சத்ரபதி சாம்பாஜி : 16

சத்ரபதி சாம்பாஜி : 16

அப்போது ஔரங்காபாத்துக்கு வந்திருந்து சாம்பாஜிக்கு எதிராக படை நகர்த்தினான் ஔரங்கசீப், அவனோடு அவன் மகன் ஆசம் ஷா உள்ளிட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். இங்கே அவன் தன் முழுப்பலத்தோடும் படையோடும் அமர்ந்திருக்க டெல்லி அதிக காவல் இல்லாமல் காலியாக இருந்தது.

ராஜபுத்திரரின் ராஜபுத்திர பகுதியில் இருந்து டெல்லிக்கு பாய்வது இப்போது எளிதான விஷயம், பாதுஷா அவுரங்கசீப்புமில்லை அவன் சேனையுமில்லை என்பதில் அங்கு பாதுகாப்பே பெரிதாக இல்லாமல் இருந்தது

ஔரங்கசீப்பும் அவன் மகன்களும் ஔரங்காபாத்தில் சிக்கிக் கொள்ள இவர்களுக்கு அடுத்தக்கட்டத்தில் இருந்த ஔரங்கசீப்பின் தாய்மாமனான ஷாயிஸ்டாகான் வங்கத்தில் இருந்தான், அவன் டெல்லிக்கு வரவும் உடனே முடியாது.

இதனால் சாம்பாஜி தேசம் இன்னும் ராஜபுத்திர பகுதிகளில் பெரும் தாக்குதலை மேற்கொண்டிருந்த ஔரங்கசீப்புக்கு மரண அடி கொடுக்க டெல்லியினைக் கைப்பற்றும் திட்டம் தயாரானது, அதை வகுத்தவன் துர்க்காதாஸ்.

டெல்லி செங்கோட்டையினைக் கைப்பற்றி முகமது அக்பரை அரசனாக்கும் முயற்சி மறுபடி நடந்தது, 1683 வாக்கில் நடந்தது, இதைத் தன் உளவாளிகளின் மூலம் அறிந்த ஔரங்கசீப் மறைந்த ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கினை டெல்லி காவலுக்கு அனுப்பினான்.

பல மண உறவு சிக்கல்கள் இதர உறவு சிக்கல்களால் ராம்சிங்கும் ஜெய்சிங்போல் ஔரங்கசீப்பினை எதிர்க்கமுடியா அளவு சிக்கியிருந்தான், அவனிடம் தன் கோரிக்கையினை அனுப்பினான் துர்க்காதாஸ்.

“ராம்சிங், இது மிக அரிய வாய்ப்பு, ஔரங்கசீப்பை முடக்கும் மிக மிக பொன்னான வாய்ப்பு, காலம் காலமாக நடக்கும் பெரும் யுத்தம் முடியும் வாய்ப்பு. இங்கு இந்த மண்ணும் மதமுமா? இல்லை உன் கடமை எனும் மோசடியா என்பதை நினைத்துப்பார்.

நம் மதம் இங்கே அழிக்கப்படுகின்றது, ராஜபுத்திர பகுதியில் கோவில்கள் எல்லாமே இடிக்கப்படுகின்றன, இந்துக்கள் மேல் ஜிசியா வரி விதிக்கப்படுகின்றது, இந்துக்கள் வாய்பேசும் ஆடுமாடுகளாக வதைபடுகின்றார்கள், இந்து பெண்களின் நிலை அவ்வளவு மோசமாக இருக்கின்றது, அவர்களை இந்த அரக்க கும்பலிடம் இருந்து காக்கும் இந்துக்களின் காவலான‌ ராஜபுத்திரரையும் மராட்டியரையும் ஒழிக்க ஔரங்கசீப் கடும் போரைத் தொடுத்திருக்கின்றான்.

அவனின் கொடும்புத்தி தாளாமல் அவன் மகனே நம்மோடு இருக்கின்றான், இந்நேரம் நீ டெல்லி காவலை விட்டுவிடு. எங்களுடன் சேர்ந்துகொள் அல்லது அகன்றுவிடு. நாங்கள் டெல்லியினைக் கைப்பற்றினால் அது ஔரங்கசீப்புக்கு மிகப்பெரிய தோல்வியாகவும் இந்துக்களின் மாபெரும் வெற்றியாகவும் அமையும், பல இடங்களில் பிரிபடும் மொகலாயப்படையினைப் பந்தாடுவதும் எளிது.

உன் தந்தையின் மரணத்தை நினைத்துப்பார், உன் குடும்பத்துக்கு நிகழ்ந்த அவலங்களைக் கண்முன் பார், இந்தத் தேசத்தின் விடுதலைக்கு நீ துணை நின்றால் வரலாற்றில் நிற்பாய், இல்லையேல் இந்துக்களின் பெரும் சாபத்தில் நீயும் பங்குபெறுவாய்.

