சத்ரபதி சாம்பாஜி : 20
சத்ரபதி சாம்பாஜி : 20
தன்முன் நின்ற அந்த வீரனை நோக்கினான் ஔரங்கசீப். நல்ல உயரம், கூர்மையான கண்கள், உடும்பு போன்ற உடற்கட்டு, நீளமான கைகள் என அவன் தோற்றத்திலே ஔரங்கசீப்பைக் கவர்ந்தான். நல்ல வீரன் இன்னொரு போர் வீரனைக் கவர்வான் என்பதால் அவனை எடைபோட்ட ஔரங்கசீப் மேற்கொண்டு சோதனைக்காக மறுநாள் களத்துக்கு அவனைச் சோதிக்கும் பொருட்டு வரச்சொன்னான்.
அவனுக்கு எல்லாப் பரீட்சைகளும் தொடங்கின, அவன் அருகில் ஆயுதங்கள் வைக்கப்பட்டன. அவை மெழுகு நுனியில் வைக்கப்பட்ட போலி ஆயுதங்கள், ஔரங்கசீப் கையசைத்ததும் சோதனை தொடங்கிற்று.
தொலைவில் இருந்து சுமார் 50 குதிரைப் படை வீரர்கள் ஈட்டியோடு பாய்ந்து வந்தார்கள், அவன் அசையாமல் நின்றான். அவர்கள் குறிப்பிட்ட தொலைவு வந்ததும் அவன் வில்லை கையில் எடுத்து அம்புகளை வேகமாக பூட்டி மின்னல் வேகத்தில் பாய்ச்சினான். அவர்கள் அருகில் வரும்போது சிலரே எஞ்சினார்கள் கையில் ஈட்டி எடுத்தவன் குதிரை வீரர்கள் அருகில் வந்ததும் மின்னல் வேகத்தில் ஈட்டினைத் தரையில் ஊன்றிக் குதித்து அவர்களில் ஒருவனைத் தள்ளிவிட்டு அந்தரத்திலே குதிரை லகானை கையில் பிடித்தபடி அமர்ந்தான்.
சட்டென குதிரையினைத் திருப்பியவன் வளைந்து வளைந்து தாக்கினான், அவனின் அந்த அதிரடியில் குதிரைச் சேனை கலகலத்து போயிற்று, அவன் அத்தனைபேரையும் முறியடித்துக் குதிரையில் இருந்து ஔரங்கசீப்பை நோக்கி வணங்கினான்.
ஔரங்கசீப் கையசைக்க மீண்டும் மணி ஒலித்தது. இம்முறை அம்பு எறியும் வீரர்கள் அவனைச் சுற்றிக் கொண்டார்கள், அவன் இரு வாட்களை கையில் ஏந்தி வேகமாகச் சுற்றினான். காற்றுபோல் அவன் சுழன்று சுழன்று சுற்றியதில் ஒரு அம்பு கூட அவன் மேல் படவில்லை, அப்படிச் சுற்றிக் கொண்டே பல்டி அடித்து அவன் வில்லாளிகள் பின்னால் சென்று நின்று முதுகில் வாளை வைத்தான்.
மணி மறுபடி ஒலிக்க பிரம்மாண்ட யானைப்படை ஓடி வந்தது. ஈட்டியினை கையில் எடுத்தவன் அதைக் கவனித்துக் கொண்டே இருந்தான். யானை அருகே வந்ததும், சட்டென யானையின் காலுக்கு இடையே லாவகமாக புகுந்து தப்பியவன், யானையின் வாலைப் பிடித்து அதன் மேலேறி அம்பாரியில் அமர்ந்தபடி பாகன் கழுத்தில் ஈட்டி வைத்தபடி நின்று இரு கைகளையும் மேலே உயர்த்தி ஆர்ப்பரித்தான்.
ஔரங்கசீப் உள்ளே புன்னகைத்தான். இன்னும் பல வகையான சோதனைகள் அவனுக்கு வைக்கப்பட்டபின் உரிய களத்துக்கு அவனை அனுப்பும் வரை முகாமில் தங்கி இருக்கச் செய்தான்.
நல்ல வீரன் கிடைத்த திருப்தி அவனில் தெரிந்தது, ஆனால் அனுதினமும் இப்படி ஏகப்பட்ட வீரர்களைச் சோதிப்பதும் படையில் சேர்ப்பதும் அவனின் அன்றாட பணிகளில் ஒன்று. மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆளும் அவனுக்கு இப்படியான துடிப்பான வீரர்கள் எப்போதும் அவசியம்.
இப்படி ஒரு பக்கம் படைகளைத் திரட்ட உத்தரவிட்டவன் இன்னொரு பக்கம் தன் அடுத்தக்கட்ட நடவடிகையினைத் தொடங்கும் பொருட்டு தன் முதல் அமைச்சர் மீர் காசிம், தலைமை தளபதி பகதூர் கான் உள்ளிட்ட தளபதிகள், மகன் ஆஸம் ஷா என எல்லோரையும் அழைத்து ஆலோசனையினைத் தன் முகாமில் தொடங்கினான்.
ஔரங்கபாத் அருகே இருந்த முகாமில் அந்த ஆலோசனை தொடங்கிற்று, அவன் சுருக்கமாகச் சொன்னான், ‘நாம் பிஜப்பூரை முதலிலும் அடுத்து கோல்கொண்டாவினையும் கைப்பற்ற இருக்கின்றோம், இதற்கான ஆயத்தங்களைச் செய்தாக வேண்டும்”
அதைக் கேட்ட பகதூர்கான் நெற்றிச் சுருக்கினான், இன்னும் பலருக்கு அதே ஆச்சரியம் இருந்தது. கொஞ்சம் ஆச்சரியமாகவே அவனை நோக்கினார்கள்.
என்ன என்பதுபோல் பார்த்தான் ஔரங்கசீப். பகதூர்கான் சொன்னான் “ஆலம்கீர், நீங்கள் அறியாதது ஒன்றுமல்ல. பிஜப்பூரும், கொல்கொண்டாவும் இஸ்லாமிய சுல்தானியம் என்றாலும் அவை இப்போது சாம்பாஜிக்குக் கப்பம் கட்டுபவை, நாம் அவைகள் மேல் கைவைத்தால் சாம்பாஜி பெரும் படையோடு வருவான்.
