காளிதாசனின் ரகுவம்சம் : 71-75
காளிதாசனின் ரகுவம்சம் : 71
அப்பெண்கள் உடுத்தியுள்ள மெல்லிய வஸ்திரங்கள் நீரால் நனைந்ததால் அவை அவர்களின் இடையோரம் ஒட்டிக்கொண்டன, அந்த ஆடையின் மேகலையில் இருந்த நீர்ப்பட்ட முத்துக்கள் சந்திரன் முன் நட்சத்திரம்போல் மங்கியிருந்தன, நூல்களில் கோர்க்கப்பட்ட அவைகளின் துவாரங்களில் நீர் இருந்ததால் அவைகள் எழுப்பும் ஒலியும் மங்கியிருந்தது.
கோடைக்காலத்தின் விளையாட்டாக அப்பெண்கள் நீரினை அடித்து விளையாட அவர்கள் முகத்தில் நீர் படிகின்றது, அது அப்பெண்களின் முன்நெற்றி முடியினைச் சுருக்கங்கள் நீக்கி நீண்டதாக்குகின்றது, அந்த முடியின் வழி வழியும் நீர் முகத்தில் பட்டு அவர்கள் பூசிய வாசனை திரவியமெல்லாம் கரைந்தோடுகின்றது.
நீரில் விளையாடும் அப்பெண்களின் அலங்காரம் கலைந்திருந்தது, கூந்தல் அவிழ்ந்து பரவியிருந்தது, அவர்களின் செந்நிற மேனியில் பலவகை வர்ண ரேகைகள் படர்ந்திருந்தன, அவர்கள் காதுகளின் முத்து குண்டலம் தளர்ந்திருந்தது. ஆயினும், அப்பெண்கள் அழகு மிக்கவர்களாகவே இருந்தார்கள்.
விமானம் போல இருந்த படகில் இருந்து இறங்கிய குசன் தன் மார்பின் முத்துமாலைகள் அசைய அவர்களுடன் நீரில் விளையாடினான், அது நீரில் புகுந்த ஆண்யானை தாமரை தண்டுகள் பிடரியில் தொங்க பெண் யானைகளுடன் நீரில் ஆடியக் காட்சி போலிருந்தது.
அப்பெண்கள் குசனுடன் கூடி விளையாடிய காட்சி ரம்மியமாய் இருந்தது, அழகிய வெண்ணிற முத்துக்கள் நீல ரத்தினத்துடன் சேரும்போது அழகுற மின்னுதல் போல் அக்காட்சி இருந்தது.
அப்பெண்கள் குழாயின் மூலம் குங்குமம் முதலான வர்ணங்கள் கொண்ட நீரை அவன் மேல் ஊற்றி விளையாடினார்கள், அந்த வர்ண மயமான நீரால் நனைந்த குசன், மழைக்காலத்தில் தாதுபொருள் கரைந்த மலைபோல் காணப்பட்டான்.
இப்படிப் பெண்களுடன் சரயுநதியில் விளையாடிய குசன் ஆகாயக் கங்கையில் அப்சரஸ் பெண்களோடு விளையாடும் இந்திரனைப் போல பெரும் இன்பம் துய்ப்பவனாயினான்.
ராமன் அகத்தியரிடமிருந்து தான் பெற்ற தோள்வளையினைக் குசனுக்குக் கொடுத்திருந்தான், ஆனால் பெண்களுடன் இன்பமாக சரயுநதியில் நீராடிய குசன் அந்தத் தோள்வளை நழுவி வீழ்ந்ததை அறியாதவனாய் இருந்தான்.
நீராடி முடிந்ததும் கூடாரம் திரும்பிய அவன் தன் முன் வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களால் தன்னை அலங்கரித்தபோதுதான் தன் தோள்வளை காணாமல் போனதை உணர்ந்தான்.
தனக்கு எப்போதும் வெற்றியளிப்பதும் தந்தையால் தனக்கு வழங்கப்பட்டதுமான அந்தத் தோள்வளை காணாமல் போனதால் அவன் வருத்தம் கொண்டான், ஒருமுறை சூட்டிய பூவினைப் போல் ஒருமுறை அணிந்த ஆபரணங்களையும் அணியாத அவன் இந்த ஆபரணம் காணாமல் போனதால் பெரும் வருத்தம் கொண்டான்.
அதனால் நீரில் மூழ்கும் திறமை கொண்ட வலைஞர்களைக் கொண்டு அதனைத் தேடச் சொன்னான், நதியின் ஆழத்தில் அதனைத் தேடியும் கிடைக்காத வலைஞர்கள் ஒரு விஷயத்தை உணர்ந்தவர்களாய் குசனிடம் வந்தார்கள்.
அவர்கள் சொன்னார்கள், “அரசே, தாங்கள் நீராடிய இடத்தையும் அதனைச் சுற்றியும் தேடியும் ஆபரணம் கிடைக்கவில்லை, இதனால் சரயு நதியின் அடியில் வாழும் குமுதன் எனும் நாகமே அதை எடுத்திருக்க வேண்டும், அது அன்றி ஆபரணம் காணாமல் போக வழியே இல்லை” என்றார்கள்.
அதைக் கேட்டு குசன் நாகங்களைக் கொல்லும் தன் கருடாஸ்திரத்தை நாணேற்றிய வில்லில் பொருத்தி ஆற்றினை நோக்கி ஏவத் தயாரானான். அந்நேரம் குழியில் விழுந்த காட்டுயானை அகதளம் செய்வது போல கரைகளை இடித்தபடி நதி கலங்கி ஆராவாரம் செய்தது. அதனால் அங்கிருந்த முதலைகள் கூட அஞ்சி எழுந்து ஓடின.
கடையப்பட்ட பாற்கடலில் இருந்து பாரிஜாத மரம் லட்சுமியுடன் தோன்றியது போல குமுதன் தன் தங்கையுடன் அந்த நதியில் இருந்து வெளிவந்தான்.
