சத்ரபதி சாம்பாஜி : 17

சத்ரபதி சாம்பாஜி : 17

சாம்பாஜி போர்ச்சுகீசியருடன் மோதிக் கொண்டிருந்த நேரம், ஔரங்கசீப்பின் அடுத்த நடவடிக்கை என்ன என எல்லாரும் அச்சத்துடன் எதிர்பார்த்த நேரம் இன்னொருபுறம் துர்க்காதாஸ் தலைமையில் ராஜபுத்திரர்கள் டெல்லிமேல் பாயலாம் எனும் இன்னொரு எதிர்பார்ப்பும் இருந்தது.

ஜெய்சிங்கின் மகன் ராம்சிங் டெல்லிக்குக் காவலாக இருந்தான், அவனோடு களத்தில் இருந்தவன் திலியர்கான், அந்தத் திலியர்கான் திடீரென செத்துக் கிடந்தான், விஷம் கலந்த உணவினை அவன் உண்டு செத்தது பின் தெரியவந்தது.

திலியர்கான் தாவுத்சாய் மறைந்தான் எனும் செய்தி களத்தில் நின்ற அத்தனை பேரையும் உலுக்கியது, அவனுக்கு அப்போது 60 வயது எட்டியிருந்தது.

ஆப்கனின் பஷ்துன் பழங்குடியான அவன் பெஷாவர் பக்கம் பிறந்திருந்தான், அவனும் அவன் சகோதரனும் இளம் வயதிலே மொகலாயச் சேனையில் சேர்ந்தார்கள். தங்கள் முரட்டுத்தனமான போரிடும் வித்தையால் பெரும் இடம் பெற்றார்கள், மொகலாயரின் ஆட்சியில் அயோத்தி நவாபிடம் தளபதிகளாக இருந்தார்கள்.

ஷாஜகானை முடக்கித் தன் அண்ணன் தாரா ஷிக்கோவினைக் கொன்று ஔரங்கசீப் பெரும் சக்தியாய் எழுந்து முடிசூட்டியபோது திலியர்கான் ஔரங்கசீப் பக்கமே இருந்தான்.

சத்ரபதி சிவாஜியினை அடக்க யாருமில்லாமல் ஔரங்கசீப் தவித்தபோது திலியர்கான் அனுப்பப்பட்டான், வந்தவன் புரந்தர் கோட்டையினைக் கைப்பற்றி அதன் தலைவன் முரபாஜி தலையினை வெட்டி சிவாஜிக்கு அனுப்பியபோது இந்துஸ்தானே மிரண்டு போனது.

அவ்வளவு மூர்க்கமாக நின்ற திலியர்கானைச் சிவாஜி எப்படி எதிர்க்கொள்வான்? அப்சல்கான் போல் கொல்வாரா? இல்லையா? எனப் பெரும் எதிர்பார்ப்பு வந்தபோது சிவாஜியும் அவனும் கடுமையாக மோத தயாரானபோது ஜெய்சிங் வந்து ஒரு போர் நிறுத்தம் செய்து சிவாஜியின் கோட்டைகள் பல மொகலாயருக்குச் சென்றதும், பின் சிவாஜியின் ஆக்ரா சிறைவைப்பு சம்பவமும் நடந்தது எல்லாம் வரலாறு.

அதாவது, சிவாஜி எழுந்துவரும்போது அவனுக்குப் பெரிய சவாலாக உருவெடுத்து நின்று சோதனைகள் பல கொடுத்தவன் திலியர்கான், சிவாஜி வரலாற்றில் தவிர்க்கமுடியா எதிரி என அவனுக்கு இடம் உண்டு, மொகலாயச் சேனையில் மகா முக்கியத் தளபதி.

அப்படியானவன் இப்படிக் கொல்லப்பட்டான் எனும்போது பெரும் அதிர்ச்சி எல்லோரையும் தாக்கியது, விஷம் வைத்து ஒருவனைக் கொல்வது ஔரங்கசீப்பின் கைவரிசையில் ஒன்று என்பதால் எல்லோருக்கும் உண்மை தெரிந்திருந்தது.

திலியர்கான் சிவாஜியின் அந்திம காலங்களில் சாம்பாஜிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தான், அப்போதே சாம்பாஜியினை டெல்லிக்கு அனுப்ப ஔரங்கசீப் கேட்டுக்கொண்டான். ஆனால். திலியர்கான் செய்யவில்லை. அப்படியே சாம்பாஜியும் பின் தப்பி சிவாஜியிடம் சென்றுவிட்டான்.

இதனால் இருவருக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவே ஔரங்கசீப் கருதினான், அப்படியே சாம்பாஜியுடன் இருக்கும் தன் மகன் முகமது அக்பருக்கும் திலியர்கானுக்கும் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகித்தான்.

