சத்ரபதி சாம்பாஜி: 19
சத்ரபதி சாம்பாஜி: 19
சாம்பாஜியினை அடக்க இனிப் பெரிய போர்களால் முடியாது, மெல்ல மெல்ல அவனின் வருமானமெல்லாம் முடக்கி அவனின் இதர எல்லைப் பகுதிகளை முடக்கி வரவேண்டும், இப்போர் சிறிது காலம் நீடிக்கும் என்பதை உணர்ந்த ஔரங்கசீப் தேர்ந்த திட்டம் ஒன்றை வகுத்தான்.
அதன்படி அவன் இலக்கு சாம்பாஜி அன்று. மாறாக, இந்துராஜ்ஜியத்துக்குக் கப்பம் கட்டி வந்த பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானியங்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்வது.
இந்துஸ்தானின் தென்பகுதி அவ்வப்போது மொகலாயருக்கு கப்பம் கட்டுவதும் பின் விடுபடுவதுமாக இருந்தது. மொகலாயம் எழும்பும் முன் 1400களில் இங்கு முகமது பின் துக்ளக் பெரும் சாம்ராஜ்ஜியம் வைத்திருந்தான். டெல்லியில் இருந்து மதுரை வரை அவன் ஆட்சி இருந்தது. இடையில் தலைநகரைத் தேவகிரி எனும் தௌதலாபாத்துக்கு மாற்றியவன் அவனே.
அவனுக்குப் பின் அவன் ராஜ்ஜியம் சிதறித் தெற்கே பாமினி என்பவன் பெரும் அரசை அமைத்துக் கொண்டான், அந்தப் பாமினி சுல்தானை எதிர்த்துத்தான் விஜயநகர இந்து அரசு எழும்பிற்று. பின், பாமினி சுல்தானியம் ஐந்து துண்டாக உடைந்துபோனாலும் பிஜப்பூர், கோல்கொண்டா என இரு பெரிய சுல்தானியமாக தெற்கே 1500களில் இருந்து வந்தது.
மொகலாயம் எழுந்தபோது இவை சிலநேரம் கப்பம் கட்டும். பின், மொகலாயத்தில் குழப்பம் வந்தால் கட்டாது, ஷாஜஹான் காலத்தில் மொகலாய இளவரசனாக இருந்த ஔரங்கசீப் இப்பக்கமெல்லாம் வந்து அடக்கி இந்தச் சுல்தானியங்களைத் தனக்குக் கப்பம் கட்டும்படி வைத்திருந்தான், துக்ளக்கின் சாயலில் அவனும் தெற்கே ஔரங்கபாத்தை தன் தலைநகராகக் கொண்டிருந்தான்.
ஆனால், அவன் டெல்லிக்குத் திரும்பிப் போர்கள் பல செய்து சிக்கிக்கொண்டபோது வீரசிவாஜி இவைகளை வென்று தன் அரசோடு இணைத்து வைத்திருந்தான், இவைகள் அவனுக்குக் கப்பம் கட்டின. இப்போது சாம்பாஜிக்குக் கட்டிக் கொண்டு இருக்கின்றன.
ஔரங்கசீப்பின் திட்டம் இந்தச் சுல்தானியங்களைக் கைப்பற்றி தன்னோடு இணைத்துக் கொள்வதாக இருந்தது. முன்பே அவன் பிஜப்பூர் சுல்தானியத்துடன் மண உறவு கொண்டிருந்தான், கோல்கொண்டாவுடனும் அவனுக்குத் தொடர்பு இருந்தது. ஆனால், அவைகள் ஔரங்கசீப்பிடம் இருந்து விலகியே இருந்தன.
அவை இஸ்லாமிய சுல்தானியம் என்றாலும் இந்துக்களை எதிர்த்து ஆளவிரும்பவில்லை. இதனால் ஔரங்கசீப்பின் ஜிசியா வரி போன்றவற்றுக்கு இதர இந்து துவேஷங்களுக்கு இங்கு இடமில்லை எனச் சொல்லிவிட்டன, கப்பத்தைச் சாம்பாஜிக்குச் செலுத்திக் கொண்டிருந்தன.