தன் ஆபரணத்தைத் திருப்பித் தரும்படி வந்த குமுதனை நோக்கிக் கருடாஸ்திரத்தைச் செலுத்தாமல் அதைத் திரும்ப எடுத்தான் குசன், தன் முன் அடைக்கலமாக வந்தவனைக் கொல்லக் கூடாது என்பது விதி என்பதை அவன் அறிந்திருந்தான்.
தெய்வாம்சம் கொண்ட குமுதன் அதுவரை யாரையும் வணங்காத தலை கொண்டவன் என்றாலும் கருடாஸ்திரம் வைத்திருந்த குசனுக்குத் தன் தலைதாழ்த்தி வணக்கம் சொன்னான்.
“அரசே! உலக நன்மைக்காக மனித உரு எடுத்த பகவான் விஷ்ணுவின் இன்னொரு வடிவமாக உங்களைக் காண்கின்றேன், எல்லா வகையிலும் எங்கள் மரியாதைக்கும் பூஜைக்குமுரிய உங்களுக்குப் பிரியமில்லாத எதையாவது நான் செய்வேனா?
எங்கள் உலகத்தில் பந்து விளையாடிய இப்பெண் ஓங்கி அடித்ததனால் மேலே சென்ற பந்தை காணும்போது ஆகாயத்தில் இருந்து நட்சத்திரம் விழுவதுபோல் விழுந்த உங்களுடைய அணிகலனைக் கண்டு மிக ஆவலாய் அதனை எடுத்துக் கொண்டாள்.
அந்த அணிகலன் முழந்தாள் வரை நீண்டதும், வில்லின் நாண் அடித்ததால் தழும்பேறியதும், பூமியினைக் காக்கும் தாழ்பாள் போலுமுள்ள உமது கைகளில் மீண்டும் சேர்ந்து கொள்ளட்டும்.
அப்படியே உமது ஆபரணத்தை எடுத்த குற்றத்தத்தைப் போக்கவிரும்பி வெகுகாலம் உங்கள் பாதங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்பும் என் தங்கையான குமுதவதியினை நீர் ஏற்றுக்கொள்ளத் தகுதியும் படைத்தவராகின்றீர்” என்றான்.
அவன் தன் தங்கையினைத் தனக்கு திருமணம் செயதுவைக்க விரும்புகின்றான் என்பதைப் புரிந்து கொண்ட குசன் அவன் சொன்னதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு ‘நீயும் எம் உறவினரே” என்றான், அதனால் மகிழ்ந்த குமுதன் தன் உறவினர்களுடன் வந்து, பெண் வடிவிலான எங்கள் ஆபரணத்தை உங்களுக்கு அளிக்கின்றேன், ஒரு ஆபரணம் தேடிவந்த நீர் இந்த ஆபரணத்தையும் ஏற்றுக்கொள்ளுமென தன் தங்கை குமுதவதியினை அவனிடம் ஒப்படைத்தான்.
குசன் மங்கள நூல் கட்டியிருந்த குமுதவதியின் கரத்தை அக்னி ஜுவாலை முன் பிடித்தபோது எட்டு திக்கிலும் தேவர்களின் வாத்யம் ஒலித்தது, தேவ துந்தூபிகள் முழங்கின, அந்தத் தேவலோக இசையினைத் தொடர்ந்து மேகங்கள் நீரை அன்றி மணமிக்க பூக்களை அவர்கள் மேல் கொட்டிற்று.
தக்ஷன் எனும் நாகத்தின் ஐந்தாம் புதல்வனான குமுதன் இப்படி மகாவிஷ்ணுவின் மகனான குசனை உறவாகக் கொண்டதால் கருடனின் மிரட்டலில் இருந்து தப்பித்தான், நாகராஜனான குமுதனை உறவாகப் பெற்றதால் குசனின் நாடும் சர்ப்ப பயம் அற்றதாய் மாறிற்று. இதனால் ஜனங்கள் குசன்மேல் கொண்டிருந்த அன்பு இன்னும் அதிகமானது.
குழம்பியிருக்கும் மானுடரின் புத்தி இரவின் கடைசி சாமத்தில் தெளிவினைப் பெறுவது போல் குமுதவதி குசனிடமிருந்து அதிதி எனும் மகனைப் பெற்றாள்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 72
ஒளிமிக்க சூரியன் உத்ராயணம் தெட்சணாயணம் என இரு வழிகளையும் தூயதாக்குவது போல அந்த அதிதி தகப்பன் குசன் வம்சம், தாய் குமுதவதி வம்சம் என இரு வம்சத்தையும் தூயதாக்கினான்.
விஷயங்கள் எல்லாம் அறிந்தவர்களுள் சிறப்பு மிக்கவனான அந்தக் குசன் தன் மகனுக்கு ஷத்ரிய தர்ம வழமைப்படி எல்லா வித்தையும் கற்பித்து சிறந்தவனாக்கினான், தர்க்க சாஸ்திரம் வேத சாஸ்திரம் கிருமி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் என எல்லாம் அறிந்த அந்த அதிதிக்கு உரிய காலம் மணமும் செய்துவைத்தான் குசன்.
நல்லகுடியில் வந்தவன் புலனை அடக்கியதால் சிறப்பு பல பெற்றவனுமான குசன் தன் மகன் அதிதியினைத் தன் இன்னொரு பிம்பமாகக் கண்டான், மகனும் தானும் வேறல்ல எனும்படி மகனில் தன்னைக் கண்டு கொண்டிருந்தான்.
அப்படியான குசன் இஷ்வாகு வம்சத்து வழமைப்படி தங்களின் நண்பனான இந்திரனுக்கு உதவ அசுரர்களுடனான போருக்குச் சென்றான், அங்கே துர்ஜெயன் எனும் அசுரனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டு அவனை வீழ்த்திவிட்டு அதனால் ஏற்பட்ட காயத்தால் தானும் வீழ்ந்து மரித்தான்.
