சத்ரபதி சாம்பாஜி : 14
சத்ரபதி சாம்பாஜி : 14
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபட்டு மீண்டும் தங்கக்கூரை வேய்ந்து கொடுக்க உத்தரவிட்ட சாம்பாஜி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு தஞ்சாவூரிலே ஓய்வெடுத்தான்.
சோழர்களின் கடற்படை முதல் சிவபக்தி வரை, ஆட்சி முதல் அரசியல் வரை எல்லாமே தங்களின் போராட்டம் போல் இருந்ததை நினைந்து சிலிர்த்துக் கொண்டான். சோழர்களுக்குப் பௌத்தம், தங்களுக்கு ஆப்கானிய இஸ்லாம் என நினைத்துக் கொண்டான். சோழர்கள் வலுவாகத் தொடர்ந்திருந்தால் இல்லை பாண்டிய வம்சம் அதே பேரரசாக நிலைத்திருந்தால் இந்நேரம் மாபெரும் பலம் தனக்குத் தெற்கில் இருந்து கிடைத்திருக்கும் எனப் பெருமூச்சு இட்டு கொண்டான்.
அவனின் ஓய்வுகாலம் சுமார் ஒரு மாதம் நீடித்தது, மகன் பிறந்த பெரும் நல்ல செய்தியினைக் கூட உற்சாகமாகக் கொண்டாட முடியாதபடி அவன் தீர்க்கமான போர் சிந்தனையில் இருந்தான்.
சிக்கதேவராயனிடம் அவன் அடைந்த பின்னடைவும், தன் மூன்று தளபதிகளையும் அவன் கொன்ற கொடுமையும் அவனை மிகப்பெரிய பதிலடிக்குத் தூண்டின, நிச்சயம் இனி தான் சிக்கதேவராயாவின் பகுதிகளைக் கடந்துதான் ராய்காட் செல்லவேண்டும், மாற்றுவழியாக கடல் பாதையோ அல்லது குதுப்ஷாகியின் ராஜ்ஜியம் வழியாகவோ சென்றால் ஒரு பெரும் அரசனுக்கு அவமானம் என்பதாலும் அது பெரிய வெற்றிக்குச் சிக்கதேவராயனை இழுத்துச் செல்லும் என்பதாலும் அவனை எப்படி எதிர்ப்பது எனச் சிந்தித்துக் கொண்டே இருந்தான்.
வடக்கே ஹம்பிராவ் மோடி மொகலாயச் சேனைகளைக் கட்டுப்படுத்தி கொண்டிருந்தான். ராம்சேஜ் எனும் சிறிய கோட்டையினைப் பிடிக்கவே மொகலாயச் சேனை தடுமாறிக்கொண்டிருந்தது, பெரும் வீரன் எனக் கருதப்பட்ட ஹாசன் அலிகான் தான் இந்துசேனையின் மரண பொறிக்குள் சிக்கியிருப்பதை உணர்ந்தான்.
இந்து சேனைகள் மொகலாயப் படைக்கு உணவுத் தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு இன்னும் பல வகை வழங்கல்களை அதாவது தொடர்ச்சியாக கிடைக்கும் உதவிகளை ஆங்காங்கே முறித்துப் போட்டன, இதனால் உதவிகளும் அவசிய தேவைகளின் நிர்பந்தத்தாலும் மொகலாயச் சேனை தவித்தது.
அப்படியான சேனையினை எப்போது தாக்குவார்கள் எனத் தெரியா அளவு இரவு பகல் என அடிக்கடி தாக்கிக் குழப்பத்திலே வைத்திருந்தான் ஹம்பிராவ், அவனோடு இணைந்து இன்னொரு முனையில் போரிட்டுக் கொண்டிருந்தான் நட்டாஜி பால்கர்.