நல்லமுடிவினை எங்களுக்குச் சொல், இல்லையேல் மிகப்பெரிய மோதல் நமக்குள் உண்டாகும்.டெல்லியினை கைபற்ற உன் உதவி அவசியம், அது நடந்துவிட்டால் இங்கு நாங்கள் அங்கே அமரபோவதில்லை அவுரங்கசீப்பின் மகன் மொகமது அக்பரே அமர்வான்

உன் மொகலாய சேவை அங்கும் தொடங்கும், இதனால் நீ மொகலாயருக்கு துரோகம் செய்தவனாகவிடமாட்டாய் அவர்கள் வாரிசு சண்டையில் ஒதுங்கி நின்ற ஒருவனாகவே அறியபடுவாய்,, முகமது அக்பர் இந்திய அரசனாகிவிட்டால் ஜிசியா வரி அகலும், நம் எல்லோருக்குமே ஷேமம் உண்டாகும், ஆலயமெல்லாம் செழிக்கும், இந்த பெரும்போர் உடனே நின்றுவிடும் இந்து மக்கள் நிம்மதி அடைவார்கள்” என எழுதினான்.

ராம்சிங் இதற்கு உடன்படவில்லை, அவன் இந்துவாயினும் ராஜபத்திரனாயினும் மொகலாயத்தைக் காப்பதே தன் கடமை எனக் கருதினான், அவனின் கணிப்பின்படி ஒருவேளை டெல்லி செங்கோட்டை இந்துக்களால் கைப்பற்றபட்டது என்றால் அது இந்துக்களின் விடுதலை ஆகிவிடாது, அதை முறியடித்து மீண்டும் இஸ்லாமியர் ஆட்சி நிறுவ பாரசீக சுல்தான் வருவான் இல்லை ஆப்கானிய கும்பல் ஏதாவது வரும், மொகலாயம் இங்குக் கடிநாய் என்றாலும் காவல்நாய் எனுமளவு உண்டு.

அவனின் அச்சம் மொகமது அக்பர் தலமையில் டெல்லியில் ஒரு ஆட்சி அமைந்தாலும் அது ஆப்கானியர் அல்லது வேறு இஸ்லாமிய சுல்தானின் ஊடுருவலுக்கே வழிவகுக்கும் என சிந்தித்தான்

மொகலாயம் கொடியதுதான், ஆனால் இதை அகற்றினால் வரும் அடுத்த ஆபத்து இதைவிட கொடிது என்பதால் சிந்தித்தான், தன்னால் இதை ஏற்க முடியாது எனக் கைவிரித்துவிட்டான். மொகலாயத்தில் குழப்பம் வந்து அதனால் இன்னொரு ஆப்கானிய கோஷ்டி வந்து டெல்லியில் அமர்வது நல்லதல்ல என்பது போல் அவன் சிந்தனை இருந்தது, டெல்லியினை கைபற்ற அவன் அனுமதிக்கவில்லை

துர்க்காதாஸுக்கு இது பெரும் அதிருப்தியானது, என்ன ஆனாலும் சமாளிக்கலாம் போராடுவது என முடிவானபின் பாரசீகம் என்ன? துருக்கி என்ன? எனக் கொதித்த துர்க்காதாஸ் அடுத்தக் கட்ட நகர்வுக்குத் தயாரானான், ஆனால் அது சுலபமாக இல்லை.

ராம்சிங்குடன் மோதினால் தங்களுக்குள் மிகப்பெரிய போரினை நடத்தும் என்றும் ஔரங்கசீப்புக்கே சாதகமாகும் என்பதால் மிகுந்த சிந்தனைக்குள்ளானான் துர்க்காதாஸ், இதனால் டெல்லியினைக் கைப்பற்றும் அந்த முடிவு உடனே செயல்படுத்தமுடியாததாயிற்று.

விஷயம் கசிந்ததை அடுத்து உஷாரான ஔரங்கசீப் மிகுந்த கவனமானான். ராம்சிங்கிற்குப் பெரும் செய்தியினை அனுப்பினான், லாகூர் கோட்டையில் இருந்து பெரிய சேனை வரத் தயார்செய்தான். டெல்லியின் காவல் வலுவானது ஔரங்கசீப் பெருமூச்சு விட்டாலும் தனக்கான பெரும் மிரட்டலை, இந்துக்கள் விடுத்த எச்சரிக்கையினை எண்ணி கடும் ஆத்திரம் கொண்டான்.

