சத்ரபதி சாம்பாஜி : 15

சத்ரபதி சாம்பாஜி : 15

சாம்பாஜி வடக்கே நகர்ந்து கொண்டிருந்தான், பெரும் போர்சூழல் வடக்கே கடும் சவாலை கொடுத்துக் கொண்டிருந்தது. பிரம்மாண்ட சேனையும் பெரும் நிதிவசதியும் கொண்டிருந்த ஔரங்கசீப் பலமுனைகளில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தான். ராஜபுத்திரர் பகுதியில் துர்க்காதாஸும் இந்துராஜ்ஜிய பகுதியில் ஹம்பிராவ் மோடியும் பெரும் பதிலடியினைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சாம்பாஜி சிக்கதேவராயனை ஒடுக்கி கப்பம் கட்ட வைத்தபடி வடக்கே சென்றிருந்தான். சிக்கதேவராயனோ அடிபட்ட நாகம்போல் மனதால் சீறிக்கொண்டிருந்தான், அவனால் ஏதும் செய்யமுடியவில்லை என்பதால் தவித்துக் கொண்டிருந்தான். ஔரங்கசீப் அவனைக் கைவிட்டதில் மிகவும் மனம் நொந்திருந்தான்.

அந்நேரம் மதுரையில் சொக்கநாத நாயக்கனின் மனைவி மங்கம்மாள் ஆட்சிக்கு வந்திருந்தாள. காரணம், சொக்கநாதனின் மகன் வீரப்ப நாயக்கன் பாலகனாய் இருந்தான், இந்த மங்கம்மாள் சொக்கநாத நாயக்கனின் தளபதி தப்பகுள லிங்கம நாயக்கரின் மகள், எல்லாப் போர்க் கலைகளும் அறிந்தவள், அவளைப் பற்றி சாம்பாஜி அறிந்திருந்தான்.

சொக்கநாதநாயக்கன் திருச்சி மலைக்கோட்டையில் சாம்பாஜியுடன் போரிட்ட போது அவள் மதுரையினைக் காவல் காத்துக் கொண்டிருந்தாள். சொக்கநாத நாயக்கனுக்குத் துணையாக அவள் படைநடத்தி வரலாம் எனும் செய்தியும் சாம்பாஜிக்குக் கிடைத்தது. ஆனால், அதற்குள் சொக்கநாத நாயக்கன் கொல்லப்பட்டுவிட்டதால் மதுரையினைக் காக்கும் பொருட்டு அவள் வாளோடு அமர்ந்திருந்தாள்.

அவள் அடுத்து அரசபொறுப்பை ஏற்றுக்கொண்டாள் என்பதை அறிந்த சாம்பாஜி சிந்தித்தான். இந்து பெண்கள் வீரமானவர்கள் என்பதை அவன் அறிவான், அவன் பாட்டி ஜீஜாபாய் முதல் மொகலாயப் படையில் இருக்கும் பல ராஜபுத்திர பெண்கள், மகாராஷ்ட்ரா பெண்களை அவன் அறிவான், அதனால் மங்கம்மாளை அவன் குறைத்து எடைபோடவில்லை மிகவும் மதித்து ஒரு கடிதம் எழுதினான்.

“மதுரை நாயக்க அரசின் ராணியாக பொறுப்பேற்றிருக்கும் மங்கமாவுக்கு வாழ்த்துக்கள், எமது இந்து அரசு உங்களிடம் தெரிவிக்கும் செய்தி இதுதான்.

இங்கு அந்நிய படையெடுப்பால் நம் மதமும் மண்ணும் அடிமைபட்டுப்போனதைச் சொல்ல இயலாத பெரும் கொடுமைகள் ஏற்பட்டு நாம் எல்லாம் இழந்து பின் மீண்டதை அனுபவபூர்வமாக அறிந்தவர்கள் நீங்கள், அந்த மதுரையே சுல்தானிய படையெடுப்பால் அழிந்து கிடக்க அதை மீட்கத்தான் உங்கள் நாயக்க வம்சம் மதுரைக்கு வந்தது என்பதையும் அறிவீர்கள்.

மதுரைக்கு நாயக்கர்கள் வந்த நோக்கமே இஸ்லாமிய கொடும் ஆட்சியாளர்களை விரட்டி இந்துமதத்தை அதன் ஆலயங்களை துலக்கிக் காவல்காக்க என்பதில் சந்தேகமில்லை, அதன் வம்சாவளி ராணியாகவே நீங்கள் அரியணையில் அமர்ந்திருகின்றீர்கள்.

எங்கள் தாத்தா ஷாஹாஜி இந்த நிலைப்பாட்டுக்காக, தஞ்சாவூர் பிஜப்பூர் சுல்தான் கையில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே இங்கு வந்தார். என் தகப்பனாரும் மொகலாயர் இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்கே அரசை நிறுவி காவல் இருந்தார், அந்தப் பொறுப்பு இப்போது எனக்கு வந்திருக்கின்றது.

