சத்ரபதி சாம்பாஜி : 12
சத்ரபதி சாம்பாஜி : 12
சாம்பாஜி ஜான்சிரா சித்திகளை அடக்க பெரும் போரையும் தொடங்கி அதைவிட பிரமாண்டமாக பாலம் ஒன்றையும் கட்டி அத்தீவினை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இரு ராணுவ செய்திகளும், அதைவிட முக்கியமாக இன்னொரு செய்தியும் சாம்பாஜியினை அடைந்தது.
ஒன்று ஔரசீங்கசீப் அனுப்பிய தளபதி ஹாசன் அலி கான் கல்யாண் நோக்கி பெரும் படையோடு வருகின்றான் என்பது. இரண்டாவது, மைசூர் மன்னன் சிக்க தேவராயா சாம்பாஜிக்கு எதிராக செய்யும் கிளர்ச்சி.
மூன்றாவது, சமர்த்த ராமதாஸர் தன் அவதாரத்தை முடிக்க விருப்பமாக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார் என்பது, அவர் 1682 தைமாத அந்திமத்தில் தன் நோன்பைத் தொடங்கி மாசி மாத நவமியில் உயிரைத் துறக்க முடிவினை எடுத்து நீரும் உணவும் இல்லா விரதத்தில் இறங்கினார், அவர் பேச்சுக் கூட நின்றுவிட்டது.
அவரின் சீடர்கள் உத்தவ சாமி, அக்கா சாமி போன்றோர் உடன் இருந்தனர், இது முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அவரின் சீடர்கள் தஞ்சாவூர் முதல் எல்லா இடங்களுக்கும் செய்தியினை அறிவித்திருந்தார்கள். தஞ்சாவூரில் சுவாமி இருந்தபோது அவரிடம் பெரும் பற்றுக் கொண்டிருந்த வெங்கோஜியின் மனைவியான தீபாபாய் வடக்கே விரைந்தாள்.
ஸ்மார்த்த ராமதாஸர் சிவாஜியின் குரு என்பதால் அவருக்கு சஜன்காட் எனும் கோட்டையினைக் கொடுத்திருந்தான் சிவாஜி. நாடெல்லாம் சுற்றிவிட்டு அவர் அங்குதான் தங்கியிருந்தார், அவருக்குச் சாம்பாஜியும் எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தான்.
தன் அந்திம காலத்தை உணர்ந்த ராமதாஸர், முக்காலமும் உணர்ந்த ராமதாஸர், நடக்கப்போகும் காட்சிகளை உணர்ந்து எச்சரித்துக்கும் படி சாம்பாஜிக்கு ராமதாஸர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
எப்போதும் போல சீடர்களை மிக உற்சாகமாகமாக வரவேற்றான் சாம்பாஜி, ராமதாஸரைப் பற்றி மிக விசாரித்தான், சீடர்களோ “அவர் தன் கடமையினைச் செய்கின்றார்” என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.
ராமதாஸரின் நிலையினைச் சொல்ல வந்த சீடர்கள் அப்படியே அக்கடித்தத்தை முதலில் கொடுத்தார்கள். காரணம், ஒருவேளை சுவாமியின் நிலைபற்றி சொன்னால் அவன் அதைப் படிக்காமலே விரைந்து சஜன்காட் கோட்டைக்குச் சென்றுவிட வாய்ப்பு உண்டு.
சாம்பாஜி அக்கடிதத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தான், அது அந்த மகாஞானி அவனுக்கு மறைமுகமாக சொன்ன போதனையாய் இருந்தது, ஞானியர் எல்லோரின் விதியினையும் அறிந்தவர்கள் அதனால் அந்தக் கர்மத்தை மறைமுகமாகத்தான் சுட்டிக் காட்டுவார்கள்.
சாம்பாஜிக்கும் அவர் தொடக்கவரியிலே அவன் என்ன செய்யக் கூடாது என்பதைச் சொல்லியே கடிதத்தைத் தொடங்கியிருந்தார்.
“ஓ இந்துக்களின் அரசனே, எப்போதும் எச்சரிக்கையாக இரு, காலச் சூழ்நிலைகளால் நிதானம் இழக்காதே; அரசனுக்கு நிதானம் மிக மிக முக்கியம்; மேலும் உன் படையினருடன் ஆலோசனைச் செய்ய மறக்காதே; நான் உனக்கு உறுதியாய்ச் சொல்கின்றேன். தொலை தூர இடங்களில் தனியே தங்காதே, அவசியம் ஏற்படின் தளபதிகள் ஆலோசனைப் பெற்று காவலோடு அதைச் செய்துகொள்.
