டிரம்ப் காளை எங்கே பாய்கிறது ?

Image may contain: 3 people, suit

மனிதர் இப்படித்தான் கண்ணை மூடிகொண்டு எதிலும் கையெழுத்து இடுவார் போலும்…

 

 எதிர்பார்த்தபடியே உலக ஜல்லிகட்டு தொடங்கிவிட்டது, டிரம்ப் எனும் காளை துள்ள தொடங்கிவிட்டது.

முதல் பாய்ச்சலாக பல இஸ்லாமிய நாட்டு மக்களுக்கு தடை, அந்நிய தொழிலாளர்களுக்கு தடை என அழிச்சாட்டியம் செய்கின்றார் டிரம்ப். உலகம் உற்று கவனிக்கின்றது

இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால் அவர் தடை செய்திருக்கும் சில நாடுகள் அமெரிக்க கைபாவை அரசுகள் என்பதுதான் பெரும் காமெடி

அதாவது அந்நாடுகளில் மறைமுகமாக நடப்பது அமெரிக்க ஆட்சிதான், தன் ஆட்சிநடக்கும் நாட்டு மக்கள் தன் நாட்டுக்குள்ளே வரகூடாது என டிரம்ப் சொல்வதுதான் காமெடி

இப்படி செய்தால்தானே அவர் டிரம்ப். பாகிஸ்தான் வேண்டாமாம் ஆனால் அவர்களுக்கு நவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்குமாம்

ஈராக் வேண்டாமாம் ஆனால் அவர்கள் எண்ணெய் சல்லி விலையில் வேண்டுமாம்.

இதுதான் அமெரிக்க தர்மம், கொள்கை, கோட்பாடு, இன்னபிற என ஏராளம்

அது அவர்கள் நாடு, அவர்கள் உலக நாட்டாமை வேறு. அதனால் வெற்றிலை துப்பிவிட்டு, துண்டை உதறி “நீ வேண்டாம்டா.. உன்ன தள்ளி வைக்கிறேண்டா” என எளிதாக சொல்லலாம்

ஆனால் அதனையே உலகம் வேறுமாதிரி சிந்தித்தால்?

அமெரிக்க டாலரை புறக்கணிப்போம். அமெரிக்க கடைகளை , பொருட்களை புறக்கணிப்போம் என கிளம்பினால் என்னாகும்?

அங்கு இந்தியர்களை கட்டுபடுத்தும் அமெரிக்காவின் கேஎப்சி, மெக்டொனால்ட் முதல் பெப்சி வரை வாங்கமாட்டோம் என இந்தியாவில் புறக்கணித்தால் என்னாகும்?

இந்த பயம் யாருக்கு வந்ததோ இல்லையோ ஸ்டார்பக்ஸ் காப்பிகடைக்கு வந்திருக்கின்றது, அவ்வளவுதான் உலகெல்லாம் அகதிகளுக்கு காப்பியாற்றும் வாய்ப்பளிப்போம் என அது தன் நிறுவண இருப்பினை தக்க வைத்துகொள்ள முயற்சிக்கின்றது

இவ்வுலகில் ஒரு நாடு மட்டும் தனித்து வாழமுடியாது, அப்படி வாழ முடியுமாயின் அது ஆப்ரிக்க, ஆப்கன் போல இருக்குமேயன்றி பெரும் பணக்கார நாடாக இருக்கமுடியாது.

கொலம்பஸ் எனும் ஐரோப்பியனால் கண்டுபிடிக்கபட்டு, ஆப்ரிக்கர்களின் கடும் உழைப்பில் உருவான நாடுதான் அமெரிக்கா

இந்த டிரம்ப் இப்படியே அடாவடி செய்வாரென்றால் அது இன்றைய வலுவான அமெரிக்காவாக இருக்கவே இருக்காது, மாறாக அன்றைய செவ்விந்திய காட்டுவாசி நாடாகவே மாறும்

இதில் டிரம்புக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்ன தெரியுமா?

ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றி யூதர்கள் வயிற்றில் பால் வார்த்ததாக நினைத்தார் டிரம்ப்.

ஆனால் அமெரிக்காவில் இஸ்லாமியருக்கு ஆதரவாக டிரம்பினை கண்டித்து யூதர்களும் குரல் எழுப்பியிருக்கின்றனர்

பெரும் பகை இனங்கள் ஒன்றாக குரல் எழுப்புவதை கண்ட டிரம்ப் ஆடிப்போயிருக்கின்றார்

யூதர்களிலும் நல்லவர்கள் உண்டு என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கின்றது, என்ன இருந்தாலும் இயேசுபிரான் பிறந்த இனம் அல்லவா?

யூதன் இப்படி திருந்தினால் உலகம் எவ்வளவு அமைதியாக இருக்கும்?

அமெரிக்க யூதர்களை போலவே டிரம்பும் திருந்தட்டும், ஆனால் இப்போதைக்கு திருந்தமாட்டார் என்பது மட்டும் உண்மை

அடுத்து டிரம்ப் காளை எங்கு பாய்கிறது என பார்க்கலாம், பாயட்டும்

டாலர் பரிவர்த்தனை எனும் அதன் திமிலை பிடித்து , உலக சந்தை எனும் அதன் கொம்புகளை முறித்தால் அக்காளை என்ன கிழித்துவிடும்?

எங்களை விரட்டும் அமெரிக்காவினை நாங்கள் விரட்டுவோம் என உலகம் கிளம்பினால் அக்காளை ஓடியே விடும்.