அடிப்படையில் நாம் இருவரும் அந்நிய ஆப்கானிய இஸ்லாமியரை எதிர்த்தே போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம், ஆனால் அது புரியாமல் சொக்கநாதநாயக்கன் ஔரங்கசீப்பின் அட்டகாசத்துக்குத் துணைபோன சிக்கதேவராயனுடன் கைகோர்த்ததே நடந்த போருக்குக் காரணம். மற்றபடி, எமக்கும் உங்களுக்கும் பகை இல்லை.

நாம் மதுரையில் இருந்து கைபற்றிய திருச்சிராபள்ளி மலைக்கோட்டை, தர்மபுரி பகுதிகளை உரிய நேரம் திருப்பித் தருவோம். அதுபற்றி கவலை கொள்ளல் வேண்டாம், நாம் உங்களிடம் விரும்பிக் கேட்பதெல்லாம் எக்காலமும் அந்நியர்க்கு இடம் கொடுக்க வேண்டாம், அது மொகலாயராக இருந்தாலும் சரி, ஐரோப்பிய நரிகளாக இருந்தாலும் சரி, தயவு செய்து இடம் கொடுத்தல் கூடாது.

அப்படிச் செய்தால் பெரும் ஆபத்து இந்த நாட்டுக்கு வரும், இந்தப் பரத கண்டம் அவர்கள் ஆதிக்கத்தில் சிக்கும், இங்கு ஏற்பட்ட எல்லா அழிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் காரணம் இந்தப் பாரத நாட்டின் சிறிய அரசுகள் அந்நியருக்கு இடம் கொடுத்ததே, அப்படி மெல்ல மெல்ல வந்த கும்பலே இன்று நமக்குச் சவாலாக நிற்கின்றது.

நாம் மொகலாயரை முறியடித்துக் காசியினை மீட்கும் பெரும் போரில் இருக்கின்றோம், ஒரு இந்துவாக உங்களுக்கும் இந்தக் கடமை உண்டு. திருமலை நாயக்கன் காசியினை மீட்க பெரும் ஆவல் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிந்தவர்கள், இந்த மகா போர் எனக்காக அன்று உங்களுக்காக அன்று. இது காசியினை மீட்டெடுக்கும் போர், இந்தத் தேசத்தை விடுவிக்கும் பெரும் போர், அதனால் மிகுந்த கவனமுடன் நீங்கள் ஆட்சி செய்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றோம்.

அப்படியே அந்நியருக்கு ஒரு ஆதரவும் கொடுக்கமாட்டீர்கள் எனவும் அப்படிச் செய்து எம்மை உங்களுடன் மோதும் இக்கட்டான நிலைக்குத் தள்ளமாட்டீர்கள் எனவும் நம்புகின்றோம், எமது பெருமைக்குரிய பெண்மணி ஜீஜாபாய் போல நீங்கள் இந்துராணியாக நிமிர்ந்து நிற்க வாழ்த்துக்கள், அன்னை மீனாட்சியின் அருள் உம்மோடு இருக்கட்டும்”

இந்தக் கடிதத்தை மங்கம்மாளுக்கு அனுப்பினான், அவள் பதிலுக்கு நன்றிக்கடிதமும் பாண்டியநாட்டின் முத்துமாலை ஒன்றையும் அனுப்பினாள், அந்நியருக்கு இங்கு ஆதரவு இல்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்திருந்தாள்.

சிக்கதேவராயன் இப்படி ஒடுக்கப்பட்ட பின் வடக்கே கவனம் செலுத்தினான் சாம்பாஜி, அங்கே போர்க் கடுமையாக இருந்தது.

ஹாசன் அலிகான் தெற்குக் கொங்கன் பக்கம் கல்யாண் பீவண்டியினைக் கைபற்ற முயற்சி செய்தபோது அதனை ஹம்பிராவ் மோடி தலைமையில் ரூபாஜி போஸ்லேயும் நிலோபந்தும் சமாளித்து முறியடித்தனர், மிகுந்த நெருக்கடிக்குள்ளான ஹாசன் அலிகானுக்குக் கூடுதல் படைகள் தேவைப்பட்டது, அவனுக்கு உதவ ராகுல்லாகானும், கசிம்கான் என்பவனும் படையோடு வந்தார்கள்.

அவர்களோடு ஔரங்கசீப்புக்காகப் போரிட்ட பத்மசிங் மற்றும் ரத்தன் ரதோட்டின் மகன் ராம்சிங், ஹர்சிங் பண்டேலா எனப் பலர் வந்தார்கள். பெரும் படை குவிந்தது, எப்போதும் இந்துக்களுடன் இந்துக்களை மோதவிடும் தந்திரம் கொண்ட ஔரங்கசீப் இந்த ராம்சிங், பத்மசிங், ஹர்சிங் போன்றோரை முன் நிறுத்தச் சொன்னான்.