தனக்கு மகிழ்ச்சி தரும் சந்திரனுடன் அல்லி பின் தொடர்ந்து செல்வதைப் போல, குசன் இறந்ததும் நாகங்களின் அரசியான குமுதவதியும் அவனுடன் அனுமரணம் செய்தாள்.
இதனால் குசன் இந்திரனின் புகழ் சிம்மாசனத்தில் அமரும் தகுதியுடையவனான், இந்திராணிக்குரிய புகழைக் குமுதவல்லியும் பெற்று அவளுக்கு ஈடான கௌரவத்தை அடைந்தாள்.
குசன் முன்னறிவித்தபடியே அவன் மரணித்தபின் அவன் அவையோர்களெல்லாம் ஒன்று கூடி அதிதியினை அரசனாக்க முடிவு செய்தார்கள், அதனால் உயர்ந்த மேடை கொண்டதும் நான்கு தூண்களால் தாங்கப்பட்டதுமான பெரிய மண்டபத்தை சிறந்த சிற்பிகளைக் கொண்டு கட்டுவித்தனர்.
அம்மண்டத்தில் பதர ஆசனம் எனும் ஆசனத்தில் அமரவைக்கப்பட்ட அதிதியின் அருகில் பொற்குடங்களில் புனிதநீரைக் கொண்ட அந்தணர்களும், புண்ணிய பொருட்களைக் கொண்ட மந்திரிகளும் நெருங்கி நின்றனர்.
பட்டாபிஷேக காலத்தின் மந்திரங்கள் ஒலிக்கத் துவங்கின, மிருதங்கம் முதலிய வாத்தியங்கள் இனிமையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலித்த ஒலி இனிவரும் காலத்தில் எல்லாம் நன்மையானது எனக் கட்டியம் கூறியதைப் போலிருந்தது.
அவன் அருகு, ஆலம்பட்டை, யளமுனை, மாமரத்தின் இளந்தளிர் போன்றவை கலந்த நீரின் இனிமையினை அபிஷேகமாய் பெற்றான், வயது முதிர்ந்த பெரியவர்களால் அந்த நீராட்டு முடிந்தபின் அவனுக்கு ஆரத்தியும் அவர்களால் சுற்றப்பட்டது
பின் அவனின் குலபுரோகிதருடன் அந்தணர்கள் மந்திரம் சொல்லத் தொடங்கி அப்படியே அவனுக்குப பட்டாபிஷேகமும் செய்யத தொடங்கினார்கள்.
அவன் தலையிலே வேத ஒலியுடன் கூடிய நீர் இறைக்கப்பட்ட போது அது பரமசிவனின் தலையில் இருந்து கங்கை பிரவாஹமாக விழுவது போலிருந்தது.
உயர்ந்த அந்த மையத்தில் வேத ஒலியிலும் வாழ்த்தொலியிலும் புகழப்பட்ட நீரில் நனைந்த அதிதி, வானத்தின் மேல் சாகர பட்சிகள் சுற்றிப் பாடி மகிழும் நீர் நிறைந்த மேகம் போல் காணப்பட்டான்.
மின்னலினின்று எழும் அக்னியின் ஒளி மழைநீரினால் அதிகமாவது போல நல்ல மந்திரங்களினால் சக்திபெற்ற நீரினால் அபிஷேகம் செய்யப்பட்ட அதிதியின் தேஜஸ் மிகுந்திருந்தது.
அந்தணர்கள் எவ்வளவு பொன்னால் தங்கள் ஆயுளுக்கும் ஹோமங்களைச் செய்யமுடியுமோ அவ்வளவு பொன்னையும் அவன் தன் பட்டாபிஷேக முடிவில் அந்தணர்களுக்குக் கொடுத்தான்.
அதனால் மனம் குளிர்ந்த அந்தணர்கள் அவனுக்குப் பெரும் ஆசீர்வாதங்களைத் தந்தார்கள். அவனின் முற்பிறவி பலனால் கிடைத்த அந்தப் புண்ணியபலன் அவனைப் பின்னால் வந்து சேரும்படி தள்ளி நின்றுகொண்டது காரணம் ஏகப்பட்டோரின் ஆசிகள் அவனைச் சூழ நின்று கொண்டிருந்ததால் இவை தள்ளி நின்றன
அவன் தன் குல வழக்கபடி தன் பட்டாபிஷேக நாளில் விலங்கிடபட்ட கைதிகளுக்கு விலங்கை நீக்கினான், மரண தண்டனை கைதிகளை மன்னித்து வாழ்வு கொடுத்தான்; அன்று பாரம் இழுக்கும் எருது, குதிரை, யானைகளுக்கு ஓய்வு கொடுத்தான்; கன்றுகள் பசுவின் பாலை முழுக்கக் குடிக்கும்படி பால் கறக்கவும் தடை விதித்தான்.
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் கூட அவை விருப்பபடி செல்ல கூண்டுகளைத் திறக்கச் செய்தான்.
பத்ராசனத்தில் அமர்ந்து அபிஷேகம் செய்த அவன் அலங்காரம் செய்வதற்காக அருகில் உள்ள அறையின் யானை தந்த ஆசனத்தில் அமரவைக்கப்பட்டான்.
அவனை அலங்கரிக்கும் அவன் பணியாளர்கள் கைகளை சுத்தமாக கழுவியபின் நறும்புகையினால் அவன் கேசத்தை உலரச் செய்து கஸ்தூரி முதலிய நறுமணப்பொருட்களால் அவனை அழகுப்படுத்தினர்.
அந்தப் பணியாளர்கள் அவனின் கேசத்தை தூக்கிக்கட்டி உள்ளே புஷ்பங்களை வைத்து வெளியே முத்துமாலைகளால் அலங்கரித்தனர், அதனூடாக ஒளிரும் புஷ்பராகமும் இடம்பெற்றிருந்தது.
அவன் மேனியில் கஸ்தூரி கலந்த சந்தனத்தை பூசியவர்கள் அதன் மேல் கொரோசனை திரவம் கொண்டு இன்னும் அழகான வரிகளை வரைந்தனர்.