ஏற்கனவே நாம் அவனால் கடும் சேதத்தில் இருக்கின்றோம், பெரும் தோல்விகளைச் சந்தித்திருக்கின்றோம். இந்நிலையில் மீண்டும் அவனோடு போரிட்டால் பெரும் சேதமே மிஞ்சும், அதைத்தான் யோசிக்கின்றோம்” என்றார்கள்.
அவன் விரிந்த தலையுடன் வழக்கமான மெல்லியப் புன்னகையுடன் பேசினான், “ஆம், அவனால் சேதம் அதிகம் பெற்றுவிட்டோம், பர்கான்பூர் கொள்ளையில் இருந்து இப்போது நாம் இழந்த பல்லாயிரம் வீரர்கள் வரை அவனால் பெரிய பெரிய சேதம் அடைந்துவிட்டோம். நிஜம்.
ஆனால், அதற்காக அவனை அப்படியே விட்டுவிட முடியுமா? அவனும் ஒரு நாட்டின் அரசன், நம்மோடு அவனும் மோதியிருக்கின்றான், அப்படியானால் நமக்கு ஏற்பட்ட செலவும் இழப்பும் அவனுக்கும் ஏற்பட்டிருக்கும். அதை நம் உளவுத்தகவல்களே சொல்கின்றன. பலமுனையில் நாம் அவனைத் தாக்கியதில் அவனும் பெரிய சிக்கலில் இருக்கின்றான்.
அவன் அவனின் தகப்பன் சிவாஜி போல் மலை எலி. சாஹித்திரிய மலையில் அவனோடு போராடமுடியாது என்பதால் அவனைச் சமவெளிக்கு இழுக்க வேண்டும், அதை இங்கே செய்யலாம், அவனால் தரையில் நம்மோடு சரிக்குச் சமம் மோதமுடியாது, மோதினாலும் வெற்றிபெற முடியாது, பலமுனைகளில் அவனைத் தாக்கி வளைத்துவிடலாம்.
பிஜப்பூரைப் பிடிப்பது உடனே நடக்குமா என்பது நிச்சயம் இல்லை, இது காலதாமதமாகும் விஷயம். ஆனால், சாம்பாஜிக்குப் பெரும் நெருக்கடி தரும் விஷயம். ஒன்று அவன் பிஜப்பூரைக் காக்க போராட வரவேண்டும், இல்லை மலையிலே இருந்து கொள்ள வேண்டும், அவன் வராவிட்டால் பிஜப்பூரைக் கைப்பற்றுதல் எளிது, வந்துவிட்டால் அவனை வளைப்பது நம் இலக்கு, எது நடந்தாலும் நமக்கு லாபம்”
அவனை மீர் காசிம் நோக்கினான், அப்பார்வையில் ஏன் பிஜப்பூர் அவசியம் எனும் கேள்வி இருந்தது.
ஔரங்கசீப் சொன்னான், “மீர்காசிம், சக்கரவர்த்திக்கும் சாதாரண அரசனுக்கும் வித்தியாசம் உண்டு. நான் சக்கரவர்த்தி எனக்குக் கப்பம் கட்டும் மன்னர்கள் ஏராளம் உண்டு, சாம்பாஜியும் இந்துக்களின் சக்கரவர்த்தி, சிவாஜி அவனுக்கு அப்படி ஒரு அரசை உருவாக்கிவிட்டு சென்றுவிட்டான், அவனுக்குப் பிஜப்பூரும், கோல்கொண்டாவும் கப்பம் கட்டுகின்றன.
அவற்றை அடித்து நம்மோடு சேர்த்துக் கொண்டால் அவனுக்கு வருமானம் குறையும், நமக்கு அதிகரிக்கும். அப்படியே தெற்கு நோக்கிச் செல்ல அது வழிவகுக்கும், குமரி முனை வரை நம் ராஜ்ஜியம் வளரும். காஷ்மீரம் முதல் குமரி கடல் வரை பூரண இஸ்லாமிய ராஜ்ஜியம் அமைக்க இதுதான் வழி, நிச்சயம் வென்றுவிடலாம்”
ஆஸம் ஷா எல்லாம் கவனமாகக் கேட்டுக் சொன்னான், “பிஜப்பூரை நாம் தாக்கும்போது சாம்பாஜி வந்தால் அவனைச் சமவெளியில் சந்திக்கலாம், ஆனால் ஒருவேளை பிஜப்பூர், கோல்கொண்டா என எல்லோரும் இணைந்து நம்மைச் சூழ்ந்து கொண்டால் என்ன செய்வது, நாம் நிறைய திணற வேண்டியிருக்கும், ஏற்கனவே அந்தத் துர்க்காதாஸுடன் இணைந்து முகமது அக்பர் டெல்லியினைக் கைப்பற்ற முயற்சிக்கின்றான், நாம் இங்கே சிக்கிக் கொண்டால் அந்த ஆபத்தும் வரும்”
ஔரங்கசீப் புன்னகைத்தபடி சொன்னான், “என் மகனே, நீ என்னைப் போலவே சிந்திக்கின்றாய். ஆனால், அங்கு இருப்பது சாம்பாஜி, அவன் தகப்பனை போல் சிந்திப்பவன் அல்ல, அவனைக் குழப்ப சிலபல காரியங்களை விதைத்திருக்கின்றேன், பொறுத்திருந்து பார் அவன் இம்முறை குழம்பிப் போவான், நீ யுத்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்” என்றான்.
அவர்கள் விடைபெற்று சென்றபின் ஔரங்கசீப் தன் தலைமை முல்லாவுக்குக் கடிதம் எழுதினான், “உலேமா அவர்களே, நான் பிஜப்பூர் சுல்தானியத்தைப் பிடிக்கக் கிளம்புகின்றேன், அதை அடுத்துக் கோல்கொண்டாவினைத் தாக்க இருக்கின்றேன், எல்லாம் நல்லபடியாக முடிந்து, நான் ‘டார் உல் இஸ்லாம்” எனும் பரிபூரண இஸ்லாமிய இந்துஸ்தானின் சுல்தானாக ஆள என எனக்கு அருள்புரியுங்கள்.