உன்னுடைய முன்கோபத்தையும் கடும் மூர்க்கத்தையும் விட்டுவிடு, இது ஒரு அரசனின் சிந்தனைகளைப் பாதிக்கும், அவனை வழி தவறச் செய்துவிடும். உணர்ச்சிவசப்படும் அரசனும், யார் எது சொன்னாலும் நம்பிவிடும் அரசனும் எதையும் சாதிக்க முடியாது, அமைதியாக பணிவாக இரு, உனது இலக்கு இந்துஸ்தானத்தின் பரிபூரண விடுதலை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்.
தவறு செய்பவர்களை மன்னித்துவிடு, அது உன் நற்பெயரை உயர்த்தும். உனக்கு விசுவாசமாய் உழைப்பவர்களையும் திறமையானவர்களையும் ஊக்கப்படுத்து. அது உன் ராஜ்ஜியத்துக்கு நன்மையினை வளர்க்கும்.
ஆற்றில் தடை ஏற்பட்டால் அதன் ஓட்டம் பாதிக்கும், ஒரு அரசனால் ஏதும் சிறிய குழப்பம் வந்தாலும் நாடு பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொண்டே ஆட்சி செய்வாய், உன் ஒவ்வொரு சிந்தனையும் அதன் விளைவு நாட்டுக்கு எப்படி முடியும் என்பதைக் கொண்டே இருக்கட்டும், நல்ல அரசன் தனக்காக வாழ்வதில்லை.
ஒரு அரசன் ஆற்றைப்போல் எல்லோருக்குமானவன். அதுவே அவன் சுதர்மம், அவன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதை மறவாதே.
ஓ மன்னனே, ஆட்சியின் சூட்சுமத்தை அறிந்துகொள். மக்கள் இயல்பாக அவரவர் வேலையினைப் பார்க்கும் போது உன் ராஜ்ஜியம் அமைதியாக இருக்கின்றது, உன் ஆட்சி சரியாக இருக்கின்றது என்பதை அறிந்துகொள். மாறாக, அவர்கள் கூட்டமாக திரண்டால் அது தடையால் தேங்கும் நீர் ஆற்றை உடைப்பதற்கு சமம் என்பதை அறி, மக்கள் கொஞ்சம் திரண்டாலும் அங்கே ஏதோ சிக்கல் என்பதை உணர்ந்து சிக்கலை உடனே தீர்த்துவிடு.
அரசனே, எவன் இது மூதாதையர் சொத்து எனக் குடும்பத்தில் எழும் சண்டை, அந்நியர் உள்ளே வரவழிசெய்யும் என்பதை அறிந்தவன் நீ, அதனால் அரசகுடும்பத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லாதபடி கவனமாய் இரு.
சிங்கத்தின் குகையில் இருந்து ரத்தினத்தை எடுப்பதைப் போல் எதிரியுடன் மோதுபவனே அதைக் கவனமாய்ச் செய்.
எப்போதும் இருவர் சண்டையிடும் போது வாழும் வெற்றி வாய்ப்பு மூன்றாம் நபருக்கே செல்லும் என்பதை நினைவில் கொள், அப்படி ஒரு நிலை இன்னொருவர்க்கு வராதபடி கவனமாய் இரு, சத்தியத்திலும் தர்மத்திலும் முழு நம்பிக்கை கொண்டு பொறுமையாய் நட.
(பின்னாளில் பிரிட்டிஷ் ஆட்சி வந்தது இப்படித்தான். அதை அன்றே கணித்தவர் ராமதாஸர்)
மக்களை மிரட்டி பணியவைக்க முயலாதே அதனால் மக்களிடம் இருந்து நீ நினைக்கும் காரியம் எதுவும் நடக்காது, மக்களைச் சிந்திக்க வை, அவர்களை அன்பால் நடத்து, அப்போது பன்மடங்கு காரியம் அவர்களால் உனக்கு நன்மையாக விளையும்.
மக்களுக்கு மகிழ்ச்சியான வார்த்தைகளைச் சொல், அது உனக்கு நன்மை கொடுக்கும். மக்களை எப்போதும் மகிழ்வாகவும் திருப்தியாகவும் வைத்துக்கொள், அவர்கள் குரல் எழுப்பும் அவசியம் எதுவும் வைக்காதே.