கடும் போர் நடந்தது. போரில் அனுபவம் வாய்ந்த இந்துசேனைகள் கடும் நெருக்கடி கொடுத்தன, ஹம்பிராவ் பெரும் தாக்குதலைத் தீவிரமாகத் தொடுத்தான், அவனோடு நிலோபந்த் இன்னும் தீவிரமானான்.

ராகுல்லாகான் அந்த ராம்சிங் , ஹர்சிங் போன்றோரை முன்னால் நிறுத்தித் தாக்கவிட்டு பின்னால் நின்று கொண்டான், இந்துசேனை தரப்பு இந்த ராஜபுத்திரர்கள் தங்களோடு இணைந்து கொள்ளவேண்டும் என்றும் ராஜபுத்திர எழுச்சியும் போரும் துர்க்காதாஸின் தலைமையில் நடக்கும் போது இவர்கள் தங்களோடு சேருதலே சரி எனவும் அழைப்புவிடுத்தது.

ஆனால் ராஜபுத்திரர் கேட்கவில்லை, விஷயம் சாம்பாஜிக்குச் சென்றது.

இங்கேதான் ஔரங்கசீப் கணக்கை பொய்யாக்கினான் சாம்பாஜி. அதாவது, சிவாஜியினைப் பொறுத்தவரை அவன் இந்துக்களோடு பெரிதாக மோதுவதில்லை. எதிரே இருப்பது இந்து என்றால் சமரசங்களைச் செய்வான் அல்லது மாற்றுவழி தேடுவான். இந்துக்களோடு இந்துக்களை மோதவிடும் தந்திரத்தில் அவன் ஔரங்கசீப்பையே குழப்பி வைத்தான்.

அதனாலே ஜஸ்வந்த்சிங், ஜெய்சிங் போன்ற ராஜபுத்திர மன்னர்கள் சிவாஜியினை அடக்க வரும்போது சிவாஜிக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு நிலைமை மாறிற்று.

ஆனால், சாம்பாஜி அப்படி அன்று. அவன் யுத்தம் என வந்துவிட்டால் மூர்க்கமானவன் எதிரியுடன் வரும் அனைவரும் தனக்கு எதிரியே எனும் கொள்கை கொண்டவன், சிவாஜி கூடுமானவரை எதிரிகளைக் கொல்வதில்லை அப்சல்கான் ஒருவனைத் தந்திரமாக கொன்ற சிவாஜி போரில் வெல்வானே தவிர கொல்வதைச் செய்வதில்லை. ஒரு மரணபயம் காட்டி அனுப்பிவிடுவான்.

சாம்பாஜி இதற்கு நேர்மாறாக இருந்தான், எதிரிகளை விட்டுவிடுவது ஆபத்து, வாய்ப்புக் கிடைத்தால் கொன்றுவிடவேண்டும் எனும் வேகம் இருந்தது, இதனால் ஔரங்கசீப் அணியில் இருக்கும் ராஜபுத்திரரை வித்தியாசம் பார்க்காமல் கொல்லும்படி உத்தரவிட்டான்.

அதன்படி கடும்போரில் ராம்சிங், ஹரிசிங், மன்கோஜி, ஹர்சிங் என ராஜபுத்திரர் வரிசையாக வீழ்ந்தனர், மொகலாயர் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஔரங்கசீப்பே மிரண்டுபோனான்.

சாம்பாஜி மேல் அவன் கொண்ட வெறுப்பு இப்போது அச்சமும் பயமும் கலந்த பெரும் ஆத்திரமாக மாறிற்று.

போரில் கடும் சரிவினை மொகலாயப்படை எதிர்கொண்டது, ஔரங்கசீப் தன் பிரசித்தியான தளபதி பகதூர்ககானைப் பலத்த சேனையுடன் அனுப்பினான்.

ஔரங்கசீப்பின் உச்ச தளபதி பெரும் சேனையுடன் வருகின்றான் என்பதை அறிந்த ஹம்பிராவ் தன் சேனையுடன் ஆலோசித்து தந்திரமாக அவனை வீழ்த்த எண்ணினான்.

போரில் பின்வாங்கி தாக்கும் தன் பிரதான வியூகத்தை சாம்பாஜி படை கையில் எடுத்தது, முதலில் பகதூர்கானுடன் மோதியது போல் பாசாங்கு செய்தபடை மெல்ல மெல்ல பின் நகர்ந்தது, ஒரு கட்டத்தில் தோல்வி அடைவதுபோல் நடித்துப் பின்வாங்கி ஓடிற்று.

மொகலாயச் சேனை அவர்கள் தப்பி ஓடுவதாக நினைந்து பின் தொடர்ந்தது. சுமார் 32 மைல் தொலைவுக்கு அப்படிப் பின் தொடர்ந்து சென்றது மொகலாயச் சேனை.