ஒரே இந்தியா மிகப்பெரிய இஸ்லாமிய இந்தியா எனும் கனவில் இருந்த ஔரங்கசீப் தெற்கே முதலில் இந்த இரு சுல்தானியகளைப் பிடிக்க எண்ணினான். அப்படிப் பிடித்தால் அடுத்து எஞ்சியிருப்பது மதுரை நாயக்க அரசும், தஞ்சாவூரும், மலையாளிகளின் தேசம் மட்டுமே. மற்ற எல்லாத் தென்னக பகுதியும் அவனுடையதாகிவிடும்.
இந்த நோக்கில் இவைகளைக் குறிவைத்தான் ஆனால், உடனே படைநடத்தவில்லை. காரணம், இவைகளைத் தொட்டால் சாம்பாஜி உதவிக்கு வருவான் என அவனுக்குத் தெரியும், கப்பம் வாங்குபவனே அவர்களைக் காக்கவும் கடமைப்பட்டவன்.
ஒரு அரசன் தன் மனதில் உள்ளதை வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாகக் காய்களை நகர்த்த வேண்டும் என்பது விதி, அதன்படி பிஜப்பூர் கோல்கொண்டா ஆக்கிரமிப்பைப் பற்றி வெளியில் தெரிவிக்காத அவன் சாம்பாஜியினை முடக்கி வைக்க ஏதும் செய்யமுடியுமா என்பது போல் அவையில் விவாதித்தான்.
கான் ஜஹான் எனும் அவன் தளபதி எழுந்து சொன்னான், “ஆலம்கீர், சாம்பாஜியினைத் தரையில் கூட முடக்கலாம், ஆனால் மலையில் அவனை வெல்வது கடினம், சிவாஜி அவர்களுக்கு அப்படி மறைந்திருந்து தாக்கும் வித்தைகள் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்து பெரும் நுணுக்கமான படையினை அமைத்துச் சென்றுவிட்டான்.
அவர்கள் கோட்டைகளெல்லாம் ஆபத்தான மலை உச்சியில் இருப்பவை, அவற்றைப் பிடிப்பது கடினம் என்றாலும் மன்னர் உத்தரவிட்டால் முயற்சிக்கலாம்” என்றான்.
ஔரங்கசீப் தன் விரிந்த தலையினைச் சரிசெய்தபடி சொன்னான், “சாம்பாஜி மேல் நாம் பலமுனை தாக்குதலைத் தொடுத்துள்ளோம் , இன்னும் இன்னும் அழுத்தமான தாக்குதலைத் தொடுத்து அவனை மலையோடு முடக்கி வேறு இடத்துக்கு வரமுடியாதபடி ஒரு அச்சம் கொடுக்க வேண்டும்.
நமது இலக்கு அவன் தலைமை கோட்டையினைப் பிடிப்பதன்று. மாறாக, அதனைப் பிடிக்க நம்மால் முடியும் என்பதைக் காட்டி அவனை அச்சுறுத்தி நம் வழியில் வராதபடி செய்வது, அப்படி அவனை முதலில் சாஹித்ரி மலையோடு முடக்குவோம், பின் மெல்ல மெல்ல அவன் அடங்குவான். ஒரு நாள் பாய்ந்து பிடிக்கலாம்” என வியூகத்தைச் சொன்னான்.
கான் ஜஹானுக்கு அது மிகப்பெரிய சவால் எனத் தெரியும், தெரிந்தும் ஔரங்கசீப் கட்டளை இட்டதால் பணிந்து திட்டத்தை விவரித்தான்.
அதன்படி இரு வழிகளில் சாம்பாஜியின் தலைமை கோட்டையான ராய்காட்டினைக் கைப்பற்றும் வியூகத்தைச் சொன்னான். ஒருவழி ராம்காட் கணவாய் வழியாக ஷா ஆலம் தலைமையில் ஒரு படை செல்வது.
இன்னொரு படை ஷாபுதீன்கான் தலைமையில் மாஜா கணவாய் வழியே செல்வது. இப்படி இருமுனையில் சாம்பாஜியினை இழுத்து இன்னும் சில வழிகளில் கொஞ்சம் படைகளை அனுப்பி சாம்பாஜி கவனத்தைத் திருப்பிச் சிதறடித்துக் கோட்டையினைக் கைப்பற்றும் வியூகத்தைச் சொன்னான்.