மக்களை ஒருங்கிணைத்துத் திரட்டி எதிரிகளை அடி, அதற்கான காரணத்தைச் சொல்லி அவர்களைத் திரட்டி எதிரியினை அடி, ஓட ஓட அடி, மக்கள் ஆதரவுடனே ஒரு அரசன் வெல்லமுடியும், இதனை நீ செய்யும்போது உன் புகழ் எல்லாத் திசையிலும் பரவும்.
எதிரிகளிடம் எப்போதும் உன்னைப் பற்றிய பயம் இருக்கட்டும், யுத்தம் வந்தால் முதல் அடி உன்னதாக இருக்கட்டும், எதிரிக்கு உன்மேல் அச்சமின்றிப்போனால் அவன் முதல் அடியினை உனக்குக் கொடுப்பான், அது நல்லதல்ல.
அரசனே எல்லா விஷயத்தையும் ஞானத்தோடு அணுகு, சூழலைப் பொறுத்துக் காரியமாற்று. எதிரியினை வெல்லுமுன் உன் கோபத்தை வென்றுவிடு, ஒருவேளை கோபம் மிகுந்திருப்பின் அந்நேரம் முடிவுகளை எடுக்காதே, குடி மக்கள் மேல் உன் கோபத்தை ஒரு நாளும் காட்டாதே.
உன் தேசமக்கள் உன்மேல் கொண்ட அன்பால் தேசப்பணி செய்யட்டும், அரசன்மேல் அன்பு ஒன்றே இருக்க வேண்டும், அச்சமோ பயமோ உன் மேல் இருக்கும்படி மிரட்டலில் வைக்காதே, அன்பால் அவர்களை நடத்து.
மக்களைப் பக்தியில் நடத்து, பெரும் அரசனான உன் தேசத்தில் மொழி இனம் சாதி என மக்கள் பிரிந்துகிடந்தாலும் இந்த மண்ணின் தர்மத்தில் அவர்களைப் பக்தியுள்ளவர்களாக்கு, எல்லோரின் நோக்கமும் மிலேச்சரிடமிருந்து இந்நாட்டை விடுவித்து அவர்களை விரட்டி அடிக்கும் இலக்காக மட்டும் இருக்கும்படி அவர்களுக்குப் போதனையும் பயிற்சியும் கொடு, அவர்களை இந்துக்களாக அதன் பெருமை மிக்க மக்களாக உணரவை.
இந்த மண்ணின் மதத்திற்கான உணர்ச்சியினைக் கொடு, நல்ல இந்துமக்களாக பழக்கு, அதுதான் காலத்துக்கும் பலளிக்கும், அவர்களுக்கு வழிகாட்டும்படி நீ நல்ல இந்துவாக அவர்களுக்குத் துலங்கி நில்.
ஓ அரசனே, தைரியத்தைத் தொடர்ந்திரு, உன் வாளை மிலேச்சர்மேல் வீசி உன் தந்தை விட்டுச் சென்ற ராஜ்ஜியத்தை இன்னும் இன்னும் பெரிதாக்கு, காசியும் மதுராவும் அயோத்தியும் மீட்கப்பட்டு மிலேச்சரின் அடையாளம் களையப்படும் வரை உன் வாளை வீசு.
ஹே சாம்பாஜி மன்னனே, உன் தந்தை சிவாஜி எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தான் என்பதை எப்போதும் நினைவில் கொள், அவனின் மிகப்பெரிய சாதனையினை மிஞ்சும்படி நீ ஏதும் செய்யாவிட்டால் காலம் உன்னைச் சருகுக்குச் சமமானதாக்கிவிடும்.
எப்போதும் சிவாஜி போல் வாழப்பழகு, சிவாஜியாய் யோசி, சிவாஜியாய் நட, சிவாஜியாய் வாள்வீசு, சிவாஜியாய் ராஜதந்திரங்களைச் செய், எப்போதும் இதை உன் நினைவில் இருந்து அகற்றிவிடாதே, அவனாகவே நீ மாறு.
அவனின் தியாகம் மிகப் பெரிது அவன் தனக்கென ஒரு நொடி வாழவில்லை, வசதியும் சொகுசும் தேடவில்லை, அவன் தன்னைக் கொடுத்து இந்த மாபெரும் இந்துராஜ்ஜியத்தை உருவாக்கினான், அதனாலே இங்கு அவன் தேசம் இந்துக்களின் தேசமாய்ப் பரந்து விரிந்தது.