தன் அரியணையினைக் கைப்பற்றி தன் கழுத்துக்கே கத்திவைக்கத் துணிந்த இவர்களை விடவே மாட்டேன் என மனதுக்குள் பெரும் வன்மம் கொண்டான், எல்லாவற்றுக்கும் காரணம் சாம்பாஜி என நினைத்தபோது , எல்லாம் அவன் கொடுத்த பலம் என்பதை உணர்ந்தபோது அருகிருந்த எல்லாவற்றையும் உடைத்துப்போட்டு வெறி கொண்ட யானை போல் ஆடி வீழ்ந்திருந்தான். அவன் மனதில் சாம்பாஜி மாபெரும் எதிரியாய் உருவானான், ஒருவகையில் ஔரங்கசீப் சாம்பாஜிக்கு அஞ்சத் தொடங்கியிருந்தான்.

இந்நேரம் சிவாஜி இல்லாததால் துணிந்துவிட்ட போர்ச்சுகீசியருக்கும் சாம்பாஜிக்கும் உரசல்கள் வந்தன, அனுபவம் வாய்ந்த ஔரங்கசீப் அதைப் பெரிதாக்கி அங்கும் ஒரு போர்முனையினைத் திறக்க முனைந்தான்.

போர்ச்சுகீசியர் கட்டுப்பாட்டில் இருந்த கோவா சம்பந்தமாகவும் இன்னும் சில போர்ச்சுகீசிய ஆட்சி நடந்த இடம் தொடர்பாகவும் சாம்பாஜிக்கு மோதல் சிவாஜி இறந்த காலங்களில் இருந்தே தொடங்கிற்று.

போர்ச்சுகீசியர் இங்கு நாயக்க பேரரசு வலிமையாக இருந்தபோது கால்வைத்தவர்கள், முதலில் கேரளத்தின் கோழிகோடு பக்கம் வியாபாரத்துக்கு வந்தவர்கள், பிரசித்தியான வாஸ்கோடமாகா என்பவன் அதைத் தொடங்கிவைத்தான், ஆப்ரிக்காவினைச் சுற்றி இந்தியா வந்த முதல் ஐரோப்பியன் அவனே.

எங்குச் சென்றாலும் மக்களை மதம்மாற்றி தங்கள் கிறிஸ்தவ மதத்தைத் திணித்து அதைக் கொண்டே தனக்கொரு அடிமை கூட்டத்தை உருவாக்கி போப்புக்குக் கொடுக்கும் பணியினைக் கோழிக்கோட்டிலும் அவர்கள் செய்தனர்

அந்நாளில் போப் ஐரோப்பிய அரசர் என்பதால் பல அனுமதிகளுக்கு போர்ச்சுகீசியருக்கு அவர் அவசியம்இதனால் செல்லுமிடமெல்லாம் கத்தோலிக்க மதத்தை பரப்பி போப்புக்கு ஒரு அடிமை கூட்டத்தை கொடுத்து அவரை மகிழ்வித்து அதனால் தாங்கள் பல சலுகைகளை பெற்றனர்

அதை இந்தியாவின் கேரளத்திலும் அவர்கள் செய்ய கொதித்தெழுந்த கொச்சி மன்னனும் மக்களும் போர்ச்சுகீசியரை வெளியேறச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் மறுத்து போர்தொடுக்க அந்தப் போரில் வாஸ்கோடகாமா கொல்லப்பட்டான், அவன் கல்லறை இன்றும் கோழிக்கோட்டில் உண்டு.

மலையாள மன்னர்களால் விரட்டப்பட்ட போர்ச்சுகீசியர் நாயக்க மன்னர்கள் ஆண்ட பகுதியான கோபாலபுரம் பக்கம் சென்றார்கள், அப்போது பாமினி சுல்தான்களுக்கு எதிராக பெரும் போர் செய்த கிருஷ்ண தேவராயர் இவர்களுக்கு இடமளித்தார், சுல்தான்களுக்கு எதிராக போரிட வெடிபொருள், ஆயுதம் என இவர்கள் அவருக்குத் தேவைபட்டார்கள்.

முதலில் அமைதியாக வியாபாரம் மட்டும் செய்த கும்பல் நாயக்க மன்னர்கள் வீழ்ந்து பிஜப்பூர் சுல்தானியம் வந்தபோது அவர்களோடு மோதி இந்துக்களைக் காப்பதாகச் சொல்லி மக்கள் அபிமானம் பெற்று தங்களுக்கென ஒரு அரசை அமைத்துக் கொண்டு பின் இந்துக்களைக் கொடியதாக மதம்மாற்றினார்கள்.