அதைக் கூர்ந்து கவனித்த ஔரங்கசீப் சில திருத்தங்களைச் சொன்னான், அதை ஏற்றுகொண்டான் கான் ஜஹான். அதாவது, இந்துராஜ்ஜியத்தின் தந்திரங்களில் ஒன்று கணவாய்க்குள் வரும் சேனையினை மிக இடுக்கமான மலைபாதையில் முன்னும் பின்னுமாக மறைந்து கொல்வது. இப்படிச் சிலமுறை மொகலாயப் படை மொத்தமாக சிக்கிற்று, இதனை முறியடிக்க மொகலாயப் படை உரிய இடைவெளிவிட்டு கட்டம் கட்டமாக செல்லவேண்டும். ஒருவேளை சாம்பாஜி படை வந்து அப்படி மறித்தால் அவர்கள் தங்கள் படைக்குள் சிக்குவார்கள் என ஆலோசனை சொன்னான்.
பெரும் படை திரண்டது. ஔரங்கசீப் உத்தரவு கொடுக்க ஷா ஆலமுக்கும் அவனோடு இருந்த ஏகப்பட்ட உபதளபதிகளுக்கும் உத்தரவு பறந்தது, கான் ஜஹானும் தயாரானான்.
துப்பாக்கி வெடிகுண்டோடு பெரிய படைகள், யானைகள், குதிரைகள், பாரம் இழுக்கும் எருதுகள், சமையல்காரர்கள் எனவும், காடுகளில் பாதை உண்டாக்கிக் கொடுக்கும் படையும் மருத்துவர்களுமாக இரு பிரிவுகள் தயாராயின.
1684 ஆம் ஆண்டு, பிப்ர்வரி மாத அண்மையில் ராம்காட் பக்கமாக முன்னேறினான் ஷா ஆலம், அவன் தன் தளபதியும் உறவுமான முய்சுதீன் என்பவனுடன் சுமார் 50 ஆயிரம் பேர் கொண்ட தாக்குதல் படையுடனும், 100 யானைகள், இரண்டாயிரம் குதிரைகள், உப படையுடனும் அம்பாதாரி காட் பகுதி வழியாக வங்குர்லா பக்கம் வந்தான்.
சாம்பாஜி அவன் வரும் செய்தி அறிந்து அப்பக்கம் முகாமிட்டிருந்த முகமது அக்பருக்கு தாக்குதல் ஏதும் செய்யாமல் திரும்பி வரச் சொன்னான், காரணம் அவன் வியூகம் உள்ளே இழுத்து அடிப்பதாய் இருந்தது.
இன்னொரு பக்கம் ஷாபுதீன் மாஜா கணவாய் வழியாக சுமார் 20 யானைகள், ஆயிரம் குதிரைகள், 40 ஆயிரம் பேர் கொண்ட வீரர்கள் எனச் சென்று கொண்டிருந்தான்.
சாம்பாஜி மொகலாயச் சேனை ராய்காட் நோக்கி வருவதை அடுத்து அவசரமாக தன் அவையினைக் கூட்டினான், அவன் முன்னெச்செரிக்கையாக கவி கலாஷை போர்ச்சுகீசியர் எல்லை அருகே நிலை நிறுத்தினான். காரணம், அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும் நம்பமுடியாதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தாக்குபவர்கள்.
இதனால் கவி கலாஷை அங்கு நிறுத்திவிட்டு ஷா ஆலமை சந்திக்க தானும் சாபுதீனை சந்திக்க ஹம்பிராவும் செல்லவேண்டும் என முடிவெடுத்தான், சேனை அப்படியே தயாரானது.
தங்கள் தலைமை கோட்டையான ராய்காட்டையே இலக்கு வைத்துவிட்ட ஔரங்கசீப்பை எண்ணி கடும் கோபத்துடன் கொதித்தபடை ஆயுதமேந்தி பெரும் ஆரவாரம் செய்தது.
“ஜெய் பவானி, ஜெய் சிவாஜி, ஹரஹர மகாதேவா” எனக் கோஷமிட்ட அப்படை இரு பக்கமும் பிரிந்தது, கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் காவலுக்குப் படைகளில் ஒரு பகுதி அங்கு விடப்பட்டு பீரங்கிகளும் தயார் நிலைக்குச் சென்றன.