அனுபவம் வாய்ந்த இவர்கள் ஒரு புறம் தாக்க மொகலாயர் கவனத்தைப் பல வகையில் சிதறடித்துப் பெரும் போர் நடத்தினான் துர்கா தாஸ் ரத்தோர், அவனின் சேனைகள் கடலோரம் வந்து ஜான்சிராவின் சித்திகளையும் கட்டுப்படுத்தின.
ஔரங்கசீப் படையின் நகர்வுகளை இந்துசேனையும் ராஜபுத்திர சேனையும் இப்படி எதிர்கொண்டு நிற்க தெற்கே தஞ்சாவூர் பக்கம் எப்படியாவது சிக்க தேவராயனை வீழ்த்திவிடும் கடும் ஆலோசனையில் இறங்கினான்.
அப்போது மதுரை சொக்கநாதனின் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை சிக்கதேவராயனுக்குக் கொடுக்கபட்டு இருவரும் ஒரு அணியாக சாம்பாஜியினை எதிர்த்தார்கள், அந்தத் திருச்சிராபள்ளி மலைக்கோட்டை மிக அபாயமான கோட்டையாக அன்று இருந்தது.
காவேரி அதன் காவலாய் இருந்தது, அதை அடுத்து இருக்கும் சிறிய குன்றில் அக்கோட்டை கட்டப்பட்டிருக்கின்றது, இதனை இந்துக்கள் கோவிலாகக் கொண்டிருந்தனர், சிவனே யாருமற்ற தன் பக்தைக்குப் பிரசவம் பார்த்ததால் தாயுமானவர் என இங்குக் கோவில் கொண்டருளினார், அப்படியே விபீஷ்ணனிடம் இருந்து அரங்கன் சிலையினைப் பறித்து திருவரங்க ஆலயத்தின் மூலவராக ஸ்தாபித்த பிள்ளையார் இந்த மலையின் உச்சியில் அமர்ந்து உச்சி பிள்ளையார் என்றானார்.
இந்துக்களின் ஆலயமாக, பெருமை மிகு ஆலயமாகவே இது அமைந்தது. பின்னாளில் மலை அடியில் மாணிக்க பிள்ளையாரும் அமர்ந்து கொண்டார்.
இந்துக்களை எதிர்க்கவும் குலைக்கவும் கொள்கை கொண்ட மதம் சமணம், அதனால் பிற்கால சமணர்களும் குன்றின் ஒரு பகுதியினை ஆக்கிரமித்திருந்தனர், பின் அவர்கள் விரட்டப்பட்டனர்.
பல்லவர் காலத்தில் குடைவரை கோவில்கள் எழுப்பப்பட்டன, அப்படியே சிறிய கோட்டை பல்லவர்களால் கட்டப்பட்டது, இதன் முக்கியத்துவத்தை யுத்த ரீதியாக அவர்கள் பலப்படுத்தினார்கள், காவேரி அருகே மலையில் இருக்கும் இக்கோட்டை எதிரிகளைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் தாக்கவும் பண்டகசாலையாகவும் பெரிய பலமாக இருந்தது.
சோழர்கள் இதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர், பின் பாண்டியர் கொண்டுவந்தனர். இக்கோட்டைக்கென ஒரு ராசி உண்டு, அதனை யார் கையில் வைத்திருப்பார்களோ அவர்கள் பெரும் வெற்றி பெறுவர் ஆட்சியினை நிர்மாணிப்பார்கள்.
சோழர்களுக்குப் பின் ஜடாவர்ம சுந்தரபாண்டியனிடம் இந்தக் கோட்டை சிக்கி பாண்டியரின் கோட்டையாக இருந்தது, அவர்களும் அக்கோட்டையினைப் பலப்படுத்தினார்கள்.
பாண்டியரின் வீழ்ச்சிக்குப் பின் தெற்கே படையெடுத்த கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் இதனைக் கைபற்றியிருந்தான், பின்னர் துக்ளக்கின் கோட்டையாக அது விளங்கிற்று. எனினும்
நாயக்கர்கள் வந்து பாண்டிய ராஜ்ஜியத்தை மீட்டபோது அது மதுரை அரசின் மிக முக்கிய கோட்டையாயிற்று, அங்குப் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து மிகப் பலமான கோட்டையாக விஸ்வநாத நாயக்கன் உருவாக்கிவைத்தான், தெற்கின் வலிமையான கோட்டையாக அது விளங்கிற்று.