எப்போதும் நினைவில் கொள், நீ சிவாஜியினை விட கொஞ்சமேனும் அதிகம் சாதிக்காவிட்டால் ஒரு மனிதனாக கூட காலம் உன்னைக் கருதாது, அவனின் மகன் என்பது உனக்கான உரிமை அன்று, அது சவால் நிறைந்த பொறுப்பு, அவன் இவ்வளவு பெரிய இந்து ஆலயத்தை எழுப்பினான், நீ அதில் கோபுர கலசத்தை நிர்மாணிக்கும் இடத்தில் இருக்கின்றாய் என்பதால் உன் மாபெரும் பொறுப்பை உணர்ந்து ஆட்சிசெய், அது வெறும் ஆட்சியல்ல, இங்கு இந்துக்களுக்கான உரிமை, வாழ்வு என்பதை எக்காலமும் மறவாதே.
மறுபடியும் முதல் வரியினை நினைத்துப்பார் ,சிவாஜியின் மகனே இதை விட நான் உனக்கு என்ன சொல்லமுடியும்?”
இதனைப் படித்த சாம்பாஜி அப்படியே கொஞ்ச நேரம் மிகுந்த அமைதியில் முழ்கினான், அது தெய்வமே அவனுக்குப் போதித்த மொழிகள் போலிருந்தன.
அந்தச் சீடர்களை அவன் உபசரித்து தங்க வைத்தான், அவர்களோடு சஜன் காட் கோட்டைக்குச் செல்ல தீர்மானித்துப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தான், அது போர்க்காலம் என்பதால் கொஞ்சம் தாமதமானது.
ஆனால், அவர்கள் செல்லுமுன் ராமதாஸர் சித்தி அடைந்திருந்தார், சாம்பாஜியால் அவரின் உயிரற்ற உடலை மட்டுமே காண முடிந்தது, பெரும் மரியாதையுடன் அவருக்கான இறுதி காரியங்களைச் செய்ய உத்தரவிட்டு அமர்ந்திருந்தான்.
அவன் நினைவுகள் அலைமோதின, சாம்பாஜியினை மிகச் சிறுவனாக சிவாஜி ராமதாஸர் முன் நிறுத்தியதும் குரங்குகள் நடுவே இருந்த அவர் புன்னகை பூக்க ஆசீர்வதித்ததும் கண்முன் வந்து போயின.
சிவாஜி மனமுடைந்த போதெல்லாம் அவரை அழைப்பதும், அதன்பின் சிவாஜியின் எல்லாச் சிக்கல்களும் காணாமல் போவதும் அவன் கண்டுவளர்ந்த விஷயங்கள்.
சிவாஜியினை அவர் மிகச் சரியாக வழிநடத்திய குருவாக இருந்தார், நல்ல குருவே ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் பெரும்பேறு என்பதற்கேற்ப அவனைச் சரியாக நடத்தினார், சிவாஜி அழியாப் புகழடைய அவரின் வழிகாட்டலும் அருளும் காரணமாய் இருந்தது.
சிவாஜிக்குக் கிடைத்த குரு தனக்குக் கிடைக்காமல் போனது தனக்கான சாபம் என நொந்துகொண்டான் சாம்பாஜி. சிவாஜியின் விருப்பப்படி ராமதாஸரின் உடல் சஜன்காட் கோட்டையிலே புதைக்கப்பட்டது, அவரின் சீடர்கள் அதை ராமதாஸரின் நினைவிடமாக மாற்றவும் அதைப் பராமரிக்க நிதியினைப் பெறவும் ஏற்பாடுகளைச் செய்தான் சாம்பாஜி.
ராமதாஸருக்காக அவன் துக்கம் கொண்டாடியபோதுதான் இரு பெரும் படைகள் சாம்பாஜிக்கு எதிராக நகர்ந்தன. ஒன்று, சித்திகளை காக்கும் பொருட்டு கல்யாண் பக்கம் ஹாசன் அலிகான் நடத்தி வந்த பெரும் படை.
இன்னொன்று, சிக்கதேவராயா திரட்டிய பெரும்படை, சுமார் 30 ஆயிரம் வில்வீரர்களை விஷ அம்புடன் நிறுத்தி அவன் பெரிய எதிர்ப்பைச் சாம்பாஜிக்குக் காட்டினான்.