சரியான இடத்துக்கு வந்தபோது அவர்களைச் சுற்றி வளைத்தது இந்துசேனை, மொகலாயச் சேனைக்கு உதவாதபடி வயல்கள் எரிக்கப்பட்டன, குடிநீர் தடுக்கப்பட்டது. ஒருவித முற்றுகைக்குள் உள்ளானது பகதூர்கான் சேனை. கடும் போரில் ஈடுபட்டது, ஆனால் உணவு இன்றி தொடர் ஆயுதம் இன்றி தடுமாறிற்று.

இன்னொரு பக்கம் ராம்சேஜ் எனும் சிறிய கோட்டையினைப் பிடிக்கத் தொடர்ந்து போராடியது மொகலாயச் சேனை, சிறிய கோட்டைக்கே தன் சேனை இப்படித் திணறுவதை அறிந்த ஔரங்கசீப் மிகவும் வருத்தமும் எரிச்சலும் அடைத்தான். அங்குத் திணறிக்கொண்டிருந்த தளபதி சாபுதீனுக்குத் துணையாக கசிம்கானை அவன் அனுப்பினான், இன்னும் ஷரிப்கான் போன்ற தளபதிகளை அனுப்பினான்.

ஆனால் இந்துசேனை கடுமையான ஆரவாரமான போரைச் செய்தது. “ஹரஹர மகாதேவா, ஜெய் சிவாஜி ஜெய் பவானி” என அவை கடும் தாக்குதலைத் தொடுத்தன, சுமார் 30 ஆயிரத்துக்கு மேல் இருந்த மொகலாயச் சேனையினை 800 பேர் கூட இல்லாத இந்துசேனை கடுமையாகத் தாக்கியது.

அந்தத் தாக்குதலில் ஜாகீர் கான், பைசுல்லா கான் எனப் பல தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இருமுனை போரிலும் மிக மோசமான தோல்வியினைத் தழுவிக் கொண்டிருந்த மொகலாயச் சேனை வியூகத்தை மாற்றியது, இனி ஒரு முனை தாக்குதல் செய்து ஒரு கோட்டையினையாவது கைபற்ற பகதூர்கான் ராம்சேஜ் கோட்டைக்கு வந்தான். தன் சேனையில் பாதியினை அங்கே ஹம்பிராவினை முறியடிக்க செய்துவிட்டு இங்குப் போரிட வந்தான் பகதூர்கான்.

இன்னொரு தளபதியான ரஹமல்லாகான் தலைமையில் ஹம்பிராவுடன் ஒரு போரும், பகதூர்கான் தலைமையில் ராம்சேஜ் முற்றுகை போரும் தொடர்ந்தது. இரு இடத்திலும் இந்துசேனையின் தாக்குதலே தீவிரமாக இருந்தது.

மொகலாயச் சேனை மிக மோசமாக அடிவாங்குகின்றது, ஒரு வெற்றி கூட இல்லை எனும் நிலையில் ஔரங்கசீப்பின் மகன் ஆசம் ஷா களமிறங்கினான். அவன் புதிய போர்க்களத்தை திறக்கும் பொருட்டு பிஜப்பூர் எல்லை பக்கம் சென்று பின் சாம்பாஜி பக்கம் திரும்பும் நோக்கில் மூன்றாம் போர்முனையினைத் திறக்க விரும்பினான்.

அவன் தன் மனைவி ஜஹான் பேகம் எனும் ஜானி பேகத்தை தன் படையின் ராஜபுத்திர தளபதியான அனுராதசிங் ஹடா என்பவன் பொறுப்பில் அஹமதுநகரில் விட்டுவிட்டு இந்துசேனை நிலைகளைத் தாக்கச் சென்றான்.

இந்த ஜானிபேகம் அடில்ஷாஹி வம்சமாய் இருந்தாள், பிஜப்பூர் சுல்தானின் சகோதரியான இவளை முன்பு மொகலாயச்சேனையும் பிஜப்பூர் அமைச்சர்களும் சேர்ந்து ஔரங்கசீப்பின் மிரட்டலுக்கு அஞ்சி திருமணம் செய்து வைத்தனர்.

மொகலாயம் வாளால் பரவிய சாம்ராஜ்ஜியம் மட்டுமன்று, இப்படித் திருமண பந்தத்திலேதான் பெருகிற்று, இதே ஆஸம் ஷாவுக்கு அந்நாளைய அகோம் அதாவது அசாமின் இந்துமன்னன் ஜெயவாஜ் சிங் மகள் ரமணி கபாரு என்பவளைக் கட்டி வைத்து அவளை ரஹ்மத் பானு என மதம்மாற்றி வைத்தான் ஔரங்கசீப்.

அக்பர் ஜலாலுதீன் என்பவன் முன்பு தந்திரமாய்க் கெஞ்சிச் செய்த இந்து திருமண மதமாற்றங்களை வாள்முனையில் செய்தவன் ஔரங்கசீப் , அதனால் தன் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டான். மற்றபடி, வாள் எல்லாம் அங்கு இரண்டாம்பட்சம்.

