந்தன‌.

“ராமா! உன்னைக் காக்கவே நான் வந்தேன். நாகங்களால் பிணைக்கப்பட்ட உங்களைக் காக்க என்னைவிட யாராலும் முடியாது என்பதால் வந்தேன், நீ போரிடுவது மாய அரக்கர்கள் முன் என்பதால் கவனமாயிரு” எனச் சொல்லிவிட்டு பறந்தது.

புத்துணர்வுடன் ராம லட்சுமணர்கள் மறுநாள் போருக்கு வந்தார்கள். முன்பு இந்திரஜித்தனால் வந்த துன்பம் கனவில் வந்ததுபோல் கஷ்டம் கொடுத்து மறைந்து போனது.

கொடும் யுத்தம் தொடர்ந்தது, லட்சுமணனைக் காக்கும் பொருட்டு அவனுடன் சேர்ந்து கொண்டான் விபீஷ்ணன். ராமனின் அம்புகள் ராவணனைக் குறிவைத்தபோது லட்சுமணன் ராவணனின் கொடியினையும் அவன் சாரதியின் தலையினையும் பாணங்களால் வெட்டிப்போட்டான், விபீஷ்ணன் ராவணனின் குதிரைகளைக் கொன்றான்.

இதனால் மிகுந்த ஆவேசமான ராவணன் ஒரு வேலை எடுத்து விபீஷ்ணன் மேல் வீசினான். ஆனால், லட்சுமணனின் பாணம் அதை வழியிலே முறித்தது.

அதனால் இன்னும் ஆவேசமான ராவணன் தேவலோக மயன் கொடுத்த சக்திவாய்ந்த வேலை விபீஷ்ணனை நோக்கி எறிந்தான். தன்னை நம்பிய விபீஷணனைக் காக்க லட்சுமணன் எய்ந்த அம்புகள் பலனற்றுப் போக கடைசியில் தன்னையே அந்த வேலுக்குக் கொடுத்து விபீஷ்ணனை காத்து வீழ்ந்தான் லட்சுமணன்.

அந்த வேல் லட்சுமணனைப் பிளந்து அவனோடு தரையில் குத்தி நிலைத்தது, அதைக் கண்ட ராமன் ரதமும் குதிரையும் கொடியும் இல்லாத ராவணனைக் கடுமையாகத் தாக்க அவன் ஓடிப்போனான். அதன்பின் யாராலும் அசைக்க முடியாத அந்த வேலினை ஒடித்து லட்சுமணனை எடுத்த ராமன் வேலினால் துளைக்கப்பட்ட லட்சுமணனை மடியில் போட்டபடி தன் நெஞ்சம் பிளக்க துக்கத்தில் ஆழ்ந்தான், அந்த வேல் உண்மையில் ராமனின் மனதைப் பிளந்திருந்தது.

வனங்களிலே வாழும் வானரர்களுக்கு எல்லா மூலிகைகளும் தெரிந்திருந்தன. அதன்படி சுஷேணன் எனும் வானரன் அனுமனிடம் அவசரமாக சஞ்சீவினி மூலிகையினைக் கொண்டுவரச் சொன்னான், அதைத் தேடிச் சென்ற அனுமன் அதைத் தேடி கண்டறிய நேரமின்றி அக்கொடி இருக்கும் மலை சிகரத்தையே பெயர்த்துவந்தான், அந்த மூலிகையால் லட்சுமணனின் காயமெல்லாம் மறைந்து அவன் தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தான்.

லட்சுமணன் எழும்போது தானே உயிர்ப்பெற்று எழுவதாக மகிழ்ந்த ராமன் அனுமனைக் கட்டித் தழுவினான், தர்மமே உருவான ராமனின் மகிழ்வுக்குத் தானும் ஒரு காரணம் என்பதை அறிந்த அனுமனும் மகிழ்ச்சிக் கொண்டான்.

கண்டம் தப்பிய லஷ்மணன் அரக்கர்கள் பலரைக் கொன்று குவித்தான். இதனால் அழுகை என்றால் என்ன என்பதை அறியாத அரக்கர் குலப் பெண்களுக்கு அழுகையினை அவன் கற்றுக்கொடுத்தான்.