இந்த இரு படைநகர்வுகளுக்குப் பின்னால் இருந்தவன் ஔரங்கசீப், அவன் கல்யாண் பக்கம் ஹாசன் அலிகானைப் படையோடு அனுப்பி சாம்பாஜியின் நகர்வுகளை குறிப்பாக அவன் மகன் முகமது அக்பரின் வியூகங்களைக் காண விரும்பினான்.
அப்படியே மைசூர் மன்னன் சிக்க தேவராயருக்கு அவன் ஒரு வியூகம் சொன்னான், அது மதுரை நாயக்கனைத் துணைக்கு அழைப்பது, அப்படியே செஞ்சிக் கோட்டையினை வஞ்சகமாக கைபற்றுவது.
செஞ்சிக் கோட்டைக்கு மிகவும் அஞ்சினான் ஔரங்கசீப். அதன் முக்கியத்துவம் அவனுக்குத் தெரியும் என்பதால் அக்கோட்டையினை சாம்பாஜியிடம் இருந்து முதலில் துண்டிக்க வழிசெய்யும்படி அழுத்தமாக சொல்லியிருந்தான்.
செஞ்சிக்கோட்டையின் காவலாக ஹார்ஜி ராஜே மஹாதிக் என்பவன் இருந்தான், அக்கோட்டையினை இந்துசேனையுடன் போரிட்டு மீட்கமுடியாது என்பது சிக்கதேவ ராஜாவுக்குத் தெரியும், ஆனால் செஞ்சிக் கோட்டை எனும் வலுவான கோட்டை இருக்கும் போது போரைத் தொடங்குவதும் சரியல்ல என்பதால் யோசித்தான்.
அவனுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தான் ஔரங்கசீப், அக்காலங்களில் வீரத்தால் மட்டுமல்ல துரோகத்தாலும் கோட்டைகள் கைபற்றப்பட்டன, யுத்தத்தில் பங்கெடுக்கும் எல்லோரும் தாய்நாட்டின் மேல் பற்றுக்கொண்டு வருபவர்கள் அல்ல, நல்ல கூலிக்கு வாளேந்துபவர்கள் உண்டு. இன்னும் கூலி கூட்டிக் கொடுத்தால் அதற்கேற்ப மாறுபவர்களும் உண்டு.
அதன்படி இந்த மஹாதிக் எனும் செஞ்சிக் கோட்டை தலைவனை வளைத்துப்போட முயன்றான் சிக்க தேவராயன், அதற்குத் தன் தளபதி குமாரய்யா என்பவனைத் தேர்ந்தெடுத்தான்.
குமாரய்யா தமிழக நாயக்கர்கள் சிலரின் உதவியுடன் செஞ்சிக் கோட்டை தலைவனைத் தொடர்பு கொண்டு கோட்டையினைக் கைவிட்டு ரகசியமாகச் சென்றால் நல்ல தொகையும் இன்னும் குறுநில மன்னன் எனும்படி பெரிய நிலமும் படையும் தரப்படும் என ஆசைகாட்டினான், அவன் மசியவில்லை.
விடாத குமாரய்யா மதுரையினை ஆளும் சொக்கநாத நாயக்கன் மராத்தியருடன் கூட்டணிக்கு வராமல் செய்யும்படி சொக்கநாதனுக்கும் மஹாதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து தமிழக நிலத்தை ஆளத் திட்டமிடுவதாகவும் வதந்தி பரப்பினான்.
எப்படியாவது செஞ்சிக் கோட்டையினை சாம்பாஜியிடம் இருந்து பிரிப்பதே அவனின் திட்டமாய் இருந்தது, ஆனால் இதெல்லாம் எடுபடவில்லை. ஹார்ஜி மஹாதிக் சொக்கநாதனுக்கு எழுதியது போல ஒரு ஓலையினை சாம்பாஜி படைகள் கையில் அகப்படுவது போலவே அனுப்பினான் குமாரய்யா.
யுத்த களத்தின் கூட்டணியில் சந்தேகம் என்பது பெரும் ஆயுதம், மனதால் ஒருவனை நம்பிக்கை இழக்கச் சந்தேகம் கொள்ள செய்துவிட்டால் அது ஆயிரம் யானைகளை விட பலத்தை கொடுக்கும், அதனால் வரும் சேதாரம் அதிகம்.