ஆனால், தனக்குக் கிடைத்த உளவுத்தகவல் அடிப்படையில் இந்தப் பேகம் இருக்கும் முகாமே தலைமை முகாம் என்றும் மொகலாயப் பெரும் செல்வமும் நிதியும் சம்பளபெட்டியும் அங்கேதான் இருக்கின்றது என்ற தகவல் கிடைத்ததும் அங்கே தாக்கி அதிரடி காட்டி எல்லாம் அள்ளிச் செல்ல முடிவெடுத்தான் சாம்பாஜி.

அகமது நகரை அவன் தாக்க விரைந்தபோது அனுராதாசிங் ஹடே பெரும் படையோடு வந்தான், அவனுக்கும் சாம்பாஜிக்குமான போரில் மொகலாயப் படை வேகமாகச் சரிந்தது, அவர்களின் பிறைகொடி அறுபட்டு வீழ்ந்தது.

“ஹரஹர மகாதேவ்” எனும் வெற்றி கீதம் எங்கும் முழங்கும்போது தொலைவில் மொகலாயச் சேனை மீண்டும் தாக்க வந்தது, சாம்பாஜி உற்றுப் பார்த்தான், அந்த யானையில் ஒரு உருவம் தன்னை முழுக்க மூடியபடி ஈட்டி ஏந்திக் களத்துக்கு வந்தது.

அது ஜஹான்செப் பானுபேகம் எனும் பெண், அவள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட அவன் அண்ணன் தாரா ஷிக்கோவின் மகளாய் இருந்தாள், அவள் எல்லாப் போர்க்கலையும் பயின்றவள் அத்தனை ராஜதந்திரமும் அறிந்தவள் அவள் நிச்சயம் ஔரங்கசீப்பை பழிவாங்குவாள் எனக் கருதிய ஔரங்கசீப்பின் சகோதரி ஜஹனாரா பேகம் இவளை ஔரங்கசீப்பின் மகன் ஆசம் ஷாவுக்கு மணம் செய்து கொடுத்திருந்தாள்.

தந்திரமான ஔரங்கசீப் அவளை ராணிக்குரிய அந்தஸ்து கொடுத்துவிட்டு மகனுக்கு இன்னும் பல மணம் செய்துவைத்திருந்தான். ஔரங்கசீப்பும் அவளை ஒரு ராணிக்குரிய அந்தஸ்துடன் நடத்தியதால் மொகலாயத்தில் சிக்கல் இன்றி ஆட்சி பலத்துடன் வலம் வந்தாள்.

அப்படிப்பட்டவள் இப்போது தன் கணவனுக்காக போராட வந்தாள், போர் தீவிரமாக மூண்டது.

எல்லாத் தளபதிகளும் ஆங்கேங்கே சிக்கித் தன் மகனே மொகலாயரிடம் சிக்கி இப்போது தன் வீட்டுப் பெண்களே களத்துக்கு வந்துவிட்டார்கள் என்பதை அறிந்து விரக்தியின் விளிம்புக்குச் சென்ற ஔரங்கசீப் கடைசி ஆயுதமாக குஜிலிகான் என்பவனைச் சோலாப்பூர் பக்கமாக அனுப்பினான். இது நான்காம் போர்முனை.

அவனையும் இந்துசேனைப்படை தீவிரமாக எதிர்கொண்டு முறியடிக்கத் துவங்கியது, பெரிய சேனை மகா பிரம்மாண்ட சேனை எனச் சொல்லப்பட்ட ஔரங்கசீப்பின் படை தீவிரமாக அடிவாங்கத் தொடங்கியிருந்தது.

ஹம்பிராவ், நிலோபந்த், கவி கலாஷ் என எல்லாத் தளபதிகளும் தீவிரமாகப் போரிட்டுக் கொண்டிருக்க சாம்பாஜி அந்த ஜஹான்செப் பானுவிடம் மோத வந்தான், அவள் ஈட்டிகளை வீசினாள், பெரும் ஆவேசமாகப் போரினைத் தொடங்கினாள்.

சாம்பாஜி பதிலுக்கு அவளைத் தாக்கவில்லை, மெல்லப் பின்வாங்கினான். ஆனால், தன் சேனையினை நோக்கி அவளைத் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தச் சொன்னான், அப்படியே மொகலாயச் சேனையினை நோக்கி அவர்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள்.

ஆனால், விசுவாசமிக்க அனுராதாசிங் கடுமையாக போரிட்டான், அவளைக் காக்கத் தன் முழுப்பலத்துடன் போரிட்டான், ஒரு கட்டத்தில் சாம்பாஜி அவனுக்குப் போரை நிறுத்தி ஒரு எச்சரிக்கை செய்தான்.