அப்படி இந்துக்களாக மாறியபின்னும் அவர்கள் இந்து சம்பிரதாய வாழ்வியலைக் கடைபிடித்தற்காக பிரான்சிஸ் சவேரி எனும் பாதிரியின் பரிந்துரைபேரில் மிக மிக கொடுமையாக வதைக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர், மிகக் கொடிய சரித்திரம் அது. “கோவாவின் புனித விசாரணை” என நடந்த கொடிய வரலாறு சரித்திரத்தின் ரத்த பக்கங்களில் ஒன்று.

இந்துக்களுக்கென எதுவும் இல்லாக் காலத்தில் இக்கும்பல் பெரிய ஆட்டம் ஆடி தங்களுக்கென ஒரு அரசை கோவா பக்கம் நிறுவி, பின் டையூ டாமன் பக்கமும் விஸ்தரித்தது, கோபாலபுரி கோவா என்றாகி முழுக் கிறிஸ்தவ பூமியாக கிழக்கே வாடிகன் போல் உருவானது, இன்னும் இன்னும் பெரிய கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை அவர்கள் உருவாக்க முனைந்தபோதுதான் வீரசிவாஜி எழுந்து தடுத்தான்.

நாயக்கரிடமும் சுல்தான்களிடமும் போர்ச்சுகீசியர் வெல்ல அவர்கள் கடல்படை உதவியது, சிவாஜி சொந்தமாகக் கப்பல்படை கட்டியதால் அவர்கள் ஆட்டம் சிவாஜியிடம் எடுபடவில்லை அடங்கிக் கிடந்தார்கள்.

எனினும், சிவாஜியின் மறைவுக்குப் பின் வந்த சாம்பாஜியினை எளிதில் பணியவைக்கலாம், பல விஷயங்களைச் சாதிக்கலாம், சிவாஜி தடுத்துப்போட்ட கிறிஸ்தவ ராஜ்ஜிய விஸ்தரிப்பை மீண்டும் செய்யலாம் எனத் திட்டமிட்டார்கள்.

1681 முதலே இவர்கள் அட்டகாசம் அதிகரித்தது, கோவாவில் இருந்த சாம்பாஜி தூதுவன் யாசாஜி கம்பிராவ் என்பவனிடம் பிச்சோலிமில் இருந்த பலம் வாய்ந்த‌ இந்துராஜ்ஜிய சேனை தளபதி மோரோ தாதாஜி பற்றிப் புகார் அளித்தனர், சாம்பாஜியும் அவனை மாற்றி ஜிவாஜி வினாயக் என்பவனை அமர்த்தினான், இதனால் இனி யுத்தம் வந்தால் வெல்வது எளிது எனப் போர்ச்சுகீசியர்கள் சிரித்துக் கொண்டார்கள்.

இவர்களைத் தீவிரமாகச் சிந்தித்தான் சாம்பாஜி. காரணம், இந்த ஐரோப்பிய கும்பல் நன்றி, விசுவாசம், நட்பு, சொன்ன வார்த்தை என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது, தர்மம் என்பது அவர்களிடம் அறவே இல்லை, பணம் ஒன்றே குறிக்கோள், அவர்களின் மதமாற்றம் என்பது இந்தியாவில் தங்களுக்கோர் அடிமை கூட்டத்தை உருவாக்கும் கருவி.

இவர்களால் எந்நேரமும் ஆபத்து வரக்கூடும் எனக் கணித்திருந்த சாம்பாஜி கோவாவுக்கு அருகில் உள்ள அஞ்சதீவ் எனும் தீவில் ஒரு கோட்டை கட்ட முயன்றான். ஆனால், அப்போதைய போர்ச்சுகீசிய வைஸ்ராய் லூயிஸ் கான்கால்வர் கௌவ்ட்டோ என்பவன் அது தங்களுக்குத் சொந்தமான தீவு என வந்து சர்ச்சை செய்தான்.

அதாவது போர்ச்சுகீசியர் வாதப்படி அது வாஸ்கோடமாவுக்குக் கொடுக்கப்பட்ட தீவு , மும்பைபோல் முன்பு போர்ச்சுகீசியர் தீவாக இருந்தது, 1506ல் வாஸ்கோடகாமா ஒரு கோட்டை கட்டினான். ஆனால், கைவிட்டான். பின் பம்பாய் தீவு பிரிட்டிஷாரிடம் கொடுக்கப்பட்டபோது இதுவும் அவர்களுக்குச் சென்றது. பின், போர்ச்சுகீசியர் வசம் வந்தது. எனினும், சில பல காரணங்களுக்காக அவர்கள் அதனைப் பயன்படுத்தாமல் இருந்தனர் ஆனாலும் அது தங்கள் நிலம் என வாதிட்டனர்.

அந்த அஞ்சுதீவ் மிக முக்கிய வழிதடத்தில் இருந்தது, அது அப்பக்கம் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் அப்படியே ஜான்சிரா தீவின் சித்திகளையும் கட்டுப்படுத்தும்.