அலங்கார மணிமாலையும் மணக்கும் புஷ்பமாலையும் கொண்ட அலங்காரமிக்க அதிதி அன்னத்தைப் போல வெண் வஸ்திரம் அணிந்தவனாய் ராஜ்ய லட்சுமியினை ஏற்கப்போகும் மணவாளன் போலிருந்தான்.
அலங்காரம் முடிந்தவன் பொன்னால் செய்யப்பட்ட கண்ணாடியில் தன்னைக் காணும்போது சூரிய ஒளியில் மின்னும் மேருமலையில் இருக்கும் கற்பக மரம்போல் அழகுற மின்னினான்.
அந்த அதிதி அரசனுக்குரிய அடையாளமான குடை, சாமரம் முதலியன ஏந்திய பணியாளர்கள் முன்னே கோஷமிட்டு சென்றபடி நடந்து இந்திரனின் சபைபோலுள்ள தன் அவை மண்டபத்தை அடைந்தான்.
அந்த ஆஸ்தான மண்டபத்தில் அழகான விதானமுடையதும் அரசர்களின் மணிமுடி வணங்கும்போது ரத்தினங்களால் ஏற்பட்ட உரசலினால் தேய்ந்த பாதபீடம் கொண்டதுமான தந்தையின் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
அவன் குமார பருவத்தில் இருந்து வாலிபபருவம் அடைந்து படிபபடியாக ராஜ்ஜியத்தை அடைந்தவன் அன்று, குசனின் திடீர் மரணம் அவனை மன்னராக்கிற்று அதனால் பிறை சந்திரன் ஒரே நாளில் பௌர்ணமியானதுபோல் மிகவும் பொலிவுற்று விளங்கினான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 73
முகமலர்ச்சியுடனும் புன்சிர்ப்புடனும் அன்புடனும் தங்களிடம் பேசும் அதிதியினைக் கண்டு அரசவை சேவகர்கள் தங்களின் அசையா நம்பிக்கையின் உருவாக அவனைக் கண்டார்கள்.
பெரும் செல்வம் கொண்ட அந்த அதிதி பட்டாபிஷேகம் முடிந்ததும் தன் யானையில் அயோத்தியினை வலம் வந்தான், அப்போது அவனின் கொடி உயரப் பறந்து மின்னியது. அதனைக் காணும்போது இந்திரன் ஐராவதத்தில் வருவது போலவும் அவன் ஆளும் சொர்க்கத்தின் உயர்ந்த கற்பக மரங்களின் இலை அசைவது போலவும் காட்சி இருந்தது, அதாவது அந்த அயோத்தி நகரம் அதிதி பவனி வரும்போது சொர்க்கத்துக்கு நிகராக மின்னியது.
அவனின் அரச அடையாளமான வெண்கொற்ற குடை அவன் தலைக்குமேல் உயரப் பிடிக்கப்பட்டபோது ஏற்பட்ட நிழலால் வெப்பத்தினால் வந்த உஷ்ணம் தணிந்தது. அது குசனை இழந்து தவித்து வெதும்பும் மக்களுக்கு அதிதியால் ஆறுதல் தருவது போலிருந்தது.
புகைக்குப் பின்பே நெருப்பு தோன்றும், தன் கதிர்களுக்குப் பின்பே சூரியன் உதிக்கும், மணம் பரப்பிய பின்பே மலர் முழுக்க மலரும். மேகங்கள் கூடிய பின்பே இடி முழங்கும் இப்படி அதனதன் குணம் எல்லா இடத்திலும் மெதுவாகத்தான் முன் அறிகுறிகளுடன் தோன்றும், ஆனால் அதிதி அப்படி அல்லாமல் தன் முழுக்குணமும் உடனே தோன்றும்படி தன் இயல்பிலே இருந்தான்.
வசந்த காலத்தின் நிர்மலமான வானத்தில் நட்சத்திரங்களால் நிரம்பிய இரவு துருவ நட்சத்திரத்தின் பின்னால் செல்வது போல கருங்கூந்தலும் அழகான கண்களையும் கொண்ட பெண்கள் அவனை மகிழ்வுடன் பின் தொடர்ந்தார்கள்.
சிறந்த வழிபாட்டை பெற்ற அயோத்தியின் தேவதைகளும் முறையான சாங்கியத்தால் விக்ரகங்களில் குடியேறி இருந்து அவனுக்கு அருள் வழங்கினார்கள்.
அவனுக்கு நீர் அபிஷேகம் செய்த மேடை உலர்ந்து காய்வதற்கு முன்பே அவனைப்பற்றிய செய்திகள் சமுத்திரத்தையும் கடந்து எல்லா இடமும் பரவியதால் அவன் பகைவரெல்லாம் அச்சமுற்றனர்.
அவனின் குருவான மந்திர பலமும் சிறந்த வில்லாளனான அவனின் அம்பின் பலமும் இணைந்து சாதிக்காதது என உலகில் எதுவுமில்லை எனும்படி அவனின் கீர்த்தி விளங்கிற்று.
அவன் தன் குடிகள் விசாரணையில் தர்மம் அறிந்த பெரியோரைத் துணைக்கு வைத்துக் கொண்டே வாத பிரதிவாதங்களை கவனித்தான், பெரியோரின் துணைகொண்டே சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தீர்ப்புகளைச் சொன்னான், தன் தர்மாசனத்தில் இருந்து நீதி சொல்லி அதை நிறைவேற்றிய பணியாளர்க்குத் தக்க கூலியும் தந்து மகிழ்வித்தான்.
வாடிய நதிகள் ஆவணியில் பெரிதாக ஓடும், புரட்டாசியில் அது இன்னும் இன்னும் பெரிதாக பெருகி ஓடும், அவ்வாறே குசனால் வாழ்வு பெற்ற மக்கள் அதிதியின் காலத்தில் இன்னும் இன்னும் பெரிய வசதிகளைப் பெற்று மகிழ்வாய் வாழ்ந்தார்கள்.