அந்தக் கோட்டைதான் இப்போது சிக்கதேவராயனுக்கு மதுரை சொக்கநாத நாயக்கனால் வழங்கப்பட்டு சாம்பாஜிக்கு அச்சுறுத்தலாக இருந்தது, அதனைக் கைபற்றாமல் அடுத்தக்கட்ட யுத்தம் சாத்தியமில்லை.
ஆனால், அதைக் கைபற்ற தடையாக இருப்பது சிக்கதேவராயன் படையின் விஷ அம்புகள், அதனை எப்படி முறியடிப்பது என ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான் சாம்பாஜி, அவன் சிந்தனை முழுக்க அதுதான் இருந்தது.
அவைகள் வீரர்மேல் பட்டால் ஆபத்து, அதை எப்படி முன்னால் நிறுத்தி வைப்பது என யோசித்தபடி இருந்தவனுக்கு வாழை மரத்தில் குத்தி வைக்கபட்ட அரிவாள் ஒரு யோசனையினைச் சொன்னது.
வாழை மர தடினமான மடல்களைக் கட்டி கொண்டு களத்தில் நின்றால் என்ன? வரும் அம்புகளை அதுவே தாங்கிக் கொள்ளும் எனச் சிந்தித்தான், ஆனால் இருவகை ஆபத்துக்கள் இருந்தன.
வேகமாக வரும் அம்புகள் வாழைமடலை ஊடுருவலாம். இரண்டாவது, அவை விஷ அம்புகள் என்பதால் வாழைமடல் முழுக்க எளிதில் பரவும், அது இன்னும் ஆபத்து.
அப்படியானால் எப்படி இவற்றை முறியடிப்பது எனச் சிந்தித்தவன் நாகம் ஒன்று சட்டை உரித்துப் போட்டுச் செல்வதைக் கண்டான், அவனுக்குள் ஒரு யோசனை மின்னலாக வெட்டிற்று, தோல் ஆடை ஆபத்தில் இருந்து காக்கும் என்பதை அவன் சிந்தனைச் சொன்னது.
தோலுக்கு மேல் தோல் இருந்தால் அது ஒரு கவசம் போல் இருந்தால் இந்த அம்புகளை எளிதில் சமாளிக்கலாம் எனச் சிந்தித்தவன் அதைத் தன் படையினருடனும் சித்தப்பா வெங்கோஜியுடனும் ஆலோசித்தான்.
அதன்படி ஆட்டுத்தோலால் ஆடை செய்யப்பட்டு உள்ளே தும்புகள் நிரப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது, தோல் ஆடைகள் மரத்தில் கட்டப்பட்டு அதன் மேல் அந்த விஷ அம்புகளின் மாதிரிகள் பாய்ச்சப்பட்டன, அவை அந்தத் தோல் ஆடையில் குத்தி நின்றதே தவிர மரத்தைத் தொடவில்லை.
சாம்பாஜி மகிழ்ந்தான், அவனுடன் இருந்த சாந்தாஜி ஒரு ஆலோசனையினைச் சொன்னான், அதன்படி ஆட்டுத்தோல் மேல் வழவழப்பாக ஆமணக்கு மற்றும் இலுப்பை எண்ணெய் பூசப்பட்டது, அது அம்புகளை வழுக்கிச் செல்லவும் வழிவகுக்கும்.
சிக்கதேவராயன் படைகள் வீசும் அந்த அம்புகளின் நுனியில்தான் விஷம் இருக்கும், நுனியானது உடலில் தொடாமல் இருந்தால் ஆபத்து ஏதுமில்லை, இந்தத் தோல் ஆடை அம்புகளை வழுக்கிவிடச் செய்யும், அதை மீறி அம்பு தைத்தாலும் உள்ளே இருக்கும் தும்பினைத் தாண்டி அம்பு உள்ளே செல்லாது.
