முருகப்பெருமான் ஆலயங்கள் : சென்னை பெசன்ட் நகர் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : சென்னை பெசன்ட் நகர் ஆலயம்.
முருகப்பெருமான் எப்போதும் தமிழகத்தோடு கலந்தவர். முக்தி தலங்கள் அதிகமிருக்கும் தமிழகத்தில் அவர் முக்திக்கான வழியினைக் காட்டும் தெய்வமாக எக்காலமும் நிலைத்து நிற்பவர்.
காலம் தோறும் அவருக்கான ஆலயங்கள் யாரோ ஒருவர் வடிவில் இங்குப் பிரமாண்டமாக எழும்பிக் கொண்டே இருக்கும், இங்கு அரசுகள் மாறும் மத ஆதிக்கம் மாறும் ஆட்சி மாறும் சூழல் மாறும் இன்னும் என்னவெல்லாமோ மாறி மாறி வரும் . ஆனால், மாறாமல் வளர்ந்து கொண்டே வருவது முருகப்பெருமான் பக்தியும் அவர் ஆலயங்களும். எந்தக் கொடும் சூழலில் இருந்தும் இங்கு அவர் பக்தி துளிர்த்து வளரும். எத்தனை அரசியல் சுனாமி புரட்டிப் போட்டாலும் அவர் கோவில்கள் எழும்.
அப்படிக் காலம் காலமாக அது எழுந்து கொண்டே இருந்தது. புலவர்கள் கட்டுவார்கள் பக்தர்கள் கட்டுவார்கள், அரசர்கள் கட்டுவார்கள், கையில் காலணா இல்லாத சித்தர்கள் கட்டுவார்கள், மக்கள் கட்டுவார்கள் யாரோ ஒருவர் அவருக்கான ஆலயங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டிக்கொண்டே இருப்பார்கள், முருகபெருமானும் தனக்குரிய பக்தர்களைத் தேர்வு செய்து அதிசயங்களை நிகழ்த்தியே வருவார்.
அப்படிச் சென்னை எனும் பிரமாண்ட நகரம் உருவாகும் போது அவர் வடபழனியில் தனக்கான ஆலயம் அமைத்துக் கொண்டார், இன்னும் தனக்கான அடியாரான பாம்பன் சுவாமிகளை அங்கு வரவழைத்துக் கொண்டார், அந்தப் பாம்பன் சுவாமிகளே அறுபடை கோவில்களையும் ஒன்றாகத் தரிசிக்க மக்களுக்கு என்ன செய்யலாம் என முதலில் சிந்தித்தவர், அவருக்கு முருகப்பெருமான் அப்படி ஒரு ஆலயம் அமைவதை தரிசனத்தில் காட்டினார்.
அதைக் கண்டு மகிழ்ந்து இங்கு அறுபடை ஆலயங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் காலம் வரும் எனச் சொல்லிக்கொண்டே கண்மூடினார் பாம்பன் சுவாமிகள்.
கடந்த நூற்றாண்டில் டாக்டர் அழகப்பன் என்றொரு அமெரிக்கவாழ் செட்டியார் என்பவர் செய்த திருப்பணிகள் மிக அதிகம், அவருக்கு அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் கட்டும் ஆசை வந்தது, ஆனால் எங்கே எப்படிக் கட்டுவது என அவருக்குத் தெரியவில்லை.
அவர் நடமாடும் தெய்வம், காஞ்சி மஹான் எனக் கொண்டாடப்பட்ட மகா பெரியவரிடம் தன் விருப்பத்தைச் சொன்னார், தனக்கென ஏதும் கேட்காமல் மக்கள் அறுபடை முருகனையும் ஒரே இடத்தில் வணங்கவேண்டும் எனும் எண்ணம் கொண்ட நல்ல விருப்பம் அவருக்குப் பிடித்திருந்தது.
அவர் எல்லாம் அறிந்தவர் அல்லவா? இக்கோவில் எங்குக் கட்டப்படவேண்டும் எனத் தன் யோகத்தால் முருகப்பெருமானை நாடினார், அதற்குச் சென்னை கடற்கரை ஓரமான நிலம் பதிலாக வந்தது. ஆனால் அது அரச நிலம், அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் மகா பெரியவர் தன் விருப்பத்தைச் சொல்ல பதிலேதும் சொல்லாமல் உடனே அந்த நிலத்தை ஒதுக்கி கொடுத்தார் எம்ஜிஆர், அவருக்கு உள்ளூர முருகபக்தி அதிகம், மருதமலை முருகனின் அருள்பெற்ற சின்னப்பதேவரால் முருகா முருகா எனச் சொல்லி வளர்த்துவிடப்பட்டவர் எம்ஜிஆர், தன் வாழ்வில் முருகனுக்கான இடத்தைப் பெரிதாக வைத்திருந்தார்.