அவன் தான் சொன்ன சொல்லை மாற்றியதில்லை, ஒருமுறை செய்த காரியத்தைத் திரும்பப் பெற்றதுமில்லை. மாற்றியதுமில்லை. ஆனால், ஒரே ஒரு காரியத்தில்மட்டும் இதிலிருந்து விதிவிலக்காய் இருந்தான், அது அவனால் வெல்லப்பட்ட அரசர்களின் ராஜ்ஜியத்தை மறுபடி அவர்களுக்கே கொடுத்தான் அதுவும் அவனுக்குப் பெரும் சிறப்பையே கொடுத்தது.
வாலிபம், அழகு, அதிகாரமிக்க செல்வம் என மூன்றும் ஒருவனை அகங்காரம் கொள்ளச் செய்யும். ஆனால், இவை மூன்றும் நிரம்பப் பெற்றும் அவன் மனம் கொஞ்சமும் கர்வம் கொள்ளவே இல்லை.
அவன்மேல் ஜனங்களும் ஜனங்கள் மேல் அவனும் பெரும் அன்பு கொண்டதாக அவன் ஆட்சி நடந்ததால் அவன் புதிய அரசனாயினும் நாள்பட்ட மரம் ஆழவேரூன்றி நிற்பது போல் யாராலும் எவ்வகை பகைவராலும் அசைக்கமுடியாதபடி பலமாய் இருந்தான்.
ஒரு அரசனுக்குத் தொலைவில் உள்ள பகைவர்களால் உடனடி ஆபத்து இல்லை. அந்தப் பகை அவ்வப்போது மாறவும் கூடும் ஆனால் அரசனானவன் தன் உள்ளே இருக்கும் ஆறு பகைவர்களான காமம், குரோதம், மதம், லோகம், மோஹம், மத்சார்யம் எனும் ஆறுபகையினை முதலில் வெல்லல் வேண்டும் என்பதை உணர்ந்த அவன் தன்னை முதலில் வென்று எதிர்களுக்குக் காத்திருந்தான்.
லட்சுமி சஞசலமிக்கவள். அடிக்கடி இடம் மாறுபவள். ஆனால், எல்லோரிடம் அதிதி கொண்ட அன்பின் காரணமாக உரைகல்லில் தேய்த்த தங்கத்தின் ரேகை மாறாது இருப்பது போல் அவனிடம் நீங்காது இருந்தாள்.
வீரமற்ற நீதி கோழைத்தனம், நீதியற்ற வெற்று வீரம் மிருகத்தனம் அதனால் அவன் வீரம் விவேகம் என இரண்டையும் சரியாகக் கலந்து தர்மப்படி மக்களுக்கு ராஜ்ஜியபரியாலனம் செய்து வந்தான்.
சூரியனின் கதிர்கள் செல்லாத இடம் என உலகில் எதுவுமில்லை, அப்படியே அதிதியும் தன் ஆட்களை எல்லா இடமும் அனுப்பி நடப்பன அத்தனையும் அறிந்திருந்தான், இதனால் அவனுக்குத் தெரியாமல் நாட்டில் நடக்கும் விஷயம் என எதுவுமில்லை.
அரசனானவன் இரவிலும் பகலிலும் சந்திப்பொழுதிலும் என்னென்ன காரியமெல்லாம் செய்யவேண்டும் என மனு முதலானோர் வகுத்துத் தந்தார்களோ அவற்றில் ஒன்றைக் கூட விடாமல் சிறிதும் சந்தேகமின்றி நிறைவேற்றி வந்தான்.
அதிதி தினம்தோறும் ராஜாங்க காரியங்களை ரகசியமாக ரகசிய இடங்களில் விவாதித்து வந்தான், மற்றவரால் அந்த ரகசிய வழிகளையே அறியமுடியாதபோது ரகசியங்களை அறிவது இயலாத காரியாமாய் இருந்தது.
அவன் தன் சத்ருக்களை மட்டுமல்ல தன்னைச் சார்ந்த மந்திரிகளையும் உளவுப்பார்க்க ஆட்களை நியமித்திருந்தான். ஆனால், அந்த உளவுக்காரர் கூட ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளமுடியாதபடி அவனின் உளவு அமைச்சு இயங்கிற்று. இதனால் அவன் கண்களுக்குத் தப்புவது எதுவுமில்லை.
அவன் எல்லாப் பகைவரையும் அச்சுறுத்தினானே தவிர அவனை அச்சுறுத்துவார் எவருமில்லை, ஆனாலும் அவன் வலிமை மிக்க அரண்களைக் காவல் கருதி அமைத்திருந்தான், அது அவன் அச்சத்தினால் செய்தது அல்ல மாறாக ராஜரீகத்தால் செய்தது, பெரிய யானைகளையே அச்சுறுத்தும் சிம்மம் குகையில் தனித்திருப்பது அச்சத்தினால் என எப்படி சொல்லமுடியாதோ அப்படி அதிதி தன் காவலைப் பலப்படுத்தியதை அச்சம் என்ற வகையில் சொல்லிவிட முடியாது அவனின் இயல்பு அது.
அவனது முயற்சிகளெல்லாம் நன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டது, தீமையினை அன்று, இதனால் அவன் அடிக்கடி அந்தப் பணிகளைக் கவனித்து வந்ததால் அவை யாருமறியாமல் நெல்லுக்குள் அரிசி முதிர்வது போல யாருக்கும் அறியாமலே நன்மையாய் விளைந்தன, அவற்றின் பயனாலே அவனின் திட்டங்கள் வெளியே அறியப்பட்டன.
பௌர்ணமி காலத்தில் கடல் பொங்கினாலும் அது நதியின் முகத்துவாரம் வழியேதான் பொங்குமே அன்றி கரையினைத் தாண்டி வராது, அவ்வண்ணமே பெரிய செல்வத்தை அவன் கொண்டிருந்தாலும் ஒருகாலமும் தகாத வழியில் அடாவடியான வழியில் அவன் நடந்து கொள்ளவில்லை, செல்வத்தை முறையாகவே செலவு செய்தான்.