முல்லா! நீங்கள் அறியாதது அல்ல. இங்குப் பாரசீக சுல்தான், துருக்கி சுல்தான், உஸ்பெக் சுல்தானை விட பெரும் மனித வளமும் பொருள் வளமும் செல்வமும் படையும் கொண்டவன் நான், அவர்களை விட எல்லா வகையிலும் மேலானவன் நான்.
ஆனால், அவர்கள் என்னை இழித்துச் சுட்டிக்காட்டும் விஷயம் நாங்களெல்லாம் இதர மதத்தவரை ஒடுக்கிப் பரிபூரண இந்துராஜ்ஜியம் அமைத்துவிட்டோம், இவன் இன்னும் இந்துக்களை அடக்காமல் தோற்றுக் கொண்டே இருகின்றான் என்பது. இந்த இழிவினை என்னால் ஏற்க முடியவில்லை, நமது மார்க்கம் சொல்லியபடி அவர்கள் முழுக்க அவர்கள் கடமை செய்து பூரண இஸ்லாமிய சுல்தான்களாக நிற்கின்றார்கள்.
நானோ காபிர்களான இந்துக்களுடன் போராடிக் கொண்டே இருக்கின்றேன். அதுவும் ராஜபுத்திரரை விட இந்தச் சாம்பாஜி என் இஸ்லாமிய சாம்ராஜ்ஜிய கனவுக்குப் பெரும் இடையூறாக இருக்கின்றான், அவனை இம்முறை வீழ்த்தி அவனோடு மொத்தத் தென்னகத்தையும் பிடித்துவிட்டால் என் கனவும் நிறைவேறும், இவனை மட்டும் அகற்றிவிட்டால் போதும் தெற்கே முழுக்க என் ராஜ்ஜியம் வரும். அதனைப் பூரண இஸ்லாமியமாக தென்முனை வரை மாற்றுவேன், “டார் உல் இஸ்லாம்” எனும் பெரும் இஸ்லாமிய பூமியினை அமைக்க கிளம்பும் என்னை அல்லாஹ் ஆசீர்வதிக்கும்படி பிரார்த்தித்து ஆசி வழங்குங்கள்”
அந்த உலேமா சபையின் தலைவரான முல்லாவும் அவனுக்குப் பெரும் ஆசீர்வாதம் செய்து கடிதம் எழுதினார்.
“ஆலம்கீர், நீ தேர்ந்தெடுக்கபட்டவன், முழுப் பரிபூரண இஸ்லாமிய தேசத்தை நீ அமைப்பாய், அதுவும் ஷியாக்களான அந்தப் பிஜப்பூர் கோல்கொண்டா சுல்தானியங்களை சன்னி இஸ்லாமியனான நீ பிடித்து சன்னி இஸ்லாமியத்தைப் பரப்புவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்”
ஔரங்கசீப் தலைமை குருவின் ஆசி கிடைத்தவுடன் மெக்கா நோக்கி வணங்கிவிட்டு மிகப்பெரிய நடவடிக்கைக்குத் தயாரானான்.
அதே நேரம் சாம்பாஜி அரசில் பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அது இந்து அரசின் இஸ்லாமியர்கள் மேல் ஏற்பட்ட சந்தேகம். அதைத் துவக்கி வைத்தவன் அந்தக் கவி கலாஷ், அவனுக்குக் கிடைத்த விஷயம் சாம்பாஜிக்கு விஷமிட்டதிலும் துரோகம் இழைப்பதிலும் அவர்களும் இருக்கலாம் என்பது.
இதுதான் சாம்பாஜிக்கு எதிரான மிகப்பெரிய விஷயமாகப் பின்னாளில் முடிந்துபோனது. அந்தச் சந்தேகம் வந்தவுடன் சிவாஜி அரசின் பழைய ஆட்களான நட்டாஜி பால்கர் முதலான பலர் பெரும் எதிர்ப்பு காட்டினார்கள். 1685 துவக்கத்தில் அந்தப் பெரும் பரபரப்பு ராய்காட் கோட்டையினை ஆட்டிவைத்தது.
அவை கூடியிருந்தது. எல்லோர் முகத்திலும் பெரும் கவலையும் சோகமும் இருந்தது. சாம்பாஜி குழம்பிப் போய் இருந்தான். ஏதும் நடக்காதது போல் இயல்பாய் இருந்த கவி கலாஷ் சொன்னான்.
“இங்கு எதுவும் புதிதாக நடந்துவிடவில்லை. மன்னரைக் கொல்ல நினைத்த சதிகாரர்களை எப்படிக் கண்டுபிடித்துத் தண்டித்தோமோ அப்படிச் சந்தேகம் கொண்டிருப்பவர்களையும் கொன்றோம். இதில் என்ன விதிமீறல் இருக்கின்றது?”
நட்டாஜி பால்கர் சொன்னான், ” கலாஷ், நீர் இங்குப் புதியவர். நாங்கள் சிவாஜி மன்னரோடு நின்று ஒவ்வொரு அடி நிலமாக போராடிக் கைப்பற்றி இந்த மாபெரும் இந்துராஜ்ஜியத்தை அமைத்திருக்கின்றோம்.
ஒதுங்க ஒரு அடி நிலமில்லாமல் நின்றவர்கள் நாங்கள். இந்து என்பதால் அவ்வளவு ஒடுக்கப்பட்டோம். அந்த அடிமைத்தளையில் இருந்து சிவாஜி மன்னரின் சாதுர்யத்தால் மீண்டோம். இங்கு ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியம், சிவாஜி மன்னர் போஸ்லே எனும் சிறிய சமூகத்தைச் சார்ந்தவர், அவருக்கு சமூகபலம் சாதிபலம் இல்லை.
அவர் எல்லா இனத்திலும் திருமணம் செய்தார். எல்லோருடனும் உறவு பாராட்டினார். எல்லாச் சாதியினையும் இனத்தையும் சேர்த்துக் கொண்டார், அவர் இஸ்லாமியரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார், அவரைப் பொறுத்தவரை எங்கிருந்தோ இங்கு வந்து அடியாளாக, கூலிப்படையாக, வியாபாரிகளாக இஸ்லாமிய மக்கள் வந்துவிட்டார்கள், அவர்கள் இந்துகளின் தலைமையில் இங்கு வாழ்வதில் அவருக்குத் தயக்கமே இல்லை.