“அனுராதசிங் நீ ஒரு இந்து, இங்கு இந்து ஆலயங்கள் நம் நாட்டில் அதுவும் உன் ராஜபுத்திர பகுதியிலே அழிக்கப்படுவதையும், இந்துக்களின் பணம் ஜிஸியாவரி என வசூலிக்கப்பட்டு அந்தப் பணத்தில்தான் இந்தப் போர் நடக்கின்றது என்பதையும் நீ அறிந்துதான் இருக்கின்றாய்.

நம்மிடம் ஊடுருவி நம் மக்களின் இந்துவரிபணத்தினை அபாண்டமாக வசூலித்து அந்தப் பணத்தில் மேற்கே இருந்து பெரும் படைகளைக் காசுக்கு திரட்டி நம்மீதே அழிவுகளைச் செய்யும் இவர்களுக்கு நீ இந்துவாக எப்படித் துணைபோகலாம்.

உனக்கு இருவாய்ப்பு தருகின்றேன், ஒன்று எங்களோடு வந்துவிடு, இல்லை தப்பி ஓடிவிடு. இந்துக்களின் விசுவாசம் எப்போதும் உயர்வானது, ஆனால் அதனை அர்த்தமில்லாமல் தவறான இடத்தில் காட்டினால் அது இந்துவிரோதம், அதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.

அனுராதசிங், என் தந்தை இந்துக்களைக் கொல்லக்கூடாது, பள்ளிவாசல்களைத் தொடக்கூடாது எனக் கொள்கை வைத்திருந்தார், நான் அப்படி அன்று, அவரின் காலச்சூழல் அப்படி இருந்திருக்கலாம் ஆனால் நான் அவரில் இருந்து வேறுபட்டவன்.

அக்பர் நிறுத்திய ஜிஸிவரியினை ஔரங்கசீப் மீள வசூலிப்பான் என்றால் சிவாஜியின் கொள்கையினை மீறி மாற்ற எனக்கும் அதிகாரம் உண்டு, இங்கு நான் அந்நியர்க்கு துணை செல்லும் இந்துக்களைக் கொல்வேன், அந்நியர் கட்டிவைத்த அத்தனையும் அகற்றுவேன்” என உறுமினான்.

ஆனால் அனுராதசிங் பதிலுக்குச் சொன்னான், “சாம்பாஜி நீர் சொல்வதெல்லாம் உண்மை, நீர் விரும்பியதைச் செய்ய உமக்கு உரிமை உண்டு, ஆனால் நான் இங்கு இப்பெண்களைக் காக்கும் கடமையில் இருக்கின்றேன், அவர்கள் எம்மதமாக இருக்கட்டும் எக்குலமாக இருக்கட்டும் ஆனால் பெண்கள்.

அவர்களைக் காப்பது என் கடமை” என்றான்.

சாம்பாஜி சீறினான், “முட்டாளே, பெண்களைக் கொள்ளையிடும் மூர்க்கன் என்றா என்னை நினைத்தாய்? நான் ஜீஜாபாயினால் வளர்க்கப்பட்டவன். அந்நியப் பெண்களாயினும் அவர்களை எம் சொந்த குலப் பெண்களாகக் கருதும் மரபில் வந்தவன் நான்” என வாளை உயர்த்தினான் .

அனுராதசிங் உனக்குக் கடைசி வாய்ப்பினைத் தருகின்றேன், மொகலாயர் வைத்திருப்பது இந்துக்களின் பணம், இந்துக்களை மிரட்டி பெற்ற அடித்து பெற்ற பணம். அதை இந்துக்களுக்கு எதிராக இப்படி யுத்தத்தில் பயன்படுத்துவது தவறு, இந்தப் பணம் எங்கள் உரிமை பணப்பெட்டியினை எம்மிடம் ஒப்படைத்துவிடு எனச் சீறினான்.

ஆனால், அனுராதசிங் போரிடும் முடிவிலே இருந்தான், தன் விசுவாசத்தைக் காக்க உயிர்த்தியாகம் செய்யவும் அவன் தயாராக இருந்தான், வாளை எடுத்துச் சாம்பாஜி நோக்கி வீசத் தொடங்கினான்.

சாம்பாஜிக்கும் அவனுக்கும் நேருக்கு நேர் குதிரையில் இருந்தபடி யுத்தம் நடந்தது. முதலில் தற்காப்பு யுத்தம் செய்த சாம்பாஜி அவனின் வீச்சு வேகமாய் இருப்பதையும் இனியும் தாமதித்தால் தன்னை அவன் கொன்றுவிடுவான் என்பதை அறிந்து அவன் கைகளில் வெட்டி வாளை கீழே விழச் செய்தான்.

ஆனாலும், அடங்காத அனுராதசிங் ஈட்டியினை எடுத்துக் கொண்டு பாய்ந்தான், மீண்டும் சண்டை தொடகிற்று, கடுமையான யுத்த முடிவில் அவனை வீழ்த்தினான் சாம்பாஜி. ஒரு இந்துவினைக் கொன்றுவிட்ட வலி மீண்டும் அவனைத் தாக்கிற்று, மதுரை சொக்கநாதன் அடுத்து இந்த அனுராதசிங் என இந்துக்கள் இப்படித் தங்களைப் புரிந்துகொள்ளாமல் அந்நியருக்கு ஆதரவாய் வந்து சாவதை எண்ணி மனம் நொந்துபோனான்.