ஜனங்கள் ஏதேனும் அதிருப்தி கொண்டால் கூட அதை உடனே சரிசெய்யும் ஆற்றல் பெற்றவனாயினும் அதிதி அப்படி ஒரு வாய்ப்பினை மக்களுக்குக் கொடுக்காமலே ஆட்சி செய்து வந்தான்.
பிரபு சக்தி, உத்ஹாத்ச சக்தி, மந்த்ர சக்தி அதாவது மானிட பலம், தெய்வபலம், மந்திரபலம் என எல்லாப் பலமும் பெற்றிருந்தும் அவன் தன்னைவிட பலமான தேவர்கள் முதலானரோடு மோதவில்லை. தன்னால் வெல்லக்கூடிய எதிரிகளை மட்டுமே எதிர்த்தான், காற்றின் துணையுடன் எரியும் காட்டு நெருப்பானது வனத்தை எரிக்குமே தவிர நீரை எரிக்க முற்படுமா?
அவன் அறம் பொருள் இன்பம் என்பவற்றில் சரியாக இருந்தான். அறக்காரியம் எனப் பொருளையும் இன்பத்தையும் இழக்கவில்லை, பொருள் எனஞ் சொல்லி அறக்காரியங்களைப புறக்கணிக்கவுமில்லை, பொருளும் அறமும் முக்கியம் என இன்பவாழ்வை இழக்கவுமில்லை எல்லாவற்றிலும் அவன் சரியான விகிதமாக வாழ்வை அமைத்திருந்தான்.
பலமற்ற நண்பர்களால் எதுவும் உதவி வாரா, பலமான நண்பர்களால் ஆபத்தும் வரலாம் இதனால் தன் நண்பர்களை பெரிய பலம் கொண்டவர்களாக அல்லாமல் தனக்குக் கீழானவர்களாகவும் அல்லாமல் தனக்குச் சரியான வகையில் இருப்போரை மட்டும் நண்பனாகக் கொண்டிருந்தான் அதிதி.
அவன் எதிரியின் பலம் பலவீனம் அறிந்து தன் பலம் அறிந்து யுத்தம் செய்தான், எதிரி பலமான காலத்தில் அவன் யுத்தம் செய்யவுமில்லை, அப்படியே பலவீனமான காலத்தில் சமாதானம் செய்யவுமில்லை.
சாதகப் பட்சிகள் நீருள்ள மேகத்தையே சுற்றி வந்து வரவேற்கும் நீரற்ற மேகத்தை அன்று, அவ்வாறே பொருள் இருக்கும் அரசனைத்தான் எல்லோரும் சுற்றிவந்து உதவி பெறுவர் இதனால் அதிதி பொருளீட்டும் அவசியம் வந்ததே தவிர அது அவனின் பேராசையால் அன்று.
அவன் தன் பலவீனத்தை வெளிகாட்டாமல் பகைவரின் பலவீனம் அறிந்து அடித்தான், பகைவரின் வளர்ச்சியினை தடுப்பது தனக்கு உயர்வு தரும் வழி என்பதால் அவர்களின் அரண்களை அழித்து அவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தான்.
தன் தந்தை உருவாக்கி விட்டுச்சென்ற பலமிக்கதும் பெரிதானதும் பயிற்சி நிரம்பபெற்றதுமான அந்தச் சேனையினை அவன் தன் உடல்போல் பராமரித்து வந்தான், அதனால் பராக்கிரமம் மிக்கவனாய் இருந்தான்.
நாகத்தின் தலையில் உள்ள மணியினை யாராலும் கவரமுடியாது என்பது போல அதிதியின் பலத்தை யாராலும் கவரமுடியவில்லை. ஆனால், காந்தம் இரும்பினைக் கவர்தல் போல் அவன் எதிரிகளிடம் இருந்த எல்லாப் பலத்தையும் தன்னில் எளிதாக ஈர்த்துக் கொண்டான்.
அவன் நாட்டில் திருடர் பயமில்லை திருடர் உருவாக அவசியமுமில்லை. இதனால் அவனின் வியாபாரிகள் நிலம், மலை, நதி என எல்லா இடமும் தமது விருப்பபடி எல்லாக் காலத்திலும் பயணித்தார்கள்.
மக்களின் வருமானத்தில் ஆறில் ஒருபங்கை அரசனுக்குக் கொடுக்கவேண்டும் என்பது விதி, அவன் ஜனங்களைக் கவனிப்பது போலவே மஹரிஷிகளின் தவத்தையும் இடையூறின்றி கவனித்துக் கொண்டான். இதனால் மக்கள் மகிழ்ந்து ஆறில் ஒரு பங்கு வரியினைக் கொடுப்பது போலவே மகரிஷிகளும் தம் தவத்தில் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்துப் பலமாக்கி வந்தனர்.
ஒரு அரசன் பூமியினை எவ்வளவு அக்கறையாய்ப் பாதுகாப்பானோ அவ்வண்ணமே பூமி அவனுக்குப் பலன் தரும், அதிதி பூமிக்குரிய வழிபாட்டை கவனமுடன் செய்துவந்ததால் அது தானியமாக வயலில் விளைவித்துக் கொட்டியது, ரத்தினமாக சுரங்கத்தில் இருந்து கொடுத்தது, பெரிய யானைகளாகக் கானகத்தில் இருந்து கொடுத்தது.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 74
ஆறுமுகம் கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு இணையான பராக்கிரமம் கொண்ட அந்த அதிதி ஆறுவகை படைகளையும் கொண்டிருந்தான். (சொந்த நிரந்தர படை, கூலிக்கு வரும் படை, நட்பு நாட்டின் படை, அவசரகாலத்துக்கு திரளும் படை, எதிரிகளிடம் இருந்து பிடிக்கப்பட்ட படை, காட்டில் மறைந்திருக்கும் படை என ஆறுபடைகளின் பலமும் கொண்டிருந்தான்.