சிவாஜி மன்னர் விரும்பியதெல்லாம் இந்துக்களுக்கான ஒரு அரசு, அந்த அரசில் இஸ்லாமியர் எல்லாச் சலுகையும் பெற்று வாழட்டும் என்பதாகவே இருந்தது, இதனாலே நம் படையில் இஸ்லாமியர் இணைந்தார்கள், கிறிஸ்தவர்களும் இணைந்தார்கள்.
இங்கு நாம் சிறிய கூட்டம், பெரிய மொகலாயச் சேனையினை எதிர்க்க சில விட்டுகொடுத்தல்களும் இணக்கமும் அவசியம், அதைச் சிவாஜி மன்னர் செய்ததாலே இந்த இந்துராஜ்ஜியம் எழுந்தது. ஆனால், நீங்களோ எல்லோர் மேலும் சந்தேகம் கொண்டு திரிகின்றீர்கள், முதலில் சோயுர்பாய் தரப்பைச் சந்தேகப்பட்டு கொன்றீர்கள், ஷிர்க் இனத்தவர்களை ஒதுக்கி வைத்தீர்கள்.
இப்போது நம்மோடு இருக்கும் இஸ்லாமியரைச் சந்தேகிகின்றீர்கள், இது எப்படி சரியாகும்? ஒரு அரசன் யார் மேலாவது சந்தேகமிருந்தால் ரகசியமாக விசாரித்து இம்மாதிரி விஷயங்களில் யாரும் அறியாமல் தண்டனை கொடுத்து வேரினை வெட்ட வேண்டும். அது ராஜநீதி.
ஆனால், நீங்களோ ஒரு சிறிய சந்தேகத்தையும் பெரிய காரணமாக்கி அதைக் கொண்டு இந்த ராஜ்ஜியத்தில் பிளவினைச் செய்கின்றீர்கள். இது இங்குப் பெரும் குழப்பம் தரும். நமக்குள் பிளவு என்பது ஔரங்கசீப்புக்கே சாதகமாகும்”
இன்னும் உரிமையில் ஓங்கிப் பேசினான் பால்கர், “சாம்பாஜி, நீ நான் பார்க்க வளர்ந்தவன், என் தங்கையினை சிவாஜி மன்னர் மணந்தவர் எனும் வகையிலும் சிவாஜி மன்னரோடு நின்று போரிட்டவன் எனும் முறையிலும் எனக்கும் இங்கு உரிமை உண்டு.
ஔரங்கசீப் என்னைக் கடத்தி இஸ்லாமியனாக மாற்றி லாகூரில் வைத்தபோது தப்பி வந்தவன் நான், என்னை மீண்டும் இந்துவாக ஏற்க எல்லோரும் தயங்கியபோது உன் பாட்டி ஜீஜாபாய்தான் தாய்மதம் சேர்பித்தாள்.
எதிரிப்படையிடம் இருந்து தப்பி வந்தவனை நம்பக் கூடாது, அவன் உளவாளியாக இருக்கலாம் எனும் சந்தேகம் அரசனுக்கு வரவேண்டும், அப்படி என்னையும் மீளச் சேர்க்கக் கூடாது எனக் குரல்கள் வந்தபோது சிவாஜி மன்னர் என்னைச் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு சேர்த்துக் கொண்டார், அவரின் வெற்றிக்கெல்லாம் இந்த அணுகுமுறையே காரணம்.
நீர் இதை மாற்றுகின்றீர், இது சரியல்ல. இங்கு ஒவ்வொருவரும் நமக்கு அவசியம், ஔரங்கசீப்போ நேரடியாக வந்து வெறிகொண்ட சிங்கம்போல் காத்திருக்கின்றான், இந்நேரம் நமக்குள் இப்படி பிளவு அவசியமல்ல, இதை நிறுத்த வேண்டும்” என்றான்.
ஆனால், கவிகலாஷ் விடுவதாக இல்லை. “நீங்கள் சொல்லும் வாதமெல்லாம் சரி, அது பழையகதை, ஆனால் நடக்கும் காலம் வேறு, எல்லோர்க்கும் லஞ்சமும் கையூட்டும் கொடுத்து வளைத்துப்போடும் மொகலாயர்கள் இங்கும் வளைத்திருக்கலாம், நாம் ஆபத்தினை முந்திக்கொண்டு அகற்ற வேண்டும், அதனால் இஸ்லாமியரையும் இந்துக்கள் சிலரையும் தள்ளிவைத்தேன், இது குற்றமாகாது.
நான் நம் அரசரை காக்கவே இதைச் செய்தேன், இதில் என்ன வந்தாலும் சமாளிக்கலாம்” என்றான்.
ஹம்பிராவ் மோடி அதனை மறுத்தான், “நாம் பரிபூரண இந்துநாடு. ஆனால், நிச்சயம் இஸ்லாமிய தளபதிகளும் வேண்டும், அதுதான் மொகலாயர் போன்ற இஸ்லாமியரோடு மூர்க்கமாக போர்புரிய வழியாகும், பரிபூரண இஸ்லாமியம் எனப் பேசும் ஔரங்கசீப் இந்து தளபதிகளைக் கொண்டிருக்கின்றானே ஏன்? எவ்வளவோ ஆபத்துகள் அவனைச் சூழ்ந்தபோதும் இந்து தளபதிகளை ரகசியமாக கையாண்டு ஒழிப்பானே தவிர முற்றிலும் விலக்கமாட்டான்.
காரணம் இந்துக்களை எதிர்கொள்ள இந்து தளபதிகள் அவனுக்கு அவசியம், அப்படி ஆப்கானிய கும்பலை எதிர்கொள்ள ஆப்கானிய தளபதிகள் அவசியம், அதனால் இங்குக் குழப்பம் வேண்டாம்” என்றான்.
சாம்பாஜி தடுமாறினான். அவனால் மூத்தவர்களைப் பகைக்க முடியவில்லை அதே நேரம் நண்பனான கவி கலாஷையும் பகைக்க முடியவில்லை, எனினும் அவன் கலாஷ் பக்கமே சாய்ந்தான்.
அதிர்ந்துபோன விஸ்வநாத் தன் அனுபவத்தில் சொன்னான், “சாம்பாஜி, நீ நல்ல வீரன். ஆனால், நல்ல அரசன் அல்ல, உன் முடிவினைப் பரீசிலனைச் செய்”
சாம்பாஜி இன்னும் குழம்பினான். அவனுக்கு என்ன செய்யவேண்டும் எனத் தெரியவில்லை, அந்தக் குழப்பத்தைக் கலாஷ் பயன்படுத்திக் கொண்டான், அதிகாரத்தை அவன் எடுத்துக் கொண்டான்.