டெல்லியினை ராஜபுத்திரர்கள் கைப்பற்றினால் முகமது அக்பருடன் திலியர்கான் சேர்ந்துகொள்வான் என்ற நோக்கில் திலியர்கானின் கொலை நடந்தது என்பது மெல்லப் புரியவந்தபோது எல்லோரும் ஆடிப்போயினர்.

சுமார் 50 ஆண்டுகாலம் தனக்காக பெரும் பெரும் போர்களைச் செய்தவனை, தனக்காக சாவின் விளிம்புவரைக்கும் சென்றவனை, தன் மிகப்பெரிய‌விசுவாசியினை இப்படி ஔரங்கசீப் சந்தேகத்தில் கொன்றான் என்பதில் அவன் சேனையில் உள்ள எல்லோரும் வெலவெலத்துப் போனார்கள், அவன் எவ்வளவு கடுமையானவன் என்பதை அறிந்து கலங்கிப் போனார்கள்.

இந்தக் கொலை மொகலாயச் சேனையின் எல்லாமட்டத்தையும் உலுக்கியது, அதிர்ந்துபோன சேனை ஔரங்கசீப்புக்கு எதிராக கனவில் கூட சிந்திக்கமுடியாதபடி அவனுக்குக் கட்டுப்பட்டது.

ஔரங்கசீப்போ ஒன்றுமே அறியாதவன்போல் தன் போக்கில் இருந்தான், தன்னை எதிர்ப்போர்க்கு அல்லது எதிர்ப்போருக்கு உதவுவோர்க்கு இதுதான் கதி என்பது போல் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான், இந்தச் சம்பவத்துக்குப் பின் முகமது அக்பருக்கு இருந்த மொகலாய ஆதரவு இன்னும் சுருங்கியது.

திலியர்கானைக் கொன்றுபோட்டதால் டெல்லிமேல் பாய மொகலாயச் சேனையில் யாருக்கும் மனம் வரவில்லை என்பதில் ஔரங்கசீப்பின் கணக்கு சரியானது.

நடந்ததைக் கேள்விபட்ட சாம்பாஜி வருத்தம் கொண்டான், திலியர்கானின் மரணம் தன் அரண்மனையில் தனக்கு எதிராக நடந்த சதிகளையும் அவன் கண்முன் காட்டிற்று. தனக்கு விஷம் வைத்ததில் சோயுர்பாய் தாண்டி இன்னும் சில கரங்கள் மொகலாயம் வரை நீண்டிருக்கலாம் எனச் சிந்தித்தான்.

அந்நேரம் சாம்பாஜிக்கு விஷம் வைத்த வழக்கு மீண்டும் விசாரணையானது, திலியர்கானின் மரணம் சாம்பாஜியினை இன்னும் குழப்பத்தில் தள்ளியது, இங்கும் அப்படியான உளவாளிகள் வந்திருக்கலாம் முகமது அக்பருக்கு அடைக்கலம் கொடுத்த வகையில் அதனால் தன் அரியாசனத்துக்கே ஆபத்து என ஔரங்கசீப் அஞ்சிய நிலையில் இங்கும் விஷம் இடும் உளவுக்கரங்கள் நீண்டிருக்கலாம் எனச் சோதனை அதிகமானது.

இந்தச் சோதனையில் 30 பேர் அகப்பட்டார்கள், இவர்கள் பெரும்பாலும் சாம்பாஜியின் தம்பி ராஜாராமை சார்ந்தவர்களாக இருந்தார்கள்.

ராஜாராமுக்குச் சிவாஜி இரு மனைவியரைக் கட்டி வைத்தான். முதலாம் மனைவி ஜானகி பாய், அவள் சிவாஜிக்காய் உயிர்விட்ட அவன் தளபதி பிரதாப்ராவ் குஜாரின் மகளாய் இருந்தாள். பிரதாப்ராவ் கொல்லப்பட்டபோது மனைவி கர்ப்பவதி என்பதால் அக்குடும்பம் கலங்கி நின்றது, அவள் பெற்ற பெண்ணைத் தன் மகனுக்கே கட்டிவைத்து தன் தளபதிக்குப் பெரும் நன்றி காட்டினார் சிவாஜி.

அப்படியே ஹம்பிராவின் மகள் தாராபாயினை அதே ராஜாராமுக்கு இரண்டாம் மனைவியாய்த் திருமணம் செய்துவைத்தார்.

ராஜாராமின் மனைவி ஜானகி குடும்பத்தார்க்கும், சாம்பாஜிக்கும் பெரிய ஒத்துழைப்பு இல்லை. சோயுர்பாயுடன் அவர்களும் சேர்ந்து கொண்டதாகவே அந்நேரம் சாம்பாஜியின் வலதுகரமான கவி கலாஷ் சந்தேகித்தான், இதனால் அவர்களைச் சார்ந்த 30 பேர் கொல்லப்பட்டனர்.