இந்தக் கவச ஆடை கைகொடுக்கும் என உற்சாகமான சாம்பாஜி அதை நிறைய தயாரிக்கச் சொன்னான், ஆட்டுத்தோல்கள் குவிக்கப்பட்டு உள்ளே தும்புகள் அடைக்கப்பட்டு அவை தயாராயின, அத்தோடு யுத்த வியூகமும் தயாரானது.
சிக்கதேவராயனைப் பலமுனையில் தாக்க வியூகம் சொன்னான் சாம்பாஜி, அதன்படி செஞ்சிக் கோட்டை படையின் ஒரு பிரிவு, குதுப்ஷாகியின் படைகள் ஆகியவை ஒருபக்கம் தாக்கும், இக்கேரி நாயக்கர்கள் இன்னொரு பக்கம் தாக்குவார்கள்.
தெற்கே சாம்பாஜி தஞ்சாவூர் படைகளோடு சேர்ந்து தாக்குவான், அவனுக்குத் துணையாக சில பிரிவுகள் ஆங்காங்கே இருந்து வரும்.
அங்கே இன்னொரு ஆபத்து இருந்தது, அது காவேரி. சற்றுத் தாமதமானால் ஆனி ஆடி பருவமழை காலங்களில் அது பெருக்கெடுத்து ஓடும் என்பதால் வைகாசிக்குள்ளே தாக்குதல் நடத்தும் அவசியம் இருந்தது.
சாம்பாஜி தீவிரமானான், படைகளைத் திரட்டினான். அவர்களுக்கு அந்த ஆட்டுத்தோல் ஆடை அணிவித்துப் பயிற்சிகள் கொடுத்தான். எல்லாம் தயார் எனும் நிலையில் ஒரு சேர எல்லா அணிகளும் பாய்ந்தன.
சிக்கதேவராயனை செஞ்சிக் கோட்டையில் இருந்து மகாதீக் தலைமையில் ஒரு படை தாக்கிற்று, குதுப்ஷாகி படைகள் அவனோடு கலந்து கொண்டன.
இக்கேரி நாயக்கர்கள் ஒரு பக்கம் தாக்கினார்கள்.
இப்படிச் சிக்கதேவராயன் சிக்கிக் கொள்ள சாந்தாஜி தலைமையில் ஒரு இந்துசேனை பிரிவு காவேரித் தாண்டி வந்து சாம்பாஜியோடு இணைந்தது, சாம்பாஜி பலமான மலைக்கோட்டையினை முற்றுகையிட்டான்.
உள்ளே படைக்கு காவலாய் இருந்தவன் மதுரை சொக்கநாத நாயக்கன், அவன் போரை தொடங்கினான், இரு பக்கமும் உக்கிரமான போர் தொடங்கிற்று.
விஷ அம்புகள் மூலம் சாம்பாஜியினை முடக்கலாம் எனச் சொக்கநாதன் நினைத்து அந்த அம்புகளைப் பாய்ச்சினான், இம்முறை தோல் ஆடை அணிந்த சாம்பாஜியின் தரப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சொக்கநாத நாயக்கன் அதிர்ந்து போனான்.
பதிலுக்குச் சாம்பாஜி நெருப்பு எரியும் முனை கொண்ட அம்புகளைப் பாய்ச்சினான், அது கண்ட சொக்கநாத நாயக்கனின் படை மிரண்டு போனது, காரணம் பலமான யானைகள் குதிரைகளுடன் அவன் சாம்பாஜியினை எதிர்த்து நின்றான், நெருப்பு அம்புகளைக் கண்டதும் அவை மிரண்டன.