அவன் காசியில் வளர்ந்தவன், காசி விஸ்வநாதர் ஆலயம் மேல் ஔரங்கசீப் கட்டிய பள்ளிவாசலையும் அப்போது கொல்லப்பட்ட இந்துக்களையும் கண்டு அழுது அழுது வளர்ந்தவன். காசியினை இஸ்லாமிய சேனை ஆக்கிரமித்து அலங்கோலப்படுத்திய அத்தனையும் கண்டு வளர்ந்தவன், அவனால் ஆப்கானிய இஸ்லாமியரை ஒருபோதும் நம்பமுடிவதில்லை. உள்ளுக்குள் ஒரு வன்மமும் அச்சமும் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால், தெற்கில் நிலைமை அப்படி அன்று. இங்கு மாலிக்காபூர் காலம் துக்ளக் காலம் தாண்டிய அதாவது சாம்பாஜிக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே அக்கொடுமை நாயக்கர்களால் முறியடிக்கப்பட்டது. பின்னாளில், பாமினி சுல்தான்களான பிஜப்பூர் கும்பலாலும் ஔரங்கசீப் அளவு செல்லமுடியவில்லை, அவர்கள் இந்துக்கள் பெரும்பான்மையான இங்கு வேறுமாதிரியான இந்து சுரண்டலைச் செய்தார்கள்.
சிவாஜி அதை அறிந்து அவர்களைக் குலைத்துப்போட்டு இந்துராஜ்ஜியம் அமைத்துக் கொண்டான், இஸ்லாமிய சுல்தான்களை வெல்ல இஸ்லாமியரையும் சேர்த்துக் கொண்டு ஆனால் சரியாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
கவி கலாஷின் அனுபவம் வேறு, தெற்கே இருக்கும் இந்துராஜ்ஜிய அனுபவம் வேறு. இங்குப் பல காரணங்களுக்காக இஸ்லாமிய தளபதிகள் அவசியம் எனும் நிலை இருந்தது, மொகலாயத்தை எதிர்க்க அது அவசியமானது என்பதை அவன் ஏற்கத் தயாராக இல்லை.
இந்தக் குழப்பத்தால் சாம்பாஜி சேனையின் இஸ்லாமிய தளபதிகள் பலர் வருத்தத்துடன் விலகினார்கள். கடற்படை தளபதி தௌலத்கான் முதல் பலர் விலகினார்கள். முக்கியத் தளபதி குவாசி ஹைதர் என்பவன் இரண்டாயிரம் வீரர்களோடு ஔரங்கசீப்புடன் சேர்ந்து கொண்டான், இல்லையேல் சந்தேகத்தின் பேரில் கலாஷ் தன்னைக் கொன்றுவிடுவான் என அவன் அஞ்சினான்.
இது சாம்பாஜி ராஜ்ஜியத்தில் பெரும் பரபரப்பைக் கொடுத்தது. முன்னணி தளபதிகளும் பலரும் இதனால் மனமுடைந்து போயினர், கலாஷின் இந்த முடிவு ராஜ்ஜியத்தை ஆபத்தில் தள்ளிவிடுமென எச்சரித்தனர்.
ஆனால், என்ன ஆனாலும் நண்பனை விட்டுக்கொடுக்க முடியாது எனச் சொன்ன சாம்பாஜி இஸ்லாமிய தளபதிகள் நீங்கிய இடத்தில் இந்து தளபதிகளை நியமிக்கச் சொல்லிவிட்டான். பெரிய ஆர்வம் காட்டவில்லை, கலாஷ் அவன் நம்பிக்கையின் உருவமாகவே இருந்தான்.
சிவாஜியிடம் இருந்த சில ராஜதந்திர குணங்கள் சாம்பாஜியிடம் இல்லாமல் போனது கண்டு அவன் அவையின் பெரியோர்களெல்லாம் மனம் வருந்தினார்கள். ஹம்பிராவ் மிகவும் மனமொடிந்து போனான். இதெல்லாம் பெரும் குழப்பத்தில் முடியும் என அவன் மனம் எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால், சொல்லிப் பலனேதுமில்லை.
சாம்பாஜியோ கலாஷ் செய்வதெல்லாம் சரி அவன் ஒருவனே தனக்கான நலன் பற்றி சிந்திப்பவன் என எண்ணிக்கொண்டிருந்தான், அதே நேரம் சாம்பாஜி தரப்பின் நிதி நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் சரிந்திருந்தது, இதுபற்றி அவனது நிதியமைச்சர் ராமசந்திர பந்த் எச்சரித்தார்.
அதாவது, சிவாஜி இருந்தவரை புதுப்புது நிலங்களை, பகுதிகளைக் கைப்பற்றி தன் ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தி கொண்டே இருந்தான். இதனால் நாட்டின் நிர்வாகமும் எல்லைகளும் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆனால், இப்போது நான்காண்டுகளாக சாம்பாஜி புதிய பிரதேசம் எதுவும் கைப்பற்றவில்லை, பெரிய வருமானத்தை ஈட்டும்படி காரியமும் செய்யவில்லை. மாறாக, சிவாஜி விட்டுச்சென்ற அரசின் அச்சே இயங்கிற்று.
அதிலும் நான்காண்டு போர்கள் என்பது சாம்பாஜி அரசையும் பாதித்திருந்தது. பெரிய பாதிப்பில்லை என்றாலும் மொகலாயம் சிங்கமென சுற்றித்திரியும் நேரம் இது போதாது, இதனால் நிதி நிலைமையில் கவனம் செலுத்தும் அவசியம் சாம்பாஜிக்கு வந்தது.
இதையெல்லாம் அவன் கவனித்து ராஜ்ஜியத்தை நடத்தினான். ஒரு பக்கம் உள்நாட்டு சிக்கல்கள், ஒரு பக்கம் எப்போது வேண்டுமானாலும் பாயும் மொகலாய ஆபத்து என அவன் கண்காணித்துக் கொண்டே இருந்தான்.