மழைக்காலத்தில் இடியோசையும் வானவில்லும் கொண்ட மேகத்தைக் கொண்ட வானம் சரத்காலத்தில் அமைதியாகிவிடும், அப்படி மீண்டும் போரிட வந்த இந்திரஜித்தனை லட்சுமணன் வதம் செய்தபின் அந்த யுத்தவானம் மழைக்கால வானத்தில் இருந்து தெளிவான அமைதியான சரத்கால வானத்துக்கு மாறிற்று, லட்சுமணன் இந்திரஜித்தனை அழித்துப் போட்டு அந்த வானத்தை காலம்போல் மாற்றிவைத்தான்.

ராவணனின் சேனை சரிந்து கொண்டிருப்பதைக் கண்டு களம்புகுந்தான் கும்பகர்ணன், அவனின் பெரிய உருவம் கண்டு வானரம் பல மோத அஞ்சியபோது சுக்ரீவன் பெரிய மரத்தை பிடுங்கி அவன்மேல் வீசி மோதினான். ஆனால், மலை ஒன்றை வீசி அவனைப் பிடித்து மூர்ச்சை அடையச் செய்து தன் அரண்மனை நோக்கி இழுத்துச் சென்றான். மூர்ச்சை தெளிந்த‌ சுக்ரீவன் அவனின் காதுகளைக் கரங்களால் பிய்த்துப்போட்டு அவன் மூக்கைக் கடித்துத் துப்பினான். இதனால் காதும் மூக்கும் இல்லாத சூர்ப்பனகையாக நின்ற கும்பகர்ணனின் காட்சி உளிகளால் செதுக்கப்படும் பெரிய சிற்பம் முழுமை அடையாதது போல் இருந்தது.

அப்படி அவனைச் சிதைத்த சுக்ரீவன் அவனிடமிருந்து தப்பி மீண்டும் ராமனிடம் வந்து சேர்ந்தான், ஆவேசமான கும்பகர்ணன் திரும்பி வந்து ராமனுடன் மோதினான்.

அவனைத் தன் பாணங்களால் வீழ்த்திப்போட்டான் ராம‌ன், தூங்குவதில் அதிக பிரியமுள்ள கும்பகர்ணா உன் அண்ணன் கெடுத்த உன் தூக்கத்தை நான் உனக்குத் தருகின்றேன், நிம்மதியாக நிரந்தரமாக உறங்கு என்பதுபோல் அவனை எழும்பாத உறக்கத்திற்கு அனுப்பினான் ராமன்.

கும்பகர்ணனை மீட்க வந்த பெரும் அரக்கப்படைகள் அங்கு எழுந்த புழுதி அரக்கர்களின் உடலில் இருந்து பெருகிய ரத்தத்தில் கரைவது போல கரைந்தே போயினர், அலை அலையாக வந்த அரக்கர்களை நொடியில் அழித்துப்போட்டன வானரப் படைகள்.

எல்லாச் சேனாதிபதிகளும் கடைசியாக இந்திரஜித்தனும் அவனைத் தொடர்ந்து கும்பகர்ணனும் வீழ்ந்தபின் ராவணன் தானே களம்புகும் கட்டயம் ஏற்பட்டது, இனி வாழ்வு அல்லது சாவு என இரண்டில் ஒன்றை அவன் முடிவு செய்யும் நேரம் அதுவானது.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 54

இனி ஒன்று தான் ராமனை வீழ்த்தவேண்டும் அல்லது தான் அவனால் வீழ்த்தப்படவேண்டும் எனும் முடிவுடன் இரண்டாம் முறையாக களத்துக்கு வந்தான் ராவணன்.

அவன் ரதத்தில் நின்றான், ராமனோ தரையில் நின்றான். அது சமான யுத்தம் அல்ல எனக் கருதிய இந்திரன் பொன் நிற குதிரைகள் கொண்ட தேரினை ராமனுக்கு அனுப்பி தந்தான்.

இந்திரனின் தேரோட்டியான மாதலியின் தோளைப் பற்றி தேரில் ஏறி அமர்ந்தான் ராமன், அப்போது அந்தத் தேரில் இருந்த இந்திரனின் கொடி மேல் ஆகாயக் கங்கையின் குளிர்ந்த காற்று வீசி நல்ல சகுனம் அது எனக் குறிப்பால் சொன்னது.