அப்படியே ஆறுவகை உபாயமும் அறிந்திருந்தான். ஒப்பந்தம், போர், போர் மிரட்டல், அமைதி, தூதுவிடுதல், பெரிய நட்பினைக் கொண்டிருத்தல் என ஆறுவகை உபாயம் மூலமும் எதிரிகளைக் கட்டுப்படுத்தினான்.
நான்குவகை உபாயமும் அறிந்திருந்த அவன் தன்னோடு நேரடியாக பழகும் பதினெட்டு வகை அதிகாரிகளை மிகச் சரியாக வேலை வாங்கி, ராஜதந்திரமாக தன் ராஜ்ஜியத்தை சரியாக நடத்தினான்.
(தளபதி, அமைச்சர், புரோகிதர், கோட்டை தலைவன் உள்பட பதினெட்டுபேர் மன்னனை எப்போதும் காணும் உரிமை பெற்றிருப்பர்)
போரில் வஞ்சகமாக கபடமாக அதர்மமாக போரிடும் வழி அறிந்திருந்தும் அவன் தர்மவழி ஒன்றிலே போரிட்டான், இதனால் வெற்றி திருமகள் எந்நேரமும் அவனைத் தேடி தேடி வந்தாள்.
யானைகளுக்கும் வாசனை உண்டு, பலமிக்க யானையிடமிருந்து வரும் மணம் கந்தகஜம் எனப்படும், அந்த வாசனையினை அறியும் பிற யானைகள் தொலைவிலே திரும்பி ஓடிவிடும். இதனால் கந்தகஜம் வீசும் யானை சண்டையிட எந்த வாய்ப்புமே இராது, அப்படி அதிதியின் பெயரைக் கேட்டதுமே எதிரிகள் ஓடிவிடுவதால் அவன் யுத்தம் செய்ய வாய்ப்பு பெரிதாக இல்லை.
நிலவு வளர்ந்து பௌர்ணமியானபின் தேய்கின்றது, பெரிய கடல் பொங்கியபின் வடிந்துவிடுகின்றது. ஆனால், அதிதியோ அவைகளை போல் வளர்ந்தாலும் அவை குறைவடைவது போல் குறைவடையாமல் தன் இயல்பிலே நின்றான்.
வெற்று மேகங்கள் கடலிடம் நீர்பெற்று நிலத்தில் மழையாய் பொழிவது போல வறியவர்களான வித்வான்களும் கவிஞர்களும் அவனிடம் நிதிபெற்று எல்லோருக்கும் கொடுக்கும் வள்ளல்களாயினர்.
அவன் செயல்களெல்லாம் கொண்டாடதக்கவையாக இருந்ததால் பெரியோர்கள் அவனைப் புகழ்ந்தனர், அவனோ அதில் நாணமுற்றான் இப்படிப் புகழை அவன் வெறுத்ததால் இன்னும் இன்னும் புகழடைந்தான்.
உதயமாகும் சூரியனைத் தரிசித்தால் பாவம் தீர்வது போல அவன் முகத்தை தரிசித்தால் கஷ்டமெல்லாம் தீரும் என ஜனங்களெல்லாம் அவனைக் காலையிலே தேடி வந்தார்கள், அவனும் சூரியன் தன் வெளிச்சத்தினால் பாதைகளைக் காட்டுவதுபோல் மக்களுக்கு நல்வழி காட்டி வந்தான்.
பகலில் மலரும் தாமரை சந்திரனின் கதிர்களை அறியாதபடி இரவில் கூம்பியிருக்கும், இரவில் மலரும் அல்லியோ சூரியனின் கதிர்கள் புகாதபடி பகலில் மூடியிருக்கும், இப்படிச் சில விஷயங்கள் சிலரால் வெறுக்கப்படும் ஆனாலும் தன் பகைவரும் விரும்பும்படி எல்லார் மனதிலும் இடம்பிடித்திருந்தான் அதிதி.
அவன் சிற்றரசர்கள் சிலரை மிரட்டி கப்பம் பெற்றான். ஆனால், அது அவனுக்காக அன்றி அவன் செய்யும் அஸ்வமேத யாகத்திற்கு என்பதால் அது அதர்ம காரியமாக அல்லாமல் தர்மகாரியமாகவே மாறிற்று.
அவன் சாஸ்திரம் சொன்ன வழியில் சரியாக நடந்து பெரும் உயரம் அடைந்தான், அதனால் இந்திரன் தேவர்களுக்கு தலைவனாய் இருப்பது போல் அவன் அரசர்களின் அரசனாக வீற்றிருந்தான்.
அவன் உலக மக்களை மிகக் கவனமாக காத்ததால் உலகை காக்கும் நான்கு திசையின் நான்கு திக் பாலகர்களுக்கு அடுத்து ஐந்தாம் திக் பாலகன் என்றானான், அப்படியே பஞ்ச பூதங்களுக்கு அடுத்து வாழ்வளிக்கும் ஆறாம் பூதமுமானான், உலகை தாங்கும் ஏழு மலைகளுக்கு அடுத்து எட்டாவது மலையுமானான்.
அவனின் உத்தரவு எழுதப்பட்ட ஒலைகள் தொலைவிலே வரும்போது அவனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் தங்கள் வெண்கொற்ற கொடையினை அகற்றிவிட்டு மணிமுடியினையும் அகற்றிவிட்டு அந்த ஓலையினைத் தங்கள் தலையிலே தாங்கத் தயாரானார்கள்.
தனம் நிறைய கொண்டிருப்பதாலும் அதனை அள்ளி அள்ளி வழங்குவதாலும் “தனதன்” எனும் பெயர் பெற்றிருந்தான் குபேரன், தன்னை அண்டியோர்க்கும் யாகம் செய்வோர்க்கும் அள்ளி அள்ளி கொடுத்ததால் அதிதியும் அப்பெயர் பெற்றான், இதனால் “தனதன்” எனும் பெயரைக் குபேரனோடு அவனும் பகிர்ந்துகொண்டான்.
