முருகப்பெருமான் ஆலயங்கள் :நாதகிரி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் :
நாதகிரி முருகப்பெருமான் ஆலயம்.

தென்காசி மாவட்டம் சிவகிரியினை அண்மித்து அதுவனக்காடு, தொன்மையான இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் காலத்தில் இருந்து தொடங்குகின்றது.

இயல்பிலே நல்ல அதிர்வும் தவயோகம் கூடும் பூமியான இம்மலையில் பிரபஞ்ச சக்தி எப்போதும் குவிந்திருக்கும். அந்த ஞான பூமியின் பெருமையினை உலகுக்கு முதலில் சொன்னவன் இந்திரனின் மகனான ஜெயந்தன்.

ஆம், இந்திரனின் மகன் ஜெயந்தன் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தபோது சிவபெருமானைச் சரணடைந்தான், சிவனோ அவன் அல்லல் தீரும்படி இங்குத் தவம் செய்ய அனுப்பினார், அவன் தர்மம் செழிக்க அதர்மம் அழிய தவமிருந்த இடம் இது.

அவனின் தவத்திற்காக முருகப்பெருமானே அகத்தியர், அனுமன், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் வாமதேவர் போன்ற மாபெரும் முனிவர்களும் இந்தப் புனித மலையில் தரிசனம் அளித்தனர். அப்போது “ஓம் நமசிவாய” எனும் நாதம் ஓங்கி ஒலித்ததால் அந்த மலை நாத கிரி என்றாயிற்று.

முருகப்பெருமானே வந்து அருள்பாலித்த மலை என்பதால் அவரின் அருள் எப்போதும் இருக்க வேண்டி அவரின் வழிகாட்டலில் சித்தர்களே இந்த ஆலயத்தை உருவாக்கினார்கள் அன்றிலிருந்து மிகப்பெரிய அதிசயத்துடன் இக்கோவில் விளங்குகின்றது.

இது அஷ்டகிரிகள் எனப்படும், எட்டு புனிதமான மலைகளில் இதுவும் ஒன்று, மற்றவை இமயமலை, விந்திய, சாத்பூர‌ மலைகள், நீலகிரி, சதுரகிரி, சிவகிரி, ராயகிரி என வணங்கபடும் என்பதிலே இந்த மலையின் மாபெரும் தாத்பரியம் புரியும்.

பாம்பட்டி சித்தர் உட்பட 18 சித்தர்கள் இந்த மலையில் கடும் தவம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த மலை அகத்திய முனிவராலும், சந்திரன் மற்றும் சூரியனாலும் வழிபடப்பட்டது எனும் பெருமையினை உடையது.

நாதகிரியில் அந்த ஆலயம் மட்டும் புனிதமான இடம் அன்று, திருவண்ணாமலை போல அந்த மலையே மகா புனிதமானது. நிறைய ரகசியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது, சதுரகிரி போல சூட்சுமங்கள் ஏராளம், நடமாடும் சித்தர்களும் அரூப சூட்சுமச் சக்திகளும் இங்கு ஏராளம் உண்டு.

இயற்கை குகையே கருவறையாய் அமைந்த இக்கோவிலில் எளிய கட்டுமானத்தோடு சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன. முருகப்பெருமானுடன், விநாயகர், சங்கரலிங்கப் பெருமான் (சிவன்) மற்றும் கோமதி அம்பிகை ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு.

இந்த முருகன் அபய முத்திரையினைக் கையில் ஏந்தி அபயவரத முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றார், முருகன் ஆலயங்களில் இது வித்தியாசமானது.

அதாவது சிவனும் விஷ்ணுவும் கலந்த அம்சம் இந்த முருகப்பெருமான், நாதவடிவில் அதாவது சங்கரன் கோவில் சங்கர நாராயண வடிவ, ஹரியும் சிவனும் ஒன்று, அந்த அம்சம் முருகப்பெருமானிடமும் உண்டு என்பதைச் சொல்லும் வடிவில் அமைக்கபபட்டிருக்கும் முருகப்பெருமான் ஆலயம் இது.

அதனாலே அவர் வரத முத்திரை காட்டி நின்று இங்கு அருள்பாலிக்கின்றார்.

காலம் காலமாக மன்னர்கள் வணங்கிய இந்த ஆலயத்தின் பெரும் பக்தன் நெல்கட்டும்செவல் பாளையக்கரத்தை ஆண்ட பூலித்தேவன். அந்த மன்னர் சங்கரன் கோவில் கோமதி அம்பிகை, சங்கரலிங்கப் பெருமான், நாதகிரி முருகன் ஆகியோரை வழிபடுவதற்காக நீண்ட குகைக் கோயிலைக் கட்டினார் என்பார்கள், அந்தக் குகைவழி இப்போதும் உண்டு.