இந்த உளவியல் யுத்தம் சாம்பாஜியிடம் பலிக்கவில்லை, சாம்பாஜி ஹார்ஜி மேல் நம்பிக்கை கொண்டான், அந்த நம்பிக்கையினை களத்தில் காட்ட துடித்தான் மஹாதிக்.
இது ஒரு புறம் நடக்க கல்யாண் பக்கம் வேகமாக முன்னேறினான் ஹாசன் அலி கான், அவனின் முதல் வியூகம் ராம்சேஜ் எனும் கோட்டையினைப் பிடிப்பதாக இருந்தது.
அது பெரிய கோட்டை அன்று. ஆனால், நாசிக்கை கைபற்ற அது அவசியம், அது பலமான இணைப்புக் கோட்டையாக துணை காவல் கோட்டையாக இருந்தது, அதனைக் கைபற்றும் முடிவுடன் பாய்ந்தான் ஹாசன் அலி கான்.
ஹாசன் அலிகானை முறியடிக்க ஹம்பிராவ் மோதி களமிறங்கினான், பெரும் படையுடன் அவன் கல்யாண் பக்கம் அவனை எதிர்கொள்ள தயாரானான்.
அங்கே பாலம் கட்டும்பணி நின்றிருந்தாலும் சாம்பாஜியின் படைகள் தௌலத்கான் மற்றும் இதர தளபதிகள் சகிதம் கடல்காவலைப் பலப்படுத்தியிருந்தது, சித்திகளும் போர்ச்சுகீசியரும் அடக்கப்பட்டிருந்தார்கள்.
சாம்பாஜி சிக்கதேவராயனை சந்திக்கத் தயாரானான், அவன் நேரடியாக வரும் அவசியம் இல்லை எனினும் இந்தக் குமாரய்யா செய்த குழப்பங்களால் ஹார்ஜி மஹாதிக்கினை மோதவிட்டு கண்காணிக்கும் பொருட்டு வந்தான். ஒரு அரசன் யாரையும் முழுக்க நம்பக்கூடாது என்பதால் அவனே நேரடியாக களத்துக்கு வந்தான்.
அவன் இருமுனை தாக்குதலை மைசூர்மேல் தொடுத்தான். வடக்கே இருந்து தாதாஜி கட்கரே, ஜெய்டாஜி கட்கர் ஆகியோரை ஸ்ரீரங்கப்பட்டினம் நோக்கி அனுப்பினான், அதே நேரம் கிழக்கே இருந்து ஹார்ஜி மஹாதிக் செஞ்சிக் கோட்டையில் இருந்து கிளம்பினான்.
சிக்கதேவராயன் மிரண்டு போனான், அவன் குமாரய்யாவினை மஹாதிக்கை எதிர்க்க அனுப்பிவிட்டு வடக்கே இருந்து வரும் படைகளை எதிர்க்கத் தயாரானான்.
இன்றைய கன்னடத்தின் மாண்டியா பிரதேசத்திலுள்ள பன்வார் அல்லது பன்வாரா எனும் இடத்தில் சாம்பாஜி படைகளும் சிக்க தேவராயனின் படைகளும் மோதத் தயாராயின.
குமாரய்யா ஹார்ஜி மஹாதிக்கை எதிர்கொள்ள கிளம்பினான், பன்வார் யுத்தம் எனும் பெரும் யுத்தம் தொடங்க இருந்தது, வடக்கே ஹம்பிராவும் ஹாசன் அலிகானும் மோதத் தயாரானார்கள்.
சிவாஜிக்குப் பின் சாம்பாஜி செய்யப்போகும் இந்த இருமுனை யுத்தம் பெரிய எதிர்பார்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தியது, 24 வயது சாம்பாஜி தன்னை நிரூபிக்க நெருப்பாக களத்தில் நின்றான், அதே நேரம் சிக்கதேவராயன் ஒரு இந்து என்பதால் கடைசியாக அமைதி முயற்சி ஒன்றைச் செய்ய விரும்பினான்.
சிக்கதேவராயனோ போரையே விரும்பினான், அவனுக்கு மதுரை சொக்கநாத நாயக்கனை வீழ்த்தி மதுரையினையும் மைசூர் அரசுடன் இணைக்கும் திட்டம் இருந்ததால் பல தந்திரங்களைச் சாம்பாஜியினைத் திசைமாற்ற செய்யத் தொடங்கினான்.
(தொடரும்…)