இது சாம்பாஜிக்கும் ராஜாராம் தரப்புக்குமான பகையினை இன்னும் இன்னும் அதிகரித்தது, திலியர்கானின் கொலை இப்படி ராய்காட் கோட்டை வரை பெரும் அனல் வீசியது.

சாம்பாஜி இந்த நடவடிக்கையால் குழம்பிப் போனான், அவனுக்கு இப்படி மொத்தமாக தன் உறவினர்களைத் தண்டிப்பதில் விருப்பமில்லை, அதே நேரம் கவி கலாஷை கட்டுப்படுத்தவும் அவனால் முடியவில்லை, தன் உயிர்மேல் அக்கறை கொண்ட நண்பனாகவே அவனைக் கருதினான். எனினும், பெரும் குழப்பமும் விரக்தியும் அவனைச் சூழ்ந்திருந்தது.

சில நாட்களில் அதிலிருந்து மீண்டவன் திட்டமிட்டபடி தன் பஞ்சகங்கா புனித நீராட்டத்துக்காக சப்தகோடீஸ்வரர் கோவில் இருக்கும் நெர்வே பக்கம் சென்றான், அவனைக் கைது செய்யும் போர்ச்சுகீசியரின் தந்திரம் பலிக்காதபடி பல வகை பாதுகாப்பு வளையத்துடன் சென்றான்.

புனிதநீராட வருபவனை எளிதில் பிடித்துவிடலாம் எனும் போர்ச்சுகீசிய கனவுக்கு வாய்ப்பே இல்லாதபடி காவல் கடுமையாக இருந்தது, இந்துக்களின் மரபுப்படி புனிதநீராட வருபவர்கள் ஆயுதமின்றித்தான் வரவேண்டும் அப்படிச் சாம்பாஜியும் ஆயுதமின்றி வந்தான். ஆனால், காவல் பல வகையில் பலப்படுத்தபட்டிருந்ததால் போர்சுகீசியரால் எதுவும் செய்யமுடியவில்லை.

அதே நேரம் போர்ச்சுகீசியரின் கவனத்தினைத் திருப்ப இந்துராஜ்ஜிய சேனை ரெவ்ராண்டா கோட்டையினைத் தாக்கியது, அந்தக் கோட்டையில் சிறிய அளவு படையே டான் மோனோல் லோபோ டி செல்வெரா என்பவன் தலைமையில் இருந்தது, அவன் உதவிக்காக ஜான்சிரா சித்திகளிடம் செய்தி அனுப்பினான், அப்போது ஜான்சிரா தலைவனாக இருந்த சித்தி யாகுத்கான் சுமார் 500 வீரர்களை அனுப்பினான்.

இதனால் ஒருசேர ஜான்சிராவையும் ரெவரண்டாவினையும் சாம்பாஜியின் இந்துசேனை தாக்கியது, ரெவ்ரெண்டா கோட்டை அவர்கள் வசமானது. அடுத்துச் சாவுல் பகுதிக்குக் குறிவைத்தான் சாம்பாஜி.

சாவுல் அல்லது சியோல் எனும் அந்தப் பகுதி கோவாவின் வளமிக்கப் பகுதியாய் இருந்தது. முன்பு சாளுக்கியர்களாலும் பின் பிஜப்பூர் சுல்தான்களாலும் ஆளப்பட்ட அப்பகுதியினைப் போர்ச்சுகீசியர் கைப்பற்றி தங்களோடு இணைத்துக் கொண்டார்கள், அவர்களின் முக்கியப் பண்டக சாலையும் களஞ்சியமாகவும் அக்கோட்டை இருந்தது.

சாம்பாஜி அதனைக் குறிவைத்து யாசாஜி கங் தலைமையில் படையினை அனுப்பினான், பெரும் சேனை சென்று அதனைச் சூழ்ந்து கொண்டது.

போர்ச்சுகீசியத் தரப்பு இதற்கு வேறுமாதிரி பதிலடி கொடுக்கத் தயாரானது. பேசெய்ன் பகுதியில் இருந்து வைஸ்ராய் பெரும் படையுடன் போண்டா கோட்டை நோக்கிச் சென்றான், அது மொகலாயரின் கோட்டையாக இருந்தது, தல்பா நாயக் அதன் தலைவனாக இருந்தான்.

சாம்பாஜிக்குப் பிடிக்காத சில இந்துக்களும் அப்பக்கம் இருந்தார்கள். அந்தத் தேசாய்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போர்ச்சுகீசியப்படை சுமார் ஐந்தாயிரம் பேர் 10 பீரங்கிகள் 300 துப்பாக்கி வீரர்கள் எனப் போண்டா கோட்டையினைக் கைப்பற்ற சென்றார்கள்.