1685ன் துவக்கம் இப்படி இருக்க ஔரங்கசீப் பெரும் யோசனையில் இருந்தான். பிஜப்பூர் மேல் பாயும் முழுச் சிந்தனையில் இருந்தான், அது ஒன்றும் அவனுக்குப் புதியது அல்ல.
தக்காணம் முழுக்கக் மொகலாய ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது அவனின் பெரிய கனவு, இதற்காகவே தன் 22 வயதில் அவன் தக்காணம் பக்கம் வந்திருந்தான்.
(இதுபற்றி வீரசிவாஜி தொடரில் நிரம்ப சொல்லிவிட்டோம் என்றாலும் ஒரு சுருக்கம் இங்கு அவசியமாகின்றது.)
அவனின் நோக்கம் அப்போதே இந்தப் பாமினி சுல்தான்கள் எனும் தக்காண சுல்தான்களை ஒழித்து மொகலாய ஆட்சியினை நிறுவுவதாக இருந்தது.
பாமினி சுல்தானியம் என்பது முகமது பின் துக்ளக்குக்குப் பின் பாமினி எனும் பாரசீகன் அமைத்த ஷியாக்களின் ராஜ்ஜியம். தென்னிந்தியாவினை அதுதான் ஆண்டது, 14 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் சரியும் போது இவை மிகப் பெரும் ஐந்து ராஜ்ஜியங்களாய் இருந்தன.
அடில்ஷாகி ஆளும் பிஜப்பூர், நிஜாம்ஷாஹி ஆளும் அகமதுநகர், குதுப்ஷாகி ஆளும் கோல்கொண்டா, இமாம் ஷாகி ஆளும் பேரார், பரிட்ஷாஜி ஆளும் பிடார் என ஐந்து சுல்தானியம் இருந்தது. இவை பீமா நதி துவங்கி கிருஷ்ணாநதி பாயும் பகுதிகள் வரை நீண்டிருந்தன. காவேரிக் கரையில் நாயக்க அரசுகள் இருந்தன என்றாலும் பிஜப்பூர் அல்லது கோல்கொண்டா இவர்களிடம் கப்பம் பெற்றுக் கொண்டிருந்தது.
இந்த ஐந்து சுல்தானியங்களில் அகமதுநகர் சுல்தானியத்தில் மாலிக் ஆம்பர் எனும் ஆப்ரிக்கன் புகுந்து திவானாகி அதனை ஆப்ரிக்க காலனியாக, ஆப்ரிக்க சுல்தானியமாக மாற்ற முயன்றபோது குழப்பமாகி அதைப் பிஜப்பூர் தன்னோடு சேர்த்துக் கொண்டது, அப்படியே பிடாரும், பேரார் பகுதிகளும் பிஜப்பூர் கொல்கொண்டாவினால் விழுங்கப்பட்டன.
தக்காணத்தில் 14ஆம், 15ஆம் நூற்றாண்டில் பிஜப்பூரின் அடில் ஷாஹிகளும், கோல்கொண்டாவின் குதுப்ஷாகிகளுமே தக்காணத்தை ஆண்டார்கள், இவர்களிடம் நாயக்கர்கள் கப்பம் கட்டினார்கள். இந்த இருவரில் பிஜப்பூர் சுல்தானியம் பெரிது, அது பீமா நதி தொடங்கி தஞ்சாவூர் வரை நீண்டிருந்தது.
இந்த இரு சுல்தானியங்களும் பலநேரம் மொகலாயத்துக்கு அடங்குவதில்லை. அப்படி ஒருமுறை அடங்கமறுத்தபோது 25 வயது ஔரங்கசீப் ஷாஜகானின் மகனாக வந்திருந்து போர்கள் பல செய்தான், சிவாஜியின் தகப்பன் ஷாஹாஜி அதை முறியடித்துப் போட்டான், அப்போது பல காரணங்களால் இவைகளைக் கைப்பற்றாமல் டெல்லித் திரும்பினான் ஔரங்கசீப். அந்தக் கோபம் இப்போது நிறையப் பெருகியிருந்தது.
மொகலாயம் உட்கட்சி சண்டையிலும் எல்லைச் சண்டையிலும் சிக்கியிருந்தபோது ஔரங்கசீப் தன் தகப்பன் அண்ணனுடன் மோதி பின் எல்லையில் ஆப்கானியருடன் மோதி சிக்கிக் கிடந்தபோதுதான் வீரசிவாஜி எழும்பி பிஜப்பூரை அடக்கி அதில் பாதியினைப் பிடித்து இந்து ராஜ்ஜியம் அமைத்தான். பின் படிப்படியாக பிஜப்பூர் கோல்கொண்டாவின் பல பகுதிகளைப் பிடித்து தமிழகம் வரை பிடித்துப் பெரும் இந்து அரசு அமைத்து ஔரங்கசீப்புக்குச் சவால்விட்டு நின்றான்.
இப்போது சிவாஜி இல்லா நிலையில் சாம்பாஜி ஆட்சி செய்ய அதே ஔரங்கசீப் திரும்பி வந்திருக்கின்றான், ஆனால் பிஜப்பூரும் கோல்கொண்டாவும் மிகவும் சுருங்கிவிட்டன. பெயருக்கே தலைநகரங்கள் இருந்தன. படையும் இருந்தது. பெருவாரி நிலமும் கட்டுப்பாடும் சாம்பாஜியின் இந்து ராஜ்ஜியத்திடமே இருந்தன.
ஔரங்க்சீப் இவற்றின் மேல் வன்மம் கொள்ள பல காரணம் உண்டு. முதலாவது, இவை ஷியா ராஜ்ஜியங்கள். ஔரங்கசீப் சன்னி இஸ்லாமியன். அவனைப் பொறுத்தவரை ஷியாக்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள், முன்பு சில காரணங்களுக்காக அவர்களை விட்டுவைத்திருக்கலாம், இப்போது அவர்கள் சாம்பாஜி பக்கம் என்பதால் இனி விடவே முடியாது.
இரண்டாவது, இவை செல்வம் நிறைந்த பகுதிகள். இந்து ராஜ்ஜியத்துக்குப் பல இடங்கள் சென்றிருந்தபோதும் செல்வம் ஓரளவு இருந்தது, முன்பு உலகின் மிகப்பெரிய பீரங்கி மாலிக், உலகின் பெரிய கூரை கோல்கும்பாஸ் எனப் பிரம்மாண்டம் காட்டிய பிஜப்பூர் இப்போதும் செல்வத்துடனே இருந்தது.