சுதாரித்த சொக்கநாத நாயக்கன் படைகளை அவசரமாக திருப்பிக் கொண்டு யானைகளைக் கைவிட்டு தன் ஆட்களுடன் மலைக்கோட்டைக்குள் புகுந்து அடைத்துக் கொண்டான், அங்கிருந்து தாக்குதல்களை தொடங்கினான்.
கோட்டையினை எப்படிக் கைபற்றுவது எனச் சிந்தித்த சாம்பாஜி சற்று தாமதித்தான். தாக்குதல்களை நிறுத்தினான், அவனின் வியூகம் புரியாமல் குழம்பினான் சொக்கநாத நாயக்கன்.
273 அடி உயரமுள்ள அக்கோட்டையின் உள் நாயக்கனின் படைகள் இருந்தன. அடிவாரத்தில் சாம்பாஜி முற்றுகையிட்டிருந்தான், இனிக் கோட்டையினைக் கைபற்றாமல் சென்றால் அது நிச்சயம் ஆபத்து, சாம்பாஜி வடக்கே நகர்ந்தால் இச்சேனை பின்னால் வந்து வளைத்துக் கொள்ளும்.
ஓரிரு நாட்கள் அமைதி நிலவின. சொக்கநாதநாயக்கனுக்கு உதவிவரமுடியாதபடி சிக்கதேவராயனும் வடக்கே சிக்கிக் கொண்டான், இப்படியான நிலையில் நள்ளிரவில் தன் பிரத்யேக திட்டத்தைத் தீட்டினான்.
அதாவது மலைக்கோட்டை வலுவானது இங்கே சாம்பாஜி படை வரமுடியாது என எண்ணியிருந்த நாயக்கன் அதிரும்படி சாம்பாஜி தரப்பு தங்கள் பிரத்யேக பாணியான கோட்டையில் உடும்பினை வீசி ஏறும் தாக்குதலைச் செய்தது.
மெல்லப் பதுங்கிய இந்துசேனை வீரர்கள் கோட்டை மதில்வரை பதுங்கி ஏறி பின் உடும்பினை வீசி கோட்டைமேல் ஏறி உள்ளே குதித்துப் பெரும்தாக்குதலை தொடுத்தனர், இன்னொரு பிரிவினர் மிக வேகமாக முன்னேறிக் கோட்டைக் கதவைத் திறந்தார்கள்.
காவேரி வெள்ளமென உள்ளே புகுந்த சாம்பாஜி படை தங்கள் மின்னல் வேக தாக்குதலில் கோட்டையினைக் கைபற்றின, அந்தப் போரில் மதுரை சொக்கநாத நாயக்கன் கொல்லப்பட்டான்.
கோட்டையினைக் கைபற்றி தங்கள் கொடியினைப் பறக்கவிட்டான் சாம்பாஜி, அங்கிருக்கும் தாயுமானவர் சிவன் கோவிலில் மனமார வழிபாடு செய்தான், தாயற்ற தனக்கும் சிவன் வழிகாட்ட வேண்டுமென வேண்டிக்கொண்டான்.
உச்சிபிள்ளையார் கோவிலிலும் வழிபாடுகள் பல செய்தவன் நிம்மதி கொண்டான், கோட்டையின் காவலை வலுபடுத்தியவன் மதுரை மன்னனாக சொக்கநாதநாயக்கன் மகன் முத்துவீரப்பனை நியமித்தான்.
சாம்பாஜி நினைத்திருந்தால் மதுரை ராஜ்ஜியத்தை முழுக்க கைபற்றியிருக்க முடியும், ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. பாலகனான முத்துவீரப்பனை அவன் உறவினர்களிடம் ஒப்படைத்து மதுரை ஆட்சியினை அவனுக்கே வழங்கினான், இப்போது மதுரை ஆட்சி சாம்பாஜிக்கு சாதகமாக மாறியிருந்தது.