எனினும் இந்து உணர்வும், பெருமையும் இல்லாத யாரும் இந்துவாக இருக்கமுடியாது என அவன் மனம் சொல்லிற்று, அவ்வகையில் தான் உண்மையான இந்துக்களைக் கொல்லவில்லை எனத் தனக்குச் சமாதானமும் சொல்லிக்கொண்டான்.

போர் நீண்டது. இளவரசன் ஆசம் ஷா கடும் முற்றுகையில் சிக்கிக் கொண்டான், இன்னொருபுறம் பிரசித்தியான தளபதிகள் எல்லோரும் ஹம்பிராவிடம் தொலைவில் சிக்கிக் கிடந்தனர்.

முகாமை இனிக் கொள்ளையிடுவது எனச் சாம்பாஜி பாய்ந்த நேரம் அந்த ஜஹான்செப் பானுபேகம் இரு கையில் வாளுடன் வந்து நின்றாள், கடைசி யுத்தத்தைப் பெண்புலியாய் அவள் காட்டினாள்.

சாம்பாஜி அவள் வீரத்துக்கு மரியாதை கொடுத்தான், அவளோ தன்னை மீறி உள்ளே நுழைந்துபார் எனச் சவால்விட்டு வாள் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

சாம்பாஜி புன்னகைத்தான். காரணம், அந்த முகாம் முழுக்க இந்துசேனை வீரர்களால் சூழப்பட்டிருந்தது, அதைச் சுட்டிக்காட்டியவன் இனி அவள் போராடி பலனில்லை என்பதை உணர்ந்து அதிரடி காரியம் ஒன்றைச் செய்ய முனைந்தாள்.

இனி சாம்பாஜி ஆஷம்ஷாவின் மனைவியினை எடுத்துக்கொள்வான், தன்னையும் எடுத்துக் கொள்வான் எனக் கருதியவள் சொன்னாள்.

“சாம்பாஜி, உன் தந்தையின் பெருமை உலகறிந்தது, எந்தப் பெண்ணையும் முறைதவறி ஒரு பார்வை கூடப் பார்த்தவர் இல்லை அவர், மொகலாயப் பெண்களுக்கு அவர் எப்போதும் சிறந்த கனவு, ஆனால் உன்னைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

உன் கையில் எங்கள் பணம் சிக்கலாம் ஆனால் பெண்களாகிய நாங்கள் சிக்கமாட்டோம், நான் இப்போதே பேகத்தை கொன்றுவிட்டு நானும் என் வயிற்றை வெட்டி செத்துவிடுவேன், உன்னிடம் சிக்கிச் சீரழிந்து சாகமாட்டோம், இந்துஸ்தானத்தில் பிறந்துவளர்ந்த எங்களுக்கும் இந்நாட்டு பெண்கள் போலவே மானம் முக்கியம்” என்றாள்.

சாம்பாஜி சொன்னான், “என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என எனக்குக் கவலை இல்லை, உங்களிடம் என்னை நிரூபிக்க எனக்கு அவசியமுமில்லை, ஆனால் மொகலாயப் பெண்கள் மேல் நான் நன்றியுடையவன்.

நானும் என் தந்தையும் ஆக்ராவில் சிறை இருந்தபோது ஜகனாராவும், நிஷா பேகமும் எங்கள்மேல் காட்டிய அன்பும் உதவியும் மறக்கமுடியாதது, அவர்கள் எங்கள் உயிரைக் காத்தவர்கள் அதனால் எக்காலமும் எங்கள் நன்றிக்குரியவர்கள்.

ஔரங்கசீப்பின் இந்துவெறுப்புத்தான் எங்களுக்கு எதிரியே தவிர அந்தக் குலப் பெண்கள் அல்ல, அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடையவன், உங்களை எங்கள் வீரர்கள் பல்லக்கில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள், ஒரு நொடிக் கூட உங்களுக்கு சிறை இல்லை, நீங்கள் தயாரானவுடன் செய்தி அனுப்புங்கள், உங்களுக்கு எந்த ஆபத்தும் இங்கு நேராது. இது எங்கள் ராஜ்ஜியத்தின் மேல் ஆணை” என்றான்.

அந்தப் பெண்கள் இருவரும் அதை எதிர்பர்க்கவில்லை, ஆனால் அவர்களை மிகக் கண்ணியமாக அந்த வீரர்கள் நடத்தியதைக் கண்டு அசந்துபோயினர், அவர்களும் அவர்கள் பணிப்பெண்களும் அவசரமாக கிளம்பினார்கள், கிளம்புமுன் போர் உடை அன்றி அரசிகளுக்கான உடையில் மாறியிருந்த ஜஹான்செப் பானுபேகம் வந்து சாம்பாஜிக்கு நன்றி தெரிவித்தாள்.