பெரும் பரபரப்பு ஆரம்பமானது. ஷா ஆலம் வங்குர்லா பக்கம் பெரிய அழிவுகளைச் செய்ய ஆரம்பித்தான். இந்து கோவில்களை உடைப்பது, வயல்களை எரிப்பது என அட்டகாசம் கூடிற்று, அவனின் நோக்கம் சாம்பாஜி படையினை மலையில் இருந்து கீழிறங்கி யுத்தம் செய்ய வைப்பதாக இருந்தது.
ஆனால், சாம்பாஜி அதைச் செய்யவில்லை. அவன் யுத்தத்தை மலைகாட்டுக்குள் இழுக்க விரும்பினான், இந்த அழிவுகளைச் சரிசெய்துவிடலாம் என்பதால் அவன் அடுத்த அடுத்த நகர்வுக்குக் காத்திருந்தான்.
சாம்பாஜி படைகள் மக்களை கால்நடைகளை முன் கூட்டியே வெளியேற்றியிருந்ததால் ஷா ஆலமினால் அங்கு நிலை கொண்டிருக்க முடியவில்லை, அங்கு வெறும் நிலம் மட்டுமே எஞ்சியிருந்ததால் அவன் மேலும் முன்னேறினான்.
பெரிய எதிர்ப்பு எதையும் சாம்பாஜி படை காட்டவில்லை இதனால் அவன் ராய்காட் கோட்டை நோக்கி முன்னேறினான், அவனைச் சில மைல் தூரம் முன்னேறவிட்டது சாம்பாஜி படை.
எதிர்ப்பு ஏதுமில்லை என்பதால் ஷா ஆலம் யோசித்தான், அந்த யோசிப்பே குழப்பமானது. தொடர்ந்து முன்னேறுவதா இல்லை அங்கேயே நிலை கொள்வதா எனத் தவித்தபோது சாம்பாஜி தரப்பு தாக்குதலை ஆரம்பித்தது, வேகமாக வந்த சாம்பாஜியின் குதிரை படை தாக்குதல் செய்வது போல் பாசாங்கு செய்துவிட்டு பின்னால் ஓடியது.
அவர்களை விரட்டித்தாக்க ஷா ஆலமின் படைகள் பின்னால் ஓடின, சாம்பாஜி படைகள் பின்வாங்கி ஓடுவது போல் ஓடின. குறிப்பிட்ட இடத்துக்கு வந்தபின்பு அவை மறைந்தன.
அந்த இடம் பள்ளமும் மேடுமான மலைப்பகுதி. மரங்களும் கற்களும் ஏராளம், அந்த இடுங்கிய மலைப்பகுதியில் வைத்து ஷா ஆலமின் மொகலாயப் படைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது சாம்பாஜி படை.
எங்கிருந்து தாக்குதல் வரும் எனத் தெரியாது. திடீர் என வரும், சுற்றி நின்று அடித்துவிட்டு ஓடிவிடுவார்கள், பகலில் தாக்குவார்கள் இரவில் கடுமையாகத் தாக்குவார்கள், இப்படிச் சுற்றிவளைத்துத் தாக்கி மறைந்து போவார்கள்.
வசமாகச் சிக்கிக் கொண்ட ஷா ஆலமிற்கு தொடர்ந்து உணவோ ஆயுத வழங்கலோ செய்யமுடியாதபடி பெரிய தாக்குதலைப் பின்னால் செய்த சாம்பாஜி படை அவனை மற்றவர்களுடன் துண்டித்தது. ஒருவித முற்றுகையில் அவன் சிக்கிக் கொண்டான்.
ஷா ஆலம் ஆபத்தில் சிக்கினான் என்பதை அறிந்த கான் ஜஹான் பெரிய படையோடு புறப்பட்டு போனான். தன் மகன் அங்கே சிக்கிக் கொண்டதை அறிந்து நொந்த ஔரங்கசீப் அவனை வேகமாக அனுப்பினான்.
கான் ஜஹான் உணவுப் பொருட்கள் ஆயுதங்களுடன் 1684ல் ஏப்ரல் மாதம் சமீபமாக அங்குச் சென்றான். சாம்பாஜி வீரர்களைத் தாண்டி சென்று ஷா ஆலமுடன் சேர்ந்து கொண்டான்.
இப்போது ஒரு பக்கம் ஷாபுதீன் பாய இன்னொரு பக்கம் கான் ஜஹானும், ஷா ஆலமும் தீவிரமாகப் போரைத் தொடங்கினார்கள். சாம்பாஜி நேரில் வந்து போரை நடத்தினான், சிவாஜி கற்றுக்கொடுத்த அந்த யுத்த வித்தை அவனுக்கு இயல்பாய் வந்தது.