சாம்பாஜி திருவரங்க ரங்கநாதர் ஆலயம், திருவானைக்கா ஆலயம், சமயநல்லூர் ஆலயமெல்லாம் தொழுதான், இந்து ராஜ்ஜியம் நிலைக்க வேண்டிகொண்டான். சமயபுரம் அருகே இருந்த கண்ணணூர் கோட்டையினைச் செப்பனிட சொல்லி வலுவான அரணாக மாற்றினான்.
எங்கும் காவிக் கொடி உயரப் பறந்தது, சாம்பாஜிக்குக் கப்பமும் நிதியும் அன்பளிப்பும் பல மன்னர்களால் வழங்கப்பட்டது, ராமநாதபுர மன்னர்கள் அழகிய முத்து மாலைகள் சங்குகளுடன் வந்து அவனை வணங்கினார்கள்.
அவர்களுடன் போர்ச்சுகீசியர்கள் மற்றும் இஸ்லாமிய கொள்ளையர்கள் செய்யும் கடல் தொல்லை பற்றிக் கேட்டறிந்தான், முன்பு சிவாஜி தமிழகம் வந்து மதமாற்றம் இன்னும் கடல்புற அந்நிய ஆக்கிரமிப்பினை அகற்றும் பொருட்டே தன் கப்பல்படையின் ஒரு பிரிவினை அங்கு நிறுத்தியிருதான்.
அந்தத் திட்டத்தைச் சாம்பாஜி தொடர்ந்தான், இதனால் கடலோரம் குறிப்பாக தஞ்சாவூரை ஒட்டிய பகுதி கடற்கரைகளில் மதமாற்றம் கட்டுப்பட்டிருந்தது, “ஐரோப்பிய பிராமணர்கள்” எனத் தங்களைச் சொல்லிக் கொண்டு கிறிஸ்துவம் பரப்பிய கோஷ்டிகள் இதனால் கட்டுப்படுத்தப்பட்டனர்.
ராமநாதபுர மன்னர்கள் இதர மன்னர்களுடன் பெரும் விவாதம் செய்தவன் அவர்களின் கோரிக்கை பலவற்றை ஏற்றுக்கொண்டான். அப்படியே எக்காரணம் கொண்டும் போர்ச்சுகீசியர் உள்பட ஐரோப்பியர் இப்பக்கம் மதம் பரப்புதல், நிலம் ஆக்கிரமித்தல் போன்றவற்றைச் செய்ய அனுமதிக்கக் கூடாது எனக் கண்டிப்பாய்ச் சொன்னான்.
முத்து வீரப்பனை அரசனாக கொண்ட மதுரை சுல்தானியமும், ராமநாதபுர மன்னர்களும் அதற்கு இசைவு தெரிவித்தனர், இதனால் இயேசு சபை உள்ளிட்ட பல ஐரோப்பிய கும்பல் இங்கு அப்போது கால்பதிக்க வழியில்லாமல் போனது.
கோவா பக்கம் செய்த பெரிய மதமாற்றத்தைப் போர்ச்சுகீசியரோ இல்லை இதர கிறிஸ்தவ கும்பலோ தெற்கில் செய்ய அன்று வழியில்லாமல் இருந்தது, சாம்பாஜி அதைச் செய்தான்.
பொதுவாக நாயக்கர்களுக்கும் ஐரோப்பியருக்கும் கொஞ்சம் புரிந்துணர்வு இருந்தது, சுல்தான்களை வெல்ல வெடிபொருளுக்காகவும் ஆயுதங்களுக்காகவும் போர்ச்சுகீசியருக்கு நாயக்க மன்னர்கள் இடம் கொடுத்தார்கள், அப்படி வந்த போர்ச்சுகீசிய கோஷ்டி கோபால பட்டணத்தை கோவா என்றாக்கி தங்கள் மதத்துக்கு மாற்றி ஆக்கிரமிப்பைத் தொடங்கிற்று.
