முருகப்பெருமான் ஆலயங்கள் : ராஜபாளையம் சஞ்சீவி மலை முருகன் ஆலயம் மற்றும் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : ராஜபாளையம் சஞ்சீவி மலை முருகன் ஆலயம் மற்றும் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ஆலயம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்திருக்கின்றது சிறிய மலைக்குன்று, அனுமன் சுமந்த சஞ்சிவீ மலையின் ஒரு சிதறலான அம்மலையில் அற்புதமான மூலிகைகள் பல உண்டு, அபூர்வமான அம்மூலிகைகள் நோய்தீர்க்கும் வரம்பெற்றவை.

அந்த மூலிகளைகளை மக்களுக்கு கொடுத்து நோயற்ற வாழ்வை தரவும் அப்படியே நல்ல வழியில் நல்ல காவலில் மக்களை வைக்கவும் முருகப்பெருமானே ஒரு சித்தராக இங்கு வந்தார், அவரைப் பற்றி அதிக விவரம் தெரியாததால் இம்மலையின் பெயரால் அவர் சஞ்சீவநாதர் என்றானார்.

இந்தச் சஞ்சீவநாத சித்தர் இங்கு வசித்தார், தவம்பல செய்தார். மூலிகளைகளில் இருந்து மருந்தெடுத்து மக்களைக் காத்தார், மெல்ல மெல்ல அவரின் புகழ் வளர்ந்தது. அவருக்குச சீடர் கூட்டமும் பக்தர்களும் பெருகினர், பக்தர்கள் அவரை முருகப்பெருமானின் அவதாரமாகவே கருதினார்கள்.

சித்தர்கள் எப்போதும் முருகன் அருள் கொண்டவர்கள், அவன் அருளிலே மக்களுக்கு ஞானவழி காட்டுபவர்கள், சித்தர்களின் தலைவர் முருகப்பெருமான் என்பதால் இந்தச் சஞ்சீவிநாதரும் முருகப்பெருமானுக்கோர் ஆலயத்தை எழுப்பினார், அப்படி உருவானது இந்த ஆலயம்.

முருகபபெருமானுக்குச் சந்நிதி எழுப்பி, சிவனுக்கும் சந்நிதி எழுப்பிய சித்தர் மலையில் பெருமாளையும் வழிபட்டிருக்கின்றார்.

இதனால் மலையில் பெருமாள் கோவில் மலையடியில் சிவன் முருகன் சந்நிதி என அந்த ஆலயம் அருள்பாலிக்கின்றது, முருகப்பெருமான் அருளில் பெரும் அற்புதங்களைச் செய்த சித்தரும் அங்கே ஜீவசமாதியானார்.

இந்த ஆலயத்தின் சிறப்பு எந்தப் பெரிய வியாதி என்றாலும் தீரும் என்பது, அதுவும் இங்கு வரமுடியா பக்தர்கள் சஞ்சீவநாதசித்தரையும் இந்த முருகப்பெருமானையும் நினைந்து வணங்கினாலே அந்தத் திசை நோக்கி வணங்கினாலே அந்நோய் தீரும்.

சிறிய ஆலயமென்றாலும் மிகச் சக்திவாய்ந்த ஆலயம் இது, எல்லாவித கொடிய அபாய நோய்களும் இங்கு நொடியில் தீரும் என்பதால் நோயுற்ற மக்களும் இதர பாதிப்பில் சிக்கிய மக்களும் வணங்கி நல்லசுகம் பெற்றுச் செல்வர்.

சித்தரின் அருள் பெருகும் ஆலயம் என்பதால் அமாவாசை, பௌர்ணமி காலமும் இன்னும் முருகனுக்குரிய செவ்வாய் கிழமை வழிபாடும் தைப்பூசம் முதல் சூரசம்ஹாரம் வரை எல்லாப் பண்டிகைகளும் வெகு விமரிசையாக நடக்கும்.

மலை அடிவாரத்த்தில் சித்தரின் நினைவிடம் உண்டு. அதை ஒட்டி அவர் ஸ்தாபித்த முருகப்பெருமான் சந்நிதி உண்டு, தன் தேவியர் இருவருடன் முருகப்பெருமான் அருள் வழங்கும் கோலத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சிவனுக்கோர் சந்நிதி உண்டு.

மலை ஏறிச் சென்றால் பெருமாள் சந்நிதியும் பக்கத்தில் அனுமன் சிலையும் உண்டு.

ராஜபாளையம் செல்லும்போது இந்த முருகனைக காணத் தவறாதீர்கள். செவ்வரளி மாலையிட்டு நெய்தீபமிட்டு வணங்குங்கள். எல்லா வளமும் ஆரோக்கியமும் உங்களைத் தேடிவரும், பெரும் நோயுற்ற நிலையில் இருப்பவர்கள் மனமார அந்த முருகப்பெருமானை நினைந்து அந்தச சித்தரை நினைந்து வழிபடுங்கள். உங்கள் நோய் நொடியில் அகலும். பின்னர் சென்று அந்த முருகனுக்கு நன்றிக்கடன் தீருங்கள்.

முருகப்பெருமான் ஆலயத்தில் முக்கியமானது ஒட்டன் சத்திரத்தில் அமைந்திருக்கும் குழந்தை வேலப்பர் ஆலயம், இது பழனி முருகப்பெருமான் ஆலயத்தின் உப ஆலயங்கள் எனும் பிரதி ஆலயங்களில் ஒன்று.

இது ஓட்டன்சத்திரம் அருகே அரசபிள்ளைபட்டியில் மலையில் அமைந்துள்ளது, பழனிக்குச் செல்லும் திருப்பயணிகளெல்லாம் இந்த ஆலயத்தை பணிந்தே செல்வர்.