இந்த மலையில் மகா புனிதமான நீருற்று ஒன்று உண்டு. சப்தகன்னியர் நீராடிய அந்த ஊற்றுநீரை அருந்தினால் எல்லா நோய்களும் குணமாகும், அந்த நீருற்றில் எலுமிச்சையின் மணமும் மஞ்சளின் நிறமும் குணமும் உண்டு, இது எந்த விஞ்ஞானத்தாலும் விளக்கமுடியா ஒன்று.

மூலிகளைகள் பெருகிய இம்மலையின் நீர் பெரும் பிணி போக்கும் அருமருந்து.

அந்த நீருற்றின் கீழ்பக்கம் விநாயகப் பெருமானின் பீடம் சந்நிதி உண்டு. லட்சுமிதேவி இங்குள்ள விநாயகரை வழிபட்ட வரலாறும் உண்டு.

இந்த ஆலயம் சித்தர்கள் நடமாடும் ஆலயம் என்பதால் எக்காலமும் ஒரு அதிசயம் நடக்கும், அதாவது இங்குள்ள குகையில் வெள்ளிக்கிழமை நாகமும் கீரியும் ஒன்றாக பால் அருந்தும் அதிசயம் நடக்கும்.

பக்தர்கள் கொண்டுவரும் பாலும் பழமும் அங்குள்ள குகையில் வைக்கப்படும். அப்போது இயல்பிலே பகை கொண்டதும் பார்த்த இடத்திலே சண்டையிடுவதுமான கீரியும் நாகமும் ஒன்றாய் வந்து இவற்றை உண்டு செல்லும், இந்த மெய்சிலிர்க்கும் காட்சி இக்கோவிலின் தனிச் சிறப்பு.

ஆம், காலங்காலமாக இந்த அதிசயம் உண்டு, இன்றும் உண்டு.

இக்கோவில் அருணகிரியாரால் பாடபபட்டது, அவர் வந்து வழிபட்டு பாடிய ஆலயம் இது, மிக மிக சக்திவாய்ந்த முருகன் இங்குக் குடியிருக்கின்றார், குற்றாலம் தென்காசி பக்கம் செல்லும்போது இந்த ஆலயத்தை காணத் தவறாதீர்கள்.

இது முழுக்க ஒற்றுமையும் நல்ல இணக்கமும் தரும் ஆலயம், நாகமும் கீரியும் ஒன்றாக அங்கு உணவருந்துவது வெறும் அதிசயம் அல்ல, அது அந்த முருகனும் அவரின் சித்தர்களும் எல்லா மக்களுக்கும் ஒற்றுமையும் அன்பும் நல்ல உறவும் தருகின்றார்கள், பகை இல்லா நல்வாழ்வு தருகின்றார்கள், பகைவரின் பகையினை அன்பாக மாற்றி அவர்களின் இயல்பை ஒழித்துத் தருகின்றார்கள் என்பது.

இந்த ஆலயம் பகைவர்களின் தொல்லையின்று உங்களை விடுவிக்கும் ஆலயம், இங்கு வந்து வழிபட்டு சென்றால் எந்தப் பகை நினைந்து அது குடும்ப பகையோ, ஊர் பகையோ, உலக பகையோ அல்லது உங்களுக்குள் இருக்கும் பகை உணர்வோ எதுவாக இருந்தாலும் அழியும், உங்கள் வாழ்வும் சுற்றமும் அன்பும் மகிழ்வும் நிறைந்ததுமாகும்.

பகை இருக்குமிடம் அன்பு இராது, மகிழ்ச்சி இராது. வன்மமும் அச்சமும் சந்தேகமுமே குடிகொண்டிருக்கும், பகை உணர்வு நீங்குமிடத்திலே மனம் முழுக்க அன்பும் சமாதானமும் மகிழ்வும் பிறக்கும்.

அபயவரத முத்திரை காட்டி முருகப்பெருமான் அருள்பாலிக்கும் இந்த நாதகிரி ஆலயம், அந்தப் பெரும் நிறைவினை தந்து உங்கள் வாழ்வை முழு மகிழ்வும் அச்சமற்ற சூழலும் தந்து பகை இல்லா நல்வாழ்வாக தரும். இது சத்தியம்.