அப்படியே கோல்கொண்டாவின் வைரச்சுரங்கம் முதல் மசூலிப்பட்டினம் வரை அதைத் தாண்டிச் சென்னைப் பட்டினம் வரை பெரிய துறைமுகங்கள் இருந்தன. அவற்றின் மேலும் அவனுக்குக் கண் இருந்தது.
இதனால் பல கணக்குகளை இட்டு இவைகளை முதலில் கைப்பற்றி சாம்பாஜியினைத் தமிழக, தெலுங்கு, கன்னட பிரதேசத்தில் இருந்து துண்டித்து மராட்டிய பகுதிக்குள் முடக்குவது அவன் திட்டமாய் இருந்தது.
இது பெரும் சவால் என்பது அவனுக்குத் தெரியும், அதுவும் பிஜப்பூர் கோட்டை மிக வலுவானது என்பதும் உலகின் பெரிய பீரங்கி உள்பட பலம் அதிகம் என்பதும் தெரியும்.
இதனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உளவுப்படையின் தலைவன் உசேன் வந்தான், அவனிடம் தக்காண நிலமையினை அறிந்து கொள்ளும் பொருட்டு ஆலோசிக்க தொடங்கினான் ஔரங்கசீப்.
அவனிடம் பல உளவுத்துறைகள் இருந்தன. எல்லா உளவுத்தகவலையும் வைத்து அவனே அலசி ஆராய்ந்து ஒரு முடிவினை எடுப்பானே அன்றி ஒருவரை மட்டும் அவன் நம்பமாட்டான்.
அப்படியான ஔரங்கசீப் உசேனுடன் ஆலோசனையில் இறங்கினான், உசேன் பல விஷயங்களைச் சொன்னான்.
“முகமது அக்பர் இப்போது சாம்பாஜியுடன் நல்ல தொடர்பில் இல்லை, டெல்லியினைக் கைப்பற்றும் திட்டத்துக்குச் சாம்பாஜி உதவாததால் அவர் ராஜபுத்திரரிடம் சென்றுவிட்டார், போர்ச்சுகீசியர் இப்போதைக்குச் சாம்பாஜியினை எதிர்ப்பதாக இல்லை.
ராய்காட் கோட்டையில் சாம்பாஜியின் நண்பன் கவி கலாஷின் அதிகாரமே நடக்கின்றது, அவன் முடிவுகளில் சாம்பாஜியும் தலையிடுவதில்லை, அங்கு இஸ்லாமியர்களைக் கலாஷ் ஒதுக்குவதால் சில எதிர்ப்புகள் வருகின்றன, ஆனால் அது பெரிய பிளவாக இப்போதைக்கு மாறாது.
சாம்பாஜியினை இப்போது படையாலும் உள்குடும்ப அரசியலாலும் அசைக்கமுடியாது, அவன் தம்பி ராஜாராம் அடுத்தப் பத்தாண்டுக்குப் பின் எதிர்த்தால்தான் உண்டு, அதுவும் ஹம்பிராவினைத் தாண்டிச் செல்லுமா என்பது தெரியாது.
இந்துபேரரசு நிதி, படைபலம் என எல்லாவற்றிலும் வலுவாகத்தான் உள்ளது, இப்போதைக்கு அவர்களை வெல்வது கடினம்” என்றவன் வங்கம், டெல்லி, காஷ்மீரம், சிந்துநதிக் கரை, லாகூர் என எல்லா இடங்களின் உளவுத்தகவலையும் சொன்னான்.
அவற்றை அமைதியாக கேட்டுக்கொண்ட ஔரங்கசீப்பிடம் மெல்லக் கேட்டான் உசேன். ‘ஆலம்கீர், கோல்கொண்டா பிஜப்பூர் எல்லாம் இஸ்லாமிய அரசுகள், நாம் வடக்கே யுத்தமெல்லாம் இந்து அரசர்களுடனே செய்தோம், பெரும்பாலும் இஸ்லாமிய சுல்தானுடன் மோதவில்லை. அதெல்லாம் அக்காலத்திலே முடிந்துவிட்டது.
இப்போது எல்லாம் மாறிவிட்டது, இஸ்லாமிய அரசுகளைத் தாக்கத்தான் வேண்டுமா? பேச்சுவார்த்தையிலே முடியாதா? இவ்வளவுக்கும் உங்கள் மகன் ஆஸம் ஷா பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாஹியின் சகோதரியினினை மணம் செய்திருக்கின்றார் அல்லவா? பின் ஏன் இந்தப் போர்? பேசியே அந்த ராஜ்ஜியங்களைக் கைப்பற்றிவிடலாமே?”
ஔரங்கசீப் அருகிருந்த துணியால் தன் முகத்தை துடைத்துவிட்டு குவளையில் கொஞ்சம் நீர் அருந்திவிட்டுச் சொன்னான்.
“உசேன், இந்தப் பிரதேசம் வித்தியாசமானது, இந்து உணர்ச்சி மிக்கது, இந்துஸ்தானமெங்கும் இஸ்லாம் பரந்தபோது இங்குப் பாரம்பரியமான ராஜபுத்திர மன்னர்கள் எதிர்ப்பை மட்டும்தான் சந்தித்தது, வேறு பெரிய எதிர்ப்பு இல்லை.
ஆனால், இந்த மண் சாமானியர்களை மன்னனாக்கி இந்துமதம் காத்தது, பாமினி சுல்தான்கள் காலத்தில் ஆடுமேய்க்கும் சிறுவர்களாக வளர்ந்தவர்கள் நாயக்க அரசை அமைத்து சுல்தான்களை ஒடுக்கினார்கள், இப்போது சாமானியன் மலைவாசி சிவாஜி பெரும் இந்து ராஜ்ஜியத்தை அமைத்திருக்கின்றான்.
இந்தச் சுல்தான்கள் இஸ்லாமியர் என்றாலும் அடிப்படையில் இந்துமக்களுக்கு அஞ்சுபவர்கள், அதுவும் சிவாஜியின் எழுச்சிக்குப் பின் இந்து மக்களுக்கு அஞ்சுகின்றார்கள். சிவாஜியின் இந்து அரசு தங்களைக் காக்க வந்தது எனக் கொண்டாடுகின்றார்கள், கோல்கொண்டாவும் பிஜப்பூரும் சிவாஜிக்குக் கட்டுப்பட காரணம் சிவாஜியின் சேனை அல்ல, ராணுவம் அல்ல, மாறாக இந்துமதம்.