அந்த எம்ஜிஆர் அறுபடை முருகனுக்கான கோவில் என்றதும் உடனே நிலத்தை ஒதுக்கினார். பின் லேலைகள் துவங்கி டாக்டர் அழகப்பனாலும் உலகெல்லாம் இருந்து முருக பக்தர்களின் பெரும் முயற்சியாலும் அந்த ஆலயம் ஆறுமுக கடவுளின் அறுபடை வீடுகள் நிரம்பிய தலமாயிற்று.
சென்னை பெசன்ட் நகரின் கடலோரமாக இத்தலம் அமைத்திருக்கின்றது. கடல்காற்று கடுமையாக வீசுவதால் கிழக்கு வாசல் திறக்கப்படுவதில்லை. மாறாக, வடக்கு வாசல் வழியேதான் உள்ளே செல்லமுடியும்.
தொடக்கத்தில், அதிகாரப்பூர்வமாக நியூயார்க் கணபதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ மகா வல்லப கணபதிக்கான கிழக்குப் பார்த்த சந்நிதி உண்டு, டாக்டர் அழகப்பன் அமெரிக்க நியூயார்க் நகரில் பிள்ளையார் கோவிலைக் கட்டியிருந்தார், அதே வல்லப கணபதியினை இங்கு அவர் ஸ்தாபனம் செய்ததால் அவர் நியூயார்க் கணபதி என்றாகிவிட்டார்.
பல தூண்களைக் கொண்ட இந்தச் சந்நிதியில், ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ ஊர்த்தவ கணபதி மற்றும் ஸ்ரீ நிருத கணபதி ஆகியோரின் சிலைகள் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தை நோக்கியவாறு விநாயகரின் வாகனம் அமைந்துள்ளது.
அறுபடை வீடுகளில் கிழக்கு நோக்கிய பழமுதிர்ச்சோலை சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர் மற்றும் திருத்தணி ஆகிய தலங்களின் சிலைகள் இந்தத் தூண்களில் காணப்படுகின்றன.
எதிரே உள்ள தூண்களில் மச்சமுனி, அகஸ்தியர் மற்றும் லோபாமுத்திரை, போகர், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர் மற்றும் ராமதேவர் சிலைகள் உண்டு, இந்தப் முருகபெருமான் சந்நிதானத்தில் வேலும் மயிலும் உண்டு.
அடுத்து, வடக்கு நோக்கிய திருப்பரங்குன்றம் சந்நிதி உள்ளது. இதில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, வள்ளி மற்றும் தேவசேனா சூழ அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார், இந்தச் சந்நிதிக்கு எதிரே ஒரு மயில் அமர்ந்திருக்கின்றது.
இங்குக் கிழக்கு நோக்கிய ஸ்ரீ கோவர்தனி அம்பிகா சமேத ஸ்ரீ சத்யகிரீஸ்வரரின் மற்றொரு சந்நிதி உள்ளது. ஸ்ரீ கோவர்தனி அம்பிகா தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும், ஸ்ரீ சத்யகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி சிவலிங்க வடிவிலும் அருள்பாலிக்கின்றனர்.
அடுத்து மேற்கு நோக்கிய பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது, அவர் சந்நிதியில் பழனி போலவே தனியாகக் காட்சியளிக்கிறார். கோஷ்டத்தைச் சுற்றி விநாயகர், பழனி ஆண்டவர் மற்றும் துர்க்கையின் சிலைகள் உண்டு , பழனி போலவே இந்தச் சந்நிதிக்கு எதிரே, கிழக்கு நோக்கிய ஸ்ரீ இடும்பனின் ஒரு சிறிய சந்நிதி உண்டு.
அடுத்து, திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் கிழக்கு நோக்கிய சந்நிதி உள்ளது. அவர் வள்ளி மற்றும் தேவசேனாவுடன் அருள் பாலிக்கின்றார் வேல் மற்றும் சேவல்கொடியை ஏந்தியிருக்கும் இவருக்கு இங்கு யானை வாகனம் உண்டு.
பிணிமுகம் எனும் இந்திரனின் யானை இது, முருகப்பெருமானின் திருமணத்திற்கு இந்திரன் சீராக கொடுத்த அந்த வாகனம் இங்கு முருகப்பெருமானோடு அருள்பாலிக்கின்றது.
அடுத்து கிழக்கு நோக்கிய சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமியின் சந்நிதி உண்டு, இங்கும் அவர் சுவாமிமலை போலவே தனியாக நின்று அருள் பாலிக்கின்றார். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமியின் சந்நிதிக்கு எதிரே, நான்கு தூண்கள் கொண்ட வேல் மண்டபத்தில் 6 அடி உயரமுள்ள ஒரு பெரிய வேல் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது.
அடுத்து கிழக்கு நோக்கிய திருச்செந்தூர் ஸ்ரீ செந்தில் ஆண்டவரின் சந்நிதி உள்ளது. அவருக்கு இருபுறமும் வள்ளி மற்றும் தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார், வீரபாகு மற்றும் வீரமகேந்திரர் ஆகிய இரண்டு துவாரபாலகர்கள் அவரது வாசலில் காவல் காத்து நிற்கின்றனர்.