எந்தக் கவசத்தை இந்திரன் அசுரர்களுடனான யுத்தத்தில் அணிந்தானோ, எந்தக் கவசத்தில் அசுரரின் அம்புகள் மோதி தாமரை மலர்கள் போல் பலமற்று விழுந்தனவோ அந்தக் கவசத்தை மாதலி ராமனுக்குக் கொடுத்து அணிவித்தான், இந்திரனுக்கான அக்கவசம் ராமனுக்கும் சரியாகப் பொருந்திற்று.

முதன் முறையாக ராமனும் ராவணனும் தங்களுக்கு நிகரான எதிரியினைக் கண்டதால் முழுப் பலத்துடன் போரிட்டனர், தங்களை நிரூபிக்க அதை ஒரு வாய்ப்பாகக் கருதினர், இருவரின் வீரத்தால் அந்தக் களம் ஒப்பற்ற வீரத்தின் களமாய் யுத்தம் என்பதற்கு முழுப் பொருளைச் சொல்லும்படியாக இருந்தது.

ராவணன் தன் சுற்றமெல்லாம் இழந்து உடன்பிறந்தோர் மகன் எல்லாம் இழந்து தனியாக நின்றாலும் பத்துத் தலைகள், இருபது கைகள், நான்கு கால்கள் எனப் பெரும் உருவெடுத்து நின்றான், அதனால் அவன் தனியாக நின்றாலும் தாய்வழி வந்த அரக்கர்கள் பலர் நிற்பது போல் களத்தில் நின்றான்.

திக்பாகலகர்ளை வென்றவனும், தன் தலைகளை வெட்டி சிவனுக்கு அர்ச்சனை செய்தவனும், தன் பலத்தால் கைலாசத்தையே அசைத்தவனுமான ராவணன் எனும் பெரும் வீரனை ராமன் அவன் வீரத்துக்காக மதித்துச் சிறந்த வீரனோடு மோதுவதில் பெருமை கொண்டான்.

அதிக கோபம் கொண்ட ராவணன் நல்ல சகுனமாக துடித்துக் கொண்டிருந்த ராமனின் வலது தோளைக் குறிவைத்தான், சீதை சாய்ந்திருந்த தோள் அது என்பதால் கடுமையாக இலக்கு வைத்துப் பாணங்களைச் செலுத்தினான்.

அதில் தப்பிய ராமன் தன் அம்பினால் ராவணனின் நெஞ்சை தாக்கினான், அவனை ஊடுருவிச் சென்ற அம்பு அவன் வீழ்ந்தான் எனும் செய்தியினைப் பாதாளத்தில் இருக்கும் நாகர்களிடம் சொல்லும்படி பூமியின் ஆழத்துக்குச் சென்றது.

வாதம் செய்யும் இரு அறிஞர்கள் ஒருவரின் சொற்களை இன்னொருவர் சொற்களால் முறியடித்து வெற்றிப்பெற முயலுதல் போல ராமனும் ராவணனும் ஒருவர் அம்பினை மற்றொருவர் அம்பினால் முறியடித்து வெற்றிப்பெற முயன்றனர்.

இரு யானைகள் சண்டையிடும் போது சக்கரத்தினைக் கொண்ட மேடை பொதுவாக இருப்பது போல் ராமனும் ராவணனும் மாறி மாறி பராக்கிரமம் காட்டும்போது வெற்றி லட்சுமி யார் பக்கமும் சாயாமல் பொதுவில் இருந்தாள்.

ராம ராவண யுத்தத்தைக் காண வந்த தேவர்களும் அசுரர்களும் இருவரின் விடாபிடியான போரையும், ஒருவர் அஸ்திரத்தை இன்னொருவர் தடுக்கும் வித்தை கண்டு மலர்களைத் தூவினார்கள். ஆனால், அவை இருவர் மேலும் விழாதபடி அவர்கள் பாய்ச்சிய அஸ்திரங்கள் தடுத்துப்போட்டன‌.

யுத்தம் நீள்வதை அறிந்த ராவணன் ராமனைக் கொல்லும் பொருட்டு சதக்னீ எனும் இரும்பு ஆணிகள் கொண்ட ஆயுதத்தை வீசினான். அது யமனை வென்று அவன் பெற்ற கூடசால்மலி எனும் ஆயுதம் போலவே இருந்தது.