காட்டின் பாதைகளை மாற்றிவிடுவது, மிக ஆபத்தான இடங்களுக்குப் போக்குக் காட்டி மொகலாயப் படைகளை அழைத்துச் செல்வது, நீர் இல்லா இடத்தில் தவிக்கவிடுவது, மலைப்பாங்கான இடத்தில் இழுத்துச் சென்று வதைப்பது என அவர்களைச் சிதறடித்தார்கள்.
அட்டைகள் விஷ ஜந்துக்கள் ஒருபுறம், காட்டு விலங்குகள் ஒரு புறம் எனத் தவித்த மொகலாயப்படை சாம்பாஜியின் நுணுக்கமான தாக்குதலில் சிதறியது.
எவ்வளவுக்குச் சாம்பாஜி சவால் எடுத்தான் என்றால் ராய்காட் கோட்டையினைக் கண்ணால் மொகலாயப்படை காணும்வரை அவர்களை முன்னேறவிட்டு பின் வளைத்துப்போட்டு அடித்தான்.
அணைகட்டுகளைத் திறந்துவிடுவது, பெரும் பாறைகளை உருட்டிவிடுவது எனப் பல வழிகளில் மொகலாயச் சேனை அடிக்கு மேல் அடிவாங்கியது.
ஷா ஆலமும், கான் ஜஹானும் அங்கே திணறினார்கள். சாம்பாஜி நேரிலே களமிறங்கி பெரும் யுத்தம் செய்து கொண்டிருந்தான். முன் அனுபவமில்லாத அந்த மலையின் காடுகளில் வகையாக சிக்கியது மொகலாயப்படை. சுற்றி வளைத்து தாக்குதல், எங்காவது இழுத்துச் சென்று பொறிக்குள் உள்ளே வைத்து அடித்தல் என கான் ஜஹானும், ஷா ஆலமும் திணறினார்கள்.
இதனைக் கண்ட மொகலாயப்படையின் இன்னொரு பிரிவு மாஜா கணவாய் வழியாக ஷாபுதின் தலைமையில் முன்னேறிற்று. வேகமாக அது ராய்காட் கோட்டை நோக்கி நகர்ந்தது, அவர்கள் மேல் விழுந்து தாக்கினான். ஹம்பிராவ் மோடி, அவனின் அபாரமான தாக்குதல் முன் அந்தச் சேனை சிதறிப்போனது.
ஔரங்சீப்பின் உத்தரவுப்படி மொகலாயச் சேனை கட்டம் கட்டமாகவே சென்றது. முன்னால் வந்த சேனைகளை நசுக்கிப் போட்ட ஹம்பிராவ் பின் ரகசிய வழிகளில் முன்னேற்றி ஷாபுதீனை பஞ்சாடி அருகே எதிர்கொண்டான். அங்கும் மொகலாயச் சேனை பெரிய அடிவாங்கவே தற்காலிகமாகப் பட்டாடி பக்கம் அவன் நிலைகொண்டான்.
ஹம்பிராவ் மோதி தன் பிரசித்தியான “பட்டாடி யுத்தம்” எனும் பெரும் யுத்தத்தை அங்கே நடத்தினான். ஒரு பக்கம் இந்துசேனை படை நேரடியாக நின்று அம்புகளும் ஈட்டியும் வீசிப் பாதுகாப்பான தொலைவில் இருந்து கொள்ள, இன்னொருபுறம் அருகில் மறைந்திருந்து தாக்கத் தொடங்கின இந்து சேனைகள்.
அந்த எதிர்பாரா தாக்குதலில் நிலை குலைந்தான் ஷாபுதீன் கான். இன்னொரு பக்கம் மொகலாய ஆயுத முகாம்கள் கொள்ளையிடப்பட்டன. அவர்களின் வெடிமருந்து துப்பாக்கி இன்னும் பல ஆயுதங்கள் அள்ளிச் செல்லப்பட்டன, சில முகாம்கள் தீவைக்கப்பட்டன.
ஒரு வகையான எண்ணெயில் தீ வைத்து எய்யப்பட்ட அம்புகள் மொகலாயருக்குப் பெரும் சேதம் கொடுத்தன, அவர்களின் குதிரைகள், எருதுகள் யானைகளெல்லாம் கலைந்தோடின.