சாம்பாஜி போர்ச்சுகீசியரின் கோரிக்கையினை ஏற்கவில்லை. இந்துஸ்தானின் தீவுக்கு ஐரோப்பிய கூட்டம் எப்படி சொந்தம் கொண்டாடமுடியும் என எச்சரித்தான் ஆனால், கேப்டன் சைமஸ் பெரைரா என்பவன் 1682 ஜூன் மாதம் அங்கு வந்து போர்ச்சுகீசிய கொடியினை நட்டு நாங்களும் கோட்டை கட்டுவோம் என்றான்.

இக்காலகட்டத்தில் சாம்பாஜி தெற்கே திருச்சிராபள்ளி போரில் இருந்ததால் அவன் நேரடியாக வரவில்லை அவன் உத்தரவினை யாசாஜியும் இதர தளபதிகளுமே மேற்கொண்டார்கள், அவர்கள் இதைத் தடுத்துப் போர்ச்சுகீசிய கொடியினைக் கடலில் வீசினார்கள், இரு பக்கமும் யுத்தத்துக்கான தயாரிப்பில் இறங்கினார்கள்.

இந்துசேனை தளபதி ஜிவாஜி விநாயக் போர்ச்சுகீசியர்களைத் தாக்கி விரட்டினான், எங்கோ ஒரு ஐரோப்பிய குட்டி நாட்டில் இருந்து வியாபாரத்துக்கு வந்த கூட்டம் எங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாடுவதா எனச் சீறினான், அவன் போர்ச்சுகீசிய பகுதிகளில் புகுந்து அவர்கள் பணமெல்லாம் கொள்ளையிட்டான், போர்ச்சுகீசியர் அவனுக்கு அஞ்சினர்.

எனினும், விஷயம் சாம்பாஜிக்குத் தெரிய வந்ததும் அவன் இந்த விநாயக்கை திரும்ப பெற்றுவிட்டு பழையபடி மோரோ தாதாஜியினை மீள அதே இடத்துக்கு நியமித்தான் அதாவது போருக்கான தயாரிப்பைச் செய்தான்.

1682 நவம்பர் வாக்கில் சாம்பாஜி ராய்காட் திரும்பியபோது ஔரங்கசீப் தன் தேர்ந்த திட்டத்தை வகுத்தான்.

அதாவது ஔரங்கசீப் வடக்கே இன்றைய குஜராத் பாகிஸ்தான் பக்கம் பெரும் வல்லமையுடன் ஆட்சி செலுத்தினான், தெற்கே ஔரங்கபாத் வரை வந்திருந்தான் இடைபட்ட நிலத்தில் இந்துசேனையின் வடக்கு பகுதியும் போர்ச்சுகீசிய பகுதியும் இருந்தன‌.

அவன் இந்துசேனைக்கு எதிராக தன் படைகளைக் கொண்டு செல்ல போர்ச்சுகீசியர் நிலத்தின் ஊடாக செல்ல அனுமதி கேட்டான், போர்ச்சுகீசியர் அதனை உடனே செய்தனர்.

சாம்பாஜியுடன் முறுகல், அதே நேரம் சாம்பாஜிக்கும் ஔரங்கசீப்புக்கும் போர் எனும் நிலையில் அவர்கள் ஔரங்கசீப்புடன் இணைய சம்மதித்தனர், மொகலாய சேனைகளின் போக்குவரத்துக்கும் அவர்கள் நிலவழி கடல்வழி உதவிக்கும் போர்ச்சுகீசியர்கள் முன்வர சாம்பாஜி கொதித்துப் போனான்.

1683ல் விஷயம் பெரிதானது. ஔரங்கசீப் தன் ராஜதந்திரியாக ஷேக் முகமது என்பவரைக் கோவாவுக்கு அனுப்ப அவர்களுக்குள் உறவு பெரிதானது, ஷேக் முகமது அனுப்பப்பட்ட நோக்கம் போர்ச்சுகீசியருக்கு எல்லா உதவியும் செய்து போரைத் தூண்டிவிடுவது என்பது

சாம்பாஜிமேல் பலமுனை தாக்குதலைச் செய்து பலனற்ற நிலையில் இன்னுமோர் முனையிலும் தாக்குதலைத் தொடுக்க இப்படி அவுரங்கசீப் போர்ச்சுகீசியரைத் தூண்டிவிட்டான். சிவாஜிக்குப் பின் சாம்பாஜியினை எளிதாக வெல்லலாம் எனக் கணக்கிட்ட போர்ச்சுகீசியரும் மகிழ்வுடன் முன்வந்தனர்.