அந்தச் சதக்னீ ராமனைக் கொல்லும் என அசுரர்கள் ஆர்ப்பரித்த நேரம் ராமன் பிறைசந்திரன் போன்ற அஸ்திரங்களால் அதனை வாழை மரத்தை வெட்டுவது போல் எளிதாக வெட்டிப்போட்டான், அந்த ஆபத்தான கணை ராமன் தேரை அடையும் முன்பே இப்படிச் சிதறிப்போனது, அதைக் கண்டு தேவர்கள் ஆர்ப்பரித்தனர்.

உடலினுள் சிக்கிய முள் அம்புமுனை போன்றவற்றை வலியின்றி வெளியேற்றும் விசல்யகரணி எனும் மூலிகை போல சீதை மனதில் உள்ள வலியினை வெளியே போக்கும் பொருட்டு ராமன் பிரம்மாஸ்திரத்தை எடுத்து ராவணன் மேல் குறிவைத்து வீசினான்.

மந்திரம் சொல்லி ராமனால் வீசப்பட்ட பிரம்மாஸ்திரம் பத்துத் தலைகளையும் குறிவைத்து பத்து முனைகளுடன் விரைந்து பறந்து சென்ற காட்சி பத்துத்தலை நாகம் போல் இருந்தது.

கண்ணிமைக்கும் நொடியின் பாதி நேரத்தில் ராமனின் அஸ்திரம் ராவணின் பத்துத் தலைகளையும் வெட்டிப் போட்டது, அரைநொடியில் அவை அறுபட்டதால் அந்த வலியினைக் கூட ராவணால் உணரமுடியவில்லை.

ராவணின் தலைகள் ஒவ்வொன்றாய் வேகமாக விழும்போதும் அவன் உடல் விழவில்லை, அந்தத் தலைகள் செந்நிற குருதியுடன் வரிசையாக விழுந்து கிடந்த காட்சி இளங்காலை சிகப்புச் சூரியன் தடாக அலைகளில் பல பிம்பமாகத் தெரிவது போல் இருந்தது.

ராவணன் தலை முன்பும் அறுபட்டது, ஆனால் அவன் பெற்ற வரம் காரணமாக அவை மீண்டும் ஒட்டிக் கொண்டன, அப்படி இங்கும் ஒட்டிக்கொள்ளலாம் என எண்ணிய தேவர்கள் ராவணின் மரணத்தினை உறுதிசெய்யும் வரை தாமதித்தனர். அதனால் ராமன் மேல் மலர் தூவவுமில்லை வெற்றி தந்தூபிகள் ஊதப்படவுமில்லை.

நெடுநேரம் காத்திருந்த தேவர்கள் அவன் இறந்தான் என்பதை உறுதி செய்த பின்பே ராமன் மேல் மலர்களைத் தூவினார்கள், அப்போது திக்கஜங்கள் எனும் யானைகளின் கன்னங்களில் இருந்த மதநீரை பருகிய வண்டுகளும் அந்த மலர்களின் வாசனையால் அங்குக் குவிந்தன, மதநீரால் நனைந்திருந்த அவைகள் பறக்கமுடியாமல் திணறியபடி அங்குச் சுற்றிக்கொண்டிருந்தன‌.

தேவர்களின் பெரும் எதிர்பார்ப்பான ராவண வதம் முடிந்தபின் ராமன் வில்லை தளர்த்தி நின்றான், அவனிடமிருந்து விடைபெற்ற மாதலி இந்திரனின் தேரை சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லும்படி விடைபெற்றான், அந்தத் தேரின் கொடிக்கம்பம் முதல் எல்லா இடமும் ராவணின் பாணங்கள் பாய்ந்திருந்தன‌.

ராவணனை வீழ்த்திய ராமன் முன் சீதையினை அழைத்து வந்தான் விபீஷ்ணன், அவளின் கற்பை உலகறியச் செய்யும்படி தன் மேல் பாய்ந்த அம்பை தானே உருவி எடுப்பதுபோல் வலிமிக்க காரியம் ஒன்றைச் செய்ய நினைத்த ராமன் அவளிடம் சொன்னான்.

“சீதையே, மனைவியினை மீட்கமுடியாமல் கைவிட்டான் ராமன் எனும் அவப்பெயரைக் களையவே நான் இங்கு வந்து அவனை வீழ்த்தினேன், வேறு எந்த நோக்கமுமில்லை, நீ இங்கு ராவணனிடம் சிறைபட்டவளாதலால் இனி உனக்கு விடுதலை, அதனால் நீ எங்கும் செல்லலாம் நான் உன்னைத் தடுப்பதில்லல்லை” என்றான்.