பெரிய அழிவுகள், ஆயுத தட்டுப்பாடு, உணவு மற்றும் குடிநீர் இல்லாத நிலை என ஷாபுதீன் கானும் சிக்கிக் கொண்டான். ராய்காட் கோட்டையினைக் கைப்பற்ற வந்த இரு பிரிவுகளுமே முறியடிக்கப்பட்டன.
கொங்கன் பிரதேசத்தின் சாஹித்ரி மலையில் கால்வைத்த மொகலாயப்படை அப்படிப் பெரும் அடிவாங்கிக் கிடந்தது. சுமார் 60 ஆயிரம் வீரர்கள் இறந்திருந்தார்கள், பெரிய அளவில் பொருள் செலவு ஏற்பட்டது, குதிரைகள் ஒட்டகம் எருதுகள் யானைகள் எனப் பல சாம்பாஜி தரப்பால் அள்ளிச் செல்லப்பட்டன.
அதுவரை ஔரங்கசீப் அடைந்த தோல்விகளில் அது மிகப்பெரியதாக இருந்தது. அம்மலையின் அமைப்பும் அங்கு ஒவ்வொரு கல்லையும் ஆற்றையும் மரத்தையும் கணவாயினையும் போருக்கு உகந்த ஆயுதமாக மாற்றி பெரும் வெற்றிப் பெற்றது சாம்பாஜி படை.
கடும் தோல்வியுடன் மொகலாயத் தரப்பு தொங்கிப்போன முகத்துடன் திரும்பிற்று. மொகலாயத் தலைமை தளபதி கான் ஜஹான் எனும் பகதூர் கானால் ஷா ஆலம் எனும் ஔரங்கசீப்பின் மகனைக் காக்கமுடிந்ததே அன்றி வெற்றிப்பெறமுடியவில்லை.
ஔரங்கசீப் இந்தப் படுதோல்வியால் கலங்கிப் போனான். அவன் சாம்பாஜியினை மிரட்ட செய்த இந்த யுத்தம் இவ்வளவு பெரிய அழிவினை அவனுக்குக் கொடுக்கும் என அவன் கருதவில்லை, அதனால் மிகுந்த அவமானமும் வேதனையும் கொண்டவன் சில நாட்கள் தனித்திருந்தான், யாரிடமும் எதுவும் அவன் பேசவில்லை.
“ஓ..இறைவா சிவாஜியிடம் இந்தத் தோல்வியினை பெற்றிருந்தால் கூட ஏற்றிருப்பேனே, அவனின் மகன் வெறும் 24 வயது இளைஞனிடம் இப்படி அவமானமடைகின்றேனே” என அவன் கதறிக்கொண்டிருந்தான்.
விரிந்த அவன் தலை அப்படியே கிடந்தது, தன் தலையினைத் தடவியபடி அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும், ஆனால் எந்தச் சூழலிலும் அவன் தன் போரை நிறுத்தியதே இல்லை.
பெரும் அழிவினை அவன் சேனை சந்தித்தாலும் மீண்டும் படைதிரட்ட உத்தரவிட்டான், அவனின் பரந்த அரசின் செல்வமும், கங்கை யமுனை சிந்து கங்கை என எல்லா நதியின் கரைகளும் அவனுக்குக் கொட்டிக் கொடுத்தன. அதற்கு மேல் அவன் ஆட்சிக்கு உட்பட்ட சூரத், கராச்சி, வங்கம் எனத் துறைமுகங்களின் செல்வம் தனிக் கணக்கு.
இதனால் உலகெங்கும் இருந்து அவன் பெரும் சேனைகளைக் குவித்துக் கொண்டே இருந்தான், என்ன அடி வாங்கினாலும் அவனால் சுதாரிக்க முடிந்தது.
இந்து தரப்பு அவனோடு ஒப்பிடும்போது அவ்வளவு பெரிய ராஜ்ஜியம் அன்று, ஆனால், மிகத் திறமையான நிர்வாகம் கிருஷ்ணா துங்கபத்ரா காவேரி என நதிகள் கொடுத்த அரபிக்கடல் துறைமுகம் முதல் தமிழகச் சென்னைப்பட்டணம் போன்ற துறைமுகங்கள் கொடுத்த செல்வம் அவர்களுக்குக் கைகொடுத்தன, நதிகரைத் தவிர ஏரி குளங்களால் விளைந்த செல்வமும் இன்னும் பலவகை வருமானமும் மொகலாயத்துக்கு ஈடான சவாலைக் கொடுத்தது.