ஸ்ரீ சண்முகர் என அழைக்கப்படும் உற்சவமூர்த்தியின் தெற்கு நோக்கிய ஒரு உப சந்நிதி உள்ளது. ஸ்ரீ சண்முகர் சிலையின் இருபுறமும் ஸ்ரீ வள்ளி மற்றும் தேவசேனா அமர்ந்துள்ளார்கள், இந்தச் சந்நிதிக்கு எதிரே பிரம்மாண்டமான துஜஸ்தம்பம் அல்லது கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நவக்கிரக சந்நிதி உள்ளது. அதற்கு அடுத்ததாக, மேற்கு நோக்கிய ஸ்ரீ யோக பைரவரின் சந்நிதி உண்டு, இங்குப் பைரவர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
கோவிலின் தல விருட்சமாக அரசமரம் உண்டு, அதன் அடியில் நாக தேவதைகள் சிலை உண்டு. மேற்கு நோக்கி அமைந்த இந்த நாகம் கர்ம வினைகளைப் போக்கக் கூடியது.
முருகப்பெருமானுக்குரிய எல்லா விழாக்களும் பண்டிகைகளும் இங்கு விசேஷமாக கொண்டாடப்படும், கந்த சஷ்டி மண்டபத்தில் அன்னதானமும் உண்டு.
அறுபடை வீடுகளான முருகப்பெருமான் தலங்கள் எப்போதும் முக்கியமானவை, அவை யோக சக்கரங்களைத் துலக்கித் தருபவை.
திருப்பரங்குன்றம் மூலாதார சக்கரம், திருச்செந்தூர் சுவாதிஷ்டானம், பழனி மணிப்பூரகம், சுவாமிமலை அனாகத சக்கரம், திருத்தணியில் விசுத்தி, பழமுதிர்சோலையில் ஆக்ஞா என ஒவ்வொரு வீடும் ஒரு சக்கரத்தோடு தொடர்புடையது.
இங்கே அந்த ஆறு தலங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் யோகம் கைகூடும் முருகப்பெருமானின் தனி அருளும் உங்களுக்கு வாய்க்கும், சென்னையில் இருப்பவர்கள் இன்னும் அப்பக்கம் இருந்து அறுபடை வீடுகளைதரிசிக்க முடியாதவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம் இது.
இந்த ஆலயத்துக்குச் செல்லும் போது வாசலில் நின்று காஞ்சி மகாபெரியவரை ஒரு நொடித் தியானியுங்கள், அந்த ஆலய நுழைவாயிலில் அவருக்கோர் அடையாளம் இருந்திருக்க வேண்டும் இனி எதிர்காலத்தில் அது நிறுவப்படும்.
அந்த மகாமுனியின் ஆசியோடு, அந்த அவதாரத்தின் அருளோடுதான் உள்ளே நுழைய வேண்டும், காஞ்சி மகான் அங்கே வாசலில் நின்று ஒவ்வொருவரையும் அருளோடு வரவேற்கின்றார்.
ஆலயத்தை வழிபட்டு முடித்ததும் மறக்காமல் அருகிருக்கும் பாம்பன் சுவாமிகளின் சமாதியினைத் தரிசித்துவிட்டு வாருங்கள், ஒவ்வொரு முருகன் ஆலயமும் சித்தர் அல்லது சித்தர்கள் சமாதி பல கொண்டிருக்கும், இந்த ஆலயத்தின் சித்தர் அந்த மகாஞானி பாம்பன் சுவாமிகளே, அவரால்தான் இந்த ஆலயம் எழுந்தது.
இந்த ஆலயம் சென்னைக்குப் பலவகையில் அடையாளம், அந்தப் பிரமாண்ட நகரம் புதிதாக உருவானது என்பதால் மதமாற்றம் பெருகவும், அன்று கிராமங்களாய் இருந்த இடத்தின் பழங்கால இந்து ஆலயங்களை அழிக்கவும் பல நூற்றாண்டு ஐரோப்பியர் ஆளுகையால் அவர்கள் மதமும் அடையாளமும் நிலைத்துவிடும் ஆபத்து கொண்ட பகுதி, சீமை கருவேல மரம்போல, வெங்காய தாமரை போல இவை பெரிதாகப் படர்ந்து இம்மண்ணின் தர்மத்தை அழித்துவிடும் தன்மை கொண்டவை.
அதைத் தடுக்க முருகப்பெருமான் பல ஏற்பாடுகளைத் தன் அடியார் மூலம் செய்தார், அப்படி உருவான இந்த ஆலயம் இனி காலம் காலமாக அங்குத் தர்மத்தையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் காத்து நிற்கும், அங்குச் சென்று வழிபடும் ஒவ்வொருவரும் பாக்கியவான்கள். முருகப்பெருமானின் பெரும் அருள் அவர்கள்மேல் எப்போதும் காவலாய் நின்று கொண்டே இருக்கும். இது சத்தியம்.