நாயக்கர்கள் அங்கே சரிய ஆரம்பித்தபின் அவை பெரிய ஆட்டம் ஆடின, ஆனால் சிவாஜி எழுந்து அவர்களைத் தடுத்தான், அப்படியான நாயக்கருக்கும் ஐரோப்பியருக்குமான உறவு தெற்கிலும் துளிர்விட்டது, அவர்களின் ஆபத்தை அறிந்த ஐரோப்பியரின் அனைத்து தந்திரமும் அறிந்த சாம்பாஜி அதை முறித்துப் போட்டான்.
“மன்னர்களே, நாம் இந்துக்கள் நமது கலாச்சாரமும் பண்பாடும் வேறு, விருந்தினர்களை உபசரிப்பது போலவே வியாபாரம் செய்ய வரும் அவர்களை நாம் உபசரிக்கின்றோம்.
ஆனால், அவர்களிடம் அந்தத் தர்மம் இல்லை, இந்நாட்டை ஆக்கிரமித்து இங்கிருக்கும் செல்வங்களைக் கொண்டு செல்வதிலே குறியாக இருக்கின்றார்கள், அவர்களிடம் பணமில்லை என வந்தால் நாமே கொடுத்தும் அனுப்பலாம் ஆனால் அவர்கள் கேட்பது நம் மதத்தை நம் நிலத்தை நம் அரசை.
இங்கு அவர்களுக்கோர் அடிமை கூட்டத்தை உருவாக்கவும், அவர்கள் சொல்வதை செய்யவும் இங்கு நமது மக்களை முட்டாளாக்கி மதம்மாற்றி அவர்களைக் கொண்டே நம்மில் குழப்பம் விளைவிக்கின்றார்கள்.
நம் நாட்டுக்கு வந்து நம் பணத்திலே நம் மக்களை மதம்மாற்றி நமக்குத் துரோகம் இழைக்கும் இக்கும்பல், பணம் ஒன்றையே பிரதானமாக்கி பணத்துக்காக மொகலாயருக்கும் ஆயுதம் கொடுத்து நம்மை அழிக்கத் துணை செல்லும் இக்கும்பலை அடக்கி வைப்பது மிக முக்கியம்.
இவர்கள் வெளியில் அன்பு, சமாதானம், கல்வி, மருத்துவம் என வேடமிடுவார்கள் உள்ளே முழுக்கப் பேராசை, வஞ்சகம், பொய், ஆணவம், பாதகம் நிரம்பியவர்கள், அவர்களிடம் இருப்பது ஆன்மீகம் அன்று, முழு அரசியல். அந்த அரசியலை முடக்கி நம் மண்ணையும் மக்களையும் மதமும் காக்க நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என உத்தரவிட்டான்.
தென்னகம் அதை ஏற்றுக்கொண்டது, சாம்பாஜி தெற்கு நோக்கி வராமல் மைசூர் நோக்கிக் கிளம்பினான்.செல்லும் வழியில் இருந்த தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் எனப் பல பகுதிகள் அவன் கைவசம் வந்தன. எல்லாமே மராட்டிய இந்து ராஜ்ஜியத்தின் பிரதேசமானது.
அப்படி முன்னேறியவன் பெரிய படையோடு சிக்கதேவராயனை எதிர்கொண்டான், இம்முறை அவனின் விஷ அம்பு தாக்குதல் எடுபடவில்லை. சாம்பாஜியின் ஆட்டுத்தோல் ஆடை அதனை முறித்துப் போட்டது, முக்கிய தளபதி குமாரய்யாவினை வீழ்த்தி சிக்கதேவராயனை மண்டியிட வைத்தான் சாம்பாஜி.
ஔரங்கசீப் உதவிக்கு வருவான் என நினைத்த சிக்கதேவராயன் ஏமாந்துபோனான். வேறு வழியின்றி அவன் சரணடைந்தான், பல ஒப்பந்தம் செய்து பெரிய கப்பம் கோரிய சாம்பாஜி முழுமையாக சிக்கதேவராயனை அடக்கி வைத்து தன் தென்னகப் பகுதிக்கு மிரட்டலைத் தவிர்த்தான்.