1681 முதல் 1684 வரை சம்பாஜியினை எத்தனையோ யுத்தம் செய்தும் அதுவும் பலமுனை யுத்தம் செய்தும் ஔரங்கசீப்பால் அசைக்க முடியவில்லை. இதனால் மிகுந்த அவமானம் அடைந்தவன் சிலநாட்கள் சோர்வுக்குப் பின் எழுந்தான்.
ஒரு அரசனாக சாம்பாஜிக்கும் ஒரு ஓய்வு இப்போது தேவைப்படும் எனக் கருதியவன் அந்த ஓய்வில் என்னென்ன செய்யவேண்டும் என அவசரமாக சிந்தித்தான், தக்காண வரைபடத்தையே மாற்றிப்போடும் அதிபயங்கர வியூகங்கள் அவனுக்குள் வந்திருந்தன.
அப்படியே அவன் போரில் நடந்தது என்ன என விசாரித்தான் அவனிடம் உள்ள வழக்கங்களில் ஒன்று போரில் யார் தீரத்துடன் போரிட்டார்களோ அவர்களுக்குப் பெரும் கௌரவமும் பட்டமும் பரிசும் கொடுத்து கௌரவிப்பது. யார் சொதப்பினார்களோ அவர்களை அவன் கண்டுகொள்ளமாட்டான், யார்மேல் சந்தேகம் வந்ததோ அவர்கள் அதற்குமேல் இருக்கமாட்டார்கள்.
ஔரங்கசீப் சேனைக்கு எல்லா அயலகத்தாரும் சேர்ந்துகொள்ள விரும்புவார்கள். காரணம், நன்றாக போரிட்டால் திறமை இருந்தால் அவன் கொடுக்கும் வெகுமதிபோல் யாராலும் கொடுத்துவிட முடியாது. அந்த அளவு அள்ளி அள்ளி கொடுக்கும் குணம் அவனுடையது, அதுவும் அவையில் அல்லது ராணுவ அணிவகுப்பில் அதைச் செய்யும்போது இதர வீரர்களுக்கும் அந்த இடத்தை பிடிக்க ஆவல் வரும் அவர்களும் மிகுந்து போராடி விருதும் பட்டமும் பெற முயல்வார்கள்.
இப்படி அவன் இந்தப் போர் பற்றி விசாரிக்கும் போது யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு அமைதியானான், அங்குச் சாஹித்ரிய மலை அவ்வளவு கடுமையான காவலைக் கொடுத்திருந்தது.
அவன் மிகத் திறமையான வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தான். அதுபற்றி தன் சேனைக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தான். அப்போது தங்கள் திறனைக் காட்ட பல வீரர்கள் வந்தார்கள், அவர்களில் ஒருவன் நல்ல உயரமாக கம்பீரமாக இருந்தான், அவன் உடல் அமைப்பும் கண்களில் காட்டிய தீர்க்கமும் அவனை வேறுபடுத்திக் காட்டின.
அவனை அழைத்த ஔரங்கசீப் அவன் பெயர் என்ன எனக் கேட்டான்.
“காஸ்ஸி உத்தீன் கான் என்பது என் பெயர், உஸ்பெக்கின் புக்காராவில் பிறந்தவன், தைமூரின் வழிவந்த கூட்டத்தில் ஒருவன், போர்முறை மட்டுமல்ல, சமய கல்வியினையும் உம்மர் அல் சுரவார்டி எனும் சுபி ஞானி வழியில் வழிபடும் இஸ்லாமியன் நான்” என ஔரங்கசீப்புக்கு வணக்கம் சொல்லி தன்னை அறிமுகப்படுத்தினான் அந்த இளைஞன்.
அவனுக்கு அப்போது 30 வயதுக்குள்ளே தான் இருக்கும், ஔரங்கசீப் அவனைச் சோதிக்க விரும்பி தன் கோட்டையின் களத்துக்கு வரச்சொன்னான், அந்த இளைஞனே பின்னாளில் தக்காணத்தை பிடித்துக் கொடுக்க போகின்றவன் என்பது காலத்துக்கு மட்டும் தெரிந்திருந்தது.
(தொடரும்)