இந்துமதத்தின் அம்மக்களின் கிளச்சிக்கு அஞ்சியே அவர்கள் இந்து அரசை ஆதரிக்கின்றார்கள். அதுவும் கோல்கொண்டா சுல்தானியத்தில் அங்கண்ணா, மதண்ணா என இரு பிராமணர்கள் திவானாக இருந்து ஆட்சி செய்கின்றார்கள், அது இந்துக்களுக்குரிய ஆட்சி.
பிஜப்பூர் சுல்தானியமோ அப்சல்கானை சிவாஜி கொன்றுபோட்டதில் இருந்தே இந்துக்களின் மேல் அச்சம் கொண்டு அவர்கள் பக்கம் சரிந்துவிட்டார்கள், அங்கு நடப்பதும் இந்துக்களுக்குச் சார்பான ஆட்சி.
உசேன், இந்தத் தென்னகம் சாதாரணம் அல்ல, இது வடக்கே போல் ராஜபுத்திர மன்னர்களைக் கொண்டு இந்துக்களை அடக்கும் வழி கொண்டதுமல்ல, இது ஒருமாதிரியான சூட்சும பூமி. இது இந்து எழுச்சியினை எளிதில் உருவாக்கும், இந்து மன்னர்களை சாமானியரில் இருந்து எழுப்பும்.
இது எனது கனவுக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கும் சவால்விடும் மண், பெரிய பெரிய சவாலை எனக்குக் காட்டும் மண், நீ சொல்வது போல் ஆட்சிதான் முக்கியம் என்றால் நான் இந்த சுல்தான்களை எனக்குக் கப்பம் கட்ட சொல்லிவிட்டு என் போக்கில் ஆட்சி செலுத்துவேன்.
ஆனால் எனக்குத் தேவை இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமியத்தைப் பூரணமாகக் கொண்ட ஜிகாதி ஆட்சி. குரான்வழி ஆட்சி. அங்கே இந்துக்கள் ஜிசியா வரி கட்டவேண்டும், முடியாத இந்துக்கள் அடிமையாக வேண்டும், மதம்மாற வேண்டும், காபீர்கள் முழுக்க அழியவேண்டும்.
அதை இவர்கள் செய்யமாட்டார்கள். செய்யாதபடி அஞ்சுவார்கள், இவர்கள் இருக்கும் வரை இங்கு இஸ்லாம் வளராது உசேன். சுமார் 350 ஆண்டுகாலத்துக்கும் அதிகமாக தக்காணத்தில் சுல்தான்கள் இருந்தும் இங்கு இஸ்லாம் வளரவில்லையே ஏன்?
அதுதான் தக்காணம், இதை யாரும் முயற்சிக்க முடியாது. மாலிக்காபூர், துக்ளக், பாமினி, அப்சல்கான் என எல்லோரும் இதனை முயன்று தோற்றுப்போனார்கள். தக்காணத்தை இஸ்லாமியமாக்கும் முயற்சியினை யாராலும் இதுவரை செய்யமுடியவில்லை. செய்து வெற்றிப்பெறமுடியவில்லை.
சிவாஜி சாதுர்யமானவன். அவன் இஸ்லாமியரின் ஆட்சியாளர்களைக் கொண்டே இந்துக்களை நன்முறையில் ஆளவைத்து இவர்களைத் தன் அடியாட்களாக மாற்றிவைத்து சிக்கவைத்துக் கொண்டான், அந்தச் சாதுர்யத்தை நான் இனி உடைத்துப்போடுவேன்.
இனிதான் இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன என்பதையே தக்காணம் காணப்போகின்றது உசேன்.
எனது கனவுக்கு இந்த இரு சுல்தான்களும் தடை உசேன், இவர்களிடம் கப்பம் வாங்கி என் தகப்பன் போல் நான் வாழமாட்டேன், இவர்களை அகற்றிவிட்டு என் நேரடி ஆட்சியில் தக்காணத்தை இஸ்லாமியமாக்குவேன், வடக்கே செய்த அத்தனையும் தெற்கே செய்வேன்.
காசி, மதுரா எனக் கட்டிய பள்ளிவாசல் போல் தக்காணத்திலும் இந்துதலம் அத்தனையிலும் செய்வேன். காபீர்களை ஒன்று மதம் மாற்றுவேன் அல்லது ஒழித்துக் காட்டுவேன், அதற்கு தடையாய் இருக்கும் இந்த சுல்தானியங்களை இனி ஒழித்து என் நேரடி ஆட்சியினை அமைப்பேன், அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான்” எனச் சொல்லி உறுமினான்.
அவனின் தீர்க்கமான மிரட்டல் கண்டு உசேன் அதிர்ந்துபோனான், மாபெரும் அழிவுக்கு ஔரங்கசீப் தயாரானது அவனுக்குத் தெரிந்தது, உத்தரவு பெற்றுக் கொண்டான்.
ஔரங்கசீப் உசேனை அனுப்பிவிட்டு யோசித்தான். என்னதான் பேரரசனாக இருந்தாலும் ஒரு நாட்டின் மேல் படையெடுக்க நியாயமான காரணம் வேண்டும், அதை யோசித்த அவன் பிஜப்பூருக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான்.
அதே நேரம் பகர்ஜி நாயக்கின் உளவுப்படை மொகலாயம் பெரிய சேனை திரட்டுவதை அறிந்து ராய்காட் கோட்டைக்குச் செய்தி அனுப்பியது. ஔரங்கசீப் ஏதோ பெரிய நடவடிக்கைக்குத் தயாராகின்றான் என்பதைச் சாம்பாஜி தரப்பு அறிந்து பரபரப்பானது.
ஔரங்கசீப் பிஜப்பூருக்குக் கடிதம் எனும் பெயரில் தன் முடிவினை எழுதிக் கொண்டிருந்தான். இந்திய இஸ்லாமிய பாரம்பரியங்களில் ஒன்றான அந்தப் பிஜப்பூர் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் அப்போது தொடங்கியிருந்தது.
(தொடரும்..)