சாவுல் பக்கம் பெரும் போர் நடந்தபோது அப்போரைப் போண்டா கோட்டைக்குப் போர்ச்சுகீசியர் இழுத்தார்கள், இதனால் தாங்கள் வெற்றிப்பெற்றுவிடலாம் என நம்பினார்கள், அவர்களுக்குத் துணையாக சென்ற தேசாய்கள் தங்களுக்குக் கைகொடுப்பார்கள் என நம்பினார்கள்.

போண்டா கோட்டையினைப் போர்ச்சுகீசியர் சூழ நின்றபோது சாம்பாஜி தானே படை நடத்தி அக்கோட்டை நோக்கி வந்தான், அது அக்டோபர் 1683 கால அளவாக இருந்தது, கோட்டைக்குள் இந்துசேனை கோட்டையினைச் சுற்றி போர்ச்சுகீசியர் அவர்களைச் சுற்றி சாம்பாஜி சேனை எனப் போர் ஆரம்பமானது.

கோட்டையினைப் பிடித்துவிடும் வேகத்தில் போர்ச்சுகீசிய தளபதி பிரான்ஸிஸ் கடுமையாக மோத அவனைக் கோட்டைகுள் இருந்தும் வெளியில் இருந்தும் சாம்பாஜி படைகள் தாக்கின, ஒரு கட்டத்தில் கோட்டை கதவினைத் திறந்துகொண்டு அவை வெளிவந்து போர்ச்சுகீசிய படைகளைத் துவம்சம் செய்தன‌.

போரில் அடிதாங்காமல் போர்ச்சுகீசிய படைகள் திரும்பி ஓடின, கோட்டை சாம்பாஜி வசம் நீடித்தது. எனினும், அந்தப் போரில் சாம்பாஜியின் தளபதி யாசாஜி கங் கடினமாக காயமடைந்ததால் உயிரிழந்தான்.

யாசாஜி கங் சிவாஜியுடன் களத்தில் நின்றவன். எத்தனையோ யுத்தங்களைச் சந்தித்தவன். அப்படியான பெரு வீரன் இந்தப் போரில் கொல்லப்பட்டதைக் கண்ட சாம்பாஜி கடும் ஆத்திரம் கொண்டான்.

போர்ச்சுகீசிய தரப்போ இது வழமையான போர் எனக் கருதி தொடர்ந்தது, அதாவது அவர்கள் இங்கு 200 ஆண்டாக நிலை கொண்டுள்ள வரலாற்றில் எப்போதும் போர்களைச் சந்தித்தே வந்தார்கள். ஆனால். ஒரு போரிலும் தங்களை இந்தியாவில் இருந்து யாரும் துடைத்து ஒழிக்கவில்லை முற்றிலுமாக விரட்டவில்லை என்பதை அறிந்திருந்தார்கள்.

அப்படி இந்தப் போரும் சில நாள் சண்டை அதன்பின் ஒப்பந்தம் என முடிந்துவிடும் எனக் கருதினார்கள், இந்திய மண்ணில் இருந்து தாங்கள் அசைக்கப்படுவோம் என்பதைக் கனவிலும் அவர்கள் நம்பவில்லை.

இந்திய அரசர்களுக்கும் மொகலாயர்களுக்கும் தங்கள் வியாபாரம் அவசியம் என்பதால் இந்தப் போர் ஒரு ஒப்பந்தம் நோக்கிச் செல்லும் எனக் கருதினார்கள்.

ஆனால், சாம்பாஜி அப்படி நினைக்கவில்லை. போர்ச்சுகீசியரை முற்றிலும் அழித்தே தீருவது என முடிவெடுத்தவன் போல் பாய்ந்தான். அவனோடு கவி கலாஷூம், முகமது அக்பரும் சேர்ந்து கொண்டார்கள்.

போர்ச்சுகீசியரைத் தனிமைப்படுத்தும்படி கடும் அடி ஜான்சிரா சித்திகளுக்கும் விழுந்தது. அவர்கள் சூரத்துக்குப் ஓடிபபோனார்கள், பம்பாயில் இருந்த பிரிட்டிஷார் பெரிய பணத்தைக் கொடுத்துவிட்டு பம்பாய் சாம்பாஜியுடையது தாங்கள் வெறும் குடியிருப்பாளர்கள் என ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அதாவது அதுவரை ஐரோப்பியர் சொந்தம் கொண்டாடிய இந்திய நிலங்களை மீட்க தொடங்ங்கியிருந்தான் சாம்பாஜி.

அவ்வகையில் சிவாஜியிடம் இருந்த கருணை அவனிடம் இல்லை, இங்கு எல்லா இடமும் இந்துஸ்தானுடையது அதில் எங்கிருந்தோ வந்த ஐரோப்பியர் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமுமில்லை அதை அனுமதிக்கமுடியாது என ஒவ்வொன்றாய் மீட்கத் தொடங்கினான்.