ராமனின் சொற்கள் தீ அம்புகளாய் தன்னைச் சுட கொதித்த சீதை “வீரனே, நான் இங்கு மாசுபடாமல் இருந்தேன் எனபதை அக்னியில் இறங்கி நிரூபிப்பேன், நான் பொய் சொன்னால் அக்னி என்னை எடுத்துக்கொள்ளட்டும் இல்லையேல் அதுவே சாட்சி சொல்லட்டும்” என்றபடி லட்சுமணனை அக்னி மூட்டச் சொன்னாள்.

அவன் அப்படியே செய்ய மலர் மாலையுடன் அக்னிக்குள் புகுந்தாள் சீதை, அவள் மாசுபடாதவள் என்பதால் அந்த மலர்மாலை கூட வாடாதபடி காத்து அனுப்பிய அக்னி தேவன் தானே வந்து ராமனிடம் அவளுக்காய்ச் சாட்சி பகர்ந்தான்.

வானரங்களும் லங்காபுரி மக்களும் எல்லோரும் அறியும்படி அக்னி சாட்சியாய்த் தன் மனைவி களங்கமற்றவள் என நிருபித்த ராமன் ராவணின் புஷ்கபக விமானத்தை விபீஷணனிடமிருந்து அன்பளிப்பாய்ப் பெற்றுக்கொண்டு அதிலே அயோத்தி நோக்கி விரைந்தான்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 55

சீதையுடன் புஷ்ப விமானத்தில் எழுந்த ராமன் ஆகாயத்துகுரிய பண்பான ஒலியினால் அவளிடம் பல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தான். நீருக்குக் குளிர்ச்சியும், நெருப்புக்கு வெம்மையும், மண்ணுக்கு மணமும் தன்மைகள் அப்படியே ஆகாயத்தின் தன்மை ஒலி, அந்த ஆகாயத்தில் சீதைக்குத் தான் கடந்த பாதையெல்லாம் காட்டிப் பேசினான் ராமன்.

அப்படித் தன் பர்வத மலையில் இருந்து சேதுகரை வரை கட்டிய பாலத்தைக் காட்டிச் சொன்னான்.

“வைதேஹி, மேகங்களில்லாச் சரத்கால இரவில் வானில் நட்சத்திரங்களின் இடையில் எழும் ஒளியால் வானம் இரண்டானது போல் தோன்றும், அப்படி உனக்காக நான் கட்டிய பாலத்தால் நுரை பொங்கும் இக்கடல் இரண்டாக பிரிந்து கிடப்பதைப் பார்.

இந்தச் சமுத்திரம் எப்படி வந்தது? நமது முன்னோரான சாகர சக்கரவத்தியின் அஸ்வமேத யாகத்தினை இந்திரன் தடுக்க முயன்று, அதனால் கபிலரிடம் சாக‌ரர் ஒப்படைத்த அஸ்வமேத யாக குதிரையினைத் தேடி சகரரின் வாரிசுகள் பள்ளம் தோண்டி பாதாளம் சென்று அந்த மோதலில் கபிலரால் எரிக்கபட்டனர், அவர்களின் வாரிசாக வந்த பகீரதனே கங்கையினை வரவழைத்து இந்தப் பெரும் பள்ளத்தின் அடியில் கிடந்த முன்னோர்கள் சாம்பலை நனைக்கச் செய்து இந்தப் பெரும் பள்ளத்தை நிரப்பினான்.

அந்தப் பெரும் பள்ளமே சாகரம் என்றாயிற்று, இந்தச் சமுத்திரம் சாகர புத்திரர்களால் உருவானதன்றோ?

இந்தக் கடலில் இருந்துதான் மேகங்கள் கருகொண்டு உலகைக் காக்கின்றன, இந்தக் கடலில் இருந்துதான் ரத்தினங்கள் விளைகின்றன, பெரும் வடவாக்னியும் இக்கடல் உள்ளேதான் இருக்கின்றது, சந்திரனையும் இக்கடலே கொடுத்தது.