நிலமை எல்லை மீறி செல்வதை அறிந்த சாம்பாஜி 1683 மார்ச் மாதம் தன் ராஜதந்திரி ராமசந்திர பண்டிட் என்பவரை அனுப்பி போர்ச்சுகீசியர் மொகலாயருக்கு உதவக்கூடாது என்பதையும் அப்படி உதவினால் அவர்களுக்கு என்னென்ன தீமைகள் வரும் என்பதையும் இந்துராஜ்ஜியம் இதனைப் பொறுத்துக் கொள்ளாது என்பதையும் தெளிவாக விளக்கினான்.

ஆனால், போர்ச்சுகீசியர் கேட்கவில்லை. மொகலாயச் சேனை போர்ச்சுகீசியர் நிலம் ஊடாக நகர்ந்தது. இருவருக்கும் உறவு பலப்பட்டது, இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என ஆத்திரமடைந்த சாம்பாஜி போரைத் தொடங்க தயாரானான், முன்னதாக இதை எதிர்பார்த்தே பார்சிக் பக்கமாக ஒரு கோட்டை கட்டிக் கண்காணிப்பை வலுப்படுத்திக் கொண்டான்.

மே மாதம் 1683 ஆம் ஆண்டு அதுவரை மெல்லப் புகைந்த முறுகல் பெரும் போராய் வெடித்தது, போர்ச்சுகீசிய பகுதிக்குள் புகுந்து தாக்கியது இந்துசேனை படைகள்.

ஔரங்கசீப்பின் மகன் முகமது அக்பர், கவி கலாஷ், நிலோபந்த் எனப் பல தளபதிகள் பங்கேற்று போர்ச்சுகீசிய பகுதியில் புகுந்து துவம்சம் செய்தனர்.

போர்ச்சுகீசியர் இந்துசேனையின் தானிய கப்பலை வெங்குர்லா பக்கம் சிறைபிடித்தனர். பதிலுக்குச் சாம்பாஜி தரப்பு அவர்கள் கப்பல்களைக் கைப்பற்ற வேறுவழியின்றி இந்துசேனை தூதுவனாக கோவாவில் இருந்த யாசாஜியினைக் கைது செய்து அவனைக் கொல்லப்போவதாக போர்ச்சுகீசியர் மிரட்டினர்.

பதிலுக்குச் சாம்பாஜி பெரிய மிரட்டலைத் தொடுத்தான். இந்துசேனையின் ராஜதந்திரி அறத்தை மீறி கொல்லப்படுவாரானால் நாங்களும் ராஜதர்மத்தை மீறி எல்லாவற்றையும் அழிப்போம் எனச் சீறினான், அப்படியே போர்ச்சுகீசிய கிறிஸ்தவ துறவிகளைப் பிடித்துக் கொண்டான்.

வேறுவழியின்றி அவர்கள் யாசாஜியினையும் பிடிபட்ட கப்பல்களையும் திருப்பிக் கொடுத்தனர், அத்தோடு போரின் தீவிரம் தணிந்தது. சாம்பாஜியும் பல முனைகளில் மொகலாயரை எதிர்த்துக் கொண்டிருந்ததால் பெரிய அளவு இங்கு இறங்கவில்லை. போர் எல்லையில் மட்டும் மட்டுபடுத்தப்பட்ட அளவில் நடந்தது.

1683 ஆவணியில் சாம்பாஜி ஒரு திருப்பயணம் செல்ல முடிவெடுத்தான். அது இந்துக்களின் மிக முக்க்கிய கடமையாகவும் இருந்தது.

பொதுவாக ஆடி ஆவணி மாதங்களில் இந்துக்களுக்கு விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி எனப் பல பண்டிகைகள் உண்டு, அப்படியே புண்ணிய நதிகளில் நீராடும் வழிபாடும் உண்டு, இதனால் சாம்பாஜி கோவா அருகில் உள்ள சப்தகோடீஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் நீராட ஏற்பாடுகளைச் செய்தான்.

கோவா அருகே அமைந்துள்ள அந்த ஆலயத்தின் வரலாறு கந்தபுராணத்தில் இருந்து தொடங்குகின்றது, அதன்படி சப்தரிஷிகளும் சேர்ந்து பெரிய வழிபாட்டை மேற்கொண்டபோது ஏழு உலோகங்களால் ஒரு லிங்கம் செய்து அதனைப் பஞ்ச கங்கை எனும் ஐந்து நதியின் நீரால் அபிஷேகம் செய்தனர்.

காவேரி, துங்க பத்ரா, கிருஷ்ணவேணி, கோதாவரி, கங்கை ஆகிய நதிகள் நீரால் செய்தனர், அதிலிருந்து பஞ்ச கங்கை நதி ஆவணிமாதம் அங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது உண்டு.