இதை எதிர்பாராப் போர்ச்சுகீசிய தளபதி கொண்டே டி அல்வோரா பெரும் பதற்றத்துக்கு உள்ளானான், அவனாலும் சாம்பாஜியினைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சாம்பாஜி பார்தேஷ பக்கம் பாய்ந்தான். அங்கே கேசவ் தேசாய் எனும் இந்து தன் ஆட்களுடன் போர்ச்சுகீசியருக்கு ஆதரவாக நின்றான், பார்தேஷை 1683 நவம்பர் மாதம் தாக்கிய சாம்பாஜி தொடர்ந்து முன்னேறினான்.

போர்ச்சுகீசியர் போரை முடித்துவிட எண்ணினார்கள், அவர்கள் முகமது அக்பருடன் பேச முயன்றார்கள். அதற்கு நிக்கோலஸ் மனுச்சி என்பவனை அழைத்து வந்தார்கள்.

(நிக்கோலஸ் மனுச்சி இத்தாலியினைச் சேர்ந்தவன், அவன் மொகலாயக் காலத்தில் இங்கு மருத்துவனாகவும் போர் வீரனாகவும் பணியாற்றியவன், தாரா ஷிக்கோ படையில் இருந்தவன், பின் அதிலிருந்து விலகி மருத்துவனாக சுற்றித் திரிந்தான்.

அவனின் இந்திய வாழ்வு பற்றிய குறிப்புகள் ஐரோப்பாவில் புத்தகமாக வந்தது, அது ‌”எனது இந்தியப் பயணம்” எனத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.)

நிக்கோலஸ் மனுச்சியின் பேச்சுவார்த்தையும் நிறைவடையவில்லை, மனுச்சி கிறிஸ்தவ அபிமானம் கொண்டவன் அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பதால் போர்ச்சுகீசியரைச் சாம்பாஜியிடம் இருந்து காக்க ஔரங்கசீப்பின் தூதனாக வந்து பேசிபார்த்தான். ஆனால். பலனேதுமில்லை.

இந்தப் போரைச் சாக்காக வைத்துத் தன் மகன் முகமது அக்பருக்கு ஔரங்கசீப் சில செய்திகளையும் அனுப்பியிருந்தான். ஆனால். அக்பர் அவனை நம்பவில்லை. அவன் பீச்சோலிம் பகுதியினைத் தக்கவைத்துக் கொண்டிருந்தான்.

மனுச்சியின் சமரசபேச்சும் வெற்றிப்பெறா நிலையில் போர் தொடர்ந்தது. கேசவ் தேசாய் போர்ச்சுகீசியருடன் இணைந்து தாக்கினான். பொதுவாக, அன்று போர்ச்சுகீசியருக்கும் இந்துக்களுக்கும் ஆகாது, ஆனால் சிவாஜி இல்லா நிலையில் பல பிரதேசங்களை மீட்டு இந்துக்களுக்கு தருவதாகவும் இந்துகோவில்களை இடிக்கமாட்டோம் மதம்மாற்றமாட்டோம் எனப் போர்ச்சுகீசியர் உத்திரவாதம் கொடுத்த நிலையில் தேசாய்கள் போரிட வந்தார்கள்.

சாம்பாஜி தரப்போ எளிதாக அவர்களை விரட்டியது. அப்படி அவர்கள் தளபதி சட்ரோஜி ராணே என்பவனைப் பிடித்ததோடு ரேவோடு, நானோடு மற்றும் பிர்னா போன்ற பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறினான்.

அப்படியே அருகிருந்த மடன்காட் எனும் கோட்டையும் சாம்பாஜிக்கு வந்தது, போர் இன்னும் தீவிரமானது. வேகமாக முன்னேறிய சாம்பாஜி கோவாவினைக் கைப்பற்றும் முழுத் தயாரிப்பில் இறங்கினான், அவனின் சேனை கடல், நிலம் என அதனை நோக்கிச் சென்றது.

கோவா அருகே பல தீவுகள் உண்டு அதில் முக்கியமான தீவான ஜூவேம் தீவினைப் போர்ச்சுகீசியர் சான் எஸ்டிவாம் என அழைத்தார்கள், அந்த தீவினைக் கைப்பற்றியது சாம்பாஜியின் கப்பல்படை. தொடர்ந்து தாவாஜி அருகே திஸ்வாடி கிராமம் வரை வந்தது. அங்கிருக்கும் பாஸோ செக்கோ எனும் சிறிய கோட்டையினைக் கைப்பற்றியது.

கோவா அருகே தீவுகளைக் கைப்பற்றிச் சாம்பாஜியின் கடற்படை கடும் காவல் கொடுக்க பார்தேஷ், செல்சிட்டி வழியாகப் பெரும் படையுடன் ஊடுருவினான் சாம்பாஜி, அவனே படை நடத்தி வந்த வேகத்தில் போர்ச்சுகீசியர் நிலை குலைந்தனர்.

இன்னொரு படைப்பிரிவு புனேவுக்கு வடக்கே டாமனை கைப்பற்றி நின்றது, இந்தச் செய்திக் கேட்டுக் கலங்கிப் போனது போர்ச்சுகீசியத் தரப்பு.