மச்ச அவதாரம் முதல் பல அவதாரம் எடுத்த பகவானின் தன்மை இவ்வளவுதான் எனச் சொல்லமுடியாதது போல பெருகுதல் குறைதல் பொங்குதல் எனப் பல வடிவினைக் காட்டும் இந்தக் கடலின் ஆழமும் எல்லையும் இவ்வளவுதான் என அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

யுகங்களின் முடிவில் எல்லாவற்றையும் தன்னில் அடக்கி அறிதுயில் கொள்ளும் விஷ்ணு தன் நாபியில் இருந்து எழும் கொடியின் தாமரையில் பிரம்மனைத் தாங்கியவராய் இந்தக் கடலின் மேலேதான் பள்ளிகொண்டிருக்கின்றார்.

இரு தேச மன்னர்கள் சண்டையிடும் போது தங்களில் வலியவனான ஒருவனிடம் அடைக்கலம் வேண்டி சரணடைவர். அப்படி இந்திரன் மலைகளின் சிகரத்தை வெட்ட வரும்போது அம்மலைகள் இக்கடலிடம் சரணடைந்தே மூழ்கித் தப்பின, தன்னைச் சரணடைபவரை தன்னை நம்புபவரை காக்கும் சக்தி இந்தக் கடலுக்கு உண்டு.

பிரளய காலத்தில் நீரில் மூழ்கிக் கிடந்த பூமியினை வராஹ உருவெடுத்த பகவான் மேலே எடுத்து வந்தார், அப்போது இந்தக் கடல்தான் அந்த மணப்பெண்ணுக்கான‌ அழகிய மெல்லிய முகமூடித் துணியாய் இருந்தது.

இந்தக் கடல் தன் அலைகள் எனும் உதட்டினால் தன்னில் கலக்கும் காதலிகளான நதிகளை ஒரே நேரத்தில் ஸ்பரிசித்து முத்தமிடுகின்றது, அப்படியே தன்னை முத்தமிட்டு சுவைக்கவும் அனுமதிக்கின்றது, வேறு எந்தக் காதலுக்கும் இப்படி அமைவதில்லை.

இக்கடலின் பெரிய திமி மீன்கள் (திமிங்கலம்) ஆற்றின் முகத்துவாரத்தில் வாயைப் பிளந்து அப்படியே நதியின் நீரை உள்வாங்கி பின் வாயினை மூடி அந்த நீரை மட்டும் வாயின் துளையால் வெளியிட அந்த மீன்கள் சல்லடையிடப்பட்ட அரிசிபோல் அதன் வாயில் தங்கி விடுகின்றன, இப்படி அந்த திமி மீன்கள் உணவு பெறுகின்றன.

நுரைகள் நிரம்பிய இந்தச் சமுத்திரத்தில் இருந்து திடீரென எழும் நீர்யானைகள் கடல் நுரையினை இரண்டாகப் பிரித்தபடி எழும், அப்போது அந்நுரைகள் அதன் காதுகளோரம் சாமரம் போல் அழகாகத் தோன்றும்.

கடலின் பாம்புகள் கடற்கரையில் காற்றுக்காக வந்து படுத்திருக்கும், பெரிய அந்நாகங்களைக் காணும்போது கடல் அலைக்கும் அவற்றுக்கும் உருவத்தில் வித்தியாசமில்லை, நீண்ட பருத்த கடல் நாகங்கள் அலைபோலவே தோன்றும், ஆனால் அந்த நாகங்களின் தலையில் உள்ள ரத்தினங்கள் சூரிய ஒளியில் சிவந்து மின்னுவதால் அவை நாகங்கள் என அடையாளம் காணப்படும்.

சீதையே உன் உதட்டுடன் போட்டியிடும் பவளம் கடலில்தான் விளையும், அங்கே பவளம் வளரும் உயிர்க்கொண்ட சங்குகள் ஆங்காங்கே அசையும், திடீரென எழும் அலையால் சங்குகள் பவள திட்டுகள் மேல் வீசப்படும் , கூரிய நுனி கொண்ட பவளக் குருத்துகள் சங்குகளின் வாய்மேல் குத்துவதால் வலிபெறும் சங்குகள் மெல்ல மெல்ல பவளத்திட்டில் இருந்து விடுபடும்.

பவளமும் சங்கும் சேர்ந்திருக்கும் காட்சி உன் உதட்டுக்கும் சிரிப்புக்குமான தொடர்பு போல் அழகானது.

கடலில் நீரை கோரவரும் மேகங்கள் நீர் எடுக்கும் போது சுழல் உண்டாகும், அந்தச் சுழலோடு சேர்ந்து மேகங்களும் சுழலும், அக்காட்சி முன்பு மந்தார மலையினைக் கொண்டு கடலைக் கடைந்த காட்சியினை, மலையும் கடலும் சுழன்ற காட்சியினை நினைவுப்படுத்தும்.