சக்கரவர்த்தியாய் வீற்றிருந்த அதிதிக்கு சிற்றரசர்கள் மட்டுமல்ல தேவர்களும் பணிவிடை செய்தார்கள், இந்திரன் தகுந்த காலத்தில் அவன் நாட்டில் மழையினைக் கொடுத்தான், யமன் தன் தூதர்களான நோய்களை அங்கு அனுப்பாமல் மக்களை காத்தான், வருணன் படகுகள் போக்குவரத்துக்காக அமைதியான நீரோட்டம் கொடுத்தான், இவர்களெல்லாம் அதிதிக்கு இவ்வாறு பணிவிடை செய்வதை அறிந்த குபேரனும் ஓடிவந்து அதிதி பொக்கிஷத்தைத் தன் செல்வத்தால் நிரப்பினான்.
பகைவர் இல்லாத பெருவீரனான அந்த அதிதி நிஷதநாட்டு அரசனின் மகளை மணந்தான், அவள் அவனுக்காக நிஷத மலை போன்ற மகனைப் பெற்றெடுத்தாள் அவனுக்கு நிஷதன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான் அதிதி.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 75
நல்ல வகையில் வளர்க்கப்பட்டு உலக பசிபோக்க விளைச்சலை கொடுக்கும் பயிரினைக் கண்டு மகிழும் குடியானவர்கள் போல பலமும் அறிவும் கொண்டவனும் உலக நன்மையினைக் காப்பவனுமான தன் மகனை எண்ணி அதிதி பெருமை கொண்டான்.
அதிதி ஐம்புலன்களால் வரும் எல்லா உலக சுகங்களையும் ஒரு சேர அனுபவித்தான், அவன் அஸ்வமேத யாகம் பலவற்றை குற்றமற்ற வகையில் செய்த புண்ணியத்தால் சொர்க்கத்தை அடையும் பொருட்டு ஆட்சியினைத் தன் மகன் நிஷதனிடம் ஒப்படைத்தான்.
தாமரை மலர்போன்ற கண்களைக் கொண்டவனும் கடல் போன்ற ஆழ்ந்த மனமுடையவனும் நகரின் கோட்டை கதவின் தாழ்பாள் போல நீண்ட கைகளைக் கொண்டவனும் அசகசாய சூரனும் கடலுடன் கூடிய உலகை குசனின் பேரனுமான அந்த நிஷதன் ஒரே குடையின் கீழ் உலகை ஆட்சி செய்தான்.
அவனுக்கு நளன் என்றொரு மகன் பிறந்தான், ரகுவம்சத்தின் வாரிசாக அவன் வளர்ந்து வந்தான்.
நெருப்பு போன்ற ஒளியினைக் கொண்டவனும் அவன் யானை கோரை புற்களை நிறைந்த இடத்தை அழிப்பது போல் பகைவர்களை எல்லாம் அழித்துப்போட்டு தன் தந்தைக்குபின் ராஜ்ஜியத்திலும் அமர்ந்தான்.
ஆகாயத்தில் வரும் கந்தர்வர்களால் பாடப்பெறும் புகழைக் கொண்ட நளன் ஆகாய கார்மேகம் போல் கருத்த உடல் கொண்டவனும் நபன் எனும் பெயரைக் கொண்டவனுமான மகனை ஆவணி மாதத்தை மக்கள் விரும்புவது போல் பிரியமாக அடைந்தான்.
தர்மத்தில் மிக நம்பிக்கை கொண்ட நளன் உரிய காலம் வந்ததும் தன் மகன் நபனிடம் ஆட்சியினைக் கொடுத்துவிட்டு மான்கள் நிரம்பிய கானகத்தை அடைந்து மீண்டும் பிறவாத நிலைவேண்டி தவமிருந்து அதையே அடைந்தான்.
மற்ற யானைகளால் வெல்லமுடியாத புண்டரீகம் எனும் திக் கஜங்களில் ஒன்றான யானையினைப் போன்ற மகனைப் பெற்று அவனுக்குப் புண்டரீகன் எனும் பெயரும் இட்டான், நபன் சொர்க்கத்தை அடைந்ததும் வெண் தாமரை மேல் இருக்கும் லஷ்மி திருமாலை அடைவதுபோல் ராஜ்ஜியம் அவன் மகனை அடைந்தது.
பலமிக்க புண்டரீகனும் தன் மகனும் மக்கள் நலத்தில் ஷேமத்தில் அக்கறை கொண்டவனுமான ஷேமதன்வா எனும் மகனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு மிக்க பொறுமையுடன் காட்டில் தவம் புரியச் சென்றான்.
யுத்தத்திலே முன்னால் செல்லும் வீரனும் சொர்க்கத்திலும் தன் கொடியினைப் பறக்கவிடுபவனுமான ஒரு மகன் அவனுக்குப் பிறந்தான், தேவாநீகன் எனும் பெயருடைய அவனின் கீர்த்தி சொர்க்கத்திலும் பரவிற்று.
ஷேமதன்வா ஒரு தந்தையாக தன் மகனுக்கு எல்லா கடமையும் செய்து புகழடைந்தான். அப்படியே தேவாநீகனும் தன் தந்தைக்கு உற்ற மகனாக தன் கடமையினை செய்து அவனுக்குப் பெரும் புகழ் ஈட்டிக் கொடுத்தான்.
நற்குணத்துக்கெல்லாம் நிதியாகிய ஷேமதன் யாகங்கள் பல செய்தான், அந்த நல் யாகங்களின் பலனாய் அவனுக்குப் புண்ணிய லோகம் தயாரானதால் அவன் தன் மகன் தேவாநீகனிடம் அரச பொறுப்பை கொடுத்துவிட்டு புண்ணிய லோகத்தை அடைந்தான்.
(தொடரும்..)