இக்காலகட்டத்தில் இங்கு நீராடுதல் என்பது மிகுந்த புண்ணிய காரியம், அது காசியின் கங்கை கரையில் இருக்கும் பஞ்சகங்கா காட் எனும் படிதுறையில் நீராடலுக்குச் சமம்.

அப்படியான அந்த ஆலயம் திவாடி தீவில்தான் இருந்தது, மிகவும் புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் முதல் சோதனை துக்ளக் காலத்தில் வந்தது, பாமினி சுல்தான்கள் அதைப் பாழ்படுத்தினர்.

நாயக்க அரசு எழுந்தபோது, விஜயநகர மன்னர்கள் அதை மீட்டு புனரமைத்தபின் கொண்டாட்டங்கள் வழமையாயின‌.

ஆனால், போர்ச்சுகீசியர் இப்பக்கங்களைக் கைப்பற்றியபோது மிகக் கடுமையான அழிவினை இக்கோவிலுக்குச் செய்தனர், அக்கோவில் அழிக்கப்பட்டு லிங்கம் காணாமல் செய்யப்பட்டது, எல்லோரும் மனமொடிந்து போனார்கள். அந்த இடத்தில் போர்ச்சுகீசியர் ஒரு ஆலயம் கட்டிக் கொண்டார்கள்.

அந்த ஆலய சுவடு இப்படி அழிந்துபோன நிலையில் சிவலிங்கமும் காணாமல் போன நிலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்தச் சிவன் சூர்யராவ் சர்தேசாய் என்பவர் கனவில் வந்து தன் ஆலயம் இடிபட்டபின் தன் நிலையினைப் பக்தர் கண்முன் காட்டினார்.

அந்த லிங்கம் ஒரு கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லாக போர்ச்சுகீசியரால் மாற்றப்பட்டிருந்தது, அந்த அளவு பெரும் கொடுமையினை அவர்கள் செய்திருந்தார்கள்.

அந்தப் பக்தர் இக்கனவை யாரிடமும் சொல்லமுடியா நிலையில் இருந்தார். காரணம், அதைச் சொன்னாலும் அன்று மொகலாயர், பிஜப்பூர் சுல்தான்கள் இந்தப் போர்ச்சுகீசியர் என எல்லோரும் இந்து வெறுப்பு கொண்டவர்களாக இருந்தார்கள், அவர்களிடம் சொல்லிப் பலனேதுமில்லை.

அந்நேரம்தான் சத்ரபதி சிவாஜி எழுந்து இந்துக்களுக்கான அரசை அமைத்து ஒளிவீசினான், அவனிடம் இந்தப் பக்தர் தன் கனவைச் சொன்னார், தன் படையோடு வந்த சிவாஜி அந்தக் கனவின்படி கிணற்றடிக்குச் சென்று அக்கல்லைத் தோண்டி எடுத்தான், அப்போதுதான் அது சிவலிங்கம் என்பதை இந்துக்கள் உணர்ந்து கண்ணீர்விட்டனர், சிவாஜியும் இந்துக்களின் நிலை குறித்துக் கலங்கிப்போனான்.

போர்ச்சுகீசியரின் அட்டகாசம் அந்த அளவு இருந்தது, அவர்கள் அந்த லிங்கத்தைப் பெயர்த்தெடுத்துக் கிணற்றடியில் அடித்துப் போட்டதால் அதன் மேல் காயங்களும் இருந்தன, அதைத் தடவி தடவி இந்துக்கள் அழுதுக் கொண்டிருந்தனர்.

தாங்கள் அழித்துப்போட்ட லிங்கம் மீண்டும் சிவனருளால் கிடைத்தது என்பதை நம்பமுடியாத அல்லது அரண்டுபோன போர்ச்சுகீசியர்கள் இனித் தாங்கள் அடக்கிவைத்த கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்துமதம் திரும்புவார்கள் எனக் கருதி பெரும் போரைத் தொடுத்தனர்.

சிவாஜி அவர்களை அடக்கிப்போட்டு முழங்காலில் நிறுத்தினான், இனியும் போரிட்டால் தங்கள் இந்திய இருப்பே இல்லாமல் போகும் என அஞ்சிய போர்ச்சுகீசியர் சமாதானத்துக்கு வந்தனர். சிவாஜி அங்கு ஆலயம் கட்டி அந்த லிங்கத்தை ஸ்தாபித்து மீண்டும் சப்தகோடீஸ்வரர் ஆலய வழிபாடுகளை மேற்கொண்டான். அவனால் அந்த ஆலயம் மீண்டது

இந்து ஆலயத்தை அவர்கள் சர்ச் என்றாக்கி பின் சிவாஜி அதை மீள சிவாலயமாகினான் இன்றும் அதனுள் சர்ச் வடிவமைப்பினை காண முடியும், உலகில் ஒருஇந்து கோவிலை அழித்து உருவான சர்ச் மீண்டும் அதன் முந்தைய சிவாலயமான‌ அதிசயம் அங்குதான் நடந்தது,

சிவாஜி எனும் சிவபக்தனால் நடந்தது

இதனால் சாம்பாஜிக்கும் அது முக்கியமான ஆலயமாயிற்று, அவன் அங்குப் புனித நீராடக் கிளம்பினான்.

இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்ட ஔரங்கசீப் ஒரு விபரீதத் திட்டத்தைத் தீட்டினான். அது கோவா எல்லைப்பக்கம் வரும் சாம்பாஜியினை அப்படியே பிடித்து மொகலாய பகுதிக்குள் இழுத்துச் செல்வது.

இதற்குரிய திட்டங்களை போர்ச்சுகீசியருக்கு அனுப்பியவன் சாம்பாஜியினைக் கைது செய்து தந்தால் பெரிய பெரிய சன்மானம் இன்னும் பெரிய வணிகவாய்ப்பு, நிலங்கள் என ஆசைகாட்டினான், போர்ச்சுகீசியரும் ரகசியமாக ஔரங்கசீப்புக்குச் சம்மதம் தெரிவித்தனர்.

அதே நேரம் சாம்பாஜியினைக் கடத்தும் திட்டத்தில் இருந்த ஔரங்கசீப்புக்கு டெல்லியினைக் காக்கும் பொறுப்பில் இருந்த ராம்சிங் மேல் சந்தேகம் வலுத்தது.

என்னதான் அவன் இப்போது துர்க்காதாஸின் திட்டங்களுக்குச் சம்மதிக்கவில்லை என்றாலும் தான் தொடர்ந்து தோற்றால் ராஜபுத்திரருடன் சேர்ந்து டெல்லியினைக் கைப்பற்றமுயல்வான் எனச் சிந்தித்தான், ராம்சிங் அவனுக்கு விசுவாசமானவன் என்றாலும் அவனை முழுக்க நம்ப ஔரங்கசீப் தயாராக இல்லை.

இதனால் அவனை மிரட்டி வைக்க மொத்த மொகலாயச் சேனை, ராஜபுத்திரர், தன் தளபதிகள் என எல்லோரையும் அதிரவைக்க ஒரு காரியம் செய்தான். தன் தளபதிகள் சிலர் லஞ்சம் வாங்குதல்! உள்குத்து செய்தல், சாம்பாஜி துர்க்காதாஸிடம் வெகுமதிகள் பெறுதல் என்பதை அறிந்திருந்த அவன் தன் சுயரூபத்தைக் காட்டத் துணிந்தான்.

மொகலாயச் சேனையில் இருப்பவர்கள் யாரும் மண்ணின் மைந்தர்கள் அல்ல, கொள்கைவாதிகள் அல்ல. மண்ணை மீட்க, தாய்நாட்டை காக்கக் கிளம்பியவர்கள் அல்ல. மாறாக. கூலிக்குச் சண்டையிட எங்கிருந்தோ வந்தவர்கள், அதில் அராபியர் ஆப்கானியர் துருக்கியர் பெர்ஷியர் உஸ்பெக் தவிர ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் உண்டு.

இவர்களுக்குப் பணமே பிரதானம் என்பதால் எந்த எல்லைக்கும் செல்வார்கள், எந்தத் துரோகத்துக்கும் துணிவார்கள் எனபதால் தனக்கு எதிராகத் திரும்பலாம் என அஞ்சியவன் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டான்,

அவனை பொறுத்தவரை கோவா பக்கம் புனிதநீராடவரும் சாம்பாஜியினை பிடித்தால் ராஜபுத்திரர் ஏதும் கலகம் செய்வார்கள் டெல்லி பக்கம் கூட செல்வார்கள், சாம்பாஜியினை விடுவிக்க ஏதேனும் பேரம் பேசலாம் ஏன் முகமது அக்பர் சாம்பாஜியிடம் இருப்பதால் அங்கும் பல குழப்பம் உருவாகலாம், தன் தளபதிகள் திசைமாறலாம் என்பவன் அந்த துணிகரத்தை செய்தான், சாம்பாஜி ராஜபுத்திரர் மொகலாய சேனை என எல்லோருமே அதிர்ந்து நின்ற தருணமது, அவுரங்க்சீப் எவ்வளவு ஆபத்தானவன் என எல்லோரும் ஒருசேர புரிந்து கொண்ட சம்பவமும் அது

(தொடரும்..)