அவளை நேரில் கண்ட சாம்பாஜி சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான், மிக்க அழகான அவள் இந்திய ஆப்கானிய அழகுகளின் சாயலின் பெருமையாக கலவையாக இருந்தாள், பொன்னிற மேனியும் அதற்குச் சரியாக இடப்பட்ட ஒப்பனைகளும் காண்போரை ஈர்க்கும் கண்களும் அந்தச் செம்பட்டையான முடியும் அவள் தேவலோக மங்கை என்பதைச் சொன்னது.

ஆனால் அவன் மனம் கொஞ்சமும் சலனப்படவில்லை, அப்பெண்கள் தங்கள் மதிப்பிற்குரிய விருந்தாளிகள் என்பதாகக் கொண்டாடியவன், உயர்ந்த பட்டும் மதுரை ராஜ்ஜியத்தில் இருந்து கிடைத்த அழகிய முத்துமாலைகளும் கொடுத்து வணங்கினான்.

“தாயே, நீங்கள் செல்லலாம், ஜிஸியா வரி என இந்துக்களிடம் இருந்து பறித்தப் பணத்தை எடுக்க எமக்கு உரிமை உண்டே தவிர மொகலாயப் பெண்களைப் பிடித்துவைக்க எந்த உரிமையும் எங்களுக்கு இல்லை.

எம் தந்தை இருந்திருந்தால் என்ன செய்வாரோ அதையே நானும் இந்துவீரனாகச் செய்கின்றேன், நீங்கள் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள், உங்கள் பிரார்த்தனையில் ஔரங்கசீப் மனம் மாறி இந்துக்களை நேசிக்கவும் வேண்டிக்கொள்ளுங்கள்” எனச் சொல்லி அனுப்பினான்.

அதுவரை சாம்பாஜி பற்றித் தவறாக நினைத்த அப்பெண்கள் அவனின் உயர்ந்த கம்பீர நடத்தைக் கண்டு அதிசயத்தினர், இந்துராஜ்யத்தின் தர்மம் எப்போதும் உயர்ந்தது எனச் சொல்லி வாழ்த்தியபடி ஔரங்கபாத் அடைந்தனர்.

இந்த விஷயம் டெல்லிக்குத் தெரிந்தபோது நிஷாபேகம் மிகவும் உருகிப் போனாள். சிவாஜியினைப் போலவே பண்பால் உயர்ந்தவன் சாம்பாஜி எனப் பெருமை கொண்டாள், சில நாட்கள் அவனை ஆக்ராவில் வளர்த்திருந்தாலும் மனதால் அவனுக்கோர் தாயாக அவள் எப்போதும் போல் உணர்ந்து நின்றாள், சிவாஜி மேல் அவள் கொண்ட காதலும் சாம்பாஜி மேல் கொண்ட தாயன்பும் பூர்வ ஜென்ம பந்தத்தால் வந்திருந்தது.

ஒரு பக்கம் தன் தளபதிகள் தோல்வி, சின்னஞ்சிறிய ராம்சேஜ் கோட்டையினைக் கூட பிடிக்கமுடியாத் தோல்வி , இன்னொரு பக்கம் தன் மகனுக்கு ஏற்பட்ட தோல்வி.

உச்சமாக தன் மருமகள்களைப் பிடித்து மானபிச்சை உயிர்ப்பிச்சை கொடுத்தனுப்பினான் சாம்பாஜி எனும் அவமானமென கடும் விரக்தியில் வீழ்ந்து கிடந்தான் சாம்பாஜி.

சிவாஜி எனக்குச் செய்யாததை எல்லாம் இவன் செய்கின்றான், என் கண்முன் செய்கின்றான். சிவாஜியினை விட இவன் பன்மடங்கு ஆபத்தானவன், 24 வயது இளைஞன் முன் என் மாபெரும் சேனை தோற்று என் மானமே மண்டியிட்டு கிடப்பதா என அலறியவன் மிகுந்த விரக்தியில் புலம்பலில் வீழ்ந்து விரிந்த தலையோடு கிடந்தான்.

அதே நேரம் அவனுக்கோர் செய்திக் கிடைக்க ஆ… என் ராஜ்ஜியம் போனது எல்லாம் போனது, மொகலாயம் வீழ்ந்தது எனச் சொல்லிக் கத்தியவன் விடமாட்டேன், என் ராஜ்ஜியம் வீழ விழமாட்டேன் என மாறி மாறி புலம்பித் தன் தலையை அதிகாரியினை அழைத்தான்.

அப்படி அவனை அலறவைத்த காரியத்தைச் செய்தவன் துர்க்காதாஸ்.. பின்னணியில் இருந்தது சாம்பாஜி, அவ்வளவுக்கு அந்தத் திட்டம் மிக நுணுக்கமானது, அட்டகாசமானது.

(தொடரும்..)