சாம்பாஜி 20 ஆயிரம் பேர் கொண்ட படையோடு முன்னேறினான், அங்கிருக்கும் வயல்கள் கோட்டைகள் ஊர்கள் என எல்லாமும் துவம்சம் செய்தபடி முன்னேறினான். கோவா என்பது கிறிஸ்தவ மதமாற்றிகளின் தலைமையகமாய் இருந்தது. அங்கிருந்துதான் இயேசு சபை, கத்தோலிக்க சபை, கப்பூச்சின் சபை என வகை வகையாக பல சபைகள் இலங்கை, மலாக்கா எனப் பல இடங்களில் கிறிஸ்தவ ஆட்சி செய்து கொண்டிருந்தன‌.

சுருக்கமாகச் சொன்னால் கிழக்கே ஒரு வாடிகன் போல் அது இருந்தது, அந்தக் கோவா சாம்பாஜியின் வருகையால் கலங்கிப் போனது.

கோவாவின் சோதனைகாலம் 1570ல் வந்தது. போர்ச்சுகீசிய கும்பலின் அடாவடியினைப் பொறுக்கமுடியாத பிஜப்பூர் சுல்தான்கள் அவர்களைத் தாக்கினார்கள். ஆனால், வலுவான கப்பல்படை வைத்திருந்ததால் போர்ச்சுகீசியரை அகற்ற பிஜப்பூர் சுல்தானால் முடியவில்லை, அந்தப் போரில் போர்ச்சுகீசியர் கோவாவினைத் தக்கவைத்தனர்.

இம்முறை அப்படி அன்று. சாம்பாஜியின் கடற்படை போர்ச்சுகீசியரை முடக்கி வைத்திருந்தது, நிலத்திலும் அவர்கள் பலனற்று போனார்கள். சாம்பாஜி போர்ச்சுகீசிய வீரர்களைக் கைது செய்தபடி அல்லது வளைத்துப் பிடித்தபடி முன்னேறினான், ஒரு கட்டத்தில் போர்ச்சுகீசியரின் கோட்டைகள் பல அவனிடம் வந்தன, அவற்றின் பீரங்கிகள் முதல் கஜானா வரை கைப்பற்றிக் கொண்டான், அவனின் சேனையினை எதிர்க்க முயன்ற போர்ச்சுகீசிய வைஸ்ராய்க்குத் தோல்வியே கடும் காயத்துடன் கிடைத்தது.

டிசம்பர் 13, 1683ல் கோவாவினை அண்மித்து நின்றான் சாம்பாஜி. எல்லாப் பக்கமும் அது முடக்கப்பட்டிருந்தது, முர்முகோவா போன்ற பகுதிகளும் சாம்பாஜி கைக்கு வந்திருந்ததால் போர்ச்சுகீசியர் தங்கள் கதை முடிந்தது என்பதை உணர்ந்தனர்.

அவர்கள் கடைசிக்கட்ட போருக்குத் தயாரானார்கள். இனி கோவா தாங்காது எனும் நிலை உருவானது, மொத்த போர்ச்சுகீசிய பகுதிகளையும் சாம்பாஜி கைப்பற்றியிருந்ததால் கோவாவுக்குள் பெரும் நெருக்கடியும் கலக்கமும் உருவானது.

அவர்கள் வைஸ்ராயும் ரத்தம் வழிய காயம்பட்டுக் கிடந்தார், எங்கும் “இயேசுவே கன்னிமரியே எங்களைக் காப்பாற்றும்” என்ற அலறல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது, அவர்களின் 200 ஆண்டு கோவா ஆட்சியில் இயேசுவினை அவர்கள் அதிகம் தேடியது அப்போதுதான்.

வைஸ்ராய் மொத்த மக்களையும் திரட்டும் பொருட்டு ஒரு காரியம் செய்தான், கோவாவில் அந்தப் பிரான்சிஸ் சவேரி எனும் பாதிரியின் உடல் இன்றும் உண்டு, அது அன்றே அங்குதான் இருந்தது.

அது பாதிரியின் அழியா உடல் அவரின் சீரிய சமய பணிக்காக இயேசு அதனை அழியாமல் வைத்திருக்கின்றார் என்பது போர்ச்சுகீசிய கிறிஸ்தவகுருக்கள் கிறிஸ்தவர்க்குச் சொன்ன போதனை, ஆனால் அந்த உடல் என்றாவது நவீன மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? ஆய்வுகள் நடந்ததா? நிஜமாகவே அது உடல்தானா என்பதெல்லாம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

(ராமானுஜர்க்கு மூன்று திருமேனிகள் உண்டு என்பது போல் அன்றே போர்ச்சுகீசியர் மதம்மாற்ற ஒரு சாட்சி ஆயுதமாக இந்தப் பாதிரி உடலை வைத்திருந்தது, அக்காலத்தில் இந்துக்கள் எதெல்லாம் செய்வார்களோ எதை எல்லாம் தங்கள் மதத்தில் பெருமையாகக் காட்டுவார்களோ அதை எல்லாம் இக்கும்பலும் செய்து கொண்டிருந்தது.