மைசூர் சாமுண்டீஸ்வரியிடம் வேண்டிக் கொண்ட சாம்பாஜி தொடர்ந்து வடக்கு நோக்கிச் சென்றான்.
சாம்பாஜியின் அரசை நாயக்கனைக் கொண்டு இடையில் துண்டிக்கும் தன் திட்டம் தோற்றுவிட்டதைத் தெரிந்த ஔரங்கசீப் மனம் வெறுத்துப்போனான், அதே நேரம் வடக்கே கல்யாண் பக்கமும் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ராம்சேஜ் எனும் சின்னஞ்சிறிய கோட்டை அவனுக்குக் கைவசமாகவில்லை. இந்துசேனை காட்டிய மாபெரும் வீரத்தில் அது நிலைத்து நின்றது, ஹம்பிராவ் மோடியின் தாக்குதலில் மொகலாயப் படைகள் திணறின.
ஹாசன் அலிகானால் தனக்கு வெற்றிக் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த ஔரங்கசீப் தன் அனுபவம் வாய்ந்த தளபதியும் சிவாஜி காலத்துவனுமான திலியர்கானை அவனுக்குத் துணையாக அனுப்பினான்.
அனுபவம் வாய்ந்த திலியர்கானும் அங்கே வெற்றிபெற முடியவில்லை, ஆனால் ஔரங்கசீப்பின் மனம் அவனைச் சந்தேகிக்கத் தொடங்கிற்று. காரணம் அவனும் முகமது அக்பரோடு முதலில் கிளர்ச்சி செய்துவிட்டு பின் இப்பக்கம் வந்தவன் என்பதால் அவன் வேண்டுமென்றே ஏதோ செய்வதாகச் சந்தேகித்தான்.
உண்மையில் திலியர்கானுக்கும் அங்குப் போரால் ஆவது ஒன்றுமில்லை எனும் சலிப்பு வந்திருந்தது, நீண்ட போரில் இந்துக்கள் எழுவதும் ராஜபுத்திரர் எழுவதுமாக களம் இந்துக்களுக்குச் சாதகமாகவும் மொகலாயத்துக்குப் பாதககமாகவும் அமைவதை உணர்ந்தவன் முகமது அக்பருடன் உடன்பட்டான், ஆனால் ஔரங்சீப்புக்கு அஞ்சி பின்வாங்கினான்.
கூரிய மதியுள்ள ஔரங்கசீப் அவனுக்கும் திலியர்கானுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சந்தேகித்தான் ஆனால் வெளிக்காட்டவில்லை.
சாம்பாஜி வெற்றிகரமாக தென்பக்கம் ஆபத்துக்களை அடக்கி வடக்கே வந்து நின்றான், ஜான்சிரா சித்திகள் அடுத்துச் சிக்கதேவராயனைக் கொண்டு சாம்பாஜிக்குத் தொல்லை கொடுத்துத் தோற்றுப்போன ஔரங்கசீப்பின் மனதில் அடுத்துப் போர்ச்சுகீசியர்கள் வந்தார்கள்.
அவர்களைக் கொண்டு ஏதாவது செய்து பார்க்கலாமா? பணம் மட்டுமல்ல நிலத்துக்கும் ஆசைப்படும் அக்கூட்டத்துக்கும் சிவாஜியின் இந்து அரசுக்கும் எப்போதுமே பகை உண்டு என்பதை உணர்ந்தவன் அவர்களை வைத்து ஆடும் அடுத்தத் திட்டத்தை வகுக்கத் தொடங்கினான்.
சாம்பாஜியோ ஹம்பிராவுடன் இணைந்து மொகலாயரைப் பல இடங்களில் திருப்பி அடிக்கும் பெரும் போரை தீவிரப்படுத்தினான், 24 வயது சாம்பாஜியிடம் பகிரங்கமாக தோற்று மனதுக்குள் வெதும்பிக் கொண்டிருந்தான் ஔரங்கசீப்.
(தொடரும்)