இக்கடல் இரும்புச் சக்கரம் போல் உள்ளது, அதன் கரை சக்கர விளிம்பு போல் உள்ளது, அக்கரையில் இருக்கும் பனைமரங்களும் தமால மரங்களும் இங்கிருந்து பார்க்கும் போது சக்கரத்தின் துரு போல் உள்ளது.

சீதையே, தாழம்பூவின் மகரந்தப் பொடிகளை எடுத்து வரும் காற்று உன் முகத்தில் அதை வீசி அலங்கரிக்கின்றது, அதனால் உன் கோவைப்பழம் போன்ற அதரத்தை நான் சுவைக்கும்படி உனக்கான அலங்காரத்தை அதுவே செய்து நேரத்தை மிச்சமாக்குகின்றதல்லவா? என் மனதை இக்காற்றும் அறிந்திருக்கின்றது.

நாம் நூறு யோஜனை தூரமுள்ள இக்கடலை விமானத்தின் வேகம் காரணமாக நாம் நொடியில் கடந்துள்ளோம், இதோ பார் இக்கடற்கரையில் அலைகளால் கரையில் மோதி உடைக்கப்பட்ட சிப்பிகளில் இருந்து முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன, பாக்கு மரத்தின் பெரிய குலைகள் பாரத்தால் வளைந்துள்ளன‌.

யானையின் துதிக்கை போன்ற தொடையும் மானின் கண்களும் கொண்டவளே, திரும்பிப்பார், நாம் கடந்துவந்த பாதையினைப் பார், நாம் கடந்த கடல் பின்னால் போக போக முன்னால் நிலப்பகுதியும் வனமும் கண்முன் தெரிகின்றன, அதனால் கடலில் இருந்து அவை வெளிவந்ததுபோல் உனக்குத் தோன்றுகின்றதல்லவா?

இந்த விமானம் என் எண்ணப்படி என் மனதின் சிந்தனைப் படிச் செல்லும், அதனால் சில நேரம் தேவர்களின் வழியில் பறக்கின்றது, சில நேரம் மேகங்கள் நடுவில் செல்கின்றது, சில நேரம் பறவைகள் பறக்கும் வழியில் அவைகளோடு பறக்கின்றது, என் மனம் சொல்லும் திசையில் அது பறப்பதைப் பார்.

இதோ நான் தேவர்களின் வீதியில் பறக்கின்றேன். அதனால் இந்திரனின் ஐராவத யானையின் மதநீரால் வாசனை பெற்ற காற்று ஆகாய கங்கையின் அலைகள்மேல் பட்டு வருவதால் குளிர்ச்சி அடைகின்றது, அந்த மணமிக்க குளிர்ந்த காற்று உன் முகத்தின் வியர்வையினைப் போக்கி உனக்குப் புத்துணர்ச்சி தருகின்றது.

இதோ நான் மேகங்களிடை செல்கின்றேன், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமுள்ள நீ உன் கையினை வெளியே நீட்டுகின்றாய், அங்கே மின்னல் கொண்ட மேகம் உன் கைகளில் சூழ்கின்றது, அது ஏற்கனவே இருக்கும் ஆபரணம் போதாதென்று புதிய ஆபரணம் ஒன்றை உனக்குச் சூட்டுகின்றது.

இதோ பூமியினைப் பார், பறவையின் பார்வையில் பார், மரவுரி அணிந்த தவசிகள் ராட்சதர்களை நான் அழித்துப்போட்டதால் பயமின்றி தங்கள் ஆசிரமத்துக்குத் திரும்பி புதிய குடில்களைக் கட்டி தவத்தினைத் தொடர்வதைப் பார்.

அதோ அங்குதான் ராவணன் உன்னை தூக்கிச் செல்லும் போது உன் கால்சிலம்பு ஒன்று வீழ்ந்து கிடந்தது, உன்னைப் பிரிந்த சோகத்தில் அது ஏதும் ஒலி எழுப்பாமல் மௌனமாக கிடந்தது, என் நிலையும் அந்தக் கொலுசுபோல் இருந்ததை எண்ணி நான் கலங்கிய இடம் இதுதான்.

(தொடரும்..)