அதில் இந்த உடல் எனச் சொல்லப்படுவதும் ஒன்று, இன்றும் அது கோவாவில் உண்டு.)

அந்தப் பிரான்ஸ் தேசத்து சவேரி என்பவன் இயற்பெயர் பிரான்ஸிஸ், சவேரி எனும் கோட்டையில் பிறந்ததால் சவேரி என அறியப்பட்டான். போர்ச்சுகீசியர் இந்தியா வந்து கோவா பக்கம் இந்துக்களை மதம்மாற்றி வைத்திருப்பதைக் காண வந்தவன் அவர்கள் இந்துவாழ்வியல் முறையில் இருப்பதைக் கண்டு அதாவது பொட்டுவைத்தல், பூ வைத்தல், கோலமிடுதல் என இந்து வழக்கங்களைக் கொண்டிருப்பதைக் கண்டு அஞ்சினான்.

நல்லநாள் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது என அந்தக் கிறிஸ்தவர்கள் இந்துவழக்கம் கொண்டிருப்பதால் ஒருநாள் அவர்கள் தாய்மதம் திரும்பலாம் என அஞ்சியவன் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க “புனித விசாரணை” செய்யச் சொல்லி உத்தரவிட்டான், அந்த மாபெரும் கொடுமை இன்று மனுகுலம் கண்ட கொடிய நரகத்தில் ஒன்று.

அப்படியானவன் உடல் எனச் சொல்லப்பட்ட ஒன்றைக் கோவாவின் குழந்தை இயேசு சர்ச் முன்னால் வைத்து அக்கும்பல் அலறத் தொடங்கியது.

“ஓ சவேரி, உன்னால் நிலை கொண்ட இந்தக் கிறிஸ்தவ மண்ணை சாம்பாஜி அழிக்க வருகின்றான், எங்களைக் காப்பாற்று, கிறிஸ்துவத்தைக் காப்பாற்று” என அழுகையும் ஒப்பாரியுமாக புலம்பத் தொடங்கினார்கள்.

இப்படி ஒரு கும்பல் சர்ச் முன் அலறிக் கொண்டிருக்க இன்னும் அதி தீவிர கும்பல் தாங்கள் சிலுவையில் சாவோம் என அலறியது, காரணம் சாம்பாஜி அப்படித் தங்களை அறைந்து வைத்து கொன்றுவிடுவான் என அஞ்சியது.

சிவாஜிக்கு இருந்த இரக்கம் சாம்பாஜிக்கு இல்லை, அவன் தங்களை மொத்தமாய் அழித்துவிடுவான் என அந்தப் போர்ச்சுகீசிய கும்பல் உயிர்ப் பிரியும் வலியில் அழுது, புலம்பி உருண்டு கொண்டிருந்தது.

சாம்பாஜி அவர்கள் வாழ்விலும் பெறாத பெரிய அச்சத்தைக் காட்டினான், போர்ச்சுகீசியர் செயலற்ற நிலையில் வானம் பார்த்து அழுதுக் கொண்டிருந்தனர்.

சாம்பாஜி எவ்வளவு மூர்க்கனோ அவ்வளவுக்குத் தந்திரமும் நிறைந்தவன், அவனுக்குப் போர்ச்சுகீசியருக்கு ஒரு மரணபயம் காட்டி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் எண்ணம் இருந்ததே தவிர முழுக்க விரட்டும் திட்டம் மனதால் இல்லை.

காரணம், அன்றைய இந்துஸ்தானில் பல கடலோரங்கள் சூரத் போல, கராச்சி போல‌ கல்கத்தா போல மொகலாயக் கட்டுப்பாட்டில் இருந்தன. இங்கிருந்து இவர்களை விரட்டினாலும் அவர்கள் மொகலாயக் கடற்பகுதிக்குச் செல்வார்கள், அங்கே ஐரோப்பிய ஆயுதம் வெடிமருந்துகளைக் குவிப்பார்கள் என்பதால் அவன் சிந்தித்தான்.

இதனால் மிகப்பெரிய அச்சம் ஒன்றைக் காட்டிவிட முயன்றவன் கோவாவின் வாசல் வரை வந்து எச்சரித்தான், அத்தோடு போர்ச்சுகீசியர் ஒடுங்கிப் போனார்கள்.