இம்மலையை மேற்கிலிருந்து பார்த்தால் பழநி மலைப் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை போன்றும் தெரியும் என்பது தனிச் சிறப்பு.

இம்மலை மூலிகைகளும் அபூர்வமான செடிகொடிகளும் நிரம்பிய மலை. இதனாலே சித்தர்கள் இங்குத் தங்கி மூலிகை மருந்து தயாரித்தனர், தவமிருந்து பெரிய மருத்துவ ஞானமெல்லாம் பெற்றுக் கொண்டனர், அவர்கள் ஸ்தாபித்த முருகன் சிலை இது, பழனி முருகன் போலவே வடிவானது.

இந்த முருகன் தன் பக்தர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியவிதம் அலாதியானது, சித்தர்களால் உருவாக்கப்பட்ட இந்த முருகப்பெருமான் ஆலயம் எப்போதும் பிரசித்தி, முன்பு ஒரு பக்தர் தன் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்வில் சிறுவர்களுக்கெல்லாம் மிட்டாய் கொடுத்துக் கொண்டாடினார்.

அன்றிரவு அவர் கனவில் வந்த முருகன், நானும் பாலகன் அல்லவா? எல்லாச் சிறுவனுக்கும் மிட்டாய் கொடுத்த நீ எனக்கு ஏன் தரவில்லை எனச் சொல்லி வருந்தினார், கண்விழித்த பக்தர் முருகா எனச சொன்னபடி மிட்டாய்களைக் கொட்டி அவரை வணங்கினார்.

அன்றிலிருந்து அந்த மலை முருகப்பெருமானுக்கு மிட்டாய் காணிக்கை பிரசித்தியானது.

அதாவது தன் பக்தர்கள் தன்னை உரிமையோடு குழந்தையாக கொண்டாடவேண்டி குழந்தை கோலத்தில் அவர் அருள்பாலிக்கின்றார், பக்தர்களும் மிட்டாய் காணிக்கை இட்டு வழிபட்டு வருகின்றார்கள்.

அந்த முருகப்பெருமான் மிட்டாய் வடிவில் நம் கர்மவினைகளை வாங்கிக் கொண்டு பெரும் பலனை நமக்கு அளிக்கின்றார், அங்குத் தன்னை வழிபடும் ஒவ்வொருவர் வீட்டின் குழந்தையாக மகனாக அவரே வந்து காவல் இருப்பார்.

குழந்தைகளுக்கான எல்லாச் சிக்கலும் தீரும் தலம் இது, குழந்தைகளுக்கான நோய்கள் முதல் அவர்கள் கல்வி சிக்கல் உள்பட எல்லாமும் தீரும் தலம் இது, குழந்தைகள் தங்கள் கையால் இங்கு மிட்டாய் வைத்து வழிபட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். கல்வி கேள்விகளில் பெருத்த தேர்ச்சியடைவர், பெரிய அறிவு கூர்மையும் மதிநுட்பமும் அவர்களுக்கு வாய்க்கும்.

முருகப்பெருமானுக்கு மிட்டாயா? அவர் குழந்தையா என்பது சிலருக்குப பகுத்தறிவு கேள்வியாக இருக்கலாம், விஷயம் அது அன்று.

குழந்தையாய் இருக்கும்போதே ஒருவனுக்குள் புகட்டப்படும் பக்தி அவனின் வாலிபகாலத்தில் அவனை நல்வழியில் காக்கும், அவன் வாழ்வை செம்மைப்படுத்தும், பக்தியில் வளர்க்கப்படும் குழந்தை நெறிதவறி செல்லாது பாதை மாறாது, இளமையிலே கொடுக்கப்படும் அந்தப் பயிற்சி முதுமை வரை கூட வரும்.

அவ்வாறு இளமையிலே முருகப்பெருமானை வணங்கி பால்யவயதிலே உனக்குத துணையாக முருகன் உண்டு, உன்னைப்போல் மிட்டாய் விரும்புவான், உனக்கு அவன் தோழன், எப்போதும் உன்னைக் காப்பான், அவனோடு நட்பு கொள் அவனிடம் உதவி கேள் எனச் சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தை முழுப் பக்தனாகவே மாறிவிடும். அது பாதை தவறாது.

இளமையில் இருந்தே முருக பக்தியில் குழந்தைகளை வளர்க்க வழிகாட்டும் ஆலயம் இது, அங்கு முருகனுக்கு மிட்டாய் வைத்து வணங்கும் குழந்தைக்கு ஒரு இடையூறும் வாழ்வில் வராது.

இக்கோயிலில் நுழைவாயில் சித்தி விநாயகர் சர்பத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார். உட்பிரகாரத்தில் காலபைரவரும், தக்ஷிணாமூர்த்தியும், சண்டிகேசுவரரும் அருள்பாலிக்கின்றனர்.

குழந்தை வடிவ முருகப்பெருமான் கையில் வேலுடன் அருள்பாக்லிக்கின்றார், அருணகிரி நாதர் பணிந்து பாடிய பெருமைமிக்க தலம் இது.

ஒட்டன்சத்திரம் செல்லும்போது இந்த ஆலயத்தை தரிசிக்க மறவாதீர்கள், அதுவும் குழந்தைகளோடு செல்லுங்கள். அவர்கள் கையால் மிட்டாயினை முருகனுக்கு காணிக்கையாக்குங்கள். அந்நொடி அந்த ஞானபபண்டிதன் உங்கள் குழந்தைக்குத் தோழனாக வருவான் , வருபவன் கடைசிவரை அவர்களோடு நின்று காலமெல்லாம் காத்துத் தருவான், உங்கள் குழந்தையின் வாழ்வு அங்கே நல்ல வழியில் உறுதி செய்யப்படும். இது சத்தியம்.