கோவாவினைச் சாம்பாஜி நொறுக்கத் தொடங்கிவிட்டான் எனும் செய்தி அறிந்து வெளியே இருந்த சில போர்ச்சுகீசிய வணிகர்கள் சூரத் ஊடாக ஔரங்கசீப்பிடம் கெஞ்சினார்கள். அவனும் சாம்பாஜியினைத் திசை திருப்ப ஷா ஆலம் தலைமையில் பெரிய படையினைக் கிழக்கு முனைக்கு அனுப்பினான்.

மொகலாயச் சேனையினை எதிர்க்கும் பொருட்டு போர்ச்சுகீசிய விவகாரத்தை கவி கலாஷிடமும், முகமது அக்பரிடமும் ஒப்படைத்துவிட்டு திரும்பியவன் ஹம்பிராவுடன் சேர்ந்து மொகலாயர்களை எதிர்க்கத் தயாரானான்.

அங்கே கவி கலாஷ் தீவிரமான இறுக்கத்துடன் போர்ச்சுகீசியருக்குப் பல நிபந்தனைகளை விதித்தான், அதன்படி போர்ச்சுகீசியப் பகுதிகள் சாம்பாஜிக்குக் கட்டுப்பட்டது என்றும் அவர்கள் அதற்குக் குத்தகை பணம் கொடுக்கவேண்டும், எக்காரணம் கொண்டும் மதம்மாற்றக் கூடாது இந்து ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, மொகலாயருக்கு ஆயுத உதவி ராஜ்ஜிய உதவி செய்யக் கூடாது எனப் பல உறுதிமொழிகள் பெறப்பட்டன‌.

குறிப்பாக வடக்கே டாமன் பக்கம் போர்ச்சுகீசியர் மொகலாயருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது, அப்படி ஒரு நிகழ்வு நடந்தாலும் கோவா தரைமட்டமாக்கப்படும் எனவும் எச்சரிப்புகள் விடுக்கப்பட்டன. போர்ச்சுகீசியர் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் அந்தப் போர் நின்றது. எனினும், கோவா இனி பாதுகாப்பான இடம் அன்று என உணரத் தொடங்கிய போர்ச்சுகீசியர்கள் தங்கள் நடவடிக்கையினை மர்முகோவா பக்கம் மாற்றினார்கள், அது அவர்களின் தலைமையிடமாயிற்று. இந்தக் கோவா வெறும் பாசங்கு இடமாயிற்று.

சித்திகள், மைசூர் சிக்கதேவராயன், மதுரை நாயக்கர் , இப்போது போர்ச்சுகீசியர் என எல்லோரையும் அடக்கிய சாம்பாஜியினை நுட்பமாக கவனித்த ஔரங்கசீப் ஒன்றை உணர்ந்து கொண்டான், அது சாம்பாஜி தன்னால் வெல்லமுடியா அளவில் பலமாய் இருக்கின்றான் என்பது.

இனி, சாம்பாஜியினைப் போரினால் வெல்லமுடியாது தனக்குச் சரிநிகர் பலம் கொண்டவனாய் ராணுவம், ஆயுதம் முக்கியமாகப் பெரும் வருமானம் கொண்டவனாய் நிற்பதை அறிந்தவன் இனி அவனை வெல்ல அவன் வருமானத்தைக் குறைப்பது ஒரு வழி என்பதை உணர்ந்தான்.

எளிதாகச் சாம்பாஜியினை அடக்கலாம் என நினைத்தவனுக்கு சிவாஜி செய்துவைத்திருக்கும் பெரிய பேரரசை அதுவும் மிக நுணுக்கமாகச் செல்வம் கொட்டும்படி செய்து வைத்த பேரரசை கைப்பற்றுவது எளிதல்ல, இது நீண்டகால போருக்கு வழியாயிற்று என்பதை எண்ணியபடியே ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கினான்.

24 வயது சாம்பாஜி தனக்குக் கொஞ்சமும் பணியாமல் தன் மகனையும் வைத்துக் கொண்டு தனக்கே சவால்விடுவதையும் தான் முழுக்க அவனோடு தோற்றுக் கொண்டிருப்பதையும் எண்ணி அனுதினமும் அவமானத்தில் மூழ்கினான், சாம்பாஜி அவனுக்குச் சிவாஜியினைவிட பெரிய அச்சமாக மகா அவமானம் கொடுப்பவனாக தோன்ற ஆரம்பித்தான்.

அதே நேரம் இந்தக் காலகட்டத்தில் இன்னொரு பெரிய சிக்கல் ஔரங்கசீப்புக்குக் காஷ்மீர் பக்கம் வந்தது, அதனால் அவன் மீண்டும் டெல்லி செல்வதா, இல்லை இங்கே போரைத் தொடர்வதா எனக் குழம்பினான்.

இனி டெல்லி திரும்பினால் சாம்பாஜி ஔரங்கபாத்தைக் கைப்பற்றிவிடுவானோ எனும் கலக்கமும் அவனுக்குள் இருந்தது, அதே நேரம் காஷ்மீரில் அந்தச் சிக்கலும் வலுத்